சங்க இலக்கியத்தில் ஒளவையார் வர்ணித்திருக்கும் “குரீஇயினம்”

0

-சற்குணா பாக்கியராஜ் 

              “————————————பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலை படர்தந்தாங்கு (ஒளவையார், அகநானூறு: 303: 10-15)

இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, p,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, p, 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted  or  the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா)  என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374,  புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும்  குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.

கிளிகளைச் சங்க இலக்கியத்தில் சிறு கிளி ( ஐங்குறுநூறு : 282, 283, 285), செந்தார்க்கிளி (அகம்:242), மடக் கிளி (அகம்:38), செவ்வாய்ப் பைங்கிளி (ஐங்குறுநூறு :284, நற்றிணை: 317), என்று வர்ணித்துள்ளனர். ஐங்குறுநூற்றில் கபிலர்  குறிஞ்சித் திணையில் ( பாடல்கள் 281-290) “கிள்ளைப் பத்து” என்ற பகுதியில் மலைச் சாரல்களில் விதைக்கப்பட்ட தினையின் கதிர்களைக் கிளிகள் கவரச் செல்லும் து இளம் பெண்கள் அவைகள விரட்டினர் என்று வர்ணித்துள்ளார்.

திரு. பி. எல். சாமியின் கருத்துப்படி ஒளவையார் வர்ணித்திருக்கும்  “குரீஇயினம்” முனியாக் குருவிகளே, கிளிகள் அல்ல என்றால்  முனியாக் குருவிகள் எவை, கிளிகள் எவை, அவைகளின் வாழுமிடங்கள், உணவு, உணவு தேடும் முறைகளை பறவையியல் மூலமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 பறவையியலில் முனியாக் குருவிகள் ( Munia-Lonchura):

முனியாக் குருவிகளைத் தமிழகத்தில் “சில்லை” அல்லது “ராட்டினம்” என்றும், ஆங்கிலத்தில் முனியாக்கள் என்றும் அழைக்கின்றனர். திரு. பி. எல். சாமி, தன்னுடைய நூலில், “நாட்டுமக்கள் சில முனியாக் குருவிகளைக் கருப்புவரையன் சிட்டு, கருடவரிச்சிட்டு, ஆழ்வார்சிட்டு என்றும் அழைப்பர்” என்கிறார்.

 முனைவர் சலீம் அலி, தன்னுடைய “The Birds of India, ( Salim Ali, 1996, pp. 304-307) என்ற நூலில் “கருப்புத் தலை முனியா, புள்ளி முனியா, வெண்தொண்டை முனியா, வெள்ளை முதுகு முனியாக் குருவிகளை தமிழகத்திலும் இலங்கையிலும் நெல்லுக் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர்” என்று குறித்துள்ளார்.

முனியாக் குருவிகள் சிட்டுக் குருவிகளை விட உருவத்தில் சற்று சிறியவை.  உலகம் முழுவதிலும் நாற்பத்தியொரு வகை முனியாக் குருவிகள் உள்ளன என்று அறியப்படுகிறது.  இவை ஆசியா, சீனா, மேற்கு ஆப்பிரிக்கா முதல் அரேபியன் பெனின்சுலா, நியூ கினியா, ஆஸ்திரேலியா, பங்களா தேசம், இலங்கை, பாகிஸ்தான், போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் காணப்படும் ஏழுவகை முனியாக் குருவிகளில், ஐந்து அல்லது ஆறு வகைகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.  இவை கருப்புத்  தலை முனியா (Black-headed Munia), கருப்புக் தொண்டை முனியா (Rufousbellied Munia or Chestnut Munia), புள்ளி முனியா (Spotted Munia), சிவப்பு முனியா (Red Munia), வெண் தொண்டை முனியா (White-thorated Munia), வெள்ளை முதுகு முனியா (White-backed Munia) என்பவையாகும்.

வாழும் இடங்கள்:

முனியாக் குருவிகள்  வறண்ட சவானா, மலைப் பகுதிகள், பரந்த புல்வெளிகள், அறுவடை முடிந்த வயல்கள், நெல், கேழ்வரகு விளையும் நிலங்கள், மூங்கில் புதர்கள், கரும்பு விளையும் நிலங்கள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. கருப்புத் தொண்டை முனியாக் குருவிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் வாழ்கின்றன, வெண் தொண்டை முனியாக் குருவிகள் வறண்ட திறந்த புல்வெளிகளை விரும்புகின்றன.

உணவும்,  உண்ணும் முறையும்: 

முனியாக் குருவிகளின் முக்கிய உணவு தானியங்களாகும் ( granivorous). புல் விதைகள், நெல், தினை போன்ற தானியங்களை விரும்பி உண்கின்றன. முனியாக் குருவிகள் முக்கியமாகத் தினை, நெல் பால் கட்டும் பருவத்திலிருந்து  தானியங்கள் முற்றும் வரை உண்ணுகின்றன.

முனைவர் தாமஸ், கேரள நாட்டில் நெல் விளையும் வயல்களில் முனியாக் குருவிகள்  உணவு உண்ணும் முறைகளை ஆராய்ந்தபோது “முக்கியமாகப் புள்ளி முனியாவும், வெண் முதுகு முனியாவும் அதிகமாகக் காணப்படுகின்றன, இவை நெற்கதிர்களில் அமர்ந்து நெல்லைத் தனித்தனியாகக் கொத்தி, தோலை நீக்கி உண்கின்றன. சில நிமிட நேரங்கள் உண்ட பின் வயலருகேயுள்ள வாழைத் தோட்டங்களிலும் மூங்கில் புதர்களிலும் அடைந்து சிறிது  நேரத்திற்குப் பின் நெல்லை உண்ண வயலுக்குத் திரும்பிப் பலமுறை வந்து போகின்றன. அருகில் அடைய மரமோ, புதிர்களோ இல்லையென்றால் திரும்பி வருவதில்லை” என்று கண்டுள்ளார் ( தாமஸ், S.T, 2006 ).

இனப்பெருக்கம் செய்யாத காலங்களில், முனியாக் குருவிகள் இரைதேடும் நேரங்களிலும், அடையும் நேரங்களிலும்  ஐந்து அல்லது ஆறு குருவிகள்அடங்கிய சிறு கூட்டமாகவோ அல்லது நூறு அல்லது இருநூறு குருவிகள் அடங்கிய பெருங் கூட்டமாகவோ  காணப்படுகின்றன. இரவில் மரக்கிளைகளில் அடைகின்றன. மேற்கு ஆஸாமில் நெற் பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் தூக்கணாங் குருவிகளைப் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் சேகரித்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்புத் தலை முனியாக் குருவிகளையும் புள்ளி முனியாக் குருவிகளையும்  பயிர் விளையும் இடத்தில் கண்டதாகப் குறித்துள்ளனர் (B. C. Saha and A. K. Mukherjee, JBN HIST, VOL. 75, pp 221-223).

முனியாக் குருவிகள் கூட்டமாக இருக்கும் போது சிறு சலனம் ஏற்பட்டாலும் அலையலையாகப் பறக்கின்றன (“undulating rabble” by ornithologists).  இவை ஒரே வரிசையாகப் பறப்பதில்லை.

செந்தார்க் கிளி ( Roseringed Parakeet ): 

பறவையியலில் இவை Roseringed parakeets ( Psittacila krameri) என்று அழைக்கப்படுகின்றன. இவை உருவத்தில் மைனாவை ஒத்திருக்கின்றன. ஆண் பறவையின் கழுத்தில் சிவப்பு- கறுப்பு நிறத்தில் வளையம்காணப்படும். பெண் கிளிக்கு இந்த வளையம் கிடையாது.  H. Whistler (ornithologist) தன்னுடைய நூலில் (“Popular Handbook of Indian Birds”, 1963), இந்தவகைக் கிளிகள் ( Roseringed Parakeets) மிகவும் வேகமாகப் பறக்கக் கூடியவை. மாலை நேரங்களில் கூட்டங்களாகப் பறந்து மரங்களில் அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“The flight is very swift and straight and these birds have the habit of an evening roosting flight flock after flock hurrying in succession along the same line to some patch of trees where they roost in company with flocks of Crows and Mynahs”. 

காணப்படும் இடங்கள்: 

இந்தக் கிளிகள் பங்களாதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்தியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளையும் அடர்ந்த காடுகளையும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. 

உணவும் உண்ணும் முறையும்:

 தினை, நெல் போன்ற தானியங்கள், அவரைக்காய் வகை, பழ வகைகள் முக்கிய உணவாகும். இரைதேடும் நேரங்களில் கூட்டமாகச் சென்று விளைந்த பயிர்கள், பழங்களைத் தேவைக்கு மேல் கொத்தியும், கடித்தும் வீணாக்கிப் பெருத்த சேதம் விளைவிக்கின்றன. கிளிகள்  நெல் பயிர்செய்யப்படும் இடங்களில் சிறு கூட்டங்களாக வந்து முதிர்ந்த கதிர்களை அலகினால் கொய்து, அருகிலுள்ள மரங்களுக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு விதையையும் அலகினால் எடுத்துத் தோலை நீக்கி உண்கின்றன. கதிரிலுள்ள எல்லா தானியத்தையும் உண்ணாமல் அடுத்தடுத்துப் புதிய கதிர்களைக் கொய்து வீணாக்குகின்றன ( தாமஸ், S.T,2006 ).

முடிவு:

ஒளவையார் வர்ணிக்கும் “குரீஇயினம்” கிளிகளா? முனியாக் குருவிகளா? பறவையியலையும் சங்க இலக்கியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பறவையியலில் கிளிகளும், முனியாக் குருவிவிகளும் இரைதேடும் நேரங்களிலும் அடையும் நேரங்களிலும் கூட்டமாகக் காணப்படுகின்றன. இவைகளை மலைச்சாரல்களில் காண முடியும். இரண்டு வகைப் பறவைகளும் நெல், தினை போன்ற  தானியங்களை உணவாகக் கொள்கின்றன.

 இந்தப் பறவைகளில் முக்கியமான வேறுபாடு என்னவெனில், முனியாக் குருவிகள் கதிர்களில் அமர்ந்து உண்கின்றன, கிளிகள் கதிர்களைக் கவர்ந்து கொண்டு பறந்து செல்கின்றன.

புள்ளி முனியா, கருப்புத் தலை முனியா, வெண் முதுகு முனியாக்கள் நெல், தினை போன்ற தானியங்களை உண்பதால் இவைகளை நெல் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தக் குருவிகள் தானியக் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்லாததால், அகநானூறூ 303-ஆம் பாடலில் வர்ணிக்கப்பட்டுள்ள குரீஇயினம், திரு. பி. எல். சாமியின் கருத்துப்படிக் கிளிகள் அல்ல, முனியாக் குருவிகளே என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

சங்க இலக்கியத்தில்  குரீஇ என்னும் சொல் சிறு குருவிகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அகநானூறு: 303 ஆம் பாடலில் புலவர் எந்தச் சிறு குருவியைக் குறிப்பிடுகிறார் என்பதைப் படிப்பவர்கள் ஊகிக்க வேண்டியுள்ளது. கிளிகள் நெல்லைக் கவர்ந்து செல்கின்றன ஆனால் இவை சிறு குருவிகளல்ல.முனியாக் குருவிகள் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்வதில்லை.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒளவையார் வர்ணித்த குரீஇயினம் கிளிகளா அல்லது முனியாக் குருவிகளா என்று உறுதியாக வரையறுப்பது கடினம்.

References:

அகநானூறு: நித்திலக்கோவை, உரை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, 2008

Picture:  https://www.inditales.com  “SUNDAY SHOT: ROSE RINGED PARAKEET IN FLIGHT – BIRDING INGO”2014, by Anuradha Goyal Saha, B. C., and A. K. Mukherjee. 1978. Notes on the food of black-headed munia and the spotted munia in South Kamrup District, Western Assam (India). J. Bombay, Nat. Hist. Soc. 75:221·224.

The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

Thomas. A.T “Ecological studies on certain species of granivorous birds in Malabar” Thesis. Department of Zoology, University of Calicut, 200

கருப்புத் தலை முனியாக் குருவிகள், புதுக் கோட்டை, La Paz Group, நன்றி, கூகிள்

புள்ளி முனியா (Spotted Munia- Lonchura  punctulata)

கருப்புத் தலை முனியா (Lonchura Malacca)  (நன்றி கூகிள்)

Parrot carrying rice stalk from a paddy field in Goa,

https://www.inditales.com With kind permission from the photographer Ms. Goyal

இலங்கையில் நெல்கவரும் கிளிகள், நன்றி கூகிள்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *