கவியோகி வேதம்
இருட்டைக் குத்திட,- கதிரும் பிறந்தது;
இன்பனி உருண்டிட இலைமுளை துளிர்த்தது;
சுருட்டிய பாயும் தூக்கம் கலைந்தது;
துயராம் ‘சேரி’யின் ‘விடியல்’ வந்ததா?
.
ஆண்யானை விந்தில் ஆச்சர்யம் வளர்ந்தது!
அருகம் புல்லிலும் புவனம் தெரிந்தது;
மாண்ட அரசரால் சரித்திரம் புரிந்தது!
மண்புரள் ‘வேட்டி’யால் வறுமை தீர்ந்ததா?
. பன்றியும் குழந்தையும் ஒன்றாய்ப் புரண்டு,
பள்ளமும் சேறும் காதல் புரிந்து,
குன்றிய வயிற்றில் வாயுவே நிரம்பும்
குலமகன் வாழ்வும் என்றுதான் துலங்கும்?
. மனைகள் பணத்தால் மாளிகை ஆகலாம்;
‘மாண்பும்’ கட்சியால் மந்திரி ஆகலாம்;
வனைவுறும் நேர்மையே நிலமெங்கும் பரந்து,
வளர்ந்(து)என் ‘றிந்தியா’ வல்லர சாகும்?

Leave a Reply