உசிருக்குள் விரிந்திருக்கும் புழுதிப் பூ!
ஈடில்லை
கூடை கூடையாய்
மலர்கள் பறித்து வந்து தூவினாலும்
மேடை அமைத்துக் கவிதைச் சொற்களால்
மாலைகள் போட்டாலும்
பாட்டு ஆட்டமென வாழ்த்திசை பொழிந்தாலும்
நீண்டு கிடக்கின்ற புழுதி வீடது
கூரையில்லாத அது எனது இரண்டாம் மடி!
கூரை வீடு
உறங்கி விழிக்கவும்
சோறு சாப்பிடவும்
மிக அதிகம்
நான் அசையாத ஆற்றில் நீந்தி விளையாடி
புழுதித் தண்ணீர் குடித்தது!
அப்பா தூங்கும் நேரங்கள் பார்த்துத்
திருட்டுத்தனமாய்
சைக்கிளோட்டப் பழகி
விழுந்து எழுந்து
கால் கைகள் காயங்களால் வலித்ததுவும்
பின்
நான் சைக்கிளோட்டும் அழகு இரசித்தபடி
என் கூடவே வந்ததுவும்
கல்வெட்டுக்களாய் எப்போதும் என் உசிரில்!
மார்கழி மழை நாட்களில்
ஓர் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளம்
ஒரு மீன்போல்
முதல் நீச்சல் பழகியது இன்னும் குளிர்கிறது ஈரமாய்!
நீண்ட மைதானமாய்ப்
பல விளையாட்டுக்கள் கற்றுத் தந்து
இரவு எட்டுமணிக்கப்புறம் பேய்போல பயங்காட்டியதும்
மனப் பைக்குள் பத்திரமான முத்துக்களாய்…
அது
இப்போதும் இருக்கிறது
விளையாட்டுக்கள் இல்லாத ஓர் அனாதைத் தெருவாய்!