குறுந்தொகையில் அகப்புற மணங்கள்

-முனைவர் க. இராஜா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். ஆயினும் அத்திருமண உறவு நெடுங்காலம் வரை நிலைத்திருப்பதில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் அவ்வுறவு தொடர வேண்டும் எனத் திருமண முறைகளில் பல சடங்குகளை முன்னிறுத்தி நிகழ்த்தப்பெறுகின்றன. அவ்வகையில் குறுந்தொகையில் இடம்பெறும் அகம் மற்றும் புறம் சார்ந்த திருமண முறைகளை மானிடவியல் நோக்கில் ஆய்ந்து விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

லெவிஸ்ட்ராஸ் கோட்பாடு

அமைப்பியல் அணுகுமுறைப்படித் திருமண விதிகளைக் கட்டமைத்தவர் லெவிஸ்ட்ராஸ் ஆவார். மணவுறவு, கொண்டு – கொடுத்தல், திருமணம் இவற்றின் அமைப்புகள் உலகந்தழுவிய பண்பாடுகளின் உறவுமுறையில் காணப்படும் வேறுபாடுகளிலிருந்து காணமுடியும் எனக் கண்டறிந்ததே லெவிஸ்ட்ராஸின் மிகப்பெரும் கண்டுபிடிப்பாகும்.

திருமண உறவு என்பது மணமகன், மணமகள் ஆகிய இரண்டு தனி மனிதர்களைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்ந்த கால்வழியினர் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் ஒரு விரிவான பொருளாதாரப் பிணைப்பைக் கட்டமைக்கிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகத், “திருமணமானது மணமகன், மணமகள் என்னும் இரு தனி மனிதர்களை இணைக்கும் நிகழ்வன்று. இது ஒரு தொடர் வரிசையிலான பொருளாதாரப் பரிவருத்தனையை ஆரம்பித்து வைக்கிறது. திருமணத்திற்குப் பின் மணவுறவால் இணைந்த குடும்பங்களுள் சடங்கு/சமூக நிகழ்வுகளின்போது உணவு, பணம், பொருள், துணிமணி போன்றவை மாறி மாறிப் பரிவருத்தனை செய்து கொள்ளப்படுகின்றன” (எடுத்தாளப்பட்டது, பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், ப.117) என்னும் லெவிஸ்ட்ராஸின் கருத்து அமைகின்றது.

உலகம் தழுவிய நிலையில் உறவுமுறையின் வகைகளைத் தொகுத்து ஆராய்ந்த லெவிஸ்டராஸ், பின்வரும் இரண்டு தனிப்பெரும் நிலைகளில் அவற்றின் வேறுபாட்டினைக் கண்டறிந்தார் (மேலது, பக்.118-119).

  1. எளிய அமைப்புகள் (elementary structures)
  2. சிக்கலான அமைப்புகள் (complex structures)

லெவிஸ்ட்ராஸ் கூறும் எளிய அமைப்புகள் மனித சமுதாயத்தின் தொடக்க நிலையில் தோன்றிய மணவுறவு (alliance) முறையைக் குறிப்பதாகும். மனிதச் சமூகத்தில் தொடக்கத்தில் விரும்பத்தக்க மணமுறைகள் (preferential marriages) தோன்றின. இவ்விரும்பத்தக்க மணமுறையின் சிறப்புத் தன்மைகள் அனைத்தையும் எளிய அமைப்புகள் என்னும் தொடரால் குறிக்கிறார்.

விரும்பத்தக்க மணமுறையானது ஒருவர், யாரை மணம்செய்து கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றது. இதனால் மணத்துணையின் வட்டம் வரையறுக்கப்பட்டுவிடுகின்றது. அதோடு மணத்துணையின் வட்டம் விரிய வாய்ப்பில்லை என்பதால் இது மூடிய வட்டம் (closed circle) என்ற தன்மையைப் பெறுகிறது.

தமிழர்களிடம் விரும்பத்தக்க மணமுறை என்பது முறை, உரிமை போன்ற கருத்தாக்கங்களில் புதைந்துள்ளது. அத்தை பெண், தாய்மாமன், அக்காள் பெண் ஆகியோர் முறைப்பெண்கள் ஆவர். மேற்கூறியோரின் மகன்கள் முறைப் பையன்கள். இவர்கள் திருமணத்திற்காக உரிமை கொண்டாடுவார்கள். யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முறை அல்லது உரிமை தமிழ்ச் சமூகத்தில் உள்ளதால் உறவு முறையில் விரும்பத்தக்க மணவுறவில் அடங்கும் உறவினர்கள் தனிப்பட்ட உறவுமுறைச் சொற்களால் அழைக்கப்படுகின்றனர்.

எளிய அமைப்புகளுக்கு நேர்மாறானவை சிக்கலான அமைப்புகள்  ஆகும். சிக்கலான அமைப்புகள் உள்ள சமூகங்களில் இரத்த வழியில் நேரடியாகத் தொடர்புடைய உடன் பிறந்தவர்களுடன் திருமணம் செய்யக்கூடாது என்பதே அவ்வகைச் சமூகங்களில் உள்ள திருமண விதியாகும். இவ்வகை உடன் பிறந்தவர்களை முழு உடன் பிறந்தவர்கள் (flll siblings) என அச்சமுதாயத்தினர் வரையறை செய்கின்றனர்.  இவ்வகைச் சமுதாயங்களில் ஒருவர் யார் யாருடன் மணவுறவு கொள்ளக் கூடாது என்ற விதி மட்டுமே சுட்டப்படுவதால் இதனை எதிர்மறை விதிகள் (negative rules) என்று கூறுகிறார் லெவிஸ்ட்ராஸ். யாருடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை இவ்விதிகள் சுட்டிக் காட்டுவதில்லை.

இவ்வமைப்புகளில் விரும்பத்தக்க மணவுறவினர் யார் என்ற சுட்டுதல் இடம்பெறாததால் மணத்துணையின் வட்டம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும் வகையில் திறந்து கிடக்கும். இதனால் உறவுமுறைச் சொற்களும் மணவுறவினர்கள் யார் என்னும் சுட்டுதலைத் தெளிவுப்படுத்துவதில்லை. இவ்வமைப்புகளில் இடம்பெறும் ஒரேயொரு திருமண விதி ஒருவர் யார் யாருடன் திருமணம் செய்யக்கூடாது என்பது மட்டுமே. இதனாலேயே இம்மணமுறை எதிர்மறை விதிகள் என்னும் பெயரைப் பெறுகின்றன.