அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களுடன் இணைகிறேன். மனித வாழ்க்கை என்பது ஒரு வட்டச் சங்கிலி. அதனுள் நடக்கும் நிகழ்வுகள் பரந்துபட்ட அளவில் எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு புதிர்ப் பெட்டகமே ! கால ஓட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தம்மை தமது நாட்டுடன் இணைக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு தமது இனம் தமது நாட்டளவில் எவ்விதமான நிகழ்வுகளுக்குட்பட்டு தற்காலத்தை வந்தடைந்திருக்கின்றது எனும் சரித்திரப் பதிவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் தேவையிருக்கிறது.

தமது நாட்டினதும், தமது நாட்டில் வாழும் தமது குடிமக்களினதும் தனித்தன்மையைப் பாதுகாக்கும் கடமை அந்நாடுகளை அரசாளும் அன்றி நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கட்டாயத் திணிப்பாக அமைந்து விடுகிறது. அத்தகைய வகையில் தத்தமது நாட்டின் கலாச்சார மகிமைகளை பேணிப்பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும், அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்த மட்டிலே இன்றும் தமது நாட்டின் தலைமைத்துவத்தைப் பெயரளவில் கொண்டிருக்கக்கூடிய அரச சம்பிரதாயம் நிலவுகிறது. அவ்வகையில் இந்நாட்டின் மகாராணியாக இரண்டாவது எலிசபேத் மகாராணி அவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது 90வது அகவைகளில் இன்றும் கோலோச்சி வருவது அனைவரும் அறிந்ததே.

இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் இந்த மகாரானியார் பட்டம் ஒரு கலாச்சாரபீடமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல புராதானச் சின்னங்களாக விளங்கும் பல பிரசித்தி பெற்ற தேவாலயங்கள், அரச கட்டடிடங்கள் என பல்வேறு வகையான சரித்திரச் சின்னங்கள் இன்றும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அரசாங்கத்தினால் பேணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோ இம்முக்கியத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து அது பேணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதினாலே என்றால் அது மிகையாகாது.

பொதுவாகவே எந்நாட்டிலும், எவ்வின மக்களுக்கிடையிலும், எம்மதத்தினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணம் என்றாலே அது சம்பந்தப்பட்டவர்களிடத்திலே ஒரு களை கட்டிவிடும். அனைவரும் குதூகலமடைந்து விடுவார்கள் . திருமண ஏற்பாடுகளைச் செய்வதில் ஒரு பகுதியினர் தம்மையே முழுதாக அர்ப்பணித்து விடுவார்கள். ஒரு சாதாரண குடும்பத்தினரிடையேயே இத்தகைய கொண்டாட்டம் என்றால் அது ஒரு அரச குடும்பத்தினரிடையே என்றால் கேட்கவும் வேண்டுமா? ஒரு பகுதி மட்டுமல்ல அந்நாட்டினைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இது ஒருவகை குதூகலத்தை அளித்து விடுமல்லவா?

என்ன யாருடைய திருமணத்தைப் பற்றி இவன் பேசுகிறான் என்கிறீர்களா?

வேறுயாருமில்லை இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் வாரிசுகளில் முடிசூடும் தகுதியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இளவரசர் ஹரி அவர்களின் திருமணத்தைப் பற்றியே குறிப்பிடுகிறேன். ஆமாம் வருகிற சனிக்கிழமை அதாவது மே மாதம் 19ம் திகதி இங்கிலாந்தின் முடிக்கு அடுத்த வாரிசான இளவரசர் சார்ளஸ் அவர்களின் இரண்டாவது மைந்தன் இளவரசர் ஹரி அவர்கள் தனது காதலியான மெகன் மாக்கல் அவர்களின் கரம் பற்றப் போகிறார். பொதுவாக இங்கிலாந்தில் பெரும்பான்மையினர் மிகவும் தீவிரமான அரச குடும்ப ஆதரவாளர்கள். அரச குடும்பத்தின் நிகழ்வுகளை தமது சொந்தக் குடும்பத்தின் நிகழ்வுகள் போல மிகவும் அக்கறையுடன் அவதானித்து அவற்றுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

இன்றைய இங்கிலாந்தில் ப்ரெக்ஸிட் எனும் கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில் எதிர்கால பொருளாதார நிலையைப் பற்றிச் சிறிது கலக்கமடைந்திருக்கும் மக்களுக்கு இத்திருமனம் ஒரு சிறிய ஒளிக்கீற்றுப் போல கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட இளவரசர் ஹரியின் மீது பொதுமக்களுக்கு அனுதாப் அலை எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அது மட்டுமன்றி இளவரசர் ஹரி பலவிதமான சமூக அமைப்புக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதோடு பல சமூக சேவைகளையும் தானே முன்னெடுத்துச் செய்து வருக்கிறார். அவர் மணமுடிக்கும் மெகன் மக்கெல் எனும் அமெரிக்கப் பெண் , அமெரிக்காவில் ஹாலிவூட்டில் புகழ் பெற்ற ஒரு இளம் நடிகை, அது மட்டுமின்றி ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணிக்கும், ஆபிரிக்கத் தந்தைக்கும் பிறந்த கலப்பினப் பெண்ணாவார்.

பொதுவாக சமுதாயத்தில் மேல்வர்க்கமெனக் கருதப்படும் பிரபுக்கள் அந்தஸ்தை உடையவர்களையே அரச குடும்ப்பத்தினர் மணமுடிப்பது வழக்கம். ஆனால் ஒரு சாதாரண நடிகை, அதுவும் கறுப்பின கலப்புப் பெண்மணி இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் நுழைவது இதுவே சரித்திரத்தில் முதல் தடவை. ஆங்காங்கே இனத்துவேஷமும், நிறத்துவேஷமும் கொண்ட சிலரின் முணுமுணுப்புக் கேட்காமலில்லை. இருப்பினும் மிகவும் துணிச்சலுடன் இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் ஒரு உரட்சியை உருவாக்கியவர் எனும் பாங்கில் இளவரசர் ஹரியின் மீது பலர் நன்மதிப்புக் கொண்டுள்ளார்கள்.

இது ஒருபுறமிருக்க இத்திருமணத்துக்கு மெகன் மக்கல் அவர்களின் தந்தை வருவாரா? மாட்டாரா? எனும் ஊடகத் துருவல் ஓய்ந்தபாடில்லை. மெக்சிகோவில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஒரு ஊடகச் சர்ச்சைக்குள் மாட்டியிருந்தார். அவர் மகளின் திருஅனத்துக்கு போக ஆயத்தப்படுத்தும் சில ஏற்பாடுகளை ஒரு ஊடப்படப்பிடிப்பாளர் படம் பிடித்து பல வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இதை மணமகளின் தந்தையே உடன்பட்டுச் செய்து அதன்மூலம் பெரும்தொகை பணம் பெற்றுள்லார் என்பதுவே ஊடகங்களின் பரவலான செய்தி.

அதையடுத்து அவர் மெக்சிகோவில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன்மீது இப்படியான பழி சுமத்தப்பட்டிருப்பதால் தான் தன் மகளின் திருமணத்துக்கு வந்து அவருக்கும், இங்கிலாந்து அரச குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பவில்லை அதனால் தான் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி அவரின் மகளும், மணமகளுமான மெகன் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை அளிப்பதாகவும் அவர் தனது தந்தை திருமணத்துக்கு வந்து தன்னை மணமகனிடம் கையளிக்கும் வைபவத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும் செய்திகள் வந்தன.

மறுபடி திருப்பம் !
ஆமாம் மெகன் மக்கல் அவர்களின் தந்தைக்கு ஒரு இருதய சிகிச்சை நடப்பதாகவும் டாக்டர்கள் அனுமதியளித்தால் தான் திருமணத்துக்கு வருவதாகவும் அவர் தெரிவித்ததாக வேறு செய்திகள் வெளியாகின. அவர் வரவேண்டுமா? இல்லையா ? எனும் விவாதங்கள் கடந்த சில நாட்களாக பல ஊடகங்களில் விறுவிறுப்பாக நடந்தன. அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஈடகங்கள் விடாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் உண்டு, இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆனால் இங்கோ அரச குடும்பத்துக்குள் அதிகாரபூர்வமாக இணைய முன்பாகவே இணையப் போகிறவர்களின் குடும்பத்தின் செய்திகள் அறுவைச் சிகிச்சைக்குள்ளாக்கப்படுக்கின்றன. மணமகளின் குடும்பம் இங்கிலாந்தைச் சேர்ந்ததாக இருந்தால் அரசகுடும்பத்தின் நிர்வாகிகளே அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளுவதற்க்கு போதிய ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள் ஆனால் இங்கோ மணமகளின் தந்தை மெக்சிகோவில் அல்லாடுகிறார்.

அவர் வருவாரா? இல்லை மாட்டாரா? எனும் கேள்வி ஒருபுறமிருக்கட்டும் இதோ எமது இளவரசர் ஒருவரின் திருமணம் கோலாகலமாக நடைபெறப் போகிறது. மகாராணியாரின் பேரனுக்கு ௶டும் ! டும் ! டும் !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.