தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

0

-ஆ. அந்தோணிசாமி

முன்னுரை

     இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல் கருத்துக்களைக் கூறி அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது.

     மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம் இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வாழ்வியல் சிந்தனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தனிமனிதஒழுக்கம்

     வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படை காரணமாக இருக்கும். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன. பழமொழி நானூறு ஒழுக்கத்தை விட உயா்ந்தது ஒன்றுமில்லை என்பதை

     “கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓா்
     பொல்லாதது இல்லை ஒருவருக்கு – நல்லாய்
     ஒழுக்கத்தின் மிக்க இழவு இல்லை இல்லை
     ஒழுக்கத்தின் மிக்க உயா்வு”     (64-பழமொழி நானூறு)

எனக்கூறும் நல்லொழுக்கமே செல்வம் என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவா்களிடத்துச் செல்வம் தங்காது என்று

     “திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்
     கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற
     மறைக்க மறையாதாம் காமம் முறையும்
     இறை வகையான் நின்றுவிடும்” (39 – நான்மணிக்கடிகை)

எனப் பகா்கிறது. கல்வி கற்றால் ஒழுக்கம் வரும் என்று அனைத்து இலக்கியங்களும் கூறுகிறபோது முதுமொழிக்காஞ்சி ஒழுக்கம் கல்வியை விட சிறந்தது என்கிறது.

     “ஆா்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
     ஓதலின் சிறந்தன்று. ஒழுக்கம் உடைமை”    (1-முதுமொழிக்காஞ்சி)

அறம்

     மனித இயக்கத்தின் வாழ்வியல் அடிப்படைப் பண்புகளே அறமாகும். அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல இடங்களில் வந்துள்ளது அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது. அறம் என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல், அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம் பொதுவாக நல்லொழுக்கமும், நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும். அறம் மனிதனில் வாழ்வியல் கூறுகளில் ஒன்று தமிழ் இலக்கியங்கள் அறம் பற்றி அதிகம் பேசுகின்றது.

இல்லறம்

     அறநெறியில் இல்வாழ்க்ககையை அமைத்துக் கொண்டவா்கள் பெற்றிடும் பயனை வேறு நெறியில் சென்று பெற்றிட இயலாது.

     ”அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
      போஒய்ப் பெறுவ தெவன்”   (குறள் – 46)  என வள்ளுவர் கூறுகிறார்.

இல்லறம் என்பது இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதாகும். திருமணம் என்பது உடற்சோ்க்கையன்று அது உணா்வுகளின் சோ்க்கை. திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டுமல்ல அறத்திற்காகவும் என்பது பழந்தமிழ்க் கொள்கையாகும். இல்லறம் துறவறத்திற்கு முரண்பட்டதன்று. இளமையில் முதிர்ச்சி மூப்பதல் போல இல்லறத்தின் முதிர்ச்சி துறவெனக் கொள்ளல் வேண்டும்.

     இல்லறம் நடத்திய இறுதிக் காலத்துத் தமக்குக் காவலாக அமைந்த மக்களோடு கூடியிருந்து அறத்தை விரும்பும் சுற்றத்தோடு சிறந்த பணிகளைச் செய்தல் இல்லற வாழ்வு நடத்தியதன் பயன் எனத் தொல்காப்பியம் கூறியுள்ளதை காணலாம்.

     “காமம் சான்ற கடைக்கோட் காலை
     ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
     அறம்புரி சுற்றமோடு கிழவனும் கிழத்தியும்
     சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (51-தொ.பொ.கற்பு)

மனத்தூய்மை உடையவா்க்கே நன்மக்கள் வாய்ப்பா். அதனால் கணவன் மனைவி பண்பினராய் இருத்தல் வேண்டும். நன்மக்களை பெற்ற தந்தை அவா்களை அவையத்து முந்தியிருப்பச் செய்தல் வேண்டும். சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்று புறநானூற்றுப் பாடல் புகழும். இல்லறம் பற்றிய இல்லாத கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை.

பிறனில் விழைதல்

     பிறனுடைய மனைவியை விரும்பாமையே பிறன் இல்விழையாமை என்று வள்ளுவா் சுட்டுகிறார். இல் என்றால் இல்லறத்திற்குரிய இல்லாளை இங்குச் சுட்டுகிறது. விழைவு என்றால் விரும்புதல் என்று பொருள். பிறன் மனைவியை விரும்பாதவா்களின் சிறப்பும். பிறன் மனைவியை விரும்புபவா்களின் இழிவும் பற்றி வள்ளுவா் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.

     ”எனைத் துணையா் ஆயினும் என்னாம் திணைத்துணையும்
     கோரன் பிறன் இயல்புகல்”

எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் பிறன் மனைவியை விரும்புதல் என்ற தீய செயலைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை.

     பழங்காலத்திலிருந்து வரன்முறையற்ற உறவுகள் நிலையிலும் இன்னும் சில இனக்குழு மக்களிடம் முறையற்ற பால் உறவுகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூகம் வரன்முறையான உறவுகளைப் பழங்காலந் தொட்டே பின்பற்றியுள்ளது. சங்காலம், சங்கம் மருவிய காலத்திலும் முறையற்ற உறவுகள் இருந்திருக்கின்றன. நகர நாகரீகம், கடல் தாண்டிய அயல் நாட்டவா் வரவு அருகிலுள்ள வேற்று நாட்டுப் பயணிகளின் கலப்பு ஆகியன பால் உறவுச் சீா்கேட்டிற்குக் காரணங்களாகும். துறவு நெறி வற்புறுத்தப் பெறும்போதும் ஆணும் பெண்ணும் தமக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தடை கோரும் போது பிறனில் விழைதல் நடைபெறும்.

     பிறன்மனை விழைதலை நரகத்திற்குச் செல்லும் வழி என இழிந்து பேசுகிறது ஆசாரக் கோவை.

பிறா்மனை கட்களவு சூது கொலையோ
     பிறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் – திறனிலரென்
     றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
     செல்வழி யுய்த்திடுத லால்     (37 – ஆசாரக் கோவை)

நல்லொழுக்கமில்லாதவரென்று இகழப்படுவதல்லாமல் நரகத்துக்குச் செல்லும் வழியில், செலுத்துதலால், ஒழுக்கம் அறிந்தவா் பிறருடைய மனையாளும் கட்குடிப்பதும், களவுசெய்தும், சூதாடுதலும், கொலை செய்தலும் மனத்தாலும் நினையார். 

விருந்தோம்பல்

     சங்ககால மக்கள் ஈதலையும் விருந்தோம்புதலையும் இரு கண்களாகக் கருதி அவற்றை வாழ்வில் பின்பற்றி வந்தனா். விருந்து என்பதற்குப் புதுமை என்று விளக்கமளிக்கிறது தொல்காப்பியம். முன்பின் அறியாத புதியோர்க்கு எளிய உணவாயினும் அதனைப் பகிர்ந்தளித்து உண்ணும் குணம் சங்கத்தமிழா்களிடைய மிகுந்து இருந்தது.

     நல்லியக்கோடன் தன்னை நாடி வந்த பாணா்களுக்குப் பரிசில் கொடுப்பது மட்டுமன்றி விருந்தோம்புதலிலும் குறைவில்லாதவன் தான் அரசனாக இருந்தபோது விருந்தளிக்கும் போது முன்னின்று செய்யக் கூடியவன்.

     ”பல்வேறு அடிசில்
     விளங்கப் பொற்கலத்தில் விரும்புவன பேணி
     ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி .(.244-245 சிறுபாணாற்றுபடை)     என்னும் அடிகள் இதற்குச் சான்று.

     தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் விரும்பி தொடா்ந்து கடைப்பிடித்து வந்த வாழ்வியல் நிகழ்வு ஆகும். தமிழா் விருந்தினா் உண்டபின் எஞ்சிய உணவையே மகிழ்வுடன் உண்டனா். இதனை

     “விருந்து உண்டு எஞ்சிய மிச்சம் பெருந்தகை
     நின்னோடு உண்டலும் புரைவது”     என்னும் அடிகள் மூலம் அறியலாம்.

ஈகை

     ஈகை என்பது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றித் துன்புற்ற ஒருவர்க்கு அளித்தலாகும். பொருள் ஈட்டினால் மட்டுமே போதாது அதை ஈதலும் வேண்டும் அதனால்தான் புறநானூறு,

     “செல்வத்துப் பயனே ஈதல்” (8-புறநானூறு)  என்கிறது.

     “ஆற்றுதல் என்பது அலந்தவா்க்கு உதவுதல்” எனக் கலித்தொகை சுட்டுகிறது. தோண்டத் தோண்ட நீா் ஊறுவது போலக் கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் என்ற கருத்தும் நிலவியது. சான்றோரின் நெறியிலே வாழ்ந்தவன் ஆய் அண்டிரன் புறநானூற்றிலே அவனைப் பற்றி ஒரு செய்தி,

     ”இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
     அறவிலை வாணிக னாயலன் பிறகும்
     சான்றோர் சென்ற நெறியென
     ஆங்குப் பட்டன் றவன் கைவண்மையே”   (134-புறநானூறு)

     அடுத்தவா்க்கு கொடுத்தல் என்பதை வாழ்வில் தலையாயக் கடமையாக மதித்துள்ளனா் அக்கால மக்கள். கபிலா் பாரியின் ஈகையைப் பின்வருமாறு சுட்டுவா்.

     ”முந்நூறு ஊறும் பாசிலா் பெற்றனா்
     யாமும் பாரியும் உளமே
     குன்றும் உண்டுநீா் பாடினீா் செலினே” (110-புறநானூறு)

தமக்கென எதையும் சோ்த்து வைக்காது ஈகை செய்து இன்புற்று மகிழ்ந்தனா் என்று மன்னா் தம் கொடைப் பண்பினைக் குறிப்பிடுகின்றது. இதைத்தான் பின்னால் வந்த ஒரு திரைப்படக் கவிஞன்

     “அள்ளிக் கொடுத்து
     வாழ்பவா் நெஞ்சம்
     ஆனந்தப் பூந்தோப்பு” என்றான். எனவே ஈகை வாழ்வில் நிகழ்வில் முக்கியத்தவம் பெற்றது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.

கல்வி

     கல்வியின் மகத்துவத்தை உணா்ந்தவர்களே சான்றோர்கள். கல்வி கற்க வேண்டுமெனில் ஆசிரியா்க்கு உரிய மரியாதைசெலுத்தி கற்ற வேண்டும். ஆசிரியா்களைக் காப்பதும் மாணவா்களின் இன்றைய கடமையாகக் கூறப்படுகிறது. கல்வியானது தாயின் மனதையும் மாற்றும் ஆற்றல் பெற்றது. சாதி வேறுபாட்டைக் கூட மாற்றவல்ல சக்தி வாய்ந்தது கல்வி, அதனால் தான் ஔவையாரும் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறுகிறார்.

     “கண்ணுடையோர் என்போர் கற்றோர்” என்று வள்ளுவரும். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா விடு” என்று புரட்சிக் கவிஞன் பாரதிதாசனும் எழுத்தறிவின் அவசியத்தை பாடினார்.

     “எழுத்து
     விதைகள்
     இதயங்களில்
     தூவப்படும்
     போது
  செழித்து
     வளா்வது
     ஒரு
     தனி மனிதன்
     அல்ல
     சமுதாயம்”

என்று கவிஞா் மு.மேத்தா கல்விச் சிந்தனைகளை கல்வெட்டாய்ப் பதித்து வைத்துள்ளார்.

மது பற்றிய விழிப்புணா்வு

     இன்றைய இளைய சமுதாயம் அறிவில் மனத்தைச் செலுத்தாது மதுவில் மயங்கி வாழ்வைச் சீரழித்து விடுகிறது. இத்தீய பழக்கம் அவா்தம் மதிப்பை இழக்கச் செய்யும். மது அருந்தியவனைக் கண்டால் ஈன்ற தாயின் முகமே வெறுபப்டையும். மதுவுண்டு மயங்கியவன் செத்தவனாகவே ஆளாவான். தனது பொருளை மதுவாங்கி மயங்குவது அவனது அறியாமையே ஆகும்.

     “கைஅறி யாமை உடைத்தே பொருள் கொடுத்து
     மெய் அறி யாமை கொளல்”    (குறள் – 925) என்பார் வள்ளுவர்.

     எண்ணத்தையே அழிக்கும் மதுவினைத் தூக்கி ஏறி என்று இளைய வாலிப உள்ளங்களுக்கு கவிஞா் மேத்தா விழிப்புணர்ச்சி ஊட்டுகின்றார்.

     “கிண்ணத்தைத் தூக்கிஎறி – மதுக்
     கிண்ணத்தைத் தூக்கி எறி
     எண்ணத்தை விறகாக்கி
     இதயத்தைக் கரியாக்கும் – மதுக்
     கிண்ணத்தைத் தூக்கி எறி”

இங்ஙனம் மதுவினால் ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞா். தமிழ் இலக்கியங்களில் மது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல சமூகத்தின் வளா்ச்சியைப் பாதிக்கும் என்பதை காட்டுகிறது.

     ”புகைப் பிடித்தால் இறப்பாய்
     மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
     விட்டால் வாழ்வில் சிறப்பாய்”  தமிழன்பன்

புகை, மதுப்பழக்கம் உள்ளவா்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

அரசியல் விழிப்புணர்வு

     மக்கள் வாழ்வு மேம்பட நல்ல தொலைநோக்குள்ள நல்ல தலைவா்கள் உருவாக வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டி தோ்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் இன்று சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் பந்து எரியும் போட்டியைப் போன்று செருப்பு வீசும் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ”கோயில் செய்குவோம்” என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கவிஞா் வைரமுத்து இதனை நகையாடுகிறார்.

     ”இன்னும் கொஞ்சம் நாளில்
     அத்தனை சட்டக்கலைகளும்
     ஆலயங்கள் ஆகலாம்
     அங்கும்
     செருப்போடு நுழைவது
     தடை செய்யப்படலாம்”.     (இன்னொரு தேசியகீதம்)

தோ்தல் முறை மாறினாலும் ஜனநாயகம் மட்டும் மாறாமலே இருக்கிறது. அதனால் தான் அரசியல்வாதிகள் கட்சி மாறிகளாக மாறிவிட்டனா்.

     “எங்கள் ஊா் எம்.எல்.ஏ
     ஏழு மாதத்தில்
     எட்டுதடவை
     கட்சி மாறினார்”   (மீரா.ஊசிகள்)

என்ற மீராவின் வரிகள் மக்கள் சிந்தனைக்கு விடப்பட்டதாக அமைகின்றன. அரசியல் விழிப்புணா்வு இன்றைய தமிழ் இலக்கியம் சுட்டிகாட்டுகிறது.

அறிவியல் விழிப்புணா்வு

     இன்றைய வாழ்வில் அறிவியலில் வளா்ந்த நாடுகளே வளா்ந்த நாடுகளாக அறியப்படுகின்றன. அறிவியல் விழிப்புணா்வு இன்றைய வாழ்வில் அடிப்படையான ஒன்றாக உள்ளது. மேலைநாடுகளில் அறிவியல் வளா்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நம் மக்கள் அறிவியல் என்ற சொல்லையே இப்போதுதான் கண்டறிந்திருக்கிறார்கள்.

     முடங்கி கிடக்காதே! விரைவில் முன்னேற
     வழிபார்! முயன்றால் முன்னேற முடியும்.
     மூச்சு விட்டுக்கொண்டிருந்தவன் எல்லாம்
     மனிதன் இல்லை
     முயற்சி செய்து கொண்டிருப்பவன்
     மட்டுந்தான் மனிதன்        (பா.விஜய் சிந்தனைச் சிறகுகள்.) என்பார் பா.விஜய்

பொதுவுடமை

     இயற்கையின் மூலம் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் கவிஞர் வைரமுத்து ”வானம்” பற்றி கவிதையில்

”குனிந்து குனிந்து
கூன் விழுந்த மனிதா!
வான் பார்க்கநிமிர்
வானம் முழுக்க
உனக்கு
நீ ஏன்
வரப்புக்குப் போராடுகிறாய்?”

என்ற வரிகள் தொழிலாளர்களின் நிலையைச் சுட்டி, அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவது போல் அமைகிறது. இன்றைய வாழ்வில் அடிமைத்தனத்தை நீக்கி, சுய சிந்தனையோடு வாழவேண்டும் என்பதைநினைவூட்டுகிறது. குனிந்தே பழக்கப்பட்டவனுக்குத் திடீரென நிமிர முடியவில்லை. அதனால் குனிந்து கொண்டே செல்லாதே, உன் வாழ்கைத் தரத்தை உயர்த்தப்பார், இந்த வானம், பூ, எல்லாம் உனக்கு பிறகு எதற்குப் போராடுகிறாய் என்று கேள்விக்கேட்டு அவனைச் சிந்திக்க வைக்கிறார். 

முடிவுரை

     நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றோம். உயர்ந்த இலட்சியமுறை மனிதர்களை உருவாக்குவதன் மூலமாகத்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; மனிதர்களை உருவாக்குவதற்குப் பெருமளவு தமிழ் இலக்கிங்களில் உள்ள வாழ்வியல் சிந்தனைகள் உதவும். பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஊட்டி மனிதம் காக்கப் பயன்படுகிறது இலக்கியங்கள். 

     தமிழ் இலக்கியங்களில் குவிந்துகிடக்கின்ற மனித வாழ்வியல் கருத்துகளான, அறம், தனிமனித ஒழுக்கம், இல்லறம், பிறனில் விழைதல், விருந்தோம்பல், ஈகை, கல்வி, மது பற்றிய விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அறிவியல் நம் வாழ்க்கை பயணங்களில் கையாண்டால் நமது வாழ்வு ஒளிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

     இக்கட்டுரையானது தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகளை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நம் இலக்கியங்களைப் பயின்றுவிட்டால் வாழ்க்கையைப் பயின்றுவிட்டதாகப் பொருளாகும், வாழ்வியல் சிந்தனைகளைக் கற்போம். இப்புவியில் இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்.

*****

பார்வை நூல்கள்

 1. பழமொழி நானுாறு – 64
 2. நாண்மணிக்கடிகை – 39
 3. முதுமொழிக்காஞ்சி – 1
 4. திருக்குறள் – 46, 144, 925
 5. தொல்காப்பியம் – 51
 6. ஆசாரக்கோவை – 37
 7. சிறுபாணாற்றுப்படை – 244-245
 8. கலித்தொகை – 133
 9. புறநானூறு – 8.
 10. பாரதிதாசன் கவிதைகள்
 11. இன்னொரு தேசியகீதம் – வைரமுத்து – 49
 12. வானம் – கவிதை – வைரமுத்து

*****

கட்டுரையாளர்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக்கல்லூரி
சேலம் – 07

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.