கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1

சக்திசக்திதாசன்

 

கண்ணதாசன் எனும் பெயர் சினிமா உலகில், இலக்கிய உலகில், அரசியல் உலகில் ஏற்படுத்தி விட்டுப்போன நினைவுத் தடங்கள் அழிக்கப் படமுடியாதவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கவியரசரின் தாக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

கவியரசரின் திரைகானங்கள் அதுவும் பொதுவாக காதல் வரிகளைக் கொண்ட பாடல்களின் மூலம் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட நான் இன்று அவரது பாடல்களில் உள்ள ஆன்மீக உணர்வுகளை அலசிப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது வாழ்வின் அனுபவங்களும், அந்த அனுபவங்களுக்கு கவியரசரின் பாடல்களும், பல்வேறு கட்டுரைகளும் கொடுத்த அர்த்தங்களுமே ஆகும்.

ஆன்மீகம் என்றால் என்ன? அது சாதாரண மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதா? எனும் பல கேள்விகள் எமது மனங்களிலே எழுவது இயற்கை.

இல்லை என்கிறார் கவியரசர். மானிடரின் வாழ்க்கையில் அவர்கள் எத்தகைய விகிதாசாரத்தில் மனிதர்களாக வாழுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் மனதின் ஆன்மீக உணர்வுகளுக்கு விழிப்பு ஏற்படுகிறது என்கிறார் கவியரசர்.

இதை நான் எனது வாழ்க்கையிலேயே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறை கொடுத்த அனுபவங்களின் படி ஆண்டவனின் நம்பிக்கையை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக் கொண்ட நான், புலம் பெயர்ந்து என் கால்களில் நிற்கக்கூடிய வேளையில் வாலிபத்துக்கேயுரிய மிடுக்குடன், ஒரு ஆணவச் செருக்குடன் இறைநம்பிக்கையை இடைவிடாது வினாக்கள் மூலம் வினவினேன்.

ஏன் இதை ஒருவித இளமை நாகரீகம் என்று கூட நான் கருதிய காலங்கள் இருக்கின்றன. வாழ்வில் எம்மால் முடியும் என்னும் இறுமாப்பில் நாம் எடுக்கும் பாதையின் பயணங்கள் எமது கட்டுப்பாடின்றி, எமக்குப் புரியாத வகையில் திசை திருப்பப்படும் சம்பவங்கள் பல நிகழ்கின்றன. இவை அனைத்துமே எம்மை நோக்கி எமக்கு மேலே இருக்கும் ஒரு சக்தி எமக்குக் கொடுக்கும் நினைவுறுத்தல்கள் என்பதைப் புரியமுடியாவிட்டால் இவைகளைக் கடந்து சென்று விடுகிறோம்.

ஆனால் வாழ்க்கையின் ஒரு சந்தியில் இதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எமது மனம் அடைந்து விடும்போது அனைத்துக்கும் ஒரு விளக்கம் கிடைக்கிறது. எமக்குள்ளே ஆழப்புதைந்துக் கிடக்கும் ஆத்மீக உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன.

கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளூரத் துலங்கும் உன்னதக் கருத்துக்களின் கனம் எம் மனதில் உறைக்கத் தொடங்குகின்றன.

அப்படியாக நான் என் மனதில் அவர் பாடல்கள் எழுப்பிய தாக்கங்களின் அடிப்படையில் அவரது பாடல்கள் சிலவற்றை உங்களுடன் சேர்ந்து அலசுவதே இத்தொடரின் நோக்கம்.

யார் இந்த சக்தி சக்திதாசன்? பெரிய ஆன்மீகவாதி எனும் நினைப்பில் அலசுகிறாரோ ? என்று எண்ணாதீர்கள். கவியரசரின் பாடல்களை மிகவும் ஆழமாக அலசிய அறிஞர்களின் முன்னே நான் வெறும் கற்றுக்குட்டி தான்.

அவர்களின் முன்னே நுனிப்புல் மேயும் மாடாகத்தான் நான் தெரிவேன். ஆனால் பாமரனின் பார்வையில் கவியரசரின் பாடல்களில் கலந்திருந்த ஆன்மீக உணர்வுகள் எப்படி இருந்தது ? என்பதற்குச் சான்றாகவே எனது தொடர் அமைகிறது.

சரி இந்த வார அலசலுக்கு வருவோம்,

ஆன்மீக உணர்வுகளுக்கு வித்து அனைத்துக்கும் மேலான அனைவர்க்கும் பொதுவான அந்த ஆண்டவன் தானே ! அந்த ஆண்டவன் எங்கே வாழ்கிறான்? அவன் கள்ளமில்லா நெஞ்சினில் வாழ்கிறான், மற்றவர்க்கு தீங்கு எண்ணா உள்ளங்களில் கோயில் கொள்கிறான்.

அத்தகைய உள்ளங்களுக்குச் சொந்தக்காரர் யார்? கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் சொந்தக்காரர்களான குழந்தைகள் தானே !

அக்குழந்தைகளுக்கு மதம், இனம், ஜாதி எனும் பிரிவினை உண்டா இல்லையே ! அத்தகைய ஒரு குழந்தையை நோக்கிப் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் கவியரசர்.

“குழந்தைக்காக” எனும் திரைப்படத்தில் ஒலித்த பாடல்,

ராமன் என்பது கங்கை நதி

அல்லா என்பது சிந்து நதி

இயேசு என்பது பொன்னி நதி

நதிகள் பிறக்குமிடம் பலவாகும்

அவை எல்லாம் கலக்குமிடம் கடலாகும்

அனைத்து மதங்களும் ஒன்றே, அனைத்துக் கடவுள்களும் ஒன்றே. நெஞ்சத்தில் தோன்றும் இறையுணர்வுக்கு பாகுபாடு கிடையாது. ஆன்மீக உணர்வு அனைவர்க்கும் பொதுவானதே ! ஆன்மீக உணர்வின் அடிப்படை மனிதாபிமானமே என்பதைத் துல்லியமாக, அழகாக , எளிமையாகக் கவியரசர் எடுத்துச் சொன்ன விதம் அற்புதம்.

தேவன் வந்தான் , தேவன் வந்தான்

குழந்தை வடிவிலே – என்னைத்

தேடித் தேடிக் காவல் கொண்டான்

மழலை மொழியிலே !

ஆமாம் இறைவன் எங்கே? எங்கே? என்று மனிதன் தேடியலைந்து கொண்டிருக்க இறைவனோ கள்ளமில்லா குழந்தை இதயத்தினுளல்லவா குடி கொண்டிருக்கிறான் ! அது மட்டுமா? ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை இறைவன் தேடித் தேடி வருகின்றானாம் அதை மனிதன் தான் புரிந்து கொள்ளவில்லை போலும்.

இறைவன் பேசுவானா? எழும் கேள்விக்கு அழகாய் விளக்கம் தருகிறார் கவியரசர் . எப்படி? மழலை மொழியில் அவன் எம்மோடு உரையாடுகிறான்.

பாப்பா தெய்வப் பாப்பா

பாசம் கொஞ்சும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்

எங்கள் யேசு தேவதூதன்

ராஜசபை ஜோதி கண்டேன்

ஞானக்கோயில் தீபம் கண்டேன்

இயேசு காவியம் எழுதிய வித்தகர் அல்லவா கவியரசர் ? அன்னை மேரி மாதாவின் மடியில் தவழ்ந்த தெய்வக்குழந்தையை, தேவதூதனை, எங்கே காண்கிறானாம் அம்மனிதன், அக்குழந்தையின் கண்களில் காண்கிறானாம். அது மட்டுமா பிரகாசிக்கும் அவ்விழிகளில் தேவாலயத்தில் ஒளிரும் ஞானதீபங்களையல்லவா காண்கிறான் அம்மனிதன்.

பாப்பா தெய்வப் பாப்பா

பாசம் கொஞ்சும் பாப்பா

அல்லாஹோ அக்பர் என்றான்

ஆண்டவனே அடிமை என்றான்

பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்

எல்லாமும் இதுவே என்றான்

இஸ்லாமிய அன்பர்களின் இறையின் மகத்துவத்தை இதைவிட அழகாய் யாரால் கூறிவிட முடியும்? குழந்தையின் மனதில் இருக்கும் தெய்வத்தன்மைக்கு அந்த ஆண்டவனே தன்னை அடிமையாக்கிக் கொள்வான் என்கிறார் கவியரசர். அதுமட்டுமா? பிள்ளைப் பேச்சில், மழலையின் கொஞ்சலில் அனைத்தும் அடங்கி விட்டது என்று விட்டார் கவியரசர்.

பாப்பா தெய்வப் பாப்பா

பாசம் கொஞ்சும் பாப்பா

வேணுகான ஓசை கேட்டேன்

விஜயன் கேட்ட கீதை கேட்டேன்

நேரில் வந்த கண்ணன் கண்டேன்

கண்ணன் என்னும் ராமன் கண்டேன்

பாப்பா தெய்வப் பாப்பா

பாசம் கொஞ்சும் பாப்பா

பகவத்கீதை எனும் அரிய நூலை வில்லுக்கு வீரனான விஜயனுக்கும் கண்ணபிரான் அருளியபோது இருந்த தெய்வீகச் சூழலையொத்தது மழலையின் பேச்சு என்கிறாரோ ? எங்கள் கவியரசர்.

அக்குழந்தையின் வடிவில் கண்ணனுக்கே தாசனான எம் கவியரசர் நேரிலே கண்ணனைக் கண்டது போல் உள்ளது என்கிறார் போலும். தர்மத்தை நிலைநாட்ட எடுத்த மறுஅவதாரம் ராமன் கூட அக்குழந்தையின் வடிவில் காட்சியளிக்கிறார் என்னும் கவியரசரின் அற்புத வர்ணனை எம்மை ஆன்மீக உணர்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அன்பினிய வாசகர்களே ! கவியரசர் தன் பாடல் வரிகளுக்குள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் பல. அவைகளை எந்தெந்த அர்த்தத்தில் எந்தெந்த வேளையில் படைத்தார் என்பதை அவரன்றி யாரும் அறிய முடியாது. ஆனால் அவற்றைச் செவிமடுக்கும் அவரது ரசிகர்களின் உள்ளத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மட்டும் உறுதியாக நம்பினார்.

இப்பாமரன் தன் இதயத்தில் அவர் ஆன்மீக வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

சக்தி சக்திதாசன்

லண்டன்

04.03.2018

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Leave a Reply

Your email address will not be published.