மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) – 2

0

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

what men live by picture 2

ஆகவே சைமன் திரும்பி அந்த உருவத்திடம் சென்றான். அருகில் சென்று பார்த்த போது ஒரு திடகாத்திரமான இளைஞன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பில் ஒரு காயமும் இல்லை. சைமன் இன்னும் அருகில் சென்ற போது அவன் மெதுவாகத் தலையை உயர்த்திச் சைமனைப் பார்த்தான். அந்தப் பார்வை சைமனின் உள்ளத்தைத் தொட்டது. சைமன் அவன் முழங்கைகளைப் பிடித்து எழும்ப உதவி செய்தான். அவன் கைகளும் கால்களும் திடமாகவும், முகம் அமைதியாகவும் கருணை நிரம்பியிருப்பதையும் சைமன் கவனித்தான். பின் தன்னுடைய மேல் கோட்டையும், கையிலிருந்த பழைய செருப்புகளையும் அணிய உதவி செய்தான். *உன்னால் நடக்க முடியுமா?’ என்று சைமன் கேட்டதற்கு அவன் பதில் கொடுக்காமல் மெதுவாக எழும்பி சைமனைக் கனிவாகப் பார்த்தான். சைமன் தன் கையிலிருந்த ஊன்று கோலை அவன் கையில் கொடுத்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த மனிதன் இலகுவாகவும் சைமனுக்கு இணையாகவும் நடந்தான். வழியில் அந்த மனிதன் ஒன்றும் பேசவில்லை.

சைமன் அவனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டதற்கு அவன் “ நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்.

“எப்படி இந்த ஆலயத்திற்கு வந்தாய்?” “என்னால் சொல்ல முடியாது?”

“உன்னை யாராவது துன்பப்படுத்தினார்களா”?

“இல்லை. ஒருவரும் என்னைத் துன்பப்படுத்தவில்லை, இறைவன் எனக்குத் தண்டனை கொடுத்தார்”.

“ஆம். இறைவன்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார். சரி, உனக்கு உணவு, ஆடை, தங்க இடம் வேண்டும். நீ எங்கே போக வேண்டும்?”

“எனக்கு எல்லாம் ஒரே இடம்தான்”.

சைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்ப்பதற்கு நல்லவனாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு என்ன நடந்ததோ தெரியாது, என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் “சரி, அப்படியானால், என் வீட்டிற்கு வந்து குளிருக்கு ஒதுங்கிக் கொள்” எனறான்.

சைமன் வேறு கேள்விகள் கேட்கவில்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. தன்னுடைய மனைவியை நினைத்தான். ஒரு புதிய மனிதனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதை அவள் விரும்பமாட்டாளென்று அவனுக்குத் தெரியும். அவளை நினைத்த போது அவன் மனம் வேதனைப் பட்டது. ஆனால் அந்த மனிதன் தன்னை முதல் தடவையாகக் கனிவுடன் பார்த்த பார்வை நினைவில் தோன்றியதும் மகிழ்ச்சியடைந்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.