பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

27399637_1549686468418880_1099346604_n
ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

10 thoughts on “படக்கவிதைப் போட்டி (147)

 1. பூ வாக வாழ _
  பூவையைத்தாங்கு!!
  ===================
  #விற்பனைக்குக்காத்திருக்கும்
  விடுமலர்கள் !! _ கட்டாமல்
  விற்றுவிட்டால்,சரம் தொடுக்க
  விடிய விடிய வேலை மிச்சம்!!
  #காலைமுதல் வேலை செய்து
  கண்களில்களைப்பு _ மறுபுறம்
  கட்டிய மனையாளின் நினைப்பு!!
  கடகடனு விற்காதோ இருப்பு!!
  #புதுமணப்பெண் இல்லத்திலே
  பூத்திருந்துகாத்திருக்க _ விரைவாக
  போகணும்னு மனம் ஏங்க…
  பூ வாங்க யாரேனும்வருவாரோ??
  #மலர் போல வாழ்க்கையது..
  மனம் வீசனும்! _ கரம்பிடித்த
  மங்கையவள் இதமாக உடனிருந்து
  மகிழ்வோடு வாழ்ந்திடணும்!!
  #இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
  இதழ் அழுகும்! _ அதுபோல்தான்
  இல்லறமும்!!நல்லறமாய் ஆக
  இல்லாளை நேசிக்கணும்!!
  #முன்வருவதைவிட சிறப்பு
  பின் வருவதே _ காதல்…
  பண்ணுவது மனைவியெனில்
  மின்னும் இல்வாழ்வு!!
  #உதிரம்நனைந்தவெள்ளைரோஜா
  உருவாகும் சிவப்பு _ கிளிக்காதல்
  உரைத்த உவமானமல்ல!, அது
  உயிர்களின் உண்மை நேசிப்பு!!
  #அதுபோன்ற மெய் பந்தம்
  அமைந்திடல்வேண்டும் _ அதற்கு
  அறம் சார்ந்த பற்றுக்கொண்டு
  அன்புகாட்டி உயரவேண்டும்!!
  #வியாபாரம் செழிக்கத்துணையாக
  வீட்டுக்காரி வரவேணும்_ குடும்பத்தில்
  விட்டுக்கொடுத்து..விசனங்கள்தாங்கி
  விரும்பும்புருசனாய் வாழவேண்டும்!
  ???????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..
  பவானி..ஈரோடு…
  9442637264….
  ???????????????

 2. #@(வரிக்கட்டுப்பாடு அறியாமல் எழுதிய மேற்படிக்கவிதைக்கு மாற்றாக கீழ்கண்ட கவிதையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்)
  ???????????????
  பூ வாக வாழ..
  பூவையைத்தாங்கு!!(24 வரிகள்)
  =================
  #விற்பனைக்குக்காத்திருக்கும்
  விடுமலர்கள்!! _ தொடுக்காமல்
  விற்றுவிட்டால் சரமாக்க இரவு
  விளி்த்திருக்கத்தேவையில்லை!
  #நூலெடுத்து வேலைக்கு எத்தனித்தால்
  நூலிடையாள் ஞாபகம்! _ கட்டி வந்து
  நூறுநாள் தாண்டவில்லை..உள்ளத்தில்
  நூலிலையாய்பிண்ணிபுதுமணப்பெண்!!
  #இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
  இதழ் அழுகும்!! _ தாம்பத்தியம்
  இல்லறத்தின் அழகு..நல்லறமாய் ஆக
  இல்லாளை எந்நாளும் நேசிக்கணும்!!
  #முன்வருவதைவிட மிகச்சிறப்பு
  பின்வருவதே _ காதல்
  பண்ணுவது மனைவியெனில்
  மின்னும் இல்வாழ்வு!!!
  #உதிரம்நனைந்த வெள்ளைரோஜா
  உருவாகும்சிவப்பு _ கிளிக்காதல்
  உவமாணமல்ல ஈருயிர்பந்தத்தின்
  உண்மையான பாசப் பரிணமிப்பு!!
  #வியாபாரம் செழிக்கத்துணையாக
  வீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி
  விரைவிலே முடித்து,இல்லம்திரும்பி
  விரும்பும்தம்பதியாய்வாழவேண்டும்!!!
  ???????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி…ஈரோடு…
  9442637264…
  ???????????????

 3. மலர் வணிகனின் மனவோட்டம்
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  அரும்பாகி…
  அதுமுற்றி நனையாகி…
  முகையாகி… மொக்காகி…
  முகிழாகி… மொட்டாகி…
  மலராகி… பூவாகி…
  விற்பனைக்கு கடையடைந்து…
  வீயாகி… உதிர்ந்துவீழுமுன்னே…
  விற்றுத் தீர்ந்துவிட்டால்…
  வீட்டில் காத்திருக்கும்
  பொறுப்பான மனையாளும்
  பொதும்பராகி மகிழ்வாளே…
  பொம்மலாகி… செம்மலாகி…
  வீணில் போகுமுன்னே…
  வாடிக்கையாளர் எவரேனும்
  வந்து வாங்கிவிட்டால் – என்
  வாடும்மனம் மலர்ந்திடுமே…!

  குறிப்பு :-
  *********
  மலர்களின் அழகைக் கண்டு மகிழ்கிறோம். இந்த மலர்களுக்கும் அது அரும்பியதிலிருந்து உதிர்ந்து விழும் வரை 13 நிலைகள் இருப்பதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த பதின் மூன்று நிலைகள் உங்களுக்குத் தெரியுமா?
  1. அரும்பு – அரும்பும் தோன்று நிலை
  2. நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
  3. முகை – நனை முத்தாகும் நிலை
  4. மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை (“முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள்.)
  5. முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
  6. மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
  7. போது- மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
  8. மலர்- மலரும் பூ
  9. பூ – பூத்த மலர்
  10. வீ – உதிரும் பூ
  11. பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
  12. பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
  13. செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

  நன்றி : முத்துக்கமலம் இணைய இதழ்.

 4. அவன் கவலை…

  மலர்கள் விற்கிறான் உதிரியாக
  மாலை யாகிடும் உறுதியாக,
  பலவகைப் பயன்கள் அதற்குண்டு
  பள்ளியில் சோர்த்திடும் மணமாலை,
  சிலையில் இறைவன் திருமாலை
  சீரிலா அரசியல் பூமாலை,
  நிலவிடும் அவனிடம் ஒருகவலை
  நம்மிடம் வருமா மணமாலையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. பூவே உன்னைப் புகழ-வா..!
  ========================

  பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
  ……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
  பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
  ……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
  ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
  ……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
  வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
  ……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!

  பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..
  ……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
  பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
  ……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
  எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
  ……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
  கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
  ……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!

  பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
  ……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
  பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
  ……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
  ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
  ……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
  கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
  ……….காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!

 6. சூடா மலர்கள் !
  சி. ஜெயபாரதன், கனடா.

  கொட்டிக் கிடக்குது தரையில்
  கோடிப் பூக்கள் !
  வாடிக் கிடக்குது வாசனைப்
  பூக்கள் !
  மாலையாய்க் கோர்த்து
  சூடிக் கொள்ள மங்கை இல்லை !
  சூடிக் கொடுத்த காவியச்
  சுடர்க் கொடியின்
  துகிலை உரித்து அவைதனில்
  மகிழ்ந்தோரை மறித்து
  ஆடை அளிக்க,
  கண்ணபிரான் வந்திலன் !
  வாடாமல், வதங்காமல் இன்னும்
  வனப்பு மங்காது
  சூடாமலர்கள் வீடுகளில்
  தொடுப்பாரற்று,
  திருப்பாவை
  பாடிக் கொண்டுள்ளன !
  மலர்கள்
  வாடி உதிரும் முன் மாலையாய்ச்
  சூடிக் கொள்ள வந்த
  ஆடவன் மீண்டும் வாரான்,
  காரணம்
  வரதட்சணை !

  ********************

 7. மலர் வணிகனின் மனவோட்டம்
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  அரும்பாகி…
  அதுமுற்றி நனையாகி…
  முகையாகி… மொக்காகி…
  முகிழாகி… மொட்டாகி…
  மங்கையர் மனங்கவரும் போதாகி…
  மலராகி… பூவாகி…
  விற்பனைக்கு கடையடைந்து…
  வீயாகி… உதிர்ந்துவீழுமுன்னே…
  விற்றுத் தீர்ந்துவிட்டால்…
  வீட்டில் காத்திருக்கும்
  பொறுப்பான மனையாளும்
  பொதும்பராகி மகிழ்வாளே…
  பொம்மலாகி… செம்மலாகி…
  வீணில் போகுமுன்னே…
  வாடிக்கையாளர் எவரேனும்
  வந்து வாங்கிவிட்டால் – என்
  வாடும்மனம் மலர்ந்திடுமே…!

 8. புண்ணியப் பூக்கள் : ரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி!
  ஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி!
  கூட்டமாய் கூடையில் கொலுவிருப்பது!
  கண் கொள்ளா காட்சி!
  மென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி!
  நீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது
  உன் தனிச் சிறப்பு!
  பிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்!
  அற்புதப் படைப்பு!
  முருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்!
  ரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்!
  அரும்பிலும் நீ அழகு!
  மொட்டிலும் நீ அழகு!
  மலரிலும் நீ அழகு!
  ஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு!
  இப்புவியில் நீ வாழ்வது சில காலம்!
  உன்னால் விளையும் பயன்கள் பலவாகும்!
  வண்டிற்கு தேனை நீ தருவாய்!
  மங்கையின் கூந்தலில் வீற்றிருப்பாய்!
  தெய்வத்தோடு கொலுவிருப்பாய்!
  மண மக்கள் கழுத்தை அலங்கரிப்பாய்!
  காதல் தூதாய் நீ இருப்பாய்!
  இறுதி யாத்திரையிலும் துணை வருவாய்!
  ரோஜா மலராய் நாம் இருப்போம்!
  இயன்ற வரையில் பயன் தருவோம்!

 9. பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!

  பறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே
  வெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி
  போணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க
  காணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா

  பொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே
  உழைப்பெதுவும் சேராம உட்காந்திருக்கிகளோ!

  பொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு
  எம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம
  கலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று
  மலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ

  நாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க
  பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
  காஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர
  பாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா
  வாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.
  ஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,
  பூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது
  சாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக

  என்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக
  சொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது
  ஏற்ற விலை கொடுக்க எவர் வருவாா் இக்காலம்.
  காற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது.

  கல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு
  பொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா
  நல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு
  பொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து
  காணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்.

 10. சூடா மலர்கள் !

  சி. ஜெயபாரதன், கனடா.

  கொட்டிக் கிடக்குது தரையில்
  கோடிப் பூக்கள் !
  வாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்
  சூடிக் கொள்ள
  மங்கையர் இல்லை !
  சூடிக் கொடுத்த பூமகள்
  சுடர்க் கொடியின்
  துகிலை உரித்து அவைதனில்
  மகிழ்ந்தோரை மறித்து
  புடவை அளிக்க,
  கண்ணபிரான் வந்திலன் !

  வாடாமல், வதங்காமல் இன்னும்
  வனப்பு மங்காது
  சூடாமலர்கள் வீடுகளில்
  தொடுப்பா ரற்று,
  திருப்பாவை
  பாடிக் கொண்டுள்ளன !
  வாடி உதிரும் முன் மாலையாய்ச்
  சூட வந்த ஆடவன்
  வாரான் மீண்டும்,
  காரணம்
  கறுப்பி மங்கை அப்பன்
  தர முடிய வில்லை
  வரதட்சணை !

  ********************

Leave a Reply

Your email address will not be published.