இலக்கியம்கவிதைகள்

கடலுள் ஒரு மொக்கு விரியும்போது!

-கவியோகி வேதம்

நான்இதோ வந்தேன் என்று
நறுவிசாய் மலர்ந்து பொங்கி
தேன்‘கொணர்’ என்றே  மொட்டைத்
தேர்ந்துபின்  நிமிர்த்தும் காலை!

ஒளித்தது நேற்று கடலென்
றொப்புதல் வாக்கு செய்து
களிப்புடன் கதிரோன்  சிரிக்கக்
கால்களைப் பரப்பும் காலை!

வண்டுகள் முனகிப் பாயும்!
வாசமது நுகர்ந்து  தோயும்!
தண்டைகள் குலுங்கப் பெண்ணும்
தளுக்கியே மினுக்கும் காலை! .

குருவிகள் விழித்துச்  சிலிர்க்க,
குடங்களில் ஒலிநீர்ச் சந்தப்
பெருமையில் துள்ளும் காலை!
பீறிடும் கவிதை மாலை!

சிறுமிகள் தந்தை யார்க்கே
சின்னஇ டைகு லுங்க
கறுத்தஓர் கலயம் தன்னில்
கஞ்சியைச் சுமக்கும் காலை!

உழவனும் சூச்சூ என்றே
உயர்ந்தநல் மாட்டை ஓட்டி
உழுதலில் நாட்டம் கொள்ள
உயர்ந்தமண் நெகிழும் காலை!

தேன்நிறைப் பூக்கள் எல்லாம்
தேனியின் எச்சில் படுமுன்
மானமோ டிறையை நாட
வணங்கியே பதறும் காலை!

கிளையினில் விழித்த  குயிலும்
கிழக்கினில் எழும்வி ளக்கே
சுளையெனப்  ‘பறக்கும்’ – உணவைச்
சொன்னதாய்ப் பாட்டுப் பாடும்!

மருட்சியாய்ப் புல்லை மேயும்
மான்களும் துள்ளும் காலை!
திரட்சியாய்க் கண்ணீர்  தோயத்
தேவனை  வணங்கும் காலை!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க