ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகத்தில் பா வகைகள்

0

-பி.மேனகா

முன்னுரை             

எழுவகைத் தாதுக்களாகிய தோல், குருதி, தசை, நரம்பு, எலும்பு, மச்சை, நீர் போன்றவற்றால் ஆனது உடம்பு. அதைப் போன்றே எழுத்து முதல் தொடை ஈறாக அமைந்த உறுப்புகளால் செய்யப்படுவது செய்யுள். அச்செய்யுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களாலும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்று இனங்களாலும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றின் இயல்புகளையெல்லாம் தொகுத்துக் கூறுவதால் இதனை செய்யுளியல் என்று கூறுகின்றோம்.

இதனடிப்படையில் இலக்கியங்களிலும், பாக்களின் ஆட்சி சிறப்புற்றிருந்தது. குறிப்பாக பக்தி இலக்கியங்களான திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தங்களிலும், பாவும், பாவினமும் சிறப்புற்றிருந்ததைக் காண முடிகின்றது. ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகத்தில் வெண்பாவின் வகைகளுள் நேரிசை வெண்பாவும், இன்னிசை வெண்பாவும், ஆசிரியப்பாவில் நேரிசை ஆசிரியப்பாவும்,  கலிப்பாவில் கட்டளைக் கலிப்பாவும், மருட்பாவில் கைக்கிளை மருட்பாவும் பயின்றுவந்துள்ள முறையினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

பா இலக்கண வளர்ச்சி

தமிழில் பா இலக்கண வரலாறு மிகத் தொன்மையுடையதாகவும், தொடர்ந்து வளர்ச்சியுடையதாகவும் விளங்குகின்றது. பா இலக்கணத்தைப் பற்றி நமக்குக் கிடைத்திருப்பது தொன்மையான தொல்காப்பியமே ஆகும். ‘பா” என்பது தொல்காப்பியர் காலம் வரை செய்யுளின் ஓசை குறித்து வந்ததென்பதை,

‘பா என்பது சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை”1 என்கிறார் பேராசிரியர். இதனையே நச்சினார்க்கினியரும் ‘பாவென்றது இவ்வுறுப்புக்களையுடைத்தாய்ச் சேட்புலத்திருந்து சொல்லும், பொருளுந் தெரியாமல் ஒருவன் கூறிய வழியும், இஃது என்ன செய்யுளென்றறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோரோசையை”2 என்று கூறியுள்ளார். பாக்களின் வகையை,

‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
 நாலியற் றென்ப பாவகை விரியே”       (தொல்.செய்.நூ.101)

என்னும் நூற்பாவில் பா வகைகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா எனக் கூறிய தொல்காப்பியர் வஞ்சியும், கலிப்பாவும் ஆசிரியம் வெண்பாவிற்குள் அடங்குமென்பதை,

‘பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்
காயிரு பாவினுள் அடங்கும் என்ப”    (தொல்.செய்.நூ.103)

என்னும் நூற்பாவில் கூறியிருப்பதையும் அறிய முடிகின்றது. அதாவது ஆசிரியப்பாவின் நடையை உடையது வஞ்சியென்றும் வெண்பாவின் நடையை உடையது கலிப்பா என்றும் அவர் கூறியுள்ளதை,

‘ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
 வெண்பா நடைத்தே கலியென மொழிப”    (தொல்.செய்.நூ.104)

என்னும் நூற்பாவில் அறியலாம். இவ்வாறு பா இலக்கணம் வளர்ச்சி பெற்றே வந்துள்ளது.

