நன்றும் தீதும்!
பவள சங்கரி
மனிதர்களில் 100% உத்தமர் அல்லது 100% தீயவர் என்றெவரும் இலர்.
காலமும் சூழலும் அவரவர் அனுபவமுமே அதை நிர்ணயிக்கின்றது!
மகாபாரதத்தில் கர்ணனுடன் கொண்டிருந்த உண்மையான நட்பின் மூலமாக மட்டுமே சிறப்புக்குரியவனாகப் பாராட்டப்பட்டவன், கொடூர குணமும், தீய எண்ணமும் கொண்டவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளவன் துரியோதனன். அப்படிப்பட்டவனுக்கும் கோவில் கட்டி இன்றளவிலும் வழிபட்டு வருகிறார்கள் என்பதே இதற்குச் சான்று.
மண்ணாசையால் பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பிய துரியோதனன் திரௌபதியின் துகிலுரித்தவன் என்று தூற்றப்பட்டவன். இவனுக்கும் உத்தரகண்டிலும், கல்வி அறிவு நிறைந்த மாநிலமான கேரளாவிலும் கோயில் கட்டி வழிபடுகிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.
உத்தரகாசியின் சவுர் கிராமத்தில் துரியோதனனுக்கு கோயில் கட்டி வழிபட்டாலும், இந்தக் கோவிலில் கோபுரம் கிடையாது . இந்த அழகிய கோயிலின் கட்டுமான அமைப்பு அந்த மாநிலத்தின் சிறப்பு கட்டுமான வடிவத்தை ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
பாண்டவர்களைத் தேடிக்கொண்டு பல காடுகள், மலைகளில் அலைந்தவன், கடுத்தம்சேரி கொட்டாரம் என்றழைக்கப்பட்ட தென்பகுதியிலிருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்பகுதி தாழ்த்தப்பட்ட குரவா வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்துவந்த பகுதி. நெடுந்தூரம் அலைந்துத் திரிந்து வந்த களைப்பில் தாகம் நாவை வறட்ட, அங்கிருந்த ஒரு வீட்டின் முன் சென்று பருக நீர் கேட்கிறான். அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்த வயதான பெண்மணி, அவனுக்குத் தண்ணீர் தர மறுத்தாள். காரணம் கேட்டதற்கு, உயர் வகுப்பினரான துரியோதனனுக்கு, தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த தான் தண்ணீர் கொடுத்தால், தனக்குத் தண்டனை கிடைக்கும் என்பவளிடம், பசியும் தாகமும் சாதியற்றவை, சக மனிதரின் உயிர் காப்பது மனிதரின் கடமை, தான் அஸ்தினா புரத்து அரசன், இப்பகுதி என்னுடைய பேரரசின் கீழ் செயல்படும் குறுநில மன்னர்களிடம்தான் இருக்கிறது. அதனால் உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பலவாறு பேசி சம்மதிக்க வைத்து தண்ணீர் கிடைக்கப்பெறுகிறான்.
தாகத்தில் சுவை ஏதும் அறியாத நாக்கு, தாகம் அடங்கியபின் அது புளித்துப் போன நீராக இருப்பதை உணர்ந்தது. துரியோதனனும் அந்த மூதாட்டியைப் பார்த்து, அது என்ன நீர் என்று வினவினான். அதற்கு அந்த மூதாட்டியும்,
“அரசே! நீங்கள் தாகத்தால் மிகவும் களைத்துப் போய் வந்தீர்கள். தங்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுக்கலாமென்றுதான் நினைத்தேன். ஆனால் நாட்டின் அரசரான தங்களுக்குச் சாதாரணமான தண்ணீர் தருவது எனக்குச் சரியாகப்படவில்லை. அதனால் எங்கள் வீடுகளுக்கு வரும் முக்கியமான விருந்தினர்களுக்கு நாங்கள் வழக்கமாகக் கொடுக்கும் கள் எனும் ஒரு பானத்தைத்தான் தங்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்”என்றாள்.
துரியோதனனும், அது புளித்துப் போன ஒரு விதமான பானமாகயிருந்தாலும், அதைக் குடித்தவுடன் எனக்கு உற்சாகமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், தருகிறேன் என்றான்.
அந்த மூதாட்டியும், இறை வழிபாட்டிற்குத் தங்களுக்குத் தனியாக ஒரு கோவில் வேண்டும் என்று வேண்டினாள். துரியோதனனும் அதற்குச் சம்மதித்து, அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும்வண்ணம் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ளவும், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டுச் சென்றான். இதையடுத்து அப்பகுதி மக்களின் வழிபாட்டிற்கு ஏற்றதாக ஒரு புதிய கோவிலைக் கட்டி, அக்கோவிலில், துரியோதனனையேத் தங்களது முதன்மைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இன்றளவிலும் தினசரி வழிபாட்டுப் பணிகள் அனைத்தையும், குரவா வகுப்பினர்தான் செய்கின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்வில் வளமான மாற்றம் அமையும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், ‘மலக்குடா மகோத்சவம்’ மிகச்சிறப்பாக நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
இணையப்படங்களுக்கு நன்றி.