தமிழ்த்தேனீ

ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் இயற்கையாகவே சக்தியை நம்புகிறவர்கள். அவர்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, அந்த சக்திதான் நம்மைக் காப்பாற்றுகிறது என்று நம்புவார்கள். அந்த நம்பிக்கையை ஒட்டி  அவர்கள் சக்தி பூஜை செய்வது தொன்றுதொட்டு வழக்கமாக உள்ளது.

அவ்வகை வழிபாடுகளில் முக்கியமான வழிபாடு நவராத்திரி  என்னும் நவசக்தி வழிபாடு. இந்தக் கலைநயம் மிக்க வழிபாடு பெரியவர்கள் முதல் சின்னஞ்சிறார்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான வழிபாடு. இந்த நாட்களில் ப்ரம்ஹி, மகேஸ்வரி, கௌமாரி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதி என்னும் ஒன்பது விதமான கோலங்களில் முக்கிய சக்தியாகிய அம்பிகையை  வழிபடுவது வழக்கம்.

இந்த நவராத்திரி  விழாவில் மிக முக்கியமாக  சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்னும் முப்பெருந்தேவியர்களை வணங்கி வழிபட்டால்  அனைத்து நலமும் உண்டாகும்  என்பது ஐதீகம். நம்முடைய இதிஹாச புராணங்களில் கூறப்படுவது போல ஶ்ரீராமரே  அம்பிகையை வழிபட்டு ராவணனை வென்றார். முப்பது முக்கோடி தேவர்களும், மானுடரும் அம்பிகையை வழிபட்டே  சக்தி பெற்று வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் சொல்வழக்குக்கு ஒப்ப மூலாதாரம் சக்திதானே. அவளைப் பலரூபங்களில் வழிபட மிகவும் தோதான நாட்களாக இந்த நவராத்திரி வைபவம் விளங்குகிறது. ஒவ்வொரு வடிவத்துக்கும், அல்லது ஒவ்வொரு சக்திக்கும் ஏற்ற வழிபாட்டு முறைகள்.  தியான ஸ்லோகங்கள் உள்ளன.

இந்த நவராத்திரி விழாவை நாம் கொண்டாட என்னென்ன தேவை, ஆதி முதற்கொண்டு எப்படியெல்லாம் சிறப்பாக இந்த விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் நம் முன்னோர் என்பதை  கவனித்தால். பல அபூர்வ செய்திகள் நமக்குக் கிடைக்கும். இவை போன்ற விழாக்களின் மூலமாக, நம் வீட்டின், நம் குடும்பத்தின், நம் உறவுகளின்,  முன்னேற்றத்தையும், அதன் மூலமாக நாட்டின் முன்னேற்றத்தையும் எப்படி இரண்டறக் கலந்தனர் நம் முன்னோர்கள். நம் முன்னோர்கள்  ஏற்படுத்திய அனைத்து  நல் வழக்கங்களும், பண்டிகைகளும், விழாக்களும்,  நடைமுறைகளும்  நமக்கும் நம் நாட்டிற்கும் நன்மை பயப்பனவாகவே  உள்ளது.

இந்த நவராத்திரி விழாவின் போது புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தினத்தன்று வினாயகரையும் தமது முன்னோர்களையும் வழிபட்டு, நவராத்திரி கொலு வைக்கத் தொடங்குவார்கள். அதற்கு முன்னேற்பாடாக  பரணையில் பத்திரமாக வைத்திருக்கும் பலவிதமான பொம்மைகளை  எடுத்து நன்றாகத் துடைத்து பளபளக்க வைத்து ஒன்பது படிகள் வைத்து  அந்தப் படிகள் மேல் வெள்ளைத் துணியை விரித்து அழகுபடுத்தி அந்த ஒன்பது படிகளிலும்  மேலிருக்கும் ஒன்பதாவது படியில் மிக முக்கியமான இறைவன், சக்திகள் போன்றோரின் பொம்மைகளை  வைப்பார்கள், மையமாக ஒவ்வொரு படியிலும் வினாயகரின் உருவ பொம்மைகளை வைத்து அவரைச் சுற்றி மற்ற பொம்மைகள் இருக்குமாறு அடுக்கி வைப்பர்.

மீதமிருக்கும் பொம்மைகளை   அவரவர் ரசனைக்கேற்ப மற்றப் படிகளில் வைத்து அலங்காரம் செய்து வைப்பார்கள். இந்த கொலுப்படிகளின் பக்கத்திலேயே அவர்களுக்கு இருக்கும் இடத்துக்கேற்ப சிறு கோயில், அந்தக் கோயிலின் அருகே குளம் போன்றவைகளை வைத்து மேலும் அழகு படுத்துவார்கள். இவைகளைத் தவிர நீர் நிலைகள் போன்று வடிவமைத்து  அவைகளில் வாத்து, கொக்கு, மீன்கள், போன்றவைகளை வைத்து அழகு படுத்துவார்கள்.

ஜொலிக்கும் விளக்குகளை எரிய விட்டு, அடுக்கு விளக்குகளால் அலங்கரித்து, மாலைகள் போட்டு, என்னதான் அலங்காரம் செய்தாலும் நம் பாரம்பரியமான குத்துவிளக்கில் ஐந்து முகங்களிலும் திரிகள் போட்டு, அவற்றை ஏற்றி, கொலுப்படிகளின் முன்னால் அழகிய கோலங்கள் வரைந்து அந்தக் கோலத்தின் நடுவே குத்துவிளக்கை வைத்து, அந்தக் குத்து விளக்கின் முன்னால்  தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமச் சிமிழ், வாழைப்பழம், தேங்காய் போன்றவைகளை வைத்து,  அந்தத் தட்டின் பக்கவாட்டில்  நிவேதனமாகப் படைக்கும் சுவைமிக்க இனிப்பு வகைகளையும்,உணவுப் பொருட்களையும் வைத்து ஒன்பது நாளும் விதம் விதமான உணவு வகைகளை, பழங்களை, வைத்து  எல்லா தெய்வங்களுக்கும் படைத்து, வழிபடுவார்கள்.

அந்தக் கொலுப் படியின் முன்னால் கம்பளங்களை விரித்து, வரும் மக்கள் உட்கார வசதிகள் செய்து கொடுப்பார்கள். சின்னஞ்சிறார்கள்  கிருஷ்ணன் போலவும் ராதை போலவும், சிவன் போலவும், சக்தி போலவும் பலவிதமான வேடங்களைத் தரித்து வந்து உட்கார்ந்து இறை தொடர்பான பாடல்களை, ஸ்லோகங்களை இனிமையான சாரீரத்துடன்  பாடி ஸ்தோத்திரங்கள் கூறி மகிழ்வார்கள்.

அப்படி வருபவர்களுக்கு பெரியவர்கள் சிறியவர்கள் உட்பட  அனைவருக்கும் ஒவ்வொரு பரிசுப் பொருட்களும், பெரியவர்களாயின் புடவைகள், ரவிக்கைத் துண்டுகள் எல்லாம் வைத்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள் உட்பட வைத்து தாம்பூலம் அளித்து மகிழ்வார்கள். ஆகவே  இந்த நவராத்திரி விழாவில் நாம் கடைப் பிடிக்கவேண்டிய வழிமுறைகளும், இந்த நவராத்திரி விழாவை நாம் கொண்டாடுவதால் எப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன என்பதையும் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம். நாம் பக்தியுடன் இந்த சக்தி பூஜையை செய்வதனால்  யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

இவற்றில் மிக முக்கியமாக நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் விதமாக, நம் வேதங்கள், இதிகாச புராணங்களில் நடைபெற்ற காட்சிகளை மனதில் கொண்டு அவற்றிற்கேற்ற பொம்மைகளை செய்து அந்தக் காட்சிகளை விளக்கும் வண்ணம் உதாரணமாக ராமர், சீதா , ல‌ஷ்மணர் அவர்களுக்கு சேவை செய்யும் முகமாக பக்தியுடன் ஆஞ்சனேயர் போன்ற பொம்மைகள்,  கிருஷ்ணன் கோபிகா ஸ்த்ரீகளுடன் ஜலக்ரீடை செய்வது போன்று, பரமாத்மா ஜீவாத்மா தத்துவத்தை போதிக்கும்   காட்சியை விளக்கும் வண்ணமாக பொம்மைகள் போன்றவற்றை வைத்து  நம் வருங்கால சந்ததிகளுக்கு நம் புராதன தத்துவங்களை, நற்குணங்களை விளக்கும் வண்ணமமைப்பது போன்ற பழக்கவழக்கங்களை ஏற்படுத்திய நம் முன்னோர்களின்   திட சிந்தனை, தீர்க்கதரிசனம் நம்மை வியக்க வைக்கிறது.

நாம் இவ்வாறு பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலமாக பொம்மைத் தொழில் செய்வோர் பலனடைகின்றனர், பொம்மைகளுக்கு வர்ணம் அடிக்க அவர்கள் வாங்கும் வர்ணங்களை விற்போர் பலனடைகின்றனர். மற்றும் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பங்கள், மஞ்சள்,  புதிய வகைத் துணிகள் விற்போர் பயனடைகின்றனர்.  ஆபரணங்கள், துணிமணிகள், மளிகைப் பொருட்கள், ஆகிய எல்லாமே  விற்பனை அதிகரிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே வியாபாரம் பெருகுவதால்தானே உயர்கிறது.

இப்படி நாட்டின் வளர்ச்சியையும்,மக்களின்  ஒற்றுமை,சகோதரத்வம், போன்ற  நற்குணங்களை வளர்க்கவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும்  இவை போன்ற பண்டிகைகளை நாம் அவசியம் கொண்டாடவேண்டும். பக்தி வளர்கிறது, பண்பாடு வளர்கிறது, கலைகள் வளர்கின்றன,   இப்படி பக்தி செலுத்த நவராத்திரி நன்னாட்களில்  ஒவ்வொரு  சக்திக்கும் ஏற்ப ஸ்லோகங்கள் உண்டு  அவைகளை மனப்பூர்வமாக உச்சரித்து ,பாடி, ஆடி மகிழ்ந்து நம் அன்றாட கவலைகளுக்கு விடுதலை கொடுத்து நம்முடைய ஊக்கங்களையும் ,உற்சாகத்தையும்  பெருக்குவோம்.

ஶ்ரீமுக்கூர் ஶ்ரீனிவாச வரதாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களால் இயற்றப்பட்ட  ஶ்ரீ அஷ்டல‌ஷ்மி ஸ்தோத்திரத்தை இணைக்கிறேன்.

1.  ஆதிலஷ்மி ஸ்தோத்திரம்

ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி

சந்த்ர ஸஹோதரி ஹேமமயே

முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி

மஞ்ஜுள பாஷிணி வேதநுதே

பங்கஜ வாஸிநி தேவஸு பூஜித

ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

ஆதி லக்ஷ்மி ஸதா பாலயமாம்.

 

2.  தான்யலக்ஷ்மி

அயிகலி கல்மஷ நாசிநி காமிநி

வைதிக ரூபிணி வேதமயே

க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி

மந்த்ர நிவாஸிநி மந்த்ர நுதே

மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி

தேவ கணாச்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

 

3. தைர்யலக்ஷ்மி

ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி

மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே

ஸுரகண பூஜித சீக்ரபலப்ரத

ஜ்ஞான விகாசிநி சாஸ்த்ரநுதே

பவபய ஹாரிணிபாப விமோசநி

ஸாது ஜநாச்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

 

4. கஜலக்ஷ்மி

ஜய ஜய துர்ஸுதிநாஸினி காமிநி

ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே

ரதகஜ துரக பதாதி ஸ்மாவ்ருத

பரிஜன  மண்டித லோகநுதே

ஹரிஹர ப்ரும்மஸு பூஜித ஸேவித

தாப நிவாரணி பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

கஜலக்ஷ்மி  ரூபேண பாலயமாம்

 

5. ஸந்தானலக்ஷ்மி

அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி

ராக விவர்த்திநி ஜ்ஞானமயே

குணகண வாரிதி லோக ஹிதைஷிணி

ஸ்வரசப்த பூஷித கானநுதே

ஸகல ஸுராஸுர தேவ முநீச்வர

மாநவ வந்தித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

ஸந்தானலக்ஷ்மி து பாலயமாம்

 

6. விஜயலக்ஷ்மி

ஜய கமலாஸநி  ஸத்கதி தாயிநி

ஜ்ஞான விகாஸிநி கானமயே

அனுதின மர்ச்சித குங்கும தூஸர

பூஷித வாஸித வாத்யநுதே

கனகதாரா ஸ்துதிவைபவ வந்தித

சங்கர தேசிக மான்ய பதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

 

7.  வித்யாலக்ஷ்மி

ப்ரணத சுரேச்வரி பாரதி பார்கவி

சோக விநாசிநி ரத்னமயே

மணிமய பூஷித கர்ண விபூஷண

சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே

நவநிதி தாயிநி கலிமலஹாரிணி

காமித பலப்ரத ஹஸ்தயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி

வித்யாலக்ஷ்மி  ஸதா பாலயமாம்

 

8.  தனலக்ஷ்மி

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி

துந்துபி நாத ஸுபூர்ணமயே

குமகும குங்கும குங்கும குங்கும

சங்க நிநாத ஸுவாத்யநுதே

வேத புராணே திஹாஸ ஸுபூஜித

வைதிக மார்க ப்ரதர்ஸயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி

தனலக்‌ஷ்மி ரூபேண பாலயமாம்

 

மேற்கண்ட ஸ்லோகங்களைப் பக்தியுடன் கூறி இறைவன், சக்தி  ஆகிய தெய்வங்களுக்கும்  நமக்கு கல்வி அறிவு அளிக்கும் புத்தகங்களுக்கு  விதமாக நன்றி காட்டும் விதமாக எட்டாம் நாள் ஸரஸ்வதி பூஜையையும், ஒன்பதாம் நாள்  ஆயுத பூஜையையும் செய்து நவராத்திரி கடைசி நாளன்று  லலிதா ஸஹஸ்ரநாமம் கூறி, நம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு  மங்களமாய் நவராத்திரி பூஜையை முடித்து  அடுத்து  தீபாவளிப் பண்டிகையை எதிர் நோக்கிக் காத்திருப்போம்.

சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.