வெண்பாவின் பொது இலக்கணம்

‘முதற்பா” ‘வன்பா” என்று தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி நூலும்”6 ‘வெள்ளைப்பா, அந்தணர்பா என்று யாப்பருங்கலக் காரிகையும்”7 வெண்பாவிற்கு வேறுபெயர்கள் கூறுகின்றன. பல பெயர்கள் கொண்ட வெண்பாவானது பாக்களில் ஆதியாகவும், தலைமையாகவும் உள்ளது. யாப்பருங்கலம் கூறுவதாவது,

”செப்பல் இசையன வெண்பா மற்றவை
அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி
அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே” (யா.க.57)

வெண்பா செப்பலோசை பெற்று ஈற்றடி முச்சீராய் ஏனைய அடி நாற்சீராய் வரும். தேமா முதலான இயற்சீர் நான்கையும், தேமாங்காய் முதலான வெண்சீர் நான்கையும் சீராகப் பெற்று வரும். வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை என்ற இரு தளைகளை மட்டுமே பெற்று வரும் (காய்முன் நேர், மாமுன்நிரை விளமுன் நிரை) நாள், மலர், காசு, பிறப்பு என்னும் நான்கு வகையான வாய்பாடுகளுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடியும். வெண்பாவின் வகை ஐந்தாகும். அவை,

 1. குறள் வெண்பா
 2. சிந்தியல் வெண்பா
 3. நேரிசை வெண்பா
 4. இன்னிசை வெண்பா
 5. பஃறொடை வெண்பா

இதில் நேரிசை வெண்பாவும், இன்னிசை வெண்பாவும் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் இடம்பெற்றுள்ளன.

நேரிசை வெண்பாவின் இலக்கணம்

நான்கு அடிகளைக் கொண்டு இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றுவரும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றுவரும். முன்னிரண்டு அடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டு அடிகளில் மற்றோர் எதுகையும் பெற்று வருவதும் நேரிசை வெண்பாவாகும். முதலிரு அடிகளில் அமையும் எதுகைக்கேற்பவே தனிச்சொல்லின் எதுகை அமையும். இதனை,

”ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி மூய்ச்செப்ப லோசைக்குன்றா
தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
நேரிசை யாகு நெறிசுரி பூங்குழ னேரிழையே”    (யா.கா.23) என்று யாப்பருங்கலக்காரிகைக் கூறுகின்றது.

எ.கா.

”எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன்அருளை நாடும் – புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ” (11:38:2)

இப்பாடலில் முன்னிரு அடிகளில் ‘னகரம்” ஒரு விகற்பமாகவும், பின்னிரு அடிகளில் ‘ஙகரம்” ஒரு விகற்பமாகவும் உள்ளன. தனிச்சொல் எதுகை முன்னிரு அடிகளின் எதுகையை ஒத்திருக்கின்றன. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் பெற்றுள்ளன. ஆதலால் இப்பாடல் இருவிகற்ப நேரிசை வெண்பாவாக ஓசை நலத்திலும் சிறந்துள்ளது.

இன்னிசை வெண்பாவின் இலக்கணம்

”ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பினஃது இன்னிசை துன்னும்” (யா.கா.24)

ஒரு விகற்பத்தையோ பல விகற்பத்தையோ பெற்று நான்கடியால் அமைந்து தனிச்சொல்லின்றி நடப்பது இன்னிசை வெண்பாவாகும். தனிச்சொல் பெற்றுவருதலும் உண்டு என்பதனை உரையின்வழி அறியமுடியும் என்று யாப்பருங்கலக்காரிகை கூறுகின்றது. அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்று வரும்.

எ.கா:

”யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னி தமிழ்விரகன் – சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து”  (11:38:44)

இப்பாடலில் பல விகற்பமும், தனிச்சொல்லும் பயின்றுவந்துள்ளன. அதாவது முன்னிரு அடிகளில் ‘ரே” என்னுஞ்சொல் ஓரெதுகையாகவும், மூன்றாம் அடியில் ‘சகரம்” ஓர் எதுகையாகவும், நான்காம் அடியில் ‘டி” என்பது ஓர் எதுகையாகவும் பயின்று வந்துள்ளன. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ‘பிறப்பு” என்னும் வாய்பாட்டால் அமைந்திருப்பதால் இஃது இன்னிசை வெண்பாவாகும்.

