மீனாட்சி பாலகணேஷ்

வேத விற்பன்னர்கள் அமுதமென வேதத்தினை சுருதிசுத்தமாக ஓதியருளுகின்றனர். ஓமப்புகையும் தீச்சுவாலைகளும் வானளாவ எழுந்து திகழ்கின்றன. சிவபிரானும் பார்வதி அன்னையும் அருவமாக எழுந்தருளி அந்த அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு மக்களை ஆசிர்வதிக்கின்றனர். வேதகோஷத்தின் இனிமையில் தோய்ந்த அன்னை உமையவள் ஐயனை நோக்கிக் கேட்கிறாள்: “ஐயனே! இவ்வேதத்தின் உட்பொருள் யாது? தேவரீர் எனக்கு விளக்கியருள வேண்டும்,” என்கிறாள்.

முடிவில்லாத சொக்கவைக்கும் பேரழகனும் ஆலவாய் நகரின் இறைவனுமாகிய சோமசுந்தரக்கடவுள், அனைத்துலகங்களையும் கருப்பெறாதீன்ற கன்னியாகிய அங்கயற்கண்ணி அம்மையுடன் ஏகாந்தமான ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அவளுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கத் துவங்குகிறான். என்ன காரணத்தினாலோ உமையவளின் முழுக்கவனமும் அவ்வமயம் அதனைக் கேட்பதில் செல்லவில்லை. மிகவும் முக்கியமானதொரு விஷயத்தை ஒருவர் நமக்குக் கூறும்போது நாம் அதனில் கருத்தைச் செலுத்த வேண்டுமல்லவா? வேதங்கள் அதிரகசியமானவை. அவற்றைக் கருத்தொருமித்துக் கேளாமல் அம்மை அவ்வாறு கருத்தைச் சிதறவிட்டதனால் சிவபிரானுக்குச் சினம் மூளுகிறது.

“நீ அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்து மகளிர் போன்று நம்மிடத்துப் பராமுகம் கொண்டு சிரத்தையின்றி இவ்வேதத்தைக் கேட்டாய். ஆகவே மன்னிக்கவியலாத தவறு செய்தவளாவாய். இதனால் (நோன்பும் அறனும் இன்றி) தருமநிலையில் ஒழுகாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரியும் செயலைச் செய்தலால் இழிந்தவர்கள் என்று கருதப்படும் பரதவர் குலத்தில் அவர்கள் மகளாகப் பிறக்கக் கடவாய்,” எனச் சாபமிட்டார்.

rajam_med

இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். இறைவன் சொற்களில் பரதவர் குலம் இழிந்தது என்று கூறியது எதனால்? அவர்கள் பிறப்பால் இழிந்தவரல்லர். செயலால் மட்டுமே இழிந்தவர்கள். இறைவனின் படைப்பில் மீன்களும் ஓர் உயிரினமே எனும் எண்ணமின்றி, நோன்பு- அறமாகிய தருமம், அருள் எண்ணம் ஆகியன இன்றி அவைகளைப் பிடித்து உண்பதற்காகக் கொலை செய்வோர் அவர்கள். இதனாலேயே அவ்வாறு கூறினார்.

‘விரதமு மறனு மின்றி மீன்படுத் திழிஞ ரான

பரதவர் மகளா கென்று பணித்தனன்…’ என்பார் பரஞ்சோதி முனிவர்.

(திருவிளையாடல் புராணம்)

அம்மை பதைபதைத்து, “நான் உம்மைப்பிரிந்து இருப்பது எப்படி? இதற்கென்ன விமோசனம்?” எனக்கேட்க, இறைவனும், “நீ பரதவர் மகளாகப் பிறந்து வாழுங்காலை நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம்,” எனக் கூறியருளினார்.

அன்னையைக்காண ஓடோடி வருகிறான் விநாயகப்பெருமான். இதனைப் பற்றியறிந்த அவர் இவ்வேத நூல்களால் தானே இந்நிகழ்ச்சியனைத்தும் நடைபெற்றது?” எனச் சினங்கொண்டு அங்கிருந்த சுவடிகளையெல்லாம் துதிக்கையால் அள்ளி ஒருசேரக் கடலில் வீசியெறிந்தான். கிரவுஞ்சமலையைப் பிளக்க வேலேறிந்த முருகக்கடவுளும் தன் தந்தையின் திருக்கரத்திலிருந்த சிவஞானபோதம் எனும் நூலைப் பிடுங்கிக் கடலில் வீசினான். அன்னையை ஓடோடிச் சென்று அன்புமீதூர அணைத்துக்கொண்டான் முருகன்.

வரைபக வெறிந்த கூர்வேல் மைந்தனுந் தந்தை கையில்

உரைபெறு போத நூலை யொல்லெனப் பறித்து வல்லே

திரைபுக வெறிந்தான்…..’ (திருவிளையாடல் புராணம்)

இப்போது சோமசுந்தரக்கடவுள் நந்திதேவரைப் பார்த்துச் சினம்கொண்டார்.

“நாம் உமையுடன் தனித்து உரையாடும்போது நீ எவ்வாறு குழந்தைகளை உள்ளே புக அனுமதித்தாய்? அதனால்தானே தீங்கு விளைந்தது. ஆதலால் நீ சுறாமீன் வடிவெடுத்து கடலில் கிடந்துழலக் கடவாய்,” எனச் சபித்தார்.

வேழமுகனைச் சபித்தால் அச்சாபத்தின் வலிமை தன்னையே வந்தடையுமென்றெண்ணி அவரை ஒன்றும் கூறவில்லை. முருகப்பெருமானை, “வணிகர் மரபில் ஊமையனாகத் தோன்றக் கடவை,” எனவும் சபித்தார் சிவபிரான்.

சாபத்தின் விளைவினால் உமையம்மை பரதவர்குல மகளாகப் பிறந்து அழகு திகழ வளர்ந்தாள். நந்திதேவரும் சுறாமீன் வடிவுகொண்டு கடலில் உழலுவாராயினார். அச்சுறாமீன் கடலைக்கலக்கி கலங்கள், மீன்பிடிக்கும் பரதவர் யாவருக்கும் மிக்க துன்பத்தை விளைவித்தது. அதனைப் பிடிக்க இயலாது வருந்திய பரதவர் தலைவன், “இச்சுறாவைப் பிடிப்பவருக்குத் தன் மகளை (அவ்வாறு வந்து பிறந்திருந்த உமையம்மையை) மணஞ்செய்து கொடுப்பதாக அறிவித்தான். சிவபிரான் ஓர் இளம் வலைஞனாகக் கோலங்கொண்டு வந்து சுறாமீனைப் பிடித்துப்பின் உமையம்மையின் கரம் பற்றினார்.

தனது துணைவியான அம்மையுடன் சிவனார் இடப ஊர்தியின்மீது எழுந்தருளிக் காட்சி தந்தார். சுறாமீனாக உருவெடுத்திருந்த நந்தியெம் பெருமானும் அவ்வடிவு நீங்கி, தம் இடப வடிவுடன் தோன்றினார். பரதவர் தலைவனுக்கு இவ்வாறு பேரருள் புரிந்த சிவபிரான் உமையம்மையுடனும் நந்திதேவருடனும் உள்நிறை அன்பரோடும் உத்தரகோச மங்கை எனும் திருத்தலத்தை அடைந்தான்.

அங்கு உமையவளான மங்கைக்கு அதிரகசியமான வேதத்தை வாய்மொழியாகச் செவிகளில் புகட்டினான்.

அங்கிருந் தநாதி மூர்த்தி யாதினான் மறைகள் ஏத்தும்

கொங்கிருங் கமலச் செவ்விக் குரைகழல் வணங்கிக் கேட்ப

பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்

பொங்கிருஞ் சுதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார.

(திருவிளையாடல் புராணம்)

Uthirakosamangai-Emerald

சிவபிரான் மங்கைநல்லாளாகிய உமையம்மைக்கு வாய்மொழியாக (உத்தரம்) வேதங்களை (கோசம்) உபதேசித்ததனால் இத்திருத்தலம் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றது. உத்தரம் + கோசம் + மங்கை.

இத்தலத்தே எழுந்தருளியுள்ள சிவபிரான் மங்களநாதர் எனவும் அம்மை மங்களநாயகி எனவும் போற்றப்படுகின்றனர். இத்தலத்தின்மேல் பெரும்பற்றுக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இத்தலத்தை, “பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோசமங்கை,” எனப் போற்றுகிறார். வாதவூரடிகளின் இருபிறவிகளிலும் இத்தலம் தொடர்புடையது எனத் திருக்கோவில் செய்தி கூறுகின்றது. இத்தலத்தில் அவர் ‘நீத்தல் விண்ணப்பம்,’ ‘திருப்பொன்னூசல்,’ ஆகிய இரு பதிகங்களையும் பாடியருளினார்.

‘திரு உத்தரகோச மங்கையில் எழுந்தருளியுள்ள வேதியன், வணங்குபவர் பாவங்களைப் போக்குபவன், அழகே வடிவெடுத்த சிவபிரான், தன்னிடம் உறவு கொண்டாடுபவர்க்கெல்லாம் நெருக்கமாகிறான்,’ என்கிறது ஒரு அழகான பாடல்.

உன்னற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

பன்னிப் பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்றறுப்பான்

அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல்

என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடி

பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ’

(திருப்பொன்னூசல்- திருவாசகம்)

இத்தலத்து அம்மையின்மீது இரு பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டனவாம். நமக்குக் கிட்டியுள்ளது ஒன்றே! அருமையான பொருள்நயம், சந்தநயம், சொல்நயம் அமைந்த பாடல்களைக் கொண்டு விளங்கும் இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.

பிள்ளைத்தமிழ் நூல்களில் யாதேனும் ஒரு பருவத்துப்பாடலில் பாட்டுடைத்தலைவன்/ தலைவியின் புகழையோ, சாதனையையோ, அருளையோ கூறுமுகமாக அத்தலத்தின் தலபுராணம் பற்றிய செய்திகளையும் காணலாம். இப்பிள்ளைத்தமிழ் நூலிலும் அவ்வாறமைந்த பாடலொன்று சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வை விளக்கவே மேலே திருவிளையாடல் புராணச் செய்தியொன்று கூறப்பட்டது.

பிள்ளைத்தமிழ் என்ன கூறுகின்றதெனக் காணலாம்:

கதை தொடர்கின்றது!

விநாயகனும் முருகனும் இவ்வாறு வேதநூல்களைக் கடலில் எறிந்ததனைக் கண்டு அன்னை உமையாள் உள்ளம் நெகிழ்கிறாள். “என் குழந்தைகளுக்கு என்மீது எவ்வளவு பிரியம்?” எனத் துன்பத்திலும் உள்ளம் களிகொள்கிறாள். “என் முத்தையனே! உனக்கு என்னிடம் இத்துணை அன்பா?” எனக்கேட்பவள் அவனை வாரியணைத்து ஆசையாக முத்தமிடுகிறாளாம். அத்தகைய அன்னையே! உத்தரகோசமங்கை என்னும் திருவூரில் எழுந்தருளியுள்ளவளே! நீ சப்பாணி கொட்டியருளுக! எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் நயம்பட அமைந்துள்ளது. இப்பாடல் இத்திருத்தலத்தின் தலபுரானத்தை நமக்கு விளக்குகின்றது.

மலைவளைத் திடுமங்க ளேசனை யெனக்கொரு

மறைப்பொரு ளுரைத்தியென

மங்கையர்க் கரசிநீ மறவாது கேளென்று

வசனிக்க வுரைமறந்தே…….

……………………………………………………….

முன்வைத்த புத்தகத்தை

முன்கிழித் தெறியவுமென் முத்தைய னாமென்று

முருகனெனு மிளையமகனைத்

தலைவளைத் தேமுத்த மிட்டபெரு மாட்டியொரு

சப்பாணி கொட்டியருளே!

(திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி, தமிழ்த்துறை,

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

கோயம்புத்தூர்- 21.}

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

திரு உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (நன்றி- ரோஜா

முத்தையா ஆராய்ச்சி நூலகம்)

2. திருவாசகம்- மாணிக்கவாசகர்.

3. திருவிளையாடல் புராணம்- பரஞ்சோதி முனிவர்

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *