மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 28

க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)

images (1)

பத்துத்தலை கொய்த பாவம் நீங்கிடவே

பக்தியுடன் இரகுவரனும் தவம் செய்தான்

பார்காக்கும் பரந்தாமன் பாதங்கள் போற்றிடவே

பார்துறந்த சங்கரனும் ஆலயத்தை அமைத்தான்!

 

அங்கமெல்லாம் தூய்மையுடன் அமைதியாய் அலகானந்தா

பங்கமின்றி பாய்ந்துவரும் பனிமலையிருந்து  பாகீரதி

சங்கமமாய் சரஸ்வதியும் சேர்ந்துவிடும் சத்தமின்றி

தங்கிடவே தேவர்களும் தேடிவரும் தேவப்பிரயாகை !

 

ஆலிலையில் படுத்து  வந்தாய் ஊழ்ப்பெருக்கில்

ஆலிலையில் வாசம் கொண்டாயே  ஆனந்தனே

ஆகமங்கள் ஏதுமில்லை அரவணைத்தால் போதும்

ஆருயிர்கள் காப்பவனே அயோத்தியின் ரகுராமா !

 

காவிரிக்கரையினிலே  கால்நீட்டி படுத்தாயே அமரேசா

களிப்புடனே யமுனைக்கரையில் காலாற நடந்தாயே

கருணையுடன் ஏழுமலை நின்றவனே கார்மேகா

கடமைக்கென தேர்முனையில் சாரதியான சீதரனே !

 

பாதங்கள் பட்டவுடன் அகலிகைக்கு விமோசனமே

பாதங்கள் பார்த்தவுடன் அனுமனுக்கோ பரவசமே

பாதுகைகள் அரசாள பரதனுக்கோ ஆனந்தமே

பாதங்களை போற்றிடவே பாடலிலே தேடுகின்றேன் !

 

பனிமலையில் வாழுமுன்னை நினைத்தாலே போதும்

பனித்துளியாய் உருகிவிடும் பக்கம்வரும் துயரெல்லாம் !

கனியுண்ட களிப்பாக  மனமெல்லாம் மகிழ்வுறுமே

இனிதான உன்பெயரை ஒருமுறையே சொல்லிடவே !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க