ஆசிரியப்பாவின் பொதுவிலக்கணம்

அகவலோசைப் பெற்று நான்கு சீர்களைக் கொண்ட அளவடியால் அமையும். தேமா முதலான ஈரசைச் சீர்கள் நான்கையும் மிகுதியாகப் பெற்றுவரும். காய்ச்சீர்களைக் குறைவாகப் பெற்றுவரும். கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய வஞ்சியுரிச்சீர் வஞ்சித்தளையும் ஆசிரியப்பாவில் இடம் பெறாது. ஆசிரியப்பாவின் வகைகளுள் ஒன்றான நேரிசை ஆசிரியப்பா வகையே ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகத்தில் இடம் பெற்றுள்ளது.

”அகவல் இசையன அகவல் மற்றவை
ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே”    (யா.க.69)

என்று யாப்பருங்கலம் பழைய விருத்தியுரை எடுத்துக்கூறுகின்றது.

நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம்

”அந்த அடியின் அயலடி சிந்தடி
வந்தன நேரிசை ஆசிரி யம்மே”             (யா.க.71)

ஆசிரியப்பாவிற்குரிய பொதுவிலக்கணத்தைப் பெற்று ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாகவும், பிற அடிகள் அளவடியாகவும் அமைவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.

எ.கா.

”கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
………………………………………………………….
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி
நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே”     (11:38:37)

இப்பாடலில் ஈற்றயலடி முச்சீராகவும், ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ” என்றும், அசைச்சொல் பெற்றும் வந்துள்ளதால் இது நேரிசை ஆசிரியப்பாவாகும்.

மருட்பாவின் இலக்கணம்

”வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்”      

என்று காக்கைபாடினியார் கூறியுள்ளார். வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து ஒரு பாவாக அமைந்து வருதல் மருட்பா. மருள் என்னுஞ் சொல்லுக்கு மயக்கம் என்பது பொருள். மருட்பா நான்கினை,

”பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்
தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா
வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
வண்பான் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே”  (யா.கா.35)

என்று யாப்பருங்கலக்காரிகை சுட்டுகின்றது. இவற்றுள் கைக்கிளை மருட்பாவே ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பத்தில் இடம்பெற்றுள்ளது. கைக்கிளை என்பது ஒத்தத் தலைவனும், தலைவியும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன் சந்திக்கும்பொழுது ஒருவரை மற்றொருவர் காண்பதுண்டு. அத்தருணத்தில் ஒருவர் மீது மற்றொருவருக்கு வேட்கை தோன்றுவதாகும்.

எ.கா.

”அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் – சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே”        (11:38:42)

இப்பாடலில் முன்னிரு அடிகளில் வெண்பாவும், பின்னிரு அடிகளில் ஆசிரியப்பாவும் வந்துள்ளன. ஈற்றடியின் ‘ஏகார” அசைச்சொல் பெற்று நிலத்தனவே என்று வந்திருப்பதால் இஃது கைக்கிளை மருட்பாவாகும்.

முடிவுரை

பாவிற்கும் பாவின வடிவங்களுக்கும் களனாகவும் தோற்றுவாயாகவும் திகழ்வது பக்தியிலக்கியங்களே. பனினோராந் திருமுறையைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பா ஆகியன பயின்று வந்திருப்பதனையும், பா இலக்கணம் வளர்ச்சி பெற்று வந்ததை பேராசரிரியர், நச்சினார்க்கினியர், தொல்காப்பியர் போன்றோர் எடுத்துக் கூறியிருப்பதனையும் அறிய முடிகின்றது.

துணைநின்ற நூல்கள்

 1. பதினோராந் திருமுறை – மு.சுப்பிரமணியன் (ப.ஆ)
 2. தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம் – க.வெள்ளைவாரணன்
 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணனார் உரை (உ.ஆ)
 4. தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி – ய.மணிகண்டன்
 5. யாப்பருங்கலக்காரிகை – ச.திருஞானசம்பந்தம்
 6. யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்) – மே.வீ.வேணுகோபாலபிள்ளை

*****

கட்டுரையாளர்
முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009
தொடர்பு எண்-9943229070

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *