சேக்கிழார் அடிகள் குருபூஜை – வைகாசி பூசம் – ஞாயிற்றுக்கிழமை 20.05.2018

முனைவர் ப.திருஞானசம்பந்தம்

மதுரை

சேக்கிழாரின் கவின்மிகு கட்டளைக் கலித்துறை

தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

   திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

என்று அடியவருக்கு அடியவராகத் தன்னைக் கருதி திருத்தொண்டத்தொகை எழுதியவர் சுந்தரர் பெருமான். அவர்தம் தொகையை ஒரு காப்பியமாக்கி ‘பெரிய புராணம்’ என்ற பொற்சுரங்கத்தைத் தமிழுக்குத் தந்தவர் சேக்கிழார் அடிகள். அருண்மொழித் தேவர் என்ற இயற்பெயர் கொண்ட சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்..

            இறைவனே ‘உலகெலாம்… என அடியெடுத்துக் கொடுக்க இவர் பெரியபுராணத்தை இயற்றினார் என்பர். பெரியபுராணம் தமிழின் இரண்டாவது தேசியக்காப்பியம் என்ற புகழைப் பெற்றது. பல இன, குல அடியார்களின் வாழ்க்கையை ஒருங்கே வைத்துப் பேசுகின்றது பெரியபுராணம். மேலும் தமிழின் முதல் கள ஆய்வு நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலில் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சிறப்பித்துள்ளார். பெரிய புராணத்தின் சரித்திரத்தன்மை மற்றும் சிறப்புகளை விவரித்து மா.இராசமாணிக்கனார் பெரியபுராண ஆராய்ச்சி என்ற ஆய்வுநூலை எழுதியுள்ளார். அ.ச.ஞானசம்பந்தனும் பெரியபுராணம் ஓர் ஆய்வு என்னும் அரிய நூலை ஆக்கியுள்ளார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பெரியபுராணத்தை உலகப் பொதுநூல் என்று சிறப்பித்து இருக்கின்றார். பெரியபுராணம் காப்பியமா, பெருங்காப்பியமா என்ற விவாதங்கள் காலந்தோறும் தமிழ்ச்சூழலில் எழுப்பப்பட்டு விடையும் காணப்பட்டுள்ளன.

            திருமலைச் சருக்கம் தொடங்கி வெள்ளானைச் சருக்கம் முடிய பதின்மூன்று சருங்கங்களில் 4286 பாடல்களைக் கொண்ட காப்பியம் இது. சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் பெருங்காப்பியமாக மட்டுமன்றித் தமிழ்ச்சுவையில் உயர்ந்த காப்பியமாகவும் விளங்குகின்றது. வடிவச்சிறப்பிலும் பிற்கால காப்பிய மரபிற்கு பெருங்கொடையளித்துள்ளது. 1762 அறுசீர் ஆசிரிய விருத்தங்கள், 92 எழுசீர் விருத்தங்கள், 256 எண்சீர் விருத்தங்கள், 344 கலிவிருத்தங்கள், 545 கலித்துறைகள், 1205 தரவுகொச்சகங்கள், 52 கட்டளைக் கலிப்பாக்கள், 11 அறுசீர் வண்ண விருத்தங்கள், 8 வண்ணக் கலிவிருத்தங்கள் 6வண்ண வஞ்சிவிருத்தங்கள் என ஒப்பற்ற யாப்பியல் விருந்தையே சேக்கிழார் சமைத்துள்ளார். மேலும் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய அடியார்களின் வரலாற்றைப் பாடும்போது அவர்கள் பயன்படுத்திய பாவடிவத்திலேயே அவர்களின் வரலாற்றினைச் சேக்கிழார் பாடியிருப்பது அவர்தம் புலமைத்திறத்திற்குச் சான்றாகின்றது. திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தம்முடன் வந்த அடியார்களுக்குச் சுரம்பற்ற அதனைத் தீர்க்க திருஞானசம்பந்தர் திருநீலகண்டர் பதிகம் பாடினார். பாடல் ஒன்று வருமாறு,

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

 (திருநீலகண்டப் பதிகம்.1)

இப்பாடல் கட்டளைக் கலித்துறை யாப்பிலானது. நேரசையில் தொடங்கி அடிதோறும் பதினாறு எழுத்துக்களைப் பெற்றுவருவது. இச்சூழலைத் தமது காப்பியத்தில் பாடிய சேக்கிழார் இதே கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடித் தம் புலமைத்திறத்தினைப் பறைசாற்றுகின்றார். அப்பாடல் வருமாறு,

“அவ்வினைக் கிவ்வினை” என்றெடுத் “தைய முரசெய்த

வெவ்விடம் முன்றடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத் துமடி யாரிடர் காப்பது கண்ட” மென்றே

“செய்வினை தீண்டா திருநீல கண்ட” மெனச் செப்பினால்

(பெரியபுராணம் 2233)

இப்பாடலும் மேற்குறித்த கட்டளையொழுங்கினையே பெற்றுள்ளது. அவ்வாறே திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் உறைகின்ற இறைவனைத் தனக்கு ஈன்றவளாய், எந்தையாய் விளங்குகின்றாய். பகீரதனின் தவத்தினால் பூவுலகிற்கு வந்த கங்கையைச் சூடியவனே என்று இறைவனைப் புகழ்ந்து பாடிய நிகழ்வினைச் சேக்கிழார் பாடும்போதும் இவ்வுத்தியைப் பயன்படுத்தியுள்ளார். நாவுக்கரசரின் பாடல் வருமாறு,

 

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்

மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க

ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்

தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

 (திருப்பாதிரிப்புலியூர்.1)

இந்நிகழ்வை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்வருமாறு,

 

“ஈன்றாளு மானெயக் கெந்தையு மாகி” எனவெடுத்துத்

“தோன்றாத் துணையாயி ருந்தனன் றன்னடி யோங்கட்” கென்று

வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ்

சான்றா மொருவனைத் தண்தமிழ் மாலைகள் சாத்தினரே

(பெரியபுராணம்.1399)

இவ்வாறு காப்பியந்தோறும் புதுமையும் வளமையும் கொண்டு திகழ்வது பெரியபுராணம். இந்த ஒப்பற்ற காப்பியத்தைப் படைத்த சேக்கிழாரின் குருபூஜை இன்றளவும் வைகாசிமாதம் பூச நட்சத்திரத்தில் குன்றத்தூரில் உள்ள வடதிருநாகேஸ்வரம் திருக்கோயிலில் நடைபெறுகின்றது. இக்கோயிலில் சேக்கிழாருக்குத் தனிக் கருவறையும் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழாரின் பிறந்த வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேக்கிழாரின் நாமம் போற்றுவோம்.

சான்று நூல்கள்

சேக்கிழார், பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர்புராணம் (பன்னிரண்டாம் திருமுறை), சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1987

சம்பந்தர், திருஞானசம்பந்தர்சுவாமிகள் தேவாரப்பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், 1973.

நாவுக்கரசர், திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரப் பதிகங்கள், திருமுறை (4,5,6), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப் பெற்றன, கழகம், 1973

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சேக்கிழார் அடிகள் குருபூஜை – வைகாசி பூசம் – ஞாயிற்றுக்கிழமை 20.05.2018

  1. நல்ல பதிவு … இலக்கண கட்டுரைகள் வரவேற்கத் தகுந்தவை. வல்லமை இதழின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள்….

  2. சேக்கிழார் குறித்த தகவல்கள் பயனுள்ளதாக உள்ளன. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்

  3. கவின்மிகு கட்டளைக் கலித்துறை சிறப்பாக அமைந்துள்ளன. சேக்கிழாரின் புலமைத்திறத்திற்கு மற்றுமொரு மகுடம்… கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்

  4. சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச் சுட்டுகின்ற இக்கட்டுரை நன்று. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஆதரவளிக்கும் வல்லமை மின்னிதழுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.