மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++

cleo

வயது ஏறினும் வாடாது அவள் மேனி
வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம்
வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ……!
படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்!
கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால்.
படகின் மேற்தளப் பரப்பு தங்கத் தகடு மேடை
மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு
காற்றுக்கும் அதனால் காதல் நோய் பீடிக்கும்!
படகுத் துடுப்புகள் யாவினும் வெள்ளி மினுக்கும்.
ஊது குழல் முரசு தாளத்துக் கேற்ப உந்தி,
வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல் !
அவளது மேனி வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

முன்னுரை:

கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!

ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள்.

சீஸர் & கிளியோபாத்ரா

தந்தை ஏழாம் டாலமி நாடு கடத்தப் பட்ட சமயத்தில் கிளியோபாத்ராவின் மூத்த தமக்கை எகிப்தின் ராணியாகப் பட்டம் சூடினாள். பிறகு அவள் எப்படியோ கொலை செய்யப் பட்டாள். மீட்சியாகி வந்த தந்தை நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்தினார். அதன் பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா சட்ட விதிகள் ஏற்காதவாறு 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும் தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, அங்கிருந்து கொண்டு தமையனைப் பலிவாங்கும் சதிகளில் ஈடுபட்டாள். அப்போது ரோமானியத் தளபதி பாம்ப்பியைத் தாக்க அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ஜூலியஸ் சீஸரைக் காணும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், கிளியோபாத்ரா.
ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸருக்கும், அவரது ரோமானியப் பழைய நண்பன் பாம்ப்பேயிக்கும் நடந்த போரில், டாலமி சீஸரின் பக்கமிருந்து பாம்ப்பேயின் படுகொலைக்குக் காரணமானான். பாம்ப்பே டாலமி உதவியால் கொல்லப் பட்டதை விரும்பாத சீஸர் கோபப்பட்டு முடிவில் டாலமியைத் தண்டிக்க முற்படுகிறார்! கிளியோபாத்ராவும், டாலமியும் தன் முன் வரவேண்டும் என்று சீஸர் ஆணையிட்டார். சிரியாவிலிருந்து வெளியேறி மறைமுகமாகச் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள் கிளியோபாத்ரா. சீஸரைத் தன் மேனி அழகால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்திப் பலிவாங்கும் திட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள். சீஸர் டாலமி செய்த சில தீவிரக் குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறார். முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள்.
மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.

சீஸர், கிளியோபாத்ரா, அண்டனி
சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள்.
சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள். . இறக்கும் போது அவளுக்கு வயது 39.

கிளியோபாத்ரா நாடகப் படைப்பு:

ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன். நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றை நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.

பெர்னார்ட்ஷா தனது நாடகம் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆரம்பத்தில் அவரிருவரும் முதன்முதல் சந்திக்கும் தளத்தையும், நிகழ்ச்சியையும் மாற்றி யிருக்கிறார். மனிதத் தலைச் சிங்கத்தின் [Sphinx] அருகில் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாத போது முதன்முதல் சந்திப்பதாகவும், அப்போது சீஸர் தன்னை யாரென்று சொல்லாமல் நழுவுவதாகவும் காட்டியுள்ளார். மெய்யாக வரலாற்றில் நடந்தது முற்றிலும் வேறானது. மேலும் பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரைச் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது! மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன்.

+++++++++++++++++++++++++++++

வயது ஏறினும் வாடாது அவள் மேனி
வழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.
வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!
அவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி !
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம் அவள்,
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை

[மெம்ஃபிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது]
“அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ஃபெரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது!
பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தது! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார்.
ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ஃபெரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்றுப் போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.
ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போது தான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டிய திருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார்.

பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது!
ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!
******************************

அங்கம்: 1 பாகம்: 2
நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
•பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூஃபியோ: சீஸரின் லெஃப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]

அபெல்லோடோரஸ்: ஒரு ஸிசிலியன்
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அஃப்பிரிஸ்: மெம்ஃபிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

நாடகக் காலம், நேரம், இடம்:
கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூஃபியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெஃப்டினென்ட்! ரூஃபியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்?
உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெஃப்டினன்ட் ரூஃபியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்கிறார்!

ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்ஃபிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ஃபெரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ!
போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

+++++++++++++++++

அங்கம் -1 பாகம் -3
அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை!
அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!

ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

“வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!”
ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]

நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
•பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூஃபியோ: சீஸரின் லெ•ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்
மற்றும்:

பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ•ப்பிரிஸ்: மெம்•பிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்
காலம், நேரம், இடம்:
கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?
[கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]
பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.
ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூஃபியோ, லெஃப்டினென்ட் ரூஃபியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா?
பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.
ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா?
பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன!
ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா?
பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.
ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.
பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!
ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா?
பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்!
ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா?
பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.
*********************

அங்கம் -2 பாகம் -4

“கிளியோபாத்ரா நடை, உடை, பாவனைகளில் தென்படும் அவளது பண்பு நளினம், மாந்தரைச் சந்திக்கும் போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மெச்சும்படிப் பிரமிக்க வைக்கும். அவளது பேச ஆரம்பித்தால் பேச்சுக் குரலினிதாகிக் கேட்போரைக் கவர்ந்து விடும்”.

சிஸெரோ [Cicero, on Cleopatra’s Death, First Century B.C]

அவளது கண்கள் தீவிரக் கவர்ச்சி வாய்ந்தவை!
அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
பேசத் துவங்கின் கேட்போர் எவரும்
பகலிரவு மாறுவது அறியாமல் போவார்!
கவர்ச்சி மொழியாள்! காந்த விழியாள்!
வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
அவள் புன்னகையில், ஆலயப் பட்டரும்
வைத்தகண் வாங்காது சிலையாய் நிற்பார்!
ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர்.

காட்சி அமைப்பு:

பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர்.

போதினஸ்: [எழுந்து நின்று] அமைதி! அமைதி! எகிப்த் மன்னர் உங்களுக்கு ஓர் உரையாற்றப் போகிறார்! அமைதி! அமைதி! அவர் பேசுவதைக் கேளுங்கள். [அமர்கிறார்]
தியோடோடஸ்: [எழுந்து] அரசர் முக்கியமான செய்தியை அறிவிக்கப் போகிறார். எல்லோரும் கேளுங்கள். [அமர்கிறார். அவையில் அரவம் ஒடுங்குகிறது]
டாலமி: [எழுந்து நின்றதும், அவையில் பூரண அமைதி நிலவுகிறது] எல்லோரும் கேளுங்கள். நான் அறிவிக்கப் போகும் தகவல் உங்களுக்கு! காது கொடுத்துக் கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள். நான்தான் உங்கள் மன்னர் ஐயூலெடஸின் முதல் மைந்தன். எனது மூத்த சகோதரி பெரினிஸ் தந்தையைக் காட்டுக்குத் துறத்தி விட்டு நாட்டை ஆண்டு வந்தார். அது மன்னருக் கிழைத்த மாபெரும் அநீதி! … அடுத்து நான் என்ன சொல்ல வேண்டும் …. மறந்து விட்டேனே! [தியோடோஸையும், போதினஸையும் மாறி மாறிப் பார்க்கிறான்]
போதினஸ்: [துணியில் எழுதப்பட்ட தகவலைப் பார்த்து] ஆனால் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது!
டாலமி: ஆமாம். கடவுகள்கள் வேதனைப் படக் கூடாது! … (மெல்லிய குரலில்) எந்தக் கடவுள்? .. என்ன எனக்கே புரியவில்லை! … [போதினஸைப் பார்த்து] எந்தக் கடவுள் வேதனைப் படக் கூடாது? … சொல்லுங்கள். எனக்கே குழப்பம் உண்டாகுது!
தியோடோடஸ்: அரசரின் பாதுகாவளர் போதினஸ் அரசரின் சார்பாகப் பேசுவார். தொடர்வார்.
டாலமி: ஆமாம். போதினஸே பேசட்டும். கிளிப்பிள்ளை மாதிரி நான் புரியாமல் பேசக் கூடாது. தொடருங்கள் போதினாஸ். [டாலமி ஆசத்தில் அமர்கிறான்]
போதினஸ்: [மெதுவாகத் தயக்கமுடன் எழுந்து தகவலைப் பார்த்து] மன்னர் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். நான் அரசர் கூற்றுக்குச் சற்று விளக்கம் சொல்கிறேன். •பரோ மன்னர் நமக்குக் கடவுள். ஆகவேதான் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது என்றார் மன்னர். அதாவது தந்தையைக் காட்டுக்கு அனுப்பி வேதனைப்பட விட்டு, தமக்கை நாட்டை ஆண்டதைக் குறிப்பிடுகிறார். தமக்கை தண்டிக்கப் படவேண்டும் என்றும் கருதுகிறார்.
டாலமி: [சட்டென எழுந்து வேகமாக] இப்போது ஞாபகம் வருகிறது எனக்கு. அறிக்கையை நான் தொடர்கிறேன். … ஆமாம், கடவுள்கள் வேதனைப்படக் கூடாது! அந்த வேதனையைத் தவிர்க்க நமது சூரியக் கடவுள் ரோமிலிருந்து மார்க் அண்டோனியை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறார்.
போதினஸ்: [மெதுவாக டாலமி காதுக்குள்] மார்க் அண்டனி யில்லை, ஜூலியஸ் சீஸர் என்று சொல்லுங்கள். எகிப்துக்கு வந்திருப்பது ஜூலியஸ் சீஸர்.
டாலமி: ஆம்… மார்க் அண்டனி வரவில்லை. .. ரோமிலிருந்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். ரோமானியர் உதவியால்தான் மீண்டும் என் தந்தை மன்னரானார். தமக்கையின் தலை துண்டிக்கப் பட்டது. தந்தை மரணத்துக்குப் பிறகு மற்றுமோர் தமக்கை, கிளியோபாத்ரா எனக்குப் போட்டியாக வந்தாள். எகிப்தை என்னிடமிருந்து கைப்பற்ற முனைந்தாள்! எப்படி? என்னைக் கவிழ்த்தி விட்டு என் ஆசனத்தில் ஏற முற்பட்டாள்! என்னை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது! இரவுக்கு இரவே அவள் தூங்கும் போது அவளைச் சிறைப் பிடித்து, நாடு கடத்தி விட்டேன்! நல்லவேளை, அவளைக் கொல்லாது அவிழ்த்து விட்டேன்! பாலைவனத்தை ஆளும்படி ஆணையிட்டேன்! பாவம் கிளியோபாத்ரா! பாம்புகளும், தேள்களும் நடமாடும் பாலைவனத்தில் வாழ வேண்டும்! பருவ மங்கை சாவாளா அல்லது பிழைப்பாளா, யார் அறிவார்? அவளுக்குத் துணையிருக்கக் காவலரை அளித்தேன். பாவம் கிளியோபாத்ரா! என்னருமை மனைவி அல்லவா அவள்? திருமணத்துக்கு முன்பு அவள் என் தமக்கை! திருமணத்துக்குப் பின்பு அவள் என் தாரம்! அவளைக் கொல்ல மனமில்லை.
போதினஸ்: மகா மன்னரே! உங்களுக்கு பரிவு மிகுதி! கிளியோபாத்ராவை உயிரோடு விட்டது நம் தவறு! மீண்டும் வந்து உங்களைத் தாக்க மாட்டாள் என்பதில் என்ன உறுதி உள்ளது? தமக்கையானாலும் அஞ்சாமல் உங்களைத் தாக்குவாள்! மனைவியானாலும் கணவனைக் கொல்லத் துணிபவள் கிளியோபாத்ரா!
டாலமி: கவலைப் பாடாதே போதினஸ்! அவள் என்னைக் கொல்ல மாட்டாள். நான் அறிவேன் அவளை. பாலை வனத்தில் எந்தப் பாம்பு தீண்டியதோ? எத்தனைத் தேள்கள் கொட்டினவோ? உறுதியாகச் சொல்கிறேன், அவள் உயிருடன் இல்லை! நம் ஒற்றர் கண்களுக்குத் தப்பி அவள் நடமாட முடியாது! உயிரோடு தப்பிவந்து அவள் எகிப்தில் தடம் வைத்தால், தலையைத் துண்டிக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன்.
அக்கில்லஸ்: தெய்வ மன்னரே! கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாள். என் காதில் விழுந்த செய்தி இதுதான்! கிளியோபத்ரா பாலைவனத்தில் சாகவில்லை! சிரியாவில் உயிரோடிருப்பதாக நான் அறிகிறேன். மந்திரக்காரி பிதாதீதா திறமையால், கிளியோபாத்ரா ஜூலியஸ் சீஸரைத் தன்வசப் படுத்தி விடுவாள்! ரோமானியப் படை உதவியால் உங்களைக் கவிழ்த்தி, எகிப்தின் ஏகமகா ராணியாகப் பட்டம் சூட்டிக் கொள்வாள்! அப்படிப் பேசியதாகக் கேள்விப் பட்டேன்.
போதினஸ்: [கோபத்துடன் சட்டென எழுந்து] தேவ மன்னரே! ஓர் அன்னியத் தளபதி உங்கள் ஆசனத்தைப் பறிக்க நாம் விடக் கூடாது! ஜூலியஸ் சீஸரைக் கிளியோபாத்ரா தன்வசப் படுத்துவதற்கு முன்பு, நாம் அவளைப் பிடிக்க வேண்டும்! அவளது மூத்த தமக்கை போன உலகுக்கு அவளையும் அனுப்ப வேண்டும்! அக்கில்லஸ்! சொல்லுங்கள்! எத்தனை ரோமானியப் படை வீரர்கள் எகிப்தில் தங்கி யிருக்கிறார்? எத்தனை ரோமானியக் குதிரைப் படை வீரர்கள் இருக்கிறார்?
அக்கில்லஸ்: ஜூலியஸ் சீஸருக்குப் பின்னால் மூவாயிரம் காற்படைகளும், ஓராயிரத்துக்கும் குறைவான குதிரைப் படைகளும் உள்ளன.
[அதிகாரிகள் ஆரவாரம் செய்து கைதட்டுகிறார். திடீரென சங்கநாதம் முழங்க, வாத்தியங்கள் சத்தமிட ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகை அறிவிக்கப் படுகிறது! முதலில் ரோமானிய லெ•ப்டினென்ட் ரூ•பியோ கம்பீர நடையில் அரண்மனைக்குள் நுழைகிறார். பின்னால் அணிவகுத்து ரோமனியக் காற்படை
வீரர்கள் பின் வருகிறார்.]
ரூஃபியோ: வருகிறார், வருகிறார் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகிறார். [ஓசை அடங்குகிறது]
[டாலமி மன்னரைத் தவிர அரண்மனையில் யாவரும் எழுந்து ஜூலியஸ் சீஸருக்கு மரியாதை செய்கிறார்.]
தியோடோடஸ்: [எழுந்து நிமிர்ந்து] மன்னாதி மன்னர் டாலமி ரோமானியத் தளபதியை வரவேற்கிறார்.
[ராணுவ உடையில் ஜூலியஸ் சீஸர் நிமிர்ந்த நடையுடன் நுழைகிறார். தலை வழுக்கை தெரிவதை மலர் வலையத்தால் சீஸர் மறைத்துள்ளது தெரிகிறது. அவருக்கருகில் நாற்பது வயதுச் செயலாளர் பிரிட்டானஸ் நிற்கிறார். ஜூலியஸ் சீஸர் டாலமியை நெருங்கி, போதினஸை உற்றுப் பார்க்கிறார்.]
ஜூலியஸ் சீஸர்: [டாலமி, போதினஸை மாறி மாறிப் பார்த்து] யார் மன்னர்? பால்யப் பையனா? அல்லது பக்கத்தில் நிற்கும் மனிதரா?
போதினஸ்: நான் போதினஸ். என் பிரபுவின் உயிர்க் காவலன். [டால்மியைக் காட்டி] மகா மன்னர் டாலமிக்கு அருகில் நிற்பவன்.
[டாலமி உட்கார்ந்து கொண்டே சிரிக்கிறான்]
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் டாலமியின் முதுகைத் தட்டி] மெச்சுகிறேன் டாலமி! உலகமறிந்த வீரருக்குக் கிடைக்காத உன்னத பதவி உமக்குக் கிடைத்திருக்கிறது! என் தமையனின் மகன் அக்டேவியன் போல் நீ இருக்கிறாய்! அவனுக்கும் உன்னைப் போல் உலக அனுபவ மில்லை! நீ எகிப்தின் வேந்தன்! அவன் ரோமாபுரியின் வீரன்! ஆனால் பிற்கால வேந்தன்! இல்லை, பிற்காலத் தளபதி! ரோமானியருக்கு ஏனோவேந்தர்களைப் பிடிக்காது!
டாலமி: எகிப்தின் மன்னர், கடவுளுக்கு நிகரான கடவுளை சீஸருக்குப் பிடிக்குமா?
ஜூலியஸ் சீஸர்: சீஸருக்குப் பிடிக்காமலா, சீஸர் எகிப்துக்கு வருகிறார்? எனக்கு டாலமியைப் பிடிக்கும். கிளியோபாத்ராவையும் பிடிக்கும்!
டாலமி: எனக்கு கிளியோபாத்ராவை அறவே பிடிக்காது! சொல்லுங்கள் சீஸரே! நீங்கள்தான் ரோமாபுரியின் மன்னாதி மன்னரா?
ஜூலியஸ் சீஸர்: டாலமி! சிறிது நேரத்துக்கு முந்திதான் சொன்னேன்! ரோமானியருக்கு மன்னர் என்னும் சொல்லே காதில் படக் கூடாது! நான் ரோமாபுரியின் முதன்மையான போர்த் தளபதி!
டாலமி: [ஏளனமாய்க் கேலியுடன்] அட! நீங்கள் கோழிச் சண்டைத் தளபதியா? அதோ என் போர்த் தளபதி அக்கில்லஸ்! அவர்தான் உங்களுக்கு நிகரானவர்!
ஜூலியஸ் சீஸர்: டாலமி! கடவுள் உமக்கு ஆசனம் மட்டும் அளித்து அனுபவத்தை எப்போது கொடுப்பாரே? நான் கோழிச் சண்டைக்குத் தளபதி அல்லன்! ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் பராக்கிரமசாலி! நான் ரோமானியச் சக்கிரவர்த்தி!
டாலமி: [மெதுவாக தியோடோடஸ் காதில்] அதென்ன வர்த்தி? சக்கிர… சக்கிரவர்த்தி?
தியோடோடஸ்: அதாவது ரோமனியப் பெருமன்னர் என்று அர்த்தம்! சீஸர்தான் ரோமாபுரியின் மகா மன்னர்! அப்படி அழைக்கப்படா விட்டாலும், அவர்தான் மகா வேந்தருக்கு நிகரானவர்!
டாலமி: அப்படியா [எழுந்து நின்று சீஸரின் கைகளைக் குலுக்குகிறான்] மகாமன்னர் ஜூலியஸ் சீஸருக்கு எகிப்த் நாடு வந்தனம் கூறி வரவேற்கிறது! வாருங்கள், வாருங்கள் வந்து அமருங்கள் ஆசனத்தில்.
[ஜூலியஸ் சீஸர் டாலமிக்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்கிறார்.]
*********************

அங்கம் -2 பாகம் -5
“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”

புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]
வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவள்!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
நானவளை வெறுப்பேன் ஆயினும் அவள்
மோக உடலை நோக்குவேன்! கவரும்
எழிலைச் சபிப்பேன் ஆயினும் அவளைத்
தழுவக் கைகள் தானாய்த் தாவிடும்!
ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]
வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி!
வரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.
காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார்.
[அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்]
அக்கிலஸ்: [சிரித்துக் கொண்டு] ஜெனரல்! நான்தான் அக்கிலஸ். பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு! டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான்! எகிப்த் நாட்டின் போர்த் தளபதி! ஏகத் தளபதி!
ஜூலியஸ் சீஸர்: அப்படியா? உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க பூரிப்பே. நீங்கள்தான் எகிப்தின் ஏகத் தளபதியா? நேற்று நான் மனிதச் சிங்கத்தின் அருகில் சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று கூறினாரே! அப்படி என்றால் எகிப்துக்கு இணையான இரட்டைத் தளபதிகளா? போரென்று வந்தால் யார் படைகளை நடத்திச் செல்வார், நீங்களா அல்லது பெல்ஸானரா?
அக்கிலஸ்: [வெடிச் சிரிப்புடன்] ஓ! பெல்ஸானரா? அவர் எனக்கு உதவிப் பதவியில் உள்ளவர்! ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார்! அவரது அரசி கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார்! பெல்ஸானர் அவளுடைய நிழலாக நடமாடுகிறார்! போர் வந்தால் யார் படைகளை நடத்துவார்? நல்ல கேள்வி! எகிப்தின் ஏகத் தளபதி நான்தான் நடத்திச் செல்வேன். பெல்ஸானர் உயிரும், உடலுமற்ற ஓர் எலும்புக் கூடு!
ஜூலியஸ் சீஸர்: ஓ! அப்படியா சங்கதி? [தியோடோடஸைப் பார்த்து] .. நீங்கள் …யார்?
தியோடோடஸ்: [எழுந்து நின்று கைகொடுத்து] நான் தியோடோடஸ்! வேந்தரின் பயிற்சியாளர்.
ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] ஓ! நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா? அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும் நிபுணரா? நல்ல பணி உமக்கு. நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர்! … [டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே! ….. மாமன்னர் டாலமி அவர்களே! எமக்கு நிதி தேவைப்படுகிறது! ஆண்டாண்டு கப்பம் செலுத்தும் நாளும் கடந்து விட்டது! எத்தனை நாள் கடந்து விட்டது என்பதை விட, எத்தனை மாதம் என்று நான் சொல்வது நல்லது.
டாலமி: [போதினஸைப் பார்த்து] என்ன தகாத புகாரிது? நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி கேட்கும் நிலைக்கு வைக்கலாமா? …[சீஸரைப் பார்த்து] சொல்லுங்கள், எத்தனை மாதம் ஆகிறது!
ஜூலியஸ் சீஸர்: ஆறு மாதங்கள் ஓடி விட்டன! எங்கள் பொக்கிசம் காலி! செலவுக்குப் பணம் அனுப்ப நாங்கள் ரோமுக்குச் செய்தி அனுப்பும் நிர்ப்பந்தம் வந்துவிட்டது!
போதினஸ்: [வருத்தமுடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது! என்ன செய்வது? ஓராண்டு காலம் வரி வாங்கத் தவறி விட்டோம்! ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும்! அடுத்த நைல் நதி அறுவடை வரும்வரை பொறுப்பீரா?
ஜூலியஸ் சீஸர்: [வெகுண்டு எழுந்து] இந்த சாக்குப் போக்கெல்லாம் எதற்கு? எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது! இனி பொறுப்பதில்லை!
டாலமி: [கோபமாக எழுந்து] என்ன நமது பொக்கிசமும் காலியா? என்னவாயிற்று நம் நிதி முடிப்புகள்?
போதினஸ்: மகா மன்னரே! நாம் கிளியோபாத்ராவை நாடு கடத்தும் முன்பே அவள் நமது பொக்கிச நிதியைக் கடத்தி விட்டாள்!
டாலமி: எனக்குத் தெரியாமல் போனதே! கள்ள ராணி! என் பொக்கிசத்தைக் களவாடிய கொள்ளை ராணி! … [அக்கிலஸப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக் கொன்று வா! கொள்ளைப் பணத்தைக் கொண்டுவா! .. போ! .. அவள் எங்கிருந்தாலும் சரி! போய்ப் பிடி! அவள் எகிப்தில் கால் வைக்கக் கூடாது! ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக் கொண்டுவா! …. [சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால் இநத முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள்! அவளிடம் உள்ளது எங்கள் நிதி! அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது! அவளும் எகிப்தின் அரசிதான்! மேலும் உங்களுக்கும் பிடித்தவள் அவள்! … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை! ஒருமுறை டாலமி, ஒருமுறை கிளியோபாத்ரா என்று மாற்றி மாற்றி, நீங்கள் கப்பம் பெற்றுக் கொள்வதே நியாயமானது.
ஜூலியஸ் சீஸர்: என்ன கேலிக் கூத்தாய்ப் போச்சு? பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா? இந்த பொறுப்பற்ற போக்கு எமக்குப் பிடிக்காது! ஒருவேளை கிளியோபாத்ரா செத்துப் போயிருந்தால்…!
டாலமி: கப்பத்தை நான் கட்டி விடுகிறேன். கிளியோபாத்ரா செத்துப் போனாளா அல்லது உயிரோடிருக்கிறாளா வென்று உமது ஒற்றர்களை உளவறியச் சொல்வீர்! எமது ஆட்களும் அவளது எலும்புக் கூட்டை பாலை வனத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் அவளது அழகிய மேனி உயிரோடு நடமாடி வருவதாகவே நான் கருதுகிறேன். சீக்கிரம் அவளைப் பிடித்தால், நிச்சயம் உங்கள் கப்பத் தொகையைக் கறந்து விடலாம்!
பிரிட்டானஸ்: [அழுத்தமாக] கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாளா, எலும்புக் கூடாய்ப் போனாளா என்பதைப் பற்றி எமக்குக் கவலை யில்லை! எங்கள் கண்ணில் அரசராகத் தெரிபவர் நீங்கள் ஒருவரே! கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத் தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை! அது உமது வேலை! எமக்குத் தேவை கப்பத் தொகை! சட்டப்படி எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட உடன்படிக்கை! அந்த ஒப்பந்தத்தின்படி அப்பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வது சீஸரின் கடமை!
டாலமி: [சீஸர்ப் பார்த்து] சட்டம் பேசும் இந்த ஞானியை நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்த வில்லையே!
ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவுடன்] டாலமி, இவர்தான் பிரிட்டானஸ், என் செயலாளர்! அரசாங்கச் செயலாளர்! நீங்கள் சொன்னது போல், ஐயமின்றி அவர் ஓரு சட்ட ஞானிதான்! அதோ அவர் ரூ•பியோ, எனது படைத் தளபதி. …[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600 டாலென்ட் நாணயம் [Talent]. அதுவும் உடனே தேவை! …. டாலமி! எம்முடன் விளையாடாதீர்! உமது பொறுப்பற்ற முறை எமக்குப் பிடிக்காது! பணத்தை வாங்காமல் யாமின்று வெளியேறப் போவதில்லை! …. நீவீர் தர வில்லையானால், எமது படையாட்கள் உமது பொன் ஆபரணங்களைப் பறிக்கும்படி நேரிடும்!
போதினஸ்: [மனக் கணக்கிட்டு, பெருமூச்சுடன் கலங்கி] 1600 டாலென்ட் நாணயம் என்றால் 40 மில்லியன் ஸெஸ்டர்ஸ் [Sesterces]. ஜெனரல், அத்த¨னைப் பெரிய தொகை எமது பொக்கிசத்தில் இல்லை, நிச்சயம்!
ஜூலியஸ் சீஸர்: [சற்று தணிவுடன்] கொஞ்சத் தொகைதான்! 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே! அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிது படுத்த வேண்டும்? டாலமிக்கு அதிர்ச்சி கொடுக்கவா? ஸெஸ்டர்ஸ் நாணயம் ஒன்றில் வெறுமனே ஒற்றைத் துண்டு ரொட்டி வாங்கலாம்!
போதினஸ்: யார் சொன்னது? அது தப்பு! ஒரு ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் குதிரை ஒன்றை வாங்கலாமே. உங்கள் மதிப்பீடு மிகவும் கீழானது! தப்பானது! கிளியோபாத்ரா செய்த கலகத்தில் ஓராண்டு வரிகளை வாங்க முடியாமல் தவற விட்டது எங்கள் தப்புதான். எகிப்த் செல்வந்த நாடு! உங்கள் கப்பத்தைச் செலுத்தி விடுவோம், கவலைப் படாதீர்! சற்று பொறுங்கள்.
ரூஃபியோ: [சற்று கோபமுடன்] போதினஸ்! போதும் உமது சாக்குப் போக்குகள்! எப்படி நாட்டை ஆள வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது எமது வேலை யில்லை! ஏன் கால தாமதப் படுத்துகிறீர்? சீஸர் கோபத்தைத் தூண்டாதீர்!
போதினஸ்: [கசப்புடன்] உலகைக் கைப்பற்றிய போர்த்தளபதி சீஸருக்குக் கப்பத் தொகை திரட்டும் சிறிய பணியும் உள்ளதா? கைச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல், இப்படி திடீரென கையேந்தி வரலாமா?
ஜூலியஸ் சீஸர்: நண்பனே! உலகைக் கைப்பற்றிய தளபதிக்குக் கப்பத் தொகையைக் கறப்பதைத் தவிர முக்கியப் பணி வேறில்லை! நாமின்று பணம் வாங்காது இங்கிருந்து நகரப் போவதில்லை!
போதினஸ்: [கவலையுடன்] என்ன செய்வது? கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர்! நாங்கள் ஆலயத் தங்கத்தைத்தான் உருக்கி நாணயமாக்கித் தர வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அதுவரைப் பொறுப்பீர்களா?
ஜூலியஸ் சீஸர்: அப்படியானால் மூன்று நாட்கள் உங்கள் விருந்தினராய் நாங்களிங்கு தங்க வேண்டும். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும், படுக்கையும் அளிப்பீர்களா?
டாலமி: [எழுந்து நின்று] நிச்சயம், நீங்கள் எங்கள் விருந்தாளி! மூன்று நாட்கள் என்ன? முப்பது நாட்கள் கூட எமது அரண்மனையில் அனைவரும் தங்கலாம். உண்டு, உறங்கி, மதுவருந்தி, ஆடிப்பாடி, இன்புற்று எமது அரண்மனை விருந்தினர் அறையில் தங்கலாம்! இப்போதே நாணய அச்சடிப்புக்கு ஆணையிடுகிறேன். [போதினஸ் காதில் ஏதோ சொல்ல அவர் விரைந்து செல்கிறார்]
ஜூலியஸ் சீஸர்: எமக்குப் பணம் கிடைத்தால் போதும்! உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன். … அதற்கு கிளியோபாத்ராவும் வருவது நல்லது! டாலமியும், கிளியோபாத்ராவும் சேர்ந்து எகிப்தை ஆள்வதையே யாம் விரும்புகிறோம். உமக்குள்ளிருக்கும் பகைமை யாம் அகற்றுவோம்!
போதினஸ்: கிளியோபாதரா அலெக்ஸாண்டிரியாவில் இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக் கேள்விப் பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால் வைக்க மாட்டாள்! வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார்! அவளில்லாமல்தான் நீங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். கிளியும், பூனையும் ஒன்றாக வாழுமா என்பது சந்தேகம்தான்!
[அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான். கம்பளத்தை மெதுவாக இறக்கித் தரையில் விரிக்கிறான், கையாள். கம்பளத்திலிருந்து தாமரை மலர் போல ஒரு வனப்பு மங்கை, புன்னகையுடன் எழுகிறாள்.]
********************

அங்கம் -2 பாகம் -6
தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்!
மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்!
சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில்
வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்!
வனப்பினில் மயங்கிக் கனவினில் அணைப்போர்
மனதினில் நீங்கா ஓவியம் வரைபவள்!

கிளியோபாத்ராவைப் பற்றி …
“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”
புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]
நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.
காட்சி அமைப்பு:
[காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான்.]
வாயிற் காவலன்: [வாளை நீட்டி] நில்! யார் நீ? தோளில் எதைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்?
கம்பள வணிகன்: நான் கம்பள வணிகன்! சிரியாவிலிருந்து வருகிறேன்! சிரியா மன்னர் விலை மதிப்பில்லா ஒரு கம்பளத்தை ரோமாபுரித் தளபதி சீஸருக்கு அனுப்பி யுள்ளார்! சீஸரிங்கு வந்துள்ளாய் நான் அறிந்தேன்! சிறப்பாக நெய்யப்பட்ட இந்தக் கம்பளத்தை நான் நேராக அவரிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.
வாயிற் காவலன்: அப்படியா? சற்று பொறு! நாங்கள் சீஸரிடம் வினாவி வருகிறோம். [உள்ளே ஒரு காவலன் செல்கிறான். சிறிது நாழி கழித்து வெளியே வருகிறான்]
இரண்டாம் காவலன்: ரோபாபுரித் தளபதி கம்பளக் கொடையாளியை அழைத்து வரச் சொல்கிறார். [காவலன் கம்பள வணிகனையும், பணியாளியையும் உள்ளே சீஸர் முன்பாக அழைத்து வருகிறான்]
கம்பளி வணிகன்: மகாமகா மேன்மை தங்கிய ஜெனரல் சீஸர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எங்கள் சிரியாவின் மன்னர் விலைமிக்க இந்த கம்பளத்தைத் தங்களுக்கு அளித்துள்ளார்! ஏற்றுக் கொள்வீரா? முதன்முதல் தங்க கம்பிகளைப் பயன்படுத்தி நெய்த கம்பளமிது! ரோம சாம்ராஜியம் காணாத கம்பளமிது!
ஜூலியஸ் சீஸர்: [கம்பளத்தை உற்று நோக்கி] அப்படியா? ஏற்று கொள்கிறேன். வெகு அழகான வேலைப்பாட்டைக் காண்கிறேன். இறக்கி வைத்துச் செல்! சீஸர் நன்றி கூறியதாக சிரியா மன்னருக்குச் சொல்! [ரூபியோவைப் பார்த்து] ரூபியோ கம்பளத்தை வாங்கி என்னறையில் வை! ரோமுக்கு மீளும் போது, மறக்காமல் படகில் ஏற்றிவிடு!
கம்பளி வணிகன்: ஜெனரல் அவர்களே! இது ரோமாபுரிக்குப் போகும் கம்பளமில்லை! தங்கள் அலெக்ஸாண்டிரியா அறையை அலங்கரிக்க வேண்டியது! கம்பளத்தின் வெளிப்படைப்பு வேலைப்பாட்டைப் புகழ்ந்தீர்! அதன் உள்ளழகு வெளியழகை மிஞ்சுவது! நான் விரித்துக் காட்டலாமா? பார்த்தால் பூரித்துப் போவீர்!
ஜூலியஸ் சீஸர்: வேண்டாம்! எனக்கு வேலை உள்ளது! சும்மா வைத்து விட்டுப் போ!
கம்பளி வணிகன்: [பணியாள் கம்பளத்தைக் கீழிறக்கி வைக்க வணிகன் கவனமாக, மெதுவாகத் தரையில் அதை விரிக்கிறான். கம்பளத்துக் குள்ளிருந்து ஓரிளம் மங்கை புன்னகையுடன் உடலை முறித்துக் கொண்டு எழுகிறாள்! [அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்]
ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்? என்னால் இவளுக்கு ஆவதென்ன? அல்லது அவளால் எனக்கு கிடைப்பதென்ன? …யார் நீ? சொல்! கள்ளத்தனமாக கம்பளத்துக்குள்ளே ஏன் ஒளிந்து வந்தாய்? மாயக்காரியா? மந்திரக்காரியா? அல்லது சூனியக்காரியா? யார் நீ?
கிளியோபாத்ரா: [எழுந்து ஒய்யாரமாக நின்று, புன்சிரிப்புடன்] மகாமகா சீஸர் அவர்களே! என்னை யாரென்று தெரியவில்லையா? அரச வம்சத்தில் பிறந்து அரசை யிழந்துவிட்ட அரசியைத் தெரிய வில்லையா?
ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியம் பொங்க] யார்? கிளியோபாத்ராவா? நம்ப முடியவில்லையே!
டாலமி: [சினத்துடன்] ஜெனரல்! இவளொரு ஜிப்ஸி! நாடோடி! இவள் கிளியோபாத்ரா இல்லை! நிச்சயமாகக் கிளியோபாத்ரா இத்தனைக் கீழ்த்தரமாகக் கம்பளச் சுருளில் ஒளிந்து வரமாட்டாள்! அவள் நேராக வரும் ஒரு வீர மங்கை! இந்தக் கோமாளி வணிகன் யாரையோ பிடித்து வந்து எகிப்தின் அரசி கிளியோபாத்ரா வென்று ஏமாற்றுகிறான்! [அக்கிலஸைப் பார்த்து] வணிகனைச் சவுக்கால் அடி! அயோக்கியன்! [சீஸரைப் பார்த்து] ஜெனரல்! இந்த கூத்தாடிப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! அவளை நான் தண்டிக்கிறேன்! [அக்கிலஸைப் பார்த்து] அக்கிலஸ்! அந்த நாடோடிப் பெண், அவள் கைக்கூலி வணிகன், பணியாள் மூவரையும் கைது செய் உடனே! யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
கிளியோபாத்ரா: [எழுந்தோடி சீஸரின் பின்புறம் நின்று கொள்கிறாள்] மேன்மை மிகு சீஸர் அவர்களே! நான் நாடோடி யில்லை! நாடகம் போடவு மில்லை! நான் கிளியோபாத்ரா! அதோ! அந்தப் பாலகன் டாலமி! என் தமையன் அவன்! நான் மணம் புரிந்து கொண்டவன்! என்னைக் கொலை செய்ய எகிப்தியப் படைகளை அனுப்பிய என்னருமைக் கணவன்! நான் யாரென்று குருநாதர் தியோடோஸைக் கேளுங்கள்! அவர் உண்மை பேசுபவர்! நான் யாரென்று பாதுகாப்பாளி போதினஸைக் கேளுங்கள்! படைத் தளபதி அக்கிலஸைக் கேளுங்கள்! எப்போதும் டாலமி பொய் பேசியே ஏமாற்றுபவன்!
ஜூலியஸ் சீஸர்: [தியோடோடஸைப் பார்த்து] யாரிந்த மங்கை? சொல்! [போதினஸைப் பார்த்து] யாரிந்தக் குமரி? சொல்! [அக்கிலஸைப் பார்த்து] யாரிந்த வாலிப மங்கை? சொல்!
தியோடோடஸ்: ஜெனரல்! அவர் மகாராணி கிளியோபாத்ரா!
போதினஸ்: ஆம் ஜெனரல்! அவர் எகிப்தின் அரசி கிளியோபாத்ரா!
அக்கிலஸ்: மேன்மை மிகு சீஸர் அவர்களே! அவர் எங்கள் டாலமி மன்னரின் மனைவி கிளியோபாத்ரா!
ஜூலியஸ் சீஸர்: [டாலமியைப் பார்த்து] பாலகனே! உன் கண்ணில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா? உன் தமக்கையை நாடோடி என்று ஒதுக்கி விட்டாயே! ஏன் அவளைக் கூத்தாடி என்றுக் கேலி செய்தாய்? தந்தத்தில் செதுக்கிய இந்த அழகுச் சிலையா கூத்தாடி?
டாலமி: [கெஞ்சலுடன்] கண்ணே கிளியோபாத்ரா! நலமா? சந்தனத் தண்டுபோல் தளதள வென்றிருந்த நீ எப்படித் தளர்ந்துபோய் மெலிவா யிருக்கிறாய்? பாலை வனத்தில் ஈச்சம் பழத்தைத் தின்று, நீரைக் குடித்தே வாழ்ந்தாயா? பாவம், உன்னைப் பாலை வனத்துக்கு அனுப்பாமல், அரண்மனைச் சிறையிலே நான் பூட்டி வைத்திருக்கலாம்! அரச குமாரியை அனாதை போல் திரிய விட்டது எனது தவறுதான்!
கிளியோபாத்ரா: [சீஸரின் உடை வாளை உருவி, நேரே டாலமியை அருகி அதட்டலுடன்] அடே! அயோக்கியா! போதும் உன் பாசாங்கு! போதும் உன் பரிவு! என்னைக் கண்டு பாகாய் உருகாதே! உன்னைக் கண்டு என் நெஞ்சம் கொதிக்கிறது! இறங்குடா கீழே ஆசனத்தை விட்டு! இந்த தங்க ஆசனம் என் ஆசனம்! நான் அமர்ந்து எகிப்த் ராணியாய் அரசாண்டது! [டாலமி பயந்து நடுங்கி ஆசனத்தை விட்டு எழுகிறான். கிளியோபாத்ரா ஆசனத்தின் முன் நின்று வாளை ஓங்கி விரட்டுகிறாள்] டாலமி! ஓடுடா! உன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்! [டாலமி ஓடிப்போய் சீஸரின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்] … உயிருக்குப் பயந்து ஓடும் ஓணான் நீ! என்னைச் சாகடிக்க நீ அனுப்பிய அதே பாலை வனத்துக்கு நான் உன்னைத் துரத்துகிறேன்! உலக அனுபவம் உண்டாகும் உனக்கு!
டாலமி: [சீஸர் கையைப் பற்றிக் கொண்டு] தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் பாலகன்! இந்தப் பாதகி என்னைப் பாலை வனத்துக்கு அனுப்புவதைப் பார்த்துக் கொண்டு நிற்காதீர்! ஐயோ! கருந்தேள் என்னைக் கடிக்கும்! கருநாகம் என்னைக் கொட்டிவிடும்! நான் ஆளா விட்டாலும், சாக விரும்பவில்லை! காப்பாற்றுவீர் என்னை!
ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் தடவி] டாலமி! நீ பாலகன்! உன்னைப் பாதுகாப்பது எம்பணி! கிளியோபாத்ராவை நீ பாலைக்கு ஏன் துரத்தினாய்? அவள் உன் உடன்பிறந்த தமக்கை! நீங்கள் இருவரும் கணவன் மனைவி வேறு! எகிப்தை ராஜா ராணியாய் நீங்களிருவரும் ஒன்றாக ஆள்வதையே நான் விரும்புகிறேன். அதற்காகதான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்துள்ளேன்!
கிளியோபாத்ரா: [கோபத்துடன் சீஸரை நோக்கி] தளபதி சீஸர் அவர்களே! உங்கள் ஆசை நிறைவேறாது! டாலமி! பாலகன் வடிவத்தில் காணப்படும் அயோக்கியன்! நாங்கள் இருவரும் ஒரே அரண்மனையில் நிம்மதியாகத் தூங்க முடியாது! எகிப்தை ஈரரசர் ஆள முடியும் என்று கனவு காணாதீர்! எகிப்தியர் இரண்டு அரசருக்குப் பணி புரிய இயலாது! ஒருவர் கழுத்தை ஒருவர் தேடும் இந்தக் கண்ணாமூச்சிப் போராட்டத்தில் யாராவது ஒருவர் கண்மூட வேண்டும்! நிச்சயம் அந்தப் பிறவி நானில்லை!
ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] கிளியோபாத்ரா! போதும் நிறுத்து உன் பேச்சை! டாலமியைப் பலிவாங்க நீ புறப்பட்டு விட்டாய்! உங்களுக்குள் பிரிவும், போரும் நேர்வதை எகிப்தியர் யாரும் விரும்பார்! உள்நாட்டுக் கலவரம் உங்களால் நிகழ்வதை ரோமாபுரியும் விரும்பாது! நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்து நாடாள்வீர் என்பதைப் பற்றி வாதிப்போம்! முடிவு செய்வோம்! டாலமி! என்ன சொல்கிறாய் அதற்கு?
டாலமி: இரட்டையர் ஆட்சிக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் கிளியோபாத்ரா அதற்குத் தயாரில்லை! நாட்டை இரண்டாக வெட்டினால் நாங்கள் தனித்தனியாக அரசாட்சி நடத்தலாம்! நிம்மதியாக இரவில் தூங்கலாம்! ஒரே அரண்மனையில் தலைக்குமேல் கத்தி தொங்கும் போது நாங்கள் எப்படி உறங்க முடியும்?
கிளியோபாத்ரா: எகிப்தைத் துண்டாட நான் விடமாட்டேன்! எகிப்து ஒரு நாடு! அதை ஆள்பவர் ஒருவரே! அதுவும் கிளியோபாத்ரா ஒருத்திதான்!
ஜூலியஸ் சீஸர்: தனித்தனி மாளிகையில் குடித்தனம் நடத்துங்கள்! நீங்களிருவரும் சேர்ந்தாண்டால், சைப்பிரஸ் தீவை உங்களுக்குச் சன்மானமாக அளிக்கிறேன்!
போதினஸ்: சைப்பிரஸ் தீவா? ஒன்றும் விளையாத பன்றித் தீவு சைப்பிரஸா? எமக்கு வேண்டாம் அது!
கிளியோபாத்ரா: [முகமலர்ச்சியுடன்] நல்ல நன்கொடை சீஸர்! சைப்பிரஸ் தீவில் நூற்றுக் கணக்கானத் திராட்சைத் தோட்டங்கள் உண்டே! ஒயின் உற்பத்தி செய்து எகிப்து ரோமாபுரிக்கு விற்கலாமே!
ஜூலியஸ் சீஸர்: ஒயினை ஏன் விற்க வேண்டும்? ரோமாபுரி ஆண்டுக் கப்பத்துக்கு ஈடாக அனுப்பலாமே!
டாலமி: கள்ள ராணி! கப்பம் என்றதும் களவு போன பொக்கிசம் நினைவுக்கு வருகிறது! எங்கே பொக்கிச நிதி? கப்பம் கட்டும் நிதியைக் களவாடிப் போனாயே! கொடு அதைச் சீஸர் கையில்! எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய், சொல்?
கிளியோபாத்ரா: டாலமி! அது என் நிதி! தந்தையார் சாகும் போது எனக்கு அளித்தது! அது உன் நிதி என்று யார் சொன்னார்? கணக்கு விபரம் தெரியாத அறிவிலி நீ! வரவு செலவு புரியாத அறிவாளி நீ! என்னைத் துரத்திவிட்டு வரிப்பணத்தை வாங்கத் தவறியவன் நீ! அரசனாகக் காலம் கடத்திய நீதான் சீஸருக்குக் கப்பம் செலுத்த வேண்டும்! நாடு கடத்தப்பட்ட நான் ஏன் தர வேண்டும்?
டாலமி: சீஸர் அவர்களே! உமது கப்பப் பணம் கிளியோபாத்ராவிடம் உள்ளது! அந்தக் கள்ளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்! விடாதீர் அந்த வேடக்காரியை! எங்களிடம் பணம் கைவசமில்லை!
கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] தளபதி! கப்ப நிதி நான் கட்டத் தயார், ஏகப் பெரும் பட்டத்து ராணியாய் நான் மகுடம் சூட்டப் பட்டால்! டாலமி அகற்றப்பட வேண்டும்! நான் தனி ராணியாக ஆசனத்தில் அமர வேண்டும்! சீஸரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! எனக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!
*********************

அங்கம் -2 பாகம் -7
கிளிபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்!”

டாலமி XIII

ஓ! உன்னத வாழ்வே!
விலை மதிப்பிலா ஒளிக்கற்கள்,
வேண்டாம் எனக்கு!
நீண்ட நாள் வாழ்ந்திட மட்டும்
வேண்டி நிற்பவள் நான்!
சாதாரணச் சமயத்தில் கூட
இருபது முறை பாவையவள்
சாவதைப் பார்த்தி ருக்கிறேன்!
மரணமும் வலையை வீசி
மாதின் மீது காதல் கொள்கிறது!
மரணமும் மயங்கிக் கரம் பற்றும் புகழ்மாது!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.
கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] ரோமாபுரித் தளபதியாரே! கப்பநிதி கட்ட நான் தயார்! இரண்டு நிபந்தனைகள் அதற்கு! முதல் நிபந்தனை டாலமி அகற்றப்பட வேண்டும்! இரண்டாவது நான் எகிப்தின் தனி ராணியாக மகுடம் சூடி ஆசனத்தில் அமர வேண்டும்! அருமை நண்பரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! அந்தப் பாதை எனக்குத் தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்!
டாலமி: [கோவென அழத் தொடங்குகிறான்] ஜெனரல் சீஸர்! என்னைக் காப்பாற்றுங்கள். எகிப்தை என்னிடமிருந்து பறிக்காதீர். நாடோடி நங்கைக்கு மகுடம் சூட்டாதீர். கிளியோபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது பாம்பு! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்! எச்சரிக்கை செய்கிறேன்! உமது உடைவாளை உருவி, என்னை ஒரு நொடியில் கீழே தள்ளி விட்டாள். அவள் சொல்லைக் கேட்டு என்னை அகற்றி விடாதீர்! எனக்கு நீங்கள்தான் அடைக்கலம் தரவேண்டும்.
ஜூலியஸ் சீஸர்: [டாலமியைத் தட்டிக் கொடுத்து] கவலைப் படாதே, டாலமி! உன் உயிருக்கு ஒரு கேடும் வராது! உன்னைக் காப்பது என் பொறுப்பு. நீயும், அவளும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது என் ஆசை! அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!
போதினஸ்: [கோபத்துடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் வற்புறுத்திக் கேட்கும் பெருந்தொகை எங்கள் விடுதலை வாங்க யாம் உமக்கு அளிக்கும் விலைப்பணம்! தருகிறோம் உமக்கு! ஆனால் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும் நீங்கள்! எங்கள் அரசியல் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்! எம் தோளிலிலிருந்து இறங்குவீர்! நீங்களும் உங்கள் படைகளும் பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனே வெளியேறுங்கள்! எகிப்த் நாடு எகிப்தியருக்கு உரிமை யானது!
ஜூலியஸ் சீஸர்: [வெடித்துச் சிரிக்கிறார்] நல்ல வேண்டுகோள் போதினஸ்! எகிப்து ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! எங்களை யாரும் விரட்ட முடியாது!
கிளியோபாத்ரா: [கெஞ்சலாக] மேன்மைமிகு ஜெனரல் அவர்களே! நீங்கள் வெளியேறக் கூடாது! ரோமானியப் படை வெளியேறினால் நான் எகிப்தின் ராணியாக முடியாது! டாலமிக் கழுகுகள் என்னை உயிரோடு தின்றுவிடும்! உங்கள் பாதுகாப்பில்தான் நான் எகிப்தை ஆள முடியும்! அரண்மனையை விட்டு உங்கள் படையினர் நீங்கினாலும், நீங்கள் தங்கி யிருக்க வேண்டும்!
ரூஃபியோ: [கொதிப்புடன்] போதினஸ்! வாயை மூடு! எகிப்த் நாடு எகிப்தியருக்குத்தான்! ஆனால் ரோமாபுரிப் படையன்று எகிப்தில் பல்லாண்டு காலம் உள்ளதை மறந்தீரா? எகிப்த் நாடு ரோமாபுரிக்குக் கீழிருப்பதை மறந்தீரா? யாமிதை விட்டு நீங்க மட்டோம்! மதிப்புடன் உரையாடி மதிப்பைப் பெறாமல் நாக்கு பிறழ்வதைக் காண்கிறோம்! எச்சரிக்கை செய்கிறேன்! அறிவோடு உரையாடுவீர்! சிறிய பாலகன் போல் பேசாதீர்!
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் கிளியோபாத்ராவை அணுகி] கண்ணே, கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்குப் பட்டத்து ராணியாக மகுடம் சூட வைப்பது என் பொறுப்பு! டாலமி இன்னும் பாலகனாக இருப்பது எமக்கு வருத்தமாக உள்ளது! நானிதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை! மன்னர் டாலமி பொம்மை ராஜாவாக ஆசனத்தில் அமர, அமைச்சர் போதினஸ் உண்மை ராஜாவாக ஆள்வதை நான் விரும்பவில்லை!
அக்கிலஸ்: [சினத்துடன்] ஜெனரல் அவர்களே! உமது தவறான கூற்றை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! எமது மன்னர் டாலமியை ஆசனத்திலிருந்து நீக்க உமக்கு எந்த உரிமையுமில்லை! எமது விரோதி கிளியோபாத்ராவை எகிப்துக்கு ராணி ஆக்கவும் உமக்கு உரிமை யில்லை! ஒருதலைப்பட்ட உமது முயற்சி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும்!
தியோடோடஸ்: ஜெனரல் சீஸர் அவர்களே! எகிப்த் நாட்டுக்கு வருகை தந்த நீங்கள் எமக்குப் புதியவர்! எங்கள் நாகரீகம் அறியாதவர்! எங்கள் கலாச்சாரம் புரியாதவர்! யார் நாட்டை ஆளத்தகுதி உள்ளவர் என்பது எமக்குத்தான் தெரியும்! உமக்குத் தெரியாது! எகிப்தை ஒரு பெண்ணரசி ஆள்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை! காலை முதல் மாலை வரை கண்ணாடி முன்னின்று தனது வனப்பை எப்படி மிகையாக்குவது என்பதிலே காலம் களிப்பவர்! நாட்டைக் கவனிக்க பெண்ணரசிக்கு நேரம் ஏது? நினைப்பேது? கிளியோபாத்ராவை உயிரோடு நாடு கடத்தியது எமது தவறே! அவள் தற்போது உமது நிழலில் நின்று கொண்டு மன்னர் டால்மியின் ஆசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறாள்!
கிளியோபாத்ரா: [கைவாளை தியோடோடஸ் கழுத்தருகில் நீட்ட, தியோடோடஸ் நடுங்குகிறார்] கிழட்டுக் குருவே! எமது உப்பைத் தின்று உமக்குத் திமிர் மிஞ்சி விட்டது! டாலமிக்கு கூட்டல், கழித்தலைத் தவிர, பெருக்கல், வகுத்தல் தெரியாது. பிரமிடில் ஒளிந்திருக்கும் வான சாஸ்திரம் தெரியாது! வானத்தில் பரிதிக்குப் பக்கம் எந்த கோள் சுற்றுகிறது என்பது தெரியாது. சூரிய கிரகணம் எப்படி வருகுது என்று அறிய மாட்டான்! பிரமிடை அவனுக்காகக் கட்டினாலும், பித்தகோரஸ் கோட்பாடு தெரியாத மடையன்! கிழட்டுக் குருவே! எனக்கு நீவீர் சொல்லிக் கொடுத்த எதுவும் டாலமியின் மண்டை ஒட்டுக்குள் ஏன் நுழைய வில்லை? எனக்குள்ள அறிவும், ஞானமும், திறனும் அவனுக்குக் கிடையாது! அவன் பொம்மை ராஜாவாக இருந்தால், உம்மைப் போன்ற அரசாங்க ஊழியருக்குக் கொண்டாட்டம்தான்!
ஜூலியஸ் சீஸர்: [மிகவும் ஆச்சரியமடைந்து, கிளியோபாத்ராவின் கூந்தலைத் தடவி] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! இருபது வயதுக் குமரிக்கு எத்தனை ஞானம் உள்ளது? பிரமிடின் அமைப்புக்கு வரைகணித மூலமான பித்தகோரஸ் கோட்பாடு உனக்குத் தெரியுமா? எனக்குக் கூடத் தெரியாதே! குருநாதரைப் படபட வென்று வெளுத்துக் காயப் போட்டு விட்டாயே! ஐயமின்றி எகிப்தை ஆளத் தகுதி பெற்ற பெண்ணரசி நீதான்! நீ ஒருத்திதான்! பாராட்டுகிறேன் உன்னை! எகிப்தின் பேரரசியாக வர வேண்டுமென உன்னை நீயே தயார் செய்து கொண்டது, என்னை வியப்பில் தள்ளுகிறது! உன்னைப் போலொரு ஞானப் பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! நீயே எகிப்தைத் தனியாக ஆட்சி செய்வதை நான் விரும்புகிறேன்! உன்னை ஆசனத்தில் அமர்த்தி மகாராணியாக மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமுக்கு மீளுவேன்! இது உறுதி!
கிளியோபாத்ரா: [புன்னகையோடு சீஸரின் கன்னத்தைத் தடவி] என்னருமைத் தளபதி! நீங்கள்தான் மெய்யான ரோமாபுரித் தீரர்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நண்பர்! என்னருமை நண்பர்! நீங்கள் எகிப்தை விட்டு ஏன் ரோமுக்குப் போக வேண்டும்? இங்கே எமது அரண்மனை விருந்தினராகத் தங்கி சில காலம் இருக்க வேண்டும்!
ஜூலியஸ் சீஸர்: என்னருமைக் கிளியோபாத்ரா! அது முடியாது! நான் ரோமாபுரிக்கு உடனே மீள வேண்டும்! கவலைப் படாதே! உன்னை எகிப்தின் ராணியாக ஆக்கிய பிறகுதான் செல்வேன்.
கிளியோபாத்ரா: நீங்கள் எகிப்தை விட்டு நீங்கினால், நான் நிரந்தர ராணியாக ஆட்சி செய்ய முடியாது! ஈதோ பாருங்கள் கழுகுகளை! கண்களில் கனல் பறக்கிறது! உங்கள் துணை அருகில் இல்லா விட்டால், என்னைக் கொன்று விடுவார்! நான் உங்களை விட்டுத் தனியாக எப்படி அரசாளுவேன்?
டாலமி: [கோபத்துடன்] பார்த்தீரா பசப்பியை? குழைந்து, நெளிந்து, மெழுகாய் உருகி விட்ட பாவையை!
தியோடோடஸ்: [சற்று மெதுவாக] மெழுகாய் உருகியது கிளியோபாத்ரா இல்லை! மகா வீரர் ஜூலியஸ் சீஸர்! சில வினாடிகளுக்கு முன்பு டாலமியும், கிளியோபாத்ராவும் ஒன்றாக ஆளப் போவதைக் கனவு கண்டார். சில வினாடிகளில் டாலமியை மறந்தார்! வாலிப மங்கை மீது வாஞ்சை வந்து விட்டது! சீஸர் சரியான ராஜ தந்திரி! சரியான அரசியில்வாதி! சரியான பச்சோந்தி! பாவையைக் கண்டதும் அவரது மோகக் கண்கள் திறந்து விட்டன! எகிப்த் ரோமா புரிக்கு அடிமை நாடு! ஆனால் சீஸர் கிளியோபாத்ராவின் அடிமை! இனிமேல் சீஸர் கிளியோபாத்ராவின் கைப் பொம்மைதான்!
அக்கிலஸ்: [போதினஸ் காதுகளில் மெதுவாக] தெரியுமா உனக்கு! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதலியர் உண்டு! ஆம் இப்ப்போது எகிப்தில் ஓர் ஆசைக் கிளி! இது எத்தனை நாட்களுக்கோ?
போதினஸ்: [கோபத்துடன்] அக்கிலஸ்! அந்த காதல் பேச்சு உனக்குத் தேவை யில்லை! உனக்கு அறிவிருக்கு மானால், சீக்கிரம் சிறைப்படுத்து கிளியோபாத்ராவை! .. ஏன் தயங்குகிறாய்? போ கைப்பற்று அவளை! [அக்கிலஸ் உருவிய வாளோடு நகர்கிறான்]
ரூபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]
*********************

அங்கம் -2 பாகம் -8
தைபர் நதிக்கரை மீதுள்ள
ரோமாபுரி எரிந்து உருகிடலாம்!
சாம்ராஜி யத்தின் விரிந்த
தோரண வளையம் கவிழ்ந்திடலாம்!
நானாடும் அரங்கவெளி இங்குளது!
பேரரசுகள் வெறுங் களிமண்! நம்மிருண்ட
தாரணியும் மண்ணே!
எதிர்த் திசையில் அதுவும்
மனித ரெனக் கருதி,
காட்டு விலங்குக்கு ஊட்டும் உணவு!
ஆண்பெண் இருவர் சேர்ந்து புரியும்
வாழ்வின் மகத்துவம் அதுவே!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

ரூஃபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]
போதினஸ்: [தயக்கத்துடன்] எங்கள் எதிரி கிளியோபாத்ரா மட்டுமே! அவரைக் கைது செய்து சிறையில் அடைப்போம்! ரோமாபுரியின் ஜெனரல் எங்கள் சிறப்பு விருந்தினர்! எங்கள் இனிய நண்பர்! எங்கள் மதிப்பிற்கும், துதிப்பிற்கும் உரிய ரோமாபுரித் தளபதி!
ரூஃபியோ: [அழுத்தமாக] அதைப் போல கிளியோபாத்ரா ரோமாபுரியின் நண்பர்! ஜெனரல் சீஸர் எகிப்துக்குப் பேரரசியாக மகுடம் சூடப் போகும் மாண்புமிகு மாது! ரோமாபுரியின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் உரியவர்! அவரைச் சிறை செய்வது, சீஸரைச் சிறைப்படுத்தியதற்குச் சமம்!
போதினஸ்: எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி! இன்றைக்கு அவர் உங்கள் நேரடிப் பாதுகாப்பில் தப்பி வாழ்கிறார். ஆனால் அவளைக் கைது செய்ய யாம் என்றும் தயங்க மாட்டோம்!
பிரிட்டானஸ்: நீங்கள் யாவரும் தற்போது சீஸரின் அரசியல் கைதிகள்!
ஜூலியஸ் சீஸர்: [முகத்தில் முறுவலுடன்] ஓ! இல்லை!இல்லை!இல்லை! நீங்கள் அனைவரும் சீஸரின் விருந்தாளிகள்.
கிளியோபத்ரா: [ஆத்திரமோடு] ஜெனரல் அவர்களே! பிரிட்டானஸ் சொல்வதுதான் சரி! டாலமி, டாலமியின் குரு, டாலமியின் படை அதிபதி அத்தனை பேரும் மூர்க்கவாதிகள்! அவரைச் சிறையிலிட்டு என்ன செய்வீர்! அறுசுவை உண்டி அளித்து உடலைக் கொழுக்க வைக்கப் போகிறீரா? உங்கள் நிலையில் நானிருந்தால் அத்தனை தலைகளும் இப்போது அறுக்கப்பட்டுத் தரையில் உருண்டோடிக் கொண்டிருக்கும்! அவரை எல்லாம் நீங்கள் சிரச்சேதம் செய்யப் போவதில்லையா?
ஜூலியஸ் சீஸர்: [சற்று அவளை உற்று நோக்கி] என்ன? உன் தமையன் பாலகன் டாலமியின் தலையைத் துண்டிக்கச் சொல்கிறாயா?
கிளியோபாத்ரா: ஏன் துண்டிக்கக் கூடாது! வாய்ப்புக் கிடைத்தால் டாலமி என் தலையை வாளால் சீவி எறிய மாட்டானா? கேளுங்கள்! ..[டாலமியைப் பார்த்து] டாலமி! எல்லோர் முன்பாக உண்மையைச் சொல்! என்னைச் சிரச்சேதம் செய்யாமல் பிழைத்து வாழ விட்டுவிடுவாயா?
டாலமி: [சற்று மிரட்சியுடன்] பாம்பும், பாவையும் என் பக்கத்தே தீண்ட வந்தால், பாம்பை விட்டுவிட்டு நான் பாவையைத்தான் முதலில் அடித்துக் கொல்வேன்! ஏன்! பெரியவனானால் நானே அவள் தலையைத் வாளால் துண்டிக்கவும் தயங்க மாட்டேன்!
கிளியோபாத்ரா: பார்த்தீரா? ஆல கால விஷம் கக்கும் டாலமிப் பாலகனை!
ஜூலியஸ் சீஸர்: [தீர்மானமாக] டாலமி! போதினஸ்! தியோடோடஸ்! நீங்கள் யாவரும் போகலாம். விடுதலை உங்களுக்கு! போகும் போது உங்கள் படைகளையும் கூட்டிச் செல்லுங்கள்.
போதினஸ்: [தயக்கமுடன்] ஏன் நாங்கள் போக வேண்டும்! எங்கள் அரண்மனை யிது! போக வேண்டியது கிளியோபாத்ரா!
ஜூலியஸ் சீஸர்: [சற்று கடுமையாக] போதினஸ்! கிளியோபாத்ரா எகிப்தின் பேரரசியாகப் போகிறவள்! அவள் கையில் பிடிபட்டு உங்கள் தலையை யிழக்க விரும்புகிறீரா? அல்லது உங்கள் தலையை உடம்பில் ஒட்டியபடித் தூக்கித் தப்பிச் செல்ல விரும்புகிறீரா? உயிர் பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறேன் உமக்கு! ஒப்புக் கொண்டு உடனே வெளியேறுங்கள். அல்லது மறுத்துக் கொண்டு கியோபாத்ராவிடம் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மைத் தோழர்கள் வெளியே தெருவிலும் உள்ளார்! அதுதான் உங்கள் உலகம்! வெளியேறுவீர் சீக்கிரம்!
தியோடோடஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! மறந்து விட்டீரா, உமது ஆருயிரைக் காப்பாற்றியவர் யாமென்று?
ஜூலியஸ் சீஸர்: என்ன? என்ன? புதிராக உள்ளதே! என்னுயிரைக் காப்பாற்றியவர் நீங்களா? எங்கே எப்போது என்னுயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்? அதுவும் எனக்குத் தெரியாமல்! வியப்பாக உள்ளதே!
தியோடோடஸ்: ஆம், அது உண்மைதான். உங்கள் இனிய உயிருக்குப் பாதுகாப்பு! உங்கள் மகத்தான வெற்றிகளுக்குப் பாதுகாப்பு! உங்கள் பொன்மயமான எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு! அந்த மூன்றையும் நீங்கள் அறியாமலே பாதுகாத்தோம்.
போதினஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! அதை நிரூபிக்க நானொரு சாட்சியை வரவழைக்கப் போகிறேன். [எகிப்தியர் படையாட்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி] அதோ! அங்கே நிற்கிறார், லூசியஸ் ஸெப்டிமியஸ். அவரது தலைமையில்தான் அப்பணி நிறைவேறியது. [லூசியஸை நோக்கி] லூசியஸ்! நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? சீஸர் முன்வந்து நீ நடந்ததைச் சொல்வாயா?
[நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட 40 வயது வாலிபன், ரோமன் உடை அணிந்தவன் சீஸர் முன் வருகிறான்.]
போதினஸ்: உண்மையைச் சொல், லூசியஸ்! ஜெனரல் சீஸர் எகிப்துக்கு ஏன் வந்தார்? தன் பகைவன் ரோமாபுரி பாம்ப்பியை தேடிப் பிடிக்க வந்தாரில்லியா? எகிப்தியர் நாம் என்ன செய்தோம்? பாம்ப்பியை எகிப்தில் ஒளித்து வைத்தோமா?
லூசியஸ்: [அழுத்தமாக] ஜெனரல் சீஸர் அவர்களே! பாம்ப்பியின் காற்தடம் எகிப்தின் கரையில் பட்டவுடன், அவரது தலையை என் வாளால் வெட்டித் துண்டித்து விட்டவன் நான்!
தியோடோடஸ்: [ஆணித்தரமாக] அவரது மனைவி, பிள்ளை இருவர் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப் பட்டான் பாம்ப்பி! நினைவிருக்கட்டும் ஜெனரல் சீஸர்! கப்பலை விட்டுக் கரையில் கால் வைக்கும் போது அவரிருவரும் கண்வலிக்கக் கண்ட காட்சி! நீங்கள் பலிவாங்கக் காத்திருந்ததை, நாங்கள் செய்தோம். ரோமாபுரி ஜெனரலுக்காக, எகிப்தியர் செய்த நன்றிக் கொலை! உங்கள் அன்பைக் கவர நாங்கள் செய்வத நல்ல காரியம், பாம்ப்பியைக் கொன்றது!
ஜூலியஸ் சீஸர்: [மனவேதனை யுற்று, தடுமாறி அங்குமிங்கும் நடந்து] பாவிக் கொலைகாரர்களா! நீவீர் புரிந்தது படுகொலை! நன்றிக் கொலையா அது? நரபலிக் கொலை! ரோமாபுரித் தளபதி பாம்ப்பி வீரத்தில் எனக்கு நேரானவன்! போரிடுவதில் எனக்கு நிகரானவன்! போரிட்டுக் கொல்லாமல் வீரனை படுகொலை செய்த நீவீர் அனைவரும் கொலைகாரர்கள்! குற்றவாளிகள்! உம்மைச் சும்மா விட்டுவிட மாட்டேன்! பகைவனாயினும் ஒரு ரோமனைப் போரிடாமல் கொல்வது, என்னெறிப்படி ஒரு படுகொலை! யாரிந்த சதியைத் திட்டமிட்டது? ஏ! லூசியஸ்! யாருனக்கு ஆணை யிட்டது? யாருன்னை அனுப்பிக் கொலை செய்யத் தூண்டியது? என் மனத்தைத் துடிக்கச் செய்த அந்த பயங்கரவாதி யார்? .. யார்? …யார்?
போதினஸ்: துணிச்சலான அச்செயல் ஜெனரல் சீஸருக்காகச் செய்யப் பட்டது! அதைத் திட்டமிட்டவன் நான்தான்! நினைத்ததை முடித்த நான் அதற்குப் பெருமைப் படுகிறேன்! பயங்கரத் தளபதி பாம்ப்பியைக் கொன்றதற்குச் சான்றுகள் இன்னும் உள. [அக்கில்லஸைப் பார்த்து] அக்கில்லஸ்! கொண்டுவா அடுத்த குடத்தை! ஜெனரல் சீஸருக்குக் காட்டு அடுத்த சான்றை!
[அக்கில்லஸ் முன்வர இரண்டு அடிமைகள் மூடிய ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்து தரையில் வைக்கிறார்கள்.]
அக்கில்லஸ்: [பானை மூடியைத் திறந்து] ஜெனரல் சீஸர் அவர்களே! இதோ, பாம்ப்பியின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! பார்க்க விரும்புகிறீரா? உங்கள் பகைவனை ஒழித்து விட்டோம்! [அடிமைகள் மூடியைத் திறந்து தலையை எடுக்க முனைகிறார்கள்]
ஜூலியஸ் சீஸர்: [மனமுடைந்து, அலறிக் கொண்டு] கொலைகாரரே! நிறுத்துங்கள்! நானதைக் காண விரும்பவில்லை! அயோக்கியர்களே! முரடர்களே! பாம்ப்பி என்னும் ரோமாபுரி வீரன் என் பகையாளி என்று மட்டுமா நினைத்தீர்? அவன் என் மகள் ஜூலியாவை மணந்தவன். என் மருமகன் அவன்! காலமான பாம்ப்பியின் முதல் மனைவி எனது ஒரே மகள் ஜூலியா! அவளும் என்றோ காலமாகி விட்டாள்! கடவுளே! என்ன கொடுமை யிது? ஓ! பாம்ப்பி! நீ இப்படியா இந்த மூர்க்கர் கையில் அறுபட்டுச் சாவாய்?
அக்கில்லஸ்: [சீஸரை அணுகி, வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!
ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூபியோ! பிரிட்டானஸ்! விலங்கோடு வாருங்கள்! கொலைகாரர் யாவரையும் கைது செய்யுங்கள்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்துங்கள்! கிளியோபாத்ராவுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திடுங்கள்!
*********************

அங்கம் -2 பாகம் -9
“ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!”
லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“கிளியோபாத்ரா பல்வேறு நாட்டுத் தூதர்களோடு அவரவர் மொழியிலே பேசித்தான் பதிலளிப்பாள். சிறுபான்மையான சில காட்டுமிராண்டி நாட்டு அரசரோடு உறையாற்றும் போது மட்டும், அம்மொழி விளக்குநரின் உதவியை நாடுவாள். எதியோப்பியன், ஹீபுரூஸ், அரேபியன், சிரியன், பார்த்தியன், டிரோகிளோடைட்ஸ், மீடேஸ் [Troglodytes, Medes] மற்றும் சில தேசத்துத் தூதருடன் பேசும் போது அவரவர் சொந்த மொழியில் பேசித் தன் நண்பராக்கிக் கொள்வார். அவளுக்கு முன்னாண்ட எகிப்திய அரசருக்கு எகிப்திய மொழியில் உரையாடும் அறிவு கூட கிடையாது! அவர்களில் பலர் மாஸிடோனியா மொழியைக் கூடப் பேச விருப்பமின்றிப் புறக்கணித்தவர்!
புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

“சில மாதர் கொண்டுள்ள ஆத்மாவில் சீஸரின் ஆங்கார உணர்ச்சியை நீ காண முடியும்.”
ஆர்டிமிஸியா ஜென்டிலெஷி ரோமானிய ஓவிய மாது (1593-1653)

“பேராசைக் குணம் கொண்டவரையே முடிவில் கொல்கிறது!”
டால்முட் புனிதநூல் [The Talmud: Yomah 86 b]

“அளவற்ற ஆசை, பேராசை, காமம் அனைத்தும் பைத்தியக் குணத்தின் கார மசாலாக்கள்.”
பெனிடிக் ஸ்பைனோஸா, ஒழுக்கவியல் (1632-1677)
“பேராசைத்தனமே ஒரு துர்குணம் ஆயினும், அதுவே நன்னெறிக்கும் தாயாக உள்ளது.”
குயின்டில்லியன் ரோமானியக் கல்வி மேதை (கி.மு.35-கி.பி.95)

நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.
காட்சி அமைப்பு:
பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான். கம்பளச் சுருளிலிருந்து எழுந்த கிளியோபாத்ரா, தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் படுகிறார்.
அக்கில்லஸ்: [சீஸரை அணுகி வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!
ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூஃபியோ! விலங்கோடு வா! கொலைகாரர் யாவரையும் கைது செய்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளு! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்து! கிளியோபாத்ராவுக்கு மட்டும் முழுப் பாதுகாப்பு அளித்திடு!
கிளியோபாத்ரா: [மனமுடைந்து சீஸரை அணுகிக் கண்ணீரைத் தன்னுடையால் துடைத்து விட்டு] என்ன அதிர்ச்சியான சேதி! என் நெஞ்சமும் கொதிக்கிறது! உங்கள் மருமகன் ரோமாபுரித் தளபதியைக் கொன்றவர் மூர்க்கவாதிகள்! உங்கள் அருமைப் புதல்வியின் கணவரைக் கொன்றவர் கொடூரவாதிகள்! எப்படித் தாங்கிக் கொள்ளும் உங்கள் நெஞ்சம்? எகிப்திய மாதான என்னால் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எப்படி உங்களுக்கு நான் ஆறுதல் சொல்ல முடியும்? உங்களுக்கு அமைதி உண்டாக்க என்னிடம் உருக்கமான வார்த்தைகளில்லை! உங்கள் குடும்பத் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!
ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறார்] நன்றி கிளியோபாத்ரா! என் கண்களில் கொட்ட வேண்டிய கண்ணீர் மழை, அருவிபோல் உன் கண்களில் பெய்கிறது! உன் பாச உணர்ச்சி என்னை நெகிழச் செய்கிறது. [போதினஸைப் பார்த்து சினத்துடன்] மூர்க்கனே! ரோமாபுரிக்கே நீ தீ வைத்து விட்டாய்! முரடனே! ரோமுக்கும், எகிப்துக்கும் தீராப் பகைமையை வளர்த்து விட்டாய்! மூடனே! ரோமாபுரித் தளபதி வீர மரணம் அடையாது, அடிமை நாட்டுப் பொடியன் ஒருவனால் கொல்லப் பட்டான் என்னும் செய்தி ரோமாபுரியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கப் போகிறது! நீங்கள் ரகசியமாய்ப் பாம்ப்பியைக் கொன்றது அவருக்குத் தெரியாது! என் ஆணைப்படி பாம்ப்பியை உங்கள் மூலம் பலிவாங்கிக் கொண்டேன் என்று ரோமானியர் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். என் மருமகனைக் கொன்றது மில்லாமல் என்னைப் பிறர் வெறுப்பதற்குக் காரணமானீர்! என் பகைவர் என்னை ஒழித்துக் கட்ட முனைவதற்கும் வழி வகுத்தீர்!
போதினஸ்: உங்கள் பகைவரை ஒழித்த எங்களைப் போற்றுவதற்குப் பதிலாக நீங்கள் தூற்றுகிறீர்! செய்நன்றி மறந்தீர்! பலிவாங்கும் பணியை நீங்கள் புரிந்தால் என்ன, நாங்கள் புரிந்தால் என்ன? ஒரே முடிவு தானே நிகழ்ந்தது! பாம்ப்பியின் மரணம்!
ஜூலியஸ் சீஸர்: ஒரே முடிவென்றாலும் ஆயுதமற்ற ரோமானியனைக் கொன்றது குற்றம்! அதுவும் ஆக்கிரமிப்பு நாட்டான் ஆதிக்க நாட்டானைக் கொன்றது முன்னதை விடப் பெருங்குற்றம்! பாம்ப்பி எனது பூர்வீக நண்பன்! என்மகளை மணந்தவன். என் மருமகன்! ஈருபத்து ஆண்டுகளாய் ரோமாபுரியின் மாவீரன் எனப் பெயரெடுத்தவன் பாம்ப்பி! முப்பது ஆண்டுகளாய் மாபெரும் போர்களில் வெற்றிமாலை சூடியவன் பாம்ப்பி. அவன் பின்னால் நின்று ஒரு கோழை வீழ்த்தியது மாபெரும் கொடூரத்தனம்! [லூசியஸைப் பார்த்து] …. ஒழிந்துபோ! என்முன் நிற்காதே! அனைவரும் வெளியே செல்லுங்கள்.
[டாலமி, போதினஸ், அக்கிலஸ் அனைவரும் ரோமானியக் காவலர் பின்தொடர வெளியேறுகிறார்]
ரூஃபியோ: தளபதி அவர்களே! குற்றவாளிகளை எப்படித் தண்டிக்காமல் விடுவது? அப்படியே தப்பிச் செல்ல விட்டுவிட்டால், ரோமாபுரி மாந்தர் உங்கள் மீது வெறுப்புக் கொள்வார்! அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ரோமாபுரின் சட்டப்படிக் கொலைகாரர் தண்டிக்கப்பட வேண்டும்!
ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] போதினஸைச் சிரச்சேதம் செய்! அக்கிலஸைச் சிறையிடு! டாலமியை நாடு கடத்து!
ரூஃபியோ: அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. யாரையும் நான் சிறைப்படுத்தப் போவதில்லை. அவரைச் சிரச்சேதம் செய்யப் போகிறேன். [சீஸருக்கு வணக்கமிட்டு வெளியே செல்கிறான்]
கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கிக் கனிவுடன் கன்னத்தைத் தடவி] என் கனவு பலித்தது! ஒரு கணத்திலே எகிப்தின் பட்டத்து ராணியாக என்னை ஆக்கி விட்ட உமது திறமையைப் பாராட்டுகிறேன். அதற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு! [சீஸரை மீண்டும், மீண்டும் முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறாள்] … ஆனால் ஒரு வேண்டுகோள். டாலமியை நீங்கள் அவிழ்த்துவிடக் கூடாது! அந்தக் காளங் கன்றை வெளியே அலைய விடக் கூடாது! எனக்கெதிராக படை திரட்டுவான்! டாலமியின் கால்நிழல் எகிப்தில் மீண்டும் ஊர்ந்து செல்லக் கூடாது!
ஜூலியஸ் சீஸர்: டாலமியை என்ன செய்ய வேண்டும் என்பது பிரிட்டானஸ் ஒருவனுக்குத்தான் தெரியும்! பிரிட்டானஸ்! டாலமியைப் பின்பற்று! [பிரிட்டானஸ் டாலமியைப் பின்தொடர்கிறான்] [பரிவுடன் கிளியோபாத்ராவை நோக்கி] கண்ணே, கிளியோபாத்ரா! உனக்கும் நான் தக்க தண்டனை தர வேண்டும்! சதிகாரன் டாலமியின் மனைவி நீ! கொலைகாரன் டாலமியின் தமக்கை நீ! உன்னை என்ன செய்ய வேண்டுமென்று நீயே சொல்லிவிடு!
கிளியோபாத்ரா: [சற்று சினத்துடன்] பாலை வனத்துக்கு என்னைத் துரத்திய டாலமி என் கணவன் அல்லன்! கூடப் பிறந்த தமையனும் அல்லன்! எகிப்தை ஆள்பவரும், அவரது மனைவியும் •பாரோ மன்னரின் பரம்பரையாக இருக்க வேண்டும் என்பது பூர்வீக விதி! என்னை விலக்கி வைத்து விரட்டியன் என் கணவன் என்பது என்றோ முறிந்து விட்டது! நானிப்போது மணமாகாத ஒரு தனி மாது! எகிப்தின் ராணியாகிய பிறகு மறுமணம் செய்து கொள்வேன்! டாலமி தமக்கையான எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்! [நடந்து போய் டாலமி விட்டுச் சென்ற அரச ஆசனத்தில் அமர்கிறாள்] மகாவீரர் சீஸர் அவர்களே! நீங்கள் ரோமாபுரிக்குப் போகும் முன்பு, நான்தான் எகிப்தின் ஏகபோக ராணி என்று எனக்குப் பட்டம் சூடி உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் நோக்கி] அப்படியே செய்கிறேன், கண்மணி கிளியோபாத்ரா! உனக்கு மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமாபுரிக்குச் செல்வேன். அது மட்டும் உறுதி! …. ஆமாம், பட்டத்து ராணியாக முடி சூடிய பிறகு, யாரை நீ மணந்து கொள்ளப் போகிறாய்? யாரந்த அதிர்ஷ்டசாலி? நான் தெரிந்து கொள்ளலாமா?
கிளியோபாத்ரா: [எழுந்து நின்று தன்னைச் சிங்காரித்துக் கொண்டு] நான் வரப் போகும் கணவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! அவரொரு மாவீரர்! யாரென்று உமக்குச் சொல்ல மாட்டேன்! நீங்களே அந்த திருமணத்தில் பங்கெடுத்து எம்மைப் பாராட்டுவீர்! என்னை நீங்கள் ராணி ஆக்கியதற்கு முதலில் நான், உமக்கு மாபெரும் பரிசை அளிக்கப் போகிறேன்!
ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் அருகில் அமர்ந்து] என்ன வெகுமதி எனக்கு அளிக்கப் போகிறாய்? சொல்ல மாட்டாயா கிளியோபாத்ரா? யாரந்த மாவீரன்?
கிளியோபாத்ரா: உமது வெகுமதி என்ன என்பது ரகசியம். அதை நான் உமக்குச் சொல்லப் போவதில்லை! அவை எல்லாம் சொல்லித் தெரிவதில்லை! நீங்களே கண்டு கொள்வீர்!
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் நெருங்கி] முதலில் நான் கேட்கும் பரிசை நீ கொடுப்பாயா?
கிளியோபாத்ரா: [சீஸரின் மார்பில் சாய்ந்து காதை வைத்து] மகாவீரர் சீஸரின் நெஞ்சம் ஏனிப்படிப் போர் முரசம் அடிக்கிறது? உமது மார்புத் துடிப்புக்கள் எனது மார்பில் ஏனிப்படித் தாவி வருகின்றன? உங்கள் கைகள் ஏன் நடுங்குகின்றன? மங்கை எவளும் உம்மருகில் அமர்ந்ததில்லையா? என்ன? என்னவாயிற்று? உங்கள் தொடை ஆடுகிறதே! உடம்பு முழுதும் நடுங்கிறதே! கண்ணிமைகள் ஏன் மூடுகின்றன? நில நடுக்கம் போல் உடல் நடுக்க மாகிறதே! [கவலைப் பட்டு சீஸரைப் பிடித்துக் கொள்கிறாள்]
[கைகள் நழுவ நாற்காலியிலிருந்து சரிந்து சீஸர் தரையில் விழுகிறார்! கண்கள் மூடிப் போய் கைகால்கள் வெட்டி வெட்டி யிழுக்கின்றன. கிளியோபத்ரா எழுந்து மணியை அடித்து சேடிகளை விளிக்கிறாள். சில ரோமானிய வீரர்களும், கிளியோபாத்ராவின் சேடிகளும் ஓடி வருகிறார்கள்.]
ரோமானியப் பாதுகாவலன்: [தயங்கிக் கொண்டு] மகாராணி! .. சீஸருக்கு .. காக்காய் வலிப்பு! [ஓடிச் சென்று ஒரு பெட்டியிலிருந்து இரும்புத் துண்டை எடுத்து வந்து சீஸரின் வாயைப் பிளந்து பற்களுக்கு இடையே வைக்கிறான். மெதுவாக சீஸரின் உடற்துடிப்பு நிற்கிறது!]
கிளியோபாத்ரா: [கவலையுடன் கண்ணீர் பொங்க] மகாவீரர் சீஸருக்கு இழுப்பு நோயா? [சூரியக் கடவுளின் முன்னின்று] சூரியக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! ஜூலியஸ் சீஸரைக் காப்பாற்று! எனக்காகவும், எகிப்துக்காகவும் அவர் உயிருடன் வாழ வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. … [ரோமானியரை விளித்து] சீஸரை விருந்தினர் அறைப் படுக்கையில் கிடத்துங்கள். [சேடிகளைப் பார்த்து] அரண்மனை மருத்துவரை அழைத்து வாருங்கள்! [ரோமானியரைப் பார்த்து] உங்கள் இராணுவ மருத்துவரைக் கூட்டி வாருங்கள்! உம், சீக்கிரம்! …
[ரோமானியர் சீஸரை மெதுவாகத் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் மருத்துவரை அழைத்துவரச் செல்கிறார்]
*********************

அங்கம் -2 பாகம் -10

“எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்.” …
(கிளியோபாத்ரா)
“எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை அறவே வெறுப்போம்.”
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

“துக்கமுற நான் எந்த தளத்தையும் விட்டு வைக்க வில்லை! அதற்கென எந்த அறையும் எனக்கில்லை! போகும் பாதையில் வேதனையும், பேரிழப்புகளும் எனக்காகக் காத்திருப்பதை நான் முன்பே எதிர்பார்த்திலேன்.”
கிளாடிஸ் லாலெர் [Gladys Lawler (Age: 93)]

“உனது கப்பல் நுழைவதற்கு நீ முதலில் துறைமுகம் ஒன்றைக் கட்ட வேண்டும்.”
கே அல்லென்பாக் [Kay Allenbaugh, Author of Chocolate for a Woman’s Soul]

“இடையூறுகள் என்னை ஒருபோதும் நசுக்குவதில்லை. ஒவ்வோர் இடையூறும் தீர்வு காண்பதற்கு சவால் விடுகிறது. எவன் ஒருவன் விண்மீன் ஒன்றின் மீது கண்வைத்து விட்டானோ, அவன் அந்தக் குறிக்கோளிலிருந்து என்றும் விட்டு விலகுவதில்லை.”
லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“நம்மில் பலருக்குப் பெருத்த ஏமாற்றமாவது, ஒருவர் குறிக்கோளை உயரத்தில் வைத்து விட்டு, முடிவில் அவர் குறைவாகச் சாதிப்பதிலில்லை! குறிக்கோளைத் தணிவாக வைத்து, அதை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டுவதுதான்.”
மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. •பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.
காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார்.
கிளியோபாத்ரா: [பக்கத்தில் அமர்ந்து கிளியோபாத்ரா பரிவுடன் சீஸரை நோக்கி] நேற்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை! நான் சூரியக் கடவுளை வேண்டினேன்! உடல்நலம் பெற்று நீங்கள் உயிர்த்தெழ வேண்டுமென்று! நீங்கள் ஆழ்ந்து தூங்கினீர்களா? உங்களுக்குப் பாதகம் ஏதாவது நேர்ந்தால் என் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்தேன்! தூக்கம் போய் ஏக்கம் பற்றிக் கொண்டது. நீங்கள் என்னைப் பிரிந்து போய்விடுவீரோ என்று அச்சம் உண்டாகிறது! எகிப்தின் அரசியானாலும், தனியாக உள்ள எனக்கு நீங்கள்தான் தக்க துணைவர்! சீஸரின் பராக்கிரமக் கரங்களுக்குள் நான் அரண் கட்டி வாழ விரும்புகிறேன்! கனல்மிக்க உங்கள் மார்பின் மீது, என் கண்கள் தொட்டில் கட்டித் தூங்க வேண்டும்! நான் உங்கள் அடிமை அரசி! உங்கள் துணையில் உயிர் வாழும் எனக்குத் துடிக்குது, உங்களுக்கு எதுவும் நேரக் கூடாது!
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்மணி கிளியோபாத்ரா! நான்தான் உன் அடிமைத் தளபதி! ரோமாபுரியை மறக்க வைத்தவள் நீ! மனைவி கல்பூர்ணியாவை மறக்க வைத்தவள் நீ! தீயாய்ச் சுடும் அலெக்ஸாண்டிரியாவைத் தேனாய் ஆக்கியவள் நீ! ரோமாபுரி மாவீரன் உன் விழிகளுக்கு அடிமை! சீஸருக்குப் பாதகமாய் ஏதும் நிகழாது! நானிந்த இழுப்பு நோயிக்கெல்லாம் அஞ்சுபவனில்லை! நீ ஏன் எனக்காகப் பயப்படுகிறாய்? காக்காய் வலிப்பு நோயோடு நான் பல்லாண்டுகள் வாழ்ந்து விட்டேன்! அஞ்சாமல் போரிட்டு, ரோம சாம்ராஜியத்தை எத்தனை பெரிதாக ஆக்கி விட்டேன் தெரியுமா? நான் போய்விட்டால் உனக்கு என்னவாகும் என்று அஞ்சுகிறாய்?
கிளியோபாத்ரா: என் விஷமத் தமையன் டாலமி உயிரோடிருக்கிறான்! அவன் வாழும் வரையில் என்னுயிர் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும்! அந்த மிருகங்கள் உயிரோடுள்ளவரை எனக்குச் சரியாகத் தூக்கம் வராது!
ஜூலியஸ் சீஸர்: டாலமியைப் பற்றி உனக்கினிக் கவலை வேண்டாம்! நேற்று மாலையில் அவனை ரோமானியப் படையாளர் விரட்டிச் செல்லும் போது, அவன் நைல் நதியில் குதித்து மூழ்கிப் போனதாகச் செய்தி வந்துள்ளது! அவனது உடம்பு ஒருவேளை கடலுக்குள் சங்கமம் ஆகியிருக்கலாம்! அல்லது முதலைகளின் அடிவயிற்றில் செறிக்கப் பட்டிருக்கலாம்! போதினஸ், தியோடோடஸ், அக்கிலஸ் அனைவரும் கொல்லப் பட்டார். உனக்கோ அல்லது உன் மகுடத்துக்கோ இனி எதிரி யாருமில்லை, கிளியோபாத்ரா!
கிளியோபாத்ரா: [பெருமூச்சு விட்டு] நன்றி சீஸர் அவர்களே! நன்றி! மிக்க நன்றி! நானார்க்கு மினி அஞ்ச வேண்டியதில்லை! எகிப்தின் ஏகப்பெரும் அரசி கிளியோபாத்ரா வென்னும் போது, என் மெய் சிலிர்க்கிறது! என் பரம்பரையான •பாரோ மன்னரின் கால்தடத்தில் நடக்கிறேன் என்னும் போது, என் மேனி நடுங்குகிறது! என் கனவு நிறைவேறியது, உங்களால்! கிளியோபாத்ரா கட்டுப்பட்டவள் உங்களுக்கு! கடமைப் பட்டவள் உங்களுக்கு! மகாவீரர் சீஸரே, உமக்கு நன்றி! உலகைக் கைக்கொள்ளும் தொடர்க் கனவை நிறைவேற்ற உதவப் போகிறேன் உங்களுக்கு!
ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] கிளியோபாத்ரா! உனக்கு வயது 20! எனக்கு வயது 52! எனது போர்க் கோலப் பராக்கிரம வயது போய் விட்டது! நானினிப் பெரும் போர் புரியப் போவதில்லை!
கிளியோபாத்ரா: [அரண்மனைப் பீடத்தில், பளிங்குப் பேழையில் வைக்கப்பட்ட காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் உடலைக் காட்டிச் சீஸரை அழைத்துச் சென்று] பாருங்கள்! மகாவீரர் அலெக்ஸாண்டரை! முப்பதியிரண்டு வயதில் அவர் ஒருவர் சாதித்ததை நாமிருவரும் சமாளிக்கப் போகிறோம்! நமது சராசரி வயது, 36. உங்களால் என் வயது முதிர்ச்சியாகி ஏறுகிறது! என்னால் உங்கள் முதிய வயது இளமையாகிறது! அவரது கனவை முடிக்க வேண்டியது உங்கள் கடமை! என் கடமையும் கூட! அதாவது நம் கடமை! வரலாற்றுப் புகழ் பெற்ற அவரது வாளை உங்களுக்குப் பரிசாகத் தரப் போகிறேன்.
ஜூலியஸ் சீஸர்: [அலெக்ஸாண்டர் பேழையைத் தொட்டுப் பெருமையுடன் கண்ணீர் சிந்தி] வேண்டாம் கிளியோபாத்ரா! புதைந்து போன அவரது வாளைக் கையில் தொடத் தகுதியற்றவன் நான்! அலெக்ஸாண்டர் அல்லன் நான்! அவர் பற்றிய வாள் எனக்குக் கனமாகத் தெரிகிறது!
கிளியோபாத்ரா: பேழைக்குள்ளிருக்கும் அலெக்ஸாண்டர் உடலைப் பார்த்து எதற்காகக் கண் கலங்குகிறீர்?
ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! இந்தியாவின் வடபகுதியை வென்று, வெற்றிமாலை சூடிய மகா வீரர் அலெக்ஸாண்டர் சாகும் போது அவருக்கு வயது 32! இப்போது எனக்கு வயது 52. அலெக்ஸாண்டரின் கனல் பறக்கும் நெஞ்சத்தை நானிழந்து விட்டேன்! எனது கண்கள் வெந்நீரைக் கொட்டுகின்றன, அதனால்! எனக்கு 32 வயதாகிய போது, ஸ்பெயினைக் கைப்பற்றப் போனேன். அப்போதும் அங்கிருந்த அலெக்ஸாண்டர் சிலையைக் கண்டதும், இதேபோல் நான் அழுதேன்! அவரது பராக்கிரம் எனக்கில்லை என்றுதான்! எனது வாழ்நாள் காய்ந்து முற்றிப் போனதென்று நான் அழுதேன்! அவர் உலகைக் கைப்பற்றினார்! ஆனால் உலகு என்னைக் கைப்பற்ற முயல்கிறது என்று நான் அஞ்சுகிறேன்!
கிளியோபாத்ரா: [சீஸரின் கண்ணீரைத் தனது துணியால் துடைத்து] அலெக்ஸாண்டரின் மறுபிறவி என்று நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள்! அவரது கனவுகளை உங்கள் கனவாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய வாள் உங்களது வெற்றி வாளாகட்டும்! அவர் விட்டுச் சென்ற ஆசிய முனையிலிருந்து தொடரட்டும் உங்கள் படையெடுப்பு! இந்தியாவுக்குச் செல்லும் பாதை எனக்குத் தெரியும்! அலெஸாண்டரின் போர்த்தளப் படம் என்னிடம் உள்ளது!
ஜூலியஸ் சீஸர்: [சிந்தனையுடன்] ஆச்சரியமாக உள்ளது! கிளியோபாத்ரா! இருபது வயதில் உனக்குத் தெரிந்துள்ள போர் ஞானம் வேறு யாருக்கும் கிடையாது! ஆனால் அலெக்ஸாண்டருடைய வாள் எனக்குக் கனமாய்த் தெரிகிறது! உலகப் பேராசை ஆக்கிரமிப்பில் அலெக்ஸாண்டர் தோல்வி அடைந்தார்!
கிளியோபாத்ரா: அவர் வயது 32! உங்கள் வயது 52! அவருக்குப் போர்ப் பண்பில் கொளுந்து விட்டெரியும் மனப்போக்கிருந்தது! ஆனால் உங்களுக்கு அவரை விட 20 வருடப் போர் அனுபவம் உள்ளது! அலெக்ஸாண்டர் எப்படி இறந்தார் என்று அறிவீரா? வட இநெதியாவைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் மேற்புறப் பகுதியில் செல்லும் போது, அங்குள்ள விஷக் கொசு கடித்துச் கடும் காய்ச்சலில் திரும்ப வேண்டியதாயிற்று! பிறகுப் போரிடும் பராக்கிரம மிழந்தார். கடும் காய்ச்சலுக்குச் சிகிட்சை யில்லாமல் கடைசியில் செத்து விட்டார். அது ஒருவித மரணக் கொசு என்று கேள்விப் பட்டேன்! அலெக்ஸாண்டரின் அசுர வல்லமை உங்களுக்கு உள்ளது. அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவீர்! ரோமானியப் படையுடன் எகிப்தின் படையும் ஒன்றிணைந்து போரிடும்! மகாவீரர் சீஸரே! உலகம் நமது கைகளில்! நீங்களும், நானும் ரோமாபுரிக் கடியில் உலகை ஒன்றாக்குவோம்! இந்தப் பூமியில் ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! சமாதானமாக அனைவரும் வாழ்வோம் போரின்றி.
ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] ஓ! தெரிந்து கொண்டேன். அதுதான் நீ என்னிடம் எதிர்பார்ப்பதா? அதற்குத்தான் நீ என்னை உருவாக்குகிறாயா? பலே கிளியோபாத்ரா! நானொரு ரோமன்! அலெக்ஸாண்டரைப் போலக் கிரேக்கன் அல்லன்! ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! நல்ல சிந்தனைதான்! ஆனால் அது வெறும் கனவு! நடக்காத கனவு! அந்த உலகத்தின் தலைநகர் உனது அலெக்ஸாண்டிரியாவா?
கிளியோபாத்ரா: [ஆங்காராமாக] அந்த உலகுக்கு எனது அலெக்ஸாண்டிரியா தலநகரில்லை! உங்கள் ரோமாபுரிதான் தலைநகர்! ஒரே உலகை ஆக்கப் போன அலெக்ஸாண்டர் தோல்வி யுற்றார்! ஆனால் நம்மிருவர் முயற்சியில் வெல்வோம், நிச்சயம்! அலெக்ஸாண்டர் கிரேக்கர்! நீங்கள் ரோமானியர்! நான் எகிப்திய மாது! அதனால் என்ன? அலெக்ஸாண்டரின் போர்ப்படை மாஸபடோமியாவிலிருந்து கிளம்பியது! நமது படைகள் ரோமிலிருந்து புறப்படட்டும்! ரோமும், எகிப்தும் இரட்டைக் காளைகள் போல் இரட்டை வலுவுடன், இருமடங்கு படைகளுடன் போரிடும்! அதனால் நமக்கு வெற்றி உறுதி! அலெக்ஸாண்டர் வாளை நாமிருவரும் தூக்கிச் செல்வோம்! [கிளியோபாத்ரா விரைந்து சென்று சீஸரின் தோள்களைப் பற்றிக் கொண்டு பதிலை எதிர்பார்க்கிறாள்]
ஜூலியஸ் சீஸர்: [கனிந்து போய் கிளியோபாத்ராவை அணைத்துக் கொண்டு] மாபெரும் போர் ஞானி நீ என்பதை அழகாகக் காட்டி விட்டாய், கிளியோபாத்ரா! அரசியலையும், உணர்ச்சியையும் ஒன்றாக்க முயல்கிறாய் நீ! அவை யிரண்டும் ஒன்று சேரா! அரசியல் ஒருபுறம் நுழையும் போது, உணர்ச்சி மறுபுறம் வெளியேறும் என்று உனக்குத் தெரியாதா? என்னுடைய விதியில் கையில் என்னை விட்டுவிடு! எனக்கு வயது 52! அலெக்ஸாண்டருக்கு அப்போது வயது 32! அவரது பாதையைக் காட்டி என் பாதையை மாற்ற முற்படாதே! அவர் போன பாதை தோல்விப் பாதை! தோல்விப் பாதையைப் பின் தொடர்ந்து, நான் எப்படி வெற்றிப் பாதை ஆக்க முடியும்?
கிளியோபத்ரா: உங்களுடன் நான் ஒன்று சேர்வதால் நமது பாதை வெற்றிப் பாதையாக மாறும்! தோல்வி என்பது என் அகராதியில் இல்லை! வீழ்ச்சி என்பது உங்கள் அகராதியில் இல்லை! என் சிந்தனை முற்போக்கான சிந்தனை! அலெக்ஸாண்டரின் போரங்கி உங்களுக்குப் பொருந்தும்! எகிப்துவரை பரவிய சீஸரின் பெயர் ஆசியா வெங்கும் பரவும்! நீங்கள் ரோமாபுரி, எகிப்த் நாடுகளுக்கு மட்டும் வேந்தர் அல்லர்! அரேபிய நாடுகள், இந்தியா, தாய்லாந்து, சைனா ஆகிய நாடுகளுக்கும் வேந்தராக ஆட்சி செய்வீர்! நீங்களும், நானும் ஆண்ட பிறகு, நமக்குப் பிறக்கும் ஆண்மகன் உலகை அரசாளுவான். மாவீரர் சீஸரே! நிச்சயம் நான் சொல்கிறேன்! நமக்குப் பிறப்பது ஆண்மகவே! அது மட்டும் உறுதி!
ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன்] ஆண்மகவா? ஆனந்தம் அடைகிறேன்! என் மனைவி கல்பூர்ணியா அளிக்காத ஆண்மகவை நீ பெற்றுத் தருவாயா? எனக்கு மகிழ்ச்சியே! … ஆனால் ரோமாபுரி எப்படி என் ஆண்மகவை ஏற்றுக் கொள்ளுமோ தெரியாது? அவன் பாதி ரோமானியன்! பாதி எகிப்தியன் ஆயிற்றே! நான் ரோமுக்கு விரைவில் திரும்ப வேண்டும், கிளியோபாத்ரா?
கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்து ரோமாபுரிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

+++++++++++++++++++++++

தொடரும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *