நற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்

-முனைவர் இரா.சுதமதி

சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள்களுள் ஒன்றான கடல் பறவைகள் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் வியப்பிற்குரியவை. கடல் பறவைகள், அவற்றின் வாழிடச் சூழலமைவு பற்றிச் சங்கப் புலவர்கள் கூர்நோக்குத் திறனோடும் அறிவியல் நுட்பத்துடனும் எடுத்துரைப்பது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. நற்றிணைப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு கடல் பறவைகள் பற்றிய சங்கத் தமிழரின் அறிவையும் பல்லுயிர்ப் பரவலுக்கு இடமளித்த கடற்கரைச் சூழலமைவையும் ஆராய இக்கட்டுரை முற்படுகிறது.

கடல் பறவைகள்

கடலையும் கடல் சார்ந்த நிலம், மரங்கள், கழிகள் ஆகியனவற்றையும் சார்ந்து வாழும் உயிரிகள் கடல்சார் உயிரிகள் ஆகும். கடற்கரைகளையும் கழிமுகங்களையும் இருப்பிடங்களாகக் கொண்டு  இவை உயிர் வாழ்கின்றன. கடல் பறவைகள், நீர்நாய், நண்டுகள், ஆமைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் கடல்சார் உயிரிகளாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இவற்றுள் நெய்தல் பாடல்களின் கருப்பொருளாகவும் அகப்பொருள் சுவைக்குச் சான்றாகவும் பாடப்பட்ட கடல் பறவைகள் பற்றிய செய்திகள், அவற்றின் வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை நிற்கின்றன. இவற்றை அறிய முற்படுவது, இன்றையச் சூழ்நிலையில் கடல் பறவைகளை இயற்கைச் சூழலோடு பாதுகாப்பதற்கும் அவற்றின் வாழிடச் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

நற்றிணையில் கடல் பறவைகள்

நற்றிணைப் பாடல்கள் குருகு, சிறுவெண்காக்கை, நாரை, அன்றில் என்னும் கடல் பறவைகளைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. குருகு நீரில் வாழும் உயிரினங்களைத் தின்னும் பறவை. ‘கருங்கால் வெண்குருகு” 1 எனச் சங்கப் பாடல்கள் இதனைக் குறித்துக் கூறுகின்றன. சிறுவெண்காக்கை, ஆலாக்கள் (Terns) எனப்படும் நீர்ப்பறவையாகும். இவை நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். தலையும் வயிறும் வெண்ணிறமாகவும் உடல் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வெண்ணிறச் சிறகுத் தொகுதியும் கருநிற இறகுகளும் கொண்ட நீர் இறங்கு பறவை நாரை ஆகும். இவற்றின் கால்களும் அலகும் செந்நிறமானவை. சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலைகள் இவையே இவற்றின் வாழ்விடமாகும். அன்றில் பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பறவை. ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது வாழும். இவை சதுப்பு நிலங்களில் கூட்டமாக இரை தேடக் கூடியவை.

இப்பறவைகள் உண்ணும் இரை, இரை தேடுதல், அவை தங்குமிடம், அவற்றின் வாழிடச் சூழல், வாழ்க்கை முறை, பிற உயிரினங்களுடனான அவற்றின் தொடர்பு ஆகிய செய்திகள் நற்றிணை வழி இங்கு விரிவாக ஆராயப்படுகின்றன.

உணவுச் சூழல்

’நெய்தல் திணை மண்டலம்’ என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியும் (coastal eco system) என்று இலக்கணப்படுத்தப்படுகிறது. இங்கு அதிக அளவில் கடலுடன் வண்டல் கலப்பு ஏற்படும். அத்துடன் உப்பு நீரும் நன்னீரும் இணையும். இந்த மாறுபட்ட சூழல் அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் அபரிமிதமான விளைச்சலைக் கொடுக்கிறது. வெப்ப மண்டல நெய்தல் நிலங்களில்தான் உலகத்தில் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த அலையாத்திக் காடுகள், பவளத் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு எண்ணற்ற மீன் இனங்கள் பல்கிப் பெருகுகின்றன. கடலின் உட்பகுதியில் அதிக அலையின் வேகமும் பிற உயிர்களின் தாக்குதலும் இருப்பதால் அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிகளில் மீன்கள் முதலிய கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கின்றன’2 என்கிறார் சூழலியல் எழுத்தாளர் பாமயன். இதனால் கடல் பறவைகளுக்கான உணவுச் சூழல் இப்பகுதிகளில் இயல்பாக அமைந்திருப்பதை அறியலாம். கடல் பறவைகள் பெரும்பாலும் மீனையே உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக இறாமீனைக் குருகுகளும் நாரைகளும் சிறுவெண்காக்கைகளும் உணவாகக் கொள்வதை நற்றிணை கூறுகிறது.

‘இறவு ஆர் இனக் குருகு’- 131: 6

‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை’                           – 31:2

‘…………………………..ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து’               – 127:1,2

இறா எனப்படும் இறால் மீன்கள் நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படும் உயிரினம் ஆகும். இறால் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு கடலோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் ஒதுங்குகின்றன. இவ்விடங்களில் பறவைகள் இரைதேடி வருகின்றன. இதனை நற்றிணையும் எடுத்துரைக்கிறது.

                ‘………………………….இருங்கழி
                இரை ஆர் குருகின் நிரை பறைத் தொகுதி’ – 123:1,2

               ‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை
                பாயிரும் பனிக்கழி துழைஇ’                   – 31:2,3

               ‘நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
                நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு
                குப்பை வெண்மணல் ஏறி’                         – 291:1-3

இப்பாடலடிகள் கடல் பறவைகள் இரை தேடும் இடங்களான உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருவதைக் காணலாம். மேலும் மீனவர் பிடித்து வரும் வலைகளில் உள்ள மீன்களையும் கடற்கரையில் உலர்த்தப்படும் மீன்களையும் இப்பறவைகள் உணவாகக் கொள்கின்றன.

                ‘முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவை
                படுபுள் ஓப்பலின் பகல்
மாய்ந்தன்றே’
   – 49:3,4

‘நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு’                                                             – 45:6,7

கடல் பறவைகள் நாட்காலையிலும் பொழுது சாயும் வேளையிலும் இரை தேடும் செய்திகளை நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

                ‘பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
                சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்’    – 358:8,9

              ‘எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
                ………………………………………
                இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
                புள்ளும் பிள்ளையொடுவதிந்தன’         – 385:1-5

கடல் பறவைகள் கூட்டமாக இரைதேடி உண்பன. தவிர, தன் துணையோடும் இரை தேடுகின்றன.

                ‘வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
                …………………………………………..
                கருங்கால் வெண்குருகு’            – 54:1-4

               ‘பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ பெடையொடு
                உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை’  – 91:3,4

இப்பாடலடிகள் வழி கடல் பறவைகளின் இரை, அவை இரை தேடும் இடங்கள், இரை தேடும் நேரம், இரை தேடும் முறை முதலிய உணவுச் சூழல் குறித்த செய்திகளை அறிய முடிகிறது.

வாழிடச் சூழல்

திணை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வாழிடம் என்பதோடு மட்டுமல்லாது ஒழுகலாறு என்ற மற்றோர் ஆழமான பொருளும் உள்ளது’3 எனக் கூறுகிறார் பாமயன். கடல் பறவைகள் கடலை ஒட்டிய கடற்கரைச் சோலைகளிலும் மரங்களிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இப்பறவைகள் கடற்பகுதியிலுள்ள புன்னை மரங்களிலும் பனை மரங்களிலும் கூடு கட்டி வாழ்வதை நற்றிணையின் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

                நீ உணர்ந்தனையே தோழீ வீ உகப்
                புன்னைப் பூத்த இன் நிழல் உயர் கரைப்
                பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ, பெடையோடு
                உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை
                ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்
                மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
                தாய்ப் பயிர் பிள்ளை வாய் படச் சொரியும்
                கானல் அம் படப்பை  – 91:1-8

இப்பாடல் கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை மரக் கிளையில் கூடுகட்டித் தன் பெடையோடும் குஞ்சுகளோடும் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்ட நாரை குறித்த செய்தியை அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம்.

 இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
  வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
  கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே  -67:3-5

என்னும் பாடல் வரிகளும் குருகுகள் புன்னை மரத்தில் தங்கிய செய்தியை எடுத்துரைக்கின்றன.

புன்னை மரம் ஒரு நெய்தல் நிலத் தாவரமாகும். இது ஆழ வேரூன்றி வளர்வது. சங்கத்தமிழர் கடல் அரிப்பைத் தடுக்கப் புன்னை மரங்களைக் கடற்கரைகளில் நட்டு வளர்த்தனர். அவை கடற்கரைச் சோலையாக இன்நிழலைத் தந்தன. பேரலைகளைத் தடுத்தன. இதனால் கடல் பறவைகள் புன்னை மரங்களில் இளைப்பாறியும் கூடுகள் கட்டியும் தம் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்டன.

புன்னை மரம் போலவே பனை மரமும் கடல் பறவைகளின் வாழிடமாக அமைந்திருப்பதை நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாவரம். வறண்ட நிலப்பகுதிகளிலும் கடலோரங்களிலும் இவை ஏராளமாகக் காணப்படுகின்றன. நீண்டு உயர்ந்த இம்மரங்களின் மடல்களில் குருகுகளும் நாரைகளும் காகங்களும் கூடு கட்டி வாழ்வதையும், குறிப்பாக அன்றில் பறவைகள் இம்மரங்களைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருப்பதையும் நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு
மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
நள்ளென்
யாமத்து உயவுதோறு உருகி                                 – 199:1-3

தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப்
பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
துணைபுணர்
அன்றில் உயவுக் குரல் கேட்டொறும் – 303:3-5

புன்னை, பனை தவிர கடற்கரைச் சோலையில் உள்ள மரங்களிலும் பறவைகள் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன.

’வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர  – 117:3,4

கூடுகட்டி வாழும் கடல் பறவைகள் இரைதேடும் பொருட்டும் பகல் பொழுதில் இளைப்பாறவும் தாழை (நற்.131), கப்பலின் பாய்மரம் (நற்.258), வயல்வெளிகள் (நற்.263), மணல்மேடுகள் (நற்.272, 291) இவற்றை நாடுவதைச் சங்கப் புலவர்கள் உற்றுநோக்கிப் பாடியுள்ள திறம் வியத்தற்குரியது.

கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கத்தைக் கொண்டிருப்பது நீர்ப்பறவைகளின் தனிப்பண்பாகும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன.

 நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி– 159:3,4

பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே      -231: 2,3

ஒரு சூழல் செழிப்பாக, உயிர் வளத்துடன் குன்றாத வளர்ச்சியைத் தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா, சீர் கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளமாகும். சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களைத் தேர்ந்தெடுப்பது உண்டு எனச் சுற்றுச்சூழலியலார் கூறுகின்றனர். நற்றிணைச் செய்திகளை ஆழ்ந்து நோக்கினால் சங்க காலக் கடல் சூழல் பல்லுயிரிப் பெருக்கத்திற்கும் வளத்திற்கும் சான்று பகருவதாகவே அமைந்துள்ளது எனலாம்.

சூல் கொண்ட பெண் நாரை சூலினால் ஏற்பட்ட வருத்தத்தால் நெய்தல் நிலத்தை விடுத்து மருத நிலத்தில் தங்கியதாகக் கூறப்படும் பாடல் (263:4,5) தவிரச் சூழல் சீர்கேடு காரணமாகப் பறவைகள் இடம் பெயர்ந்ததாகச் செய்திகள் ஏதும் நற்றிணையில் பதிவாகவில்லை என்பது பழந்தமிழகத்தின் கடல் சூழல் வளத்திற்குச் சான்று எனலாம்.

உறவுச் சூழல்

‘கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு, தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு, அதாவது உயிருள்ளவற்றோடு, உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும். இந்த உறவுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சூழலில் இயங்கும் போது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உறுதிப்பாடு ஏற்படுகிறது’4.

 பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளது எனலாம். ஒரு காலத்தில் பறவைகளுடன் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை நுகர்வுப் பொருளாகவோ அல்லது தனக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினமாகவோ பார்க்கத் தொடங்கி விட்டானோ என்ற ஐயம் எழுகிறது.

பறவைகள் இணையாக வாழ்பவை. கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, தம் குஞ்சுகளுக்கு இரை தேடித் தருபவை. இணையில் ஒன்று பறக்க இயலாத சூழலில் இருந்தால் அதற்கும் இரையைத் தேடித் தருபவை. சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவியர் இணைந்து வாழ்வதற்கும் பிரிவுச் சூழலில் ஒருவரையொருவர் நினைத்து உருகுவதற்கும் பறவைகளின் வாழ்வியல் சூழல்களே சான்றாகக் காட்டப்படுகின்றன.

ஒன்று இல் வாழ்க்கை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை          – 124:1,2

‘………………………………இரை வேட்டு
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு
முடமுதிர் நாரை கடல் மீன் ஒய்யும்                                       – 263:4-7

கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்
 ‘……………………………கொடுங் கழி
 இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
 புள்ளும் பிள்ளையொடு வதிந்தன’         – 385:3-5

இப்பாடல்களின் வரிகள் கடல் பறவைகள் தம் துணையோடும் குஞ்சுகளோடும் வாழ்ந்த உறவுச் சூழலை விளக்கி நிற்பனவாகும்.

பறவைகள் மரங்களோடும் உறவுச் சூழலைக் கொண்டிருப்பவை. இந்த உறவே பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.

                ‘புது மணற் கானல் புன்னை நுண் தாது
                கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்
                வெண்புறம் மொசிய வார்க்கும்’                                                     – 74:7-9 

                ‘நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர
                கோடு புனை குருகின் தோடு தலைப்
பெயரும்         – 375:1,2

என்னும் பாடல் வரிகளில் கடல் பறவைகளால் மரங்களில் பூத்த பூக்களிலிருந்து மகரந்தத் தாதுக்கள் உதிரும் செய்தி கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான சூழல் உருவாவதை அறிய முடிகிறது. மகரந்தச் சேர்க்கை, மரங்களில் பூக்கள், பழங்கள், விதைகள் உருவாவதற்கும், மரங்கள் அதிக அளவில் தோற்றம் பெறுவதற்கும் அதனால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் அடித்தளமாக அமைவதைக் காணலாம்.

கடற்கரைச் சூழலமைவு

நற்றிணை நெய்தல் திணைப் பாடல்கள் கடற்கரைச் சூழலமைவை அழகுறப் புலப்படுத்தி நிற்பனவாகும். கடற்கரைச் சூழலே கடல் பறவைகளின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணமாக அமையக்கூடியது. பழந்தமிழகத்தில் இத்தகைய வளமான கடற்சூழல் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

                  ‘……………………………தழையோர்
                கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
                தெண் திரை மணிப்புறம் தைவரும்
                கண்டல் வேலி நும் துறை
                கிழவோற்கே            – 54:8-11

நீர்த் திவலைகள் தடவும் ஞாழல் மரங்களும் தாழை மரங்களும் நிறைந்த கடற்கரை எனவும்,

                ‘கோட் சுறா வழங்கும் வாள் கேள் இருங்கழி
                மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
                பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
                வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்’                                          – 78:1-4

சுறாமீன்கள் உலவும் உப்பங்கழியிடத்தே பூத்த நெய்தலின் மலர்கள் நிறையுமாறு புன்னையின் தாதுக்கள் உதிர்ந்து சிந்துவதும், விழுதுகள் தாழ்ந்த தாழையின் பூமணம் நிறைந்து விளங்குவதுமாகிய கடற்கரைச் சோலை எனவும் கடற்கரைச் சூழல் பற்றிய செய்திகளை நற்றிணைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

இத்தகைய அழகிய சூழலை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியம் எங்கும் நிரம்பிக் காணப்படுகின்றன. வளமான கடற்கரைச் சூழலைக் கண்டுகளித்த சங்கப் புலவர்களின் சிந்தையிலும் பாக்களிலும் அச்சூழல் இயல்பாகப் பதிந்து பாடுபொருளாக மாறியிருக்கக் கூடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இன்று கடற்கரைச் சோலைகளும் இல்லை. புன்னையும் தாழையும் ஞாழலும் பனைமரங்களும் கடற்கரையை அணி செய்யவும் இல்லை. கடற்கரைகள் கண்ணையும் மனத்தையும் கவரும் கேளிக்கை விளையாட்டுத் தலங்களாகவும் நட்சத்திர விடுதிகளாகவும் வானுயர்ந்த கட்டடங்களாகவும் உருமாறி வருகின்றன. பறவைகள் இடம்பெயர்ந்து சென்று விட்டன. பல்லுயிர்ப் பரவல் பழங்கதையாகி விட்டதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

சங்கத் தமிழரின் கூர்நோக்குத் திறனும் பல்லுயிர்ப் பரவலைப் பாடிக் களித்த விதமும் பறவைகளைக் கொண்டாடிய அறிவும் வியக்க வைக்கின்றன. இதில் நற்றிணை சிறிய சான்று. சங்க இலக்கியம் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தினால் பழந்தமிழகத்துப் பறவைகளின் வாழ்வியலையும் அவற்றைப் சங்கத்தமிழர் தம் வாழ்வியலோடு போற்றிப் பாராட்டிய தன்மையையும் தெளிவாக அறிய இயலும்.

இன்று அறிவியல் தொழில் நுட்பங்களாலும் ரசாயனக் கழிவுகளாலும் கடல் வளத்தையும் பல்லுயிர் வளத்தையும் இழந்து பெரும் மாறுதல்களைச் சந்தித்து வரும் கடற்கரைகளின் மீது கவனத்தைத் திருப்பி அவற்றைச்  சோலைகளாகவும் மரங்கள் நிரம்பிய சிறு காடுகளாகவும் மாற்றியமைத்தால் கடல் பறவைகளோடு பல்லுயிர் வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

******

அடிக்குறிப்புகள்

  1. குறுந்தொகை, பா. 325
  2. பாமயன், ‘நெய்தல் நில வேளாண்மை’, சூழலியல் கட்டுரை(நிலமும் வளமும்),

   தி இந்து, நாள். 03.02.2018

  1. பாமயன், திணையியல் கோட்பாடுகள், ப. 11
  2. மேலது, ப. 27

******

கட்டுரையாசிரியர்,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
திருநெல்வேலி

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *