கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம்

0

ப.சூர்யலெக்ஷ்மி,
பதிவு எண்: 12178
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி.
ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.

நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008

 

முன்னுரை:-

சங்கக் கவிஞர்களில் உடன்போக்கினைப் பற்றி மட்டுமே தனது பாடல்களில் மிகுதியாகப் பேசியவர் கயமனார். உடன்போக்கில் தனது மகளைப் பிரிந்த தாயின் பன்முகத் தன்மை வெளிபடுகிறது. மகளைப் பிரிந்த தாயின் துயரம், மகள் சுரத்திடையே சென்றாலும் அவளது கடுமையான பயணம் இனிதாக விளங்கட்டும் என்கிறாள். தன்னைப் போலவே தலைவனின் தாயும் துயரடையட்டும் என்கிறாள். மகளின் வரவுக்காகக் காத்திருக்கும் நிலை, தலைவியை மீட்கச் செல்லும் தாய் இவ்வாறு கயமனாரின் பாடல்களில் தாயின் நிலைப்பாடு குறித்துப் பேசப்படுகின்றது. களவில் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையை முழுமையாகச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்துவதையே சமூகம் ஏற்றுக் கொள்கிறது. கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம் எவ்வாறு என்பதனை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

உடன்போக்கு:-

உடன்போக்கினைப் பற்றித் தொல்காப்பியர் கூறுவது, ஒரு பெண்ணிற்கு நாணம்தான் சிறந்தது அந்த நாணத்தைவிடக் கற்பு சிறந்தது அதன் விளைவாக உடன்போக்கு நிகழும் என்கிறார்.

” உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
  செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்”       (தொல்.பொ.களவியல்.இளம் நூ.111)

களவினை அறிந்த தமர் காவலில் இருத்த, இற்செறிக்கப்பட்ட தலைவியை உடன்போக்குச் செல்லத் தோழி தூண்டுபவளாகத் திகழ்கிறாள்.

தாய்மைத்துவம்:-

தாய்மைக்குரிய உணர்வுக்குவியல்களையும், விளைவுகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்க்கக்கூடிய ஒரு தளமே தாய்மை என்ற நிறுவன அமைப்பாகும். தாய்மைத்துவப் பண்பமைப்பிலுள்ள அனுபவங்களையும் திறமைகளையும் சமுதாய நோக்கில் நன்முறையில் வலுப்படுத்தவும், வெளிக்கொணரவும் விரும்புகிறது.

”ரிச் என்பவர் குடும்பத்தில் பெண்களுக்கு என வரையறுக்கப்பட்ட தீவிர உணர்ச்சிச்சுமைகள் போன்றவை ‘தாய்மை’ என்ற அமைப்பிற்குரிய கூறுகளாகும்” என்கிறார். சமுதாயம் பெண்களுக்கு என்ற கட்டுப்பாட்டை வகுத்துள்ளது. அதில் தாய்மைப்பேறு, குழந்தையைப் பேணிக்காப்பது, வளர்ப்பது, குடும்பம் என்ற அமைப்பில் பெண்களின் தனிப்பட்ட உணர்வுகள் தந்தைவழிச் சமூகத்தால் நசுக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் தாய்க்கே முதலிடம் கொடுக்கிறது. இப்படிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகள் காளையுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதால் தாய்க்கே மிகப் பெரிய இழப்பு நேரிடுகிறது. தாயின் மனநிலையைக் கயமனாரின் 23  பாடல்களில் அகப்பாடல்களில் 21 பாடல்களில் காணமுடிகிறது. புறப்பாடலில் இறந்த மகனைத் தாய் காண நேர்ந்தால் அவள் படப்போகும் துயரத்தினையும் கண்முன்னே காட்டுகிறது.

காற்சிலம்பு:-

சங்க காலத் தமிழ்மகளிர், திருமணத்திற்கு முன்பாகச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்ற சடங்கினைச் செய்வர்; தன் காலில் உள்ள சிலம்பினைக் கழற்றியப் பிறகே திருமணம் செய்விக்கும் வழக்கம் காணப்பட்டது. சங்க இலக்கிய பாடல்களின் வழியே இச்செய்தியானது பதிவாகிறது.

உடன்போக்குச் செல்ல நினைத்த தலைவி காற்சிலம்பினைக் கழற்ற நினைத்தாள் இதனைக் கண்டால் தோழிமார் நோவார்கள் என்று செல்லாது விடுத்தால் பாடலில் “அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண், வரிபுனை பந்தோடு வைஇய செல்வோள், இவை காண் தோறு நோவர் மாதோ” (நற் 12, 5-7). சிலம்பு கழி நோன்பினைத் தான் காணாது பிறர் காணுமாறு மகள் சென்றாள் என்று தாய் புலம்புவது பாடலில்

” சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக்
              கழிந்தஎன் ஆயிழை அடியே” (நற் 279, 10-11)

சிலம்பினைக் கழற்றி மகள் உடன்போக்குச் சென்றுவிட்டாள். அவள் சென்ற பாலை வழியில் ஆறலை கள்வர் உள்ளார்களே; தலைவன்முன் இவள் செல்வாளோ என்று கவலைகொள்வது பாடலில் ” எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே? அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ” (அகம் 321, 13-15) தலைவி காற்சிலம்புடன் வயலைக் கொடிக்குத் தண்ணீர் ஊற்றுவாள். அவள் இல்லாது உன்னைப் பேணுபவர் யார் என்று நற்றாய் புலம்புகிறாள். பாடலில்

      “பொய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்,
  யார்மற்றுப் பெறுகுவை அணியை நீயே” (அகம் 383,12-14)

உடன்போக்கு சென்ற மகளை மீட்க முயலுதல்:-

செவிலித்தாய் உடன்போகிய மகளைத் தேடிக் கண்டோரை நோக்கி மகளைப் பற்றி வினவுகிறாள். அவளைப் பற்றி கூறினால் விருந்தோம்புவேன் என்கிறாள். பாடலில் “முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள் தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல்” (நற் 198, 315) இல் செறிப்பில் வைத்த தன் மகள் காவலையும் கடந்து உடன்போகினாள். ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் பின்தொடர்வதைப் போல் என் மகளையும் மீட்க வந்தேன் என்பது பாடலில்,

” இச்சுரம் படர்தந் தோளே, ஆயிடை, அத்தக்
 கள்வர் ஆதொழு அறுத்தென” (அகம்7,13-14)

மகளை அடித்த தாய்:-

உடன்போகிய மகளை நினைத்த தாய் இல்செறிப்பில் மகளை அடித்த தன் கையை வெட்டினால்தான் என்ன என்று தன்னையே நொந்து கொள்கிறாள். முதுகு தனக்கு உரியது அல்ல என்று அடிவாங்கிய மகளைப் பாடலில், “எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற என்” (அகம் 145,20-22)

தாயின் ஆவேசக் குரல்:-

தன் மகளை உடன்போக்கு அழைத்துச் சென்ற அக்காளையின் தாயும் பெரிய நடுக்கமுற்று துன்பத்தை அடைவாளாக என்று ஆவேசக் குரலை எழுப்புவது பாடலில்,

பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக்
              கொண்டுடன் போக வலித்த
              வன்கண் காளையை ஈன்ற தாயே”     (நற் 293, 7-9).

தலைவன் தலைவியை உடன்போக்கு அழைத்துச் சென்றமை பொறுக்க முடியாது பொருத்தமற்றத்து என்று தாய் சாடுகிறாள். பின்வருமாறு, “தணிந்த பருவம் செல்லான் படர்தரத்” (அகம் 397,8). உடன்போக்கினைப் பெற்றோரும், சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கயமனாரின் பாடல் மூலம் தெளிவாகிறது.

 உடன்போகிய மகள் இனிதாக வாழவேண்டும் என்ற தாயின் மனநிலை வெளிப்படும் பாடல்கள்:-

உடன்போகிய தன் மகள் இல்லறத்தை இனிதே நடத்தினால் தன் துயரம் நீங்கும் என்பது பாடலில் ” எரிசினந் தணிந்த இலையில் அம்சினை, வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விரி” (நற் 305,6 ). மகள் உடன் போகிய பாலை நிலமானது சூரிய ஒளி வீசாமல் மரத்தின் நிழல் அடங்கி மழை பெய்து குளிர்ச்சியாக அமையுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி எண்ணுவது பாடலில் “ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்க்” (குறுந் 378,1-2).

பாராட்டிச் சீராட்டி வளர்த்த தாய்:-

உடன்போகிய தன் மகளின் மென்மைத் தன்மையை கண்டு செவிலி இரங்கியது. பாலும் உண்ணாதவள். நீரற்ற நிழல் அடங்கிப்போன சுரத்தில் எவ்வாறு வலியாளானாள் என்கிறாள்? “யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய” (குறுந் 356,5). பாலை நிலத்தின் கொடுமையை நினைத்த தாய், தன் மகள் பாலும் உண்ணாள், பந்தையும் உருட்டாள் எவ்வாறு சென்று இருப்பாள் என்று செவிலி துயரம் கொள்வது “கழைதிரங் காரிடை யவனொடு செலவே” (குறுந் 396,7). பந்தாடினாலும் கழங்காடினாலும் சோர்வுற்று என்னைக் கட்டிக் கொள்பவள் கடத்தற்கரிய தந்தையின் காவலையும் மீறிக் கொடுமையான பாலையில் அவள் அடிகள் நடந்து சென்றனளே என்கிறாள் பின்வருமாறு, “அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்” (அகம் 17,17)

உடன்போகிய தன் மகள் மீண்டும் இல்லத்திற்கு வருவாளோ என்று ஏங்கி நிற்கும் தாயைக் காண முடிகிறது. மகளுக்கு தலைவாரி முடித்து, இடுப்பிலே தூக்கிச் சுமந்து, புனைவுகள் பல செய்து, பெற்றவள் என்ற உரிமைக்காக மகள் அருள் செய்யாமல் போனாலும் மகளின் வரவை எதிர்நோக்கித் தாய் கண்ணீர் வடிக்கிறாள். தன் இல்லத்திற்கு அழைத்து வருவானோ? அவன் இல்லதிற்கு அழைத்து செல்வானோ? தாய் ஏங்கி நிற்கும் நிலை பாடலில், ” என்மனை முந்துறத் தருமோ? தன்னை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?” (அகம் 195,17,18).

தாய் மகளிடம் என் பகுதிக்கு உண், உன் தந்தைப் பகுதிக்கு உண், என்று பாராட்டிச் சீராட்டி வளர்த்த தன் மகள் உடன்போக்கு சென்றமைக்காக தான் வருந்தவில்லை. அவள் பாலை சுரத்தின் கடுமையில் எவ்வாறு நடப்பாள் என்று நினைத்து தாய் வருந்துகிறாள் “மடத்தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என நோவல்யானே” (அகம் 219, 17-18).

மகளின் அன்பிற்காக ஏங்கும் தாய்:-

உடன்போகிய தன் மகள் தன்னை நினைப்பாளோ என்று மகளின் அன்பிற்காக ஏங்கும் தாயைக் காணமுடிகிறது. தன் மகளை ஊரே இழந்துவிட்டது என்கிறாள். “ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே” (அகம் 189,15). தலைவி உடன்போகியபின் அவள் விளையாடிய இடத்தையும் பிறவற்றையும் கண்டு தாய் புலம்புகிறாள். அயலவனின் காதலை நம்பி உடன்போகினாள் என்கிறாள் செவிலித் தாய் பின்வருமாறு, “பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், ஏதிலாளன் காதல் நம்பித்” (அகம்275,9-10).

வேற்று மணம் பேசிய பெற்றோரும் உடன்போக்கிற்குத் தூண்டிய தோழியும்:-

தலைவியின் களவினை அறிந்த பெற்றோர் அவளுக்கு வேற்று வரைவுக்கு ஏற்பாடு செய்தனர். அதனை அறிந்த தோழி அவனோடு உடன்போக்கு செய்ய ஏற்பாடு செய்விக்கிறாள். “வதுவை அமர்ந்தனர் நமரே அதனால்…….” (அகம் 221,3). தலைவியின் களவினை அறிந்த தமர் இற்செறிப்பினை அவளுக்கு மேற்கொண்டனர். தலைவின் துயரத்தினைக் காண முடியாத தோழி உன்னுடைய முலைகள் தலைவனுடன் பொருந்துவதாக அமைக நீ உடன்போக்குச் செல்க என்று துணிகிறாள் பாடலில், “வலியாய் இன்னும் தோய்க நின் முலையே!’ (அகம் 259,18)

ஆணாதிக்கச் சமுகம்:-

தலைவனின் பரத்தைமை உறவினைக் கண்டு தலைவி நாணமுற்று பிறரிடம் கூறாமல் கற்பொழுக்கத்திலிருந்து ஒழுகுவாள். அவனை ஏற்பாள் சினம் கொள்ளாமாட்டாள் என்ற கருத்தாக்கத்தினை ஆணாதிக்க சமூகம் உருவாக்குகிறது. பாடலில், ” தண்ணந் துறைவன் கொடுமை, நம்மு னாணிக் கரப்பாடும்மே”(குறுந் 9,7-8).

மகனைப் பறிகொடுத்தை தாய்:-

தலைவன் போரில் இறந்து காணப்பட்டான். அவனுடைய மனைவி நேரில் சென்று காண்கிறாள். உன்னுடைய தாய் நிலையினை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று பலவும் சொல்லி அரற்றுகிறாள். பாடலில் “யாங்கா குவள்கொ லளிய டானே” (புறம் 254,11).

முடிவுரை:-

கயமனாரின் பாடல்களில் உடன்போக்கு பற்றியே பெரும்பான்மை காணலாகிறது. தலைவன் தலைவி இணைந்த களவு வாழ்க்கையைச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத அளவில் உடன்போக்கு நிகழுகின்றது. சங்க காலச் சமூகம் நெறிப்பட்ட சமூகமாக திகழ்கின்றது. பெண் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைச் சமூகம் அவளுக்கு மறுத்து விடுகிறது. அதனால் உடன்போக்கு நிகழ்வதைக் காவல் நீட்டித்தாலும் அதனால் தடுக்க முடியவில்லை. சமூகத்தின் கட்டை உடைத்துக்கொண்டு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையுடன் செல்ல முற்படுகிறாள்.

அடிக்குறிப்புகள்:-

  1. செ. சாராதாம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும், ப 70.
  2. மேலது., ப.70

துணைநூற்பட்டியல்:-

  1. கௌமாரீஸ்வரி.எஸ், 6ஆம் பதிப்பு 2008 தொகாப்பியம் பொருளதிகாரம், (இளம்பூரணர் உரை), சாரதா பதிப்பகம், இராயப் பேட்டை, சென்னை-600014.
  2. சாமிநாதையர், உ.வே, 5ம் பதிப்பு 2000, குறுந்தொகை மூலமும் உரையும், உ,வே சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-90.
  3. செ.சாரதம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும்,
  4. நாரயணசாமி அ.ஐயர் உரை, 2007 நற்றினை நானூறு, கழ்க வெளியிடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை-18.
  5. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (களிற்றியானை நிரை) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.
  6. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (மணிமிடைபவளம்) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.
  7. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (நித்திலைக்கோவை) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,  (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
அபிஷேகப்பட்டி,
திருநெல்வேலி.-627012. தமிழ்நாடு, இந்தியா.

நெறியாளர் : ந. வேலம்மாள்,
உதவிப் பேராசிரியர் தமிழியியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி-627008

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *