சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்-3

சு.கோதண்டராமன்

புதுச்சேரியிலும் காரைக்காலிலும் இன்று பிரெஞ்சுக் கலாசாரம் முற்றிலும் அழிந்து விட்டது. புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்து அங்கு குடியேறிய என்னைப் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தாம். ஆங்கிலம் போதிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் போதுமான அளவில் இல்லாததால் வருந்தி அழைத்து வேலை கொடுக்கப்பட்ட நாங்கள் ஆங்கிலத்தைப் புகுத்தினோம். பிரெஞ்ச் மொழி அழிந்தது. முசே ‘சார்’ ஆகியது, அப்பேல் ‘அட்டெண்டன்ஸ்’ ஆகியது. அவ்வாறே, ‘க்ரே கட்டி- சாக் பீஸ், லிவ்ரே த பெதாகோழி – நோட்ஸ் ஆஃப் லெஸன், கொம்பா பெட்டி – ஜியோமெட்ரி பாக்ஸ்’ என்று பிரெஞ்சின் இடத்தை ஆங்கிலம் பிடித்துக் கொண்டது. இந்த வெள்ளத்தில் மாணவர்களிடையே நிலவி வந்த தூய தமிழ் வார்த்தைகளான மட்டப்பலகை, கூட்டாளி, சொல்வதெழுதுதல் போன்றவையும் பலி ஆகி ஸ்கேல், ஃப்ரெண்ட், டிக்டேஷன் வந்தன.

‘ஒரு கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களது மொழியை அழி’ என்று யாரோ ஒரு அறிஞர் சொன்னதாக அண்ணாதுரை எழுதியிருந்ததை 1965- இல் படித்த நினைவு. அது உண்மை தான். எங்களிடம் கற்ற மாணவர்கள், சில ஆண்டுகள் கழித்து, அரசுப் பணியில் அமர்ந்தவுடன் பழைய கனிவும் கருணையும் மறைந்து போயின. பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடி உள்ளே நுழைந்து விட்டது.

பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் நிர்வாகத்தில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) நடைபெறுவதாகப் பெருமை கொள்வார்கள். ஆனால் பிரெஞ்சு நிர்வாகமோ வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட Administrative Law என்பதை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தினால் எளியோர் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படுமானால் அந்த ஒரு நபருக்காகச் சட்டத்தை வளைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

தற்போது வசதி அல்லது செல்வாக்கு உள்ளவர்களுக்காகச் சட்டம் வளைந்து கொடுக்கிறதே அன்றி அப்பாவிகள் சட்டத்தின் பெயரால் அலைக்கழிக்கப் படுவது தான் நடைபெறுகிறது.

இந்த மாற்றத்தை விளக்க, பல எடுத்துக்காட்டுகள் தரலாம். விரிவஞ்சி, என் அனுபவத்திலிருந்து சில மட்டும் தருகிறேன்.

1970-ல் நான் காரைக்காலில் குடியமர்ந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. எனக்கு ரேஷன் கார்டு வாங்க வேண்டியிருந்தது. ஒரு விண்ணப்பம் எழுதி அனுப்பி விட்டு,இரண்டு நாள் கழித்து நேரில் போய்ப் பாருங்கள் என்று உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். நான் இருந்தது காரைக்காலிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் ஒரு கிராமம். ஒரு விண்ணப்பம் எழுதி நகரத்துக்குச் செல்லும் ஒரு மாணவன் மூலம் அனுப்பினேன். மறுநாள் அந்த மாணவன் பள்ளிக்கு வந்தபோது, “கொடுத்து விட்டாயா” என்று விசாரித்தேன். “ரேஷன் கார்டு வாங்கி வந்து விட்டேன்” என்று கூறி நீட்டினான்!

முகமறியாத ஒருவரின் விண்ணப்பத்தை, முகமறியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் மாலை ஐந்து மணிக்கு நீட்ட, அதன் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்பது உண்மையான மக்கள் நல அரசாகச் செயல்பட்ட பிரெஞ்சுக் கலாசாரத்தின் எச்சம், இன்று நம்ப முடியாத அதிசயம்.

ரேஷனில் கொடுக்கும் சீனி போதவில்லை. நண்பர்கள் சொன்னார்கள், ‘கோந்திரிபுசியத்திலே போய் ‘போம்’ போட்டு வாங்கிக்கோங்க’ என்று. அப்பொழுது தமிழ்நாட்டில் குழந்தைக்கு காது குத்தும் விழா போன்று எதாவது ஒரு அச்சடித்த அழைப்பிதழ் இருந்தால் தான் அதிகப்படி சீனி கொடுப்பார்கள்.

“இப்பொழுது என்ன தேவை என்று சொல்வது? அதை எப்படி நிரூபிப்பது?”

“ஒரு காரணமும் தேவை இல்லை. எனக்கு சீனி தேவை என்று எழுதிக் கொடுங்கள் போதும்” என்றார்கள்.

எழுதிக் கொண்டு போனேன். ஒரு நிமிஷம் உட்காருங்க முசே என்று சொல்லி விட்டு ஐந்து கிலோ நியாய விலை சீனிக்கு பர்மிட் கொடுத்தார் அந்த அதிகாரி.

2008-ல் அதே ரேஷன் அலுவலகம். என் இளைய மகனுக்கு பெங்களூரில் ரேஷன் கார்டு வாங்குவதற்காக அவன் பெயரைக் காரைக்கால் பட்டியலிலிருந்து நீக்க வேண்டியிருந்தது. விண்ணப்பத்துடன் சென்ற என்னை வாசலிலேயே மறித்து நான்காம் நிலை ஊழியர் என்ன என்று கேட்டார். சொன்னேன். “நீக்கல் விண்ணப்பங்கள் இருபதாம் தேதிக்கு மேல் வாங்குவதில்லை. நீங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வாருங்கள்” என்றார். “நான் இதற்காகச் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன், இன்னும் பத்து நாள் தங்க முடியாமல் இருக்கிறேன்” என்று சொன்னேன். அவர் ஏற்கவில்லை.

திரும்பிக் கொண்டிருந்த என்னை உள்ளே இருந்த எழுத்தர் பார்த்து விட்டு, “சார் எங்கே வந்து விட்டுப் போறாங்க?” என்று ஊழியரை விசாரிக்க, அவர் சொன்னதும், என்னை உள்ளே வரச் சொன்னார். அவர் எனது பழைய மாணவராம். எனக்கு அடையாளம் தெரியவில்லை. “ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நீக்கல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் எனது ஆசிரியராக இருப்பதால் இன்று விண்ணப்பம் பெற்றுக் கொள்கிறேன்.  நாளை மறுநாள் வந்தீர்களானால் அந்த நீக்கல் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்” என்றார். சரி என்று வந்து விட்டேன். வரும் வழியில் அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் மேசையைக் கடந்து வர வேண்டியிருந்தது. அவரும் என் பழைய மாணவர். அவரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவராகக் கூப்பிட்டு உட்கார வைத்து, “என்ன வேலையாக வந்தீர்கள்” என்று கேட்டுவிட்டு, அந்த எழுத்தரிடம் அந்த சான்றிதழை உடனே தயாரிக்கச் சொல்லிக் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார்.

என் நண்பர் ஒருவருக்கு இதே போன்ற ஒரு தேவை ஏற்பட்ட போது அவர் காசு கொடுத்து உடனே முடித்துக் கொண்டார்.

2004-ல் சென்னையில் என் மூத்த மகனுடைய ரேஷன் கார்டில் கதவு இலக்கம் தவறாக இருந்தது. சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்றேன். அவர்கள் செய்த தவறு தான் என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் திருத்தி வாங்குவதற்கு நான் 15 முறை நடக்க வேண்டியிருந்தது. ஒன்றரை மாதம் ஆயிற்று.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *