நவராத்திரி நாயகியர் (2)
க. பாலசுப்பிரமணியன்
ராஜராஜேஸ்வரி
புவியுடன் வானும் பொன்னிறப் பரிதியும்
பொலிவுடை நிலவும் படையெனக் கோள்கள்
பகலுடன் இரவில் பங்கிடும் அண்டத்தை
பரிவுடன் காக்கும் புன்னகை அரசி !!
மறைகளில் நின்றாய் மூச்சிடும் ஒலியாய்
மலைகளில் மேருவில் மலர்ந்த வித்யா !
கலைகளில் முத்திரை காலத்தின் கருவறை
கருணையில் பெருந்தகை காத்திடும் அன்னை !
அரசவை உனதில் ஆனந்தம் பொங்கும்
அருளுடைப் பார்வையில் அமைதியே தங்கும்
அடியவர் உள்ளத்தின் ஆனந்தப் பேரொளி
அடைக்கலம் நீயே அகிலத்தின் தாயே !!
பெற்றவள் நீயிருக்க பெற்றிட வேறெதெற்கு?
பொற்சபை அரசியே புன்னகை மாட்சியே
உள்ளவை பற்றியே அல்லவை விலக்கியே
வல்லமை பெற்றிட வரம்தரும் தேவியே!
கைகளில் முத்திரை காட்டிடும் யோகினி
கலக்கிடும் துன்பங்கள் களைந்திடும் கபாலினி
கற்பனை தீண்டிடா அண்டங்கள் ஆட்சியே
காலங்கள் தாண்டிய கருணையின் வடிவே !
விண்ணினை அளந்திடும் விழியுடை விலாசினி
மண்ணுடை மலர்களில் மயங்கிடும் மீன்விழி-
மடையெனப் பெருகிடும் மங்கலக் காவிரி
மகிழ்வுடன் வந்தருள் மனதினில் மோகினி !