வடிவாய் கவிசெய்வோம் வா!

நாகினி

 

நடித்து மனத்தினுள் நஞ்சை மறைத்து
கடிக்கும் உறவினி கானலாய் மாற
வடிவாய் கவிசெய்வோம் வா!

அடித்து எதையும் அபகரிக்கும் எண்ணம்
மடிந்து புவியில் மனிதம் நிலைக்க
வடிவாய் கவிசெய்வோம் வா!

தடியை எடுத்து தவறைத் திருத்த
படிகள் அமைக்கும் பதங்கள் இணைய
வடிவாய் கவிசெய்வோம் வா!

இடியாய் மனதில் இறங்கிடும் நஞ்சாய்
தடிக்கும் உரையை தகர்த்தே எறிய
வடிவாய் கவிசெய்வோம் வா!

படித்த நலமிகு பாதை தவறும்
துடிக்கும் இளமை துவண்டுவிழா தேற
வடிவாய் கவிசெய்வோம் வா!

படிக்கல் எடுத்தளவு பாதி கொடுத்து
மடிக்கும் களவுநிலை மாற்றும் கருத்தில்
வடிவாய் கவிசெய்வோம் வா!

ஒடித்து மரத்தை ஒதுக்கி அடுக்கு
மடிப்பில் மனைகளாக்கும் மாற்றம் எதிர்த்து
வடிவாய் கவிசெய்வோம் வா!

துடித்து பிறருறும் துன்பம் துடைத்தால்
இடித்து நகைத்திடும் ஈனரைக் கிள்ளி
வடிவாய் கவிசெய்வோம் வா!

…. நாகினி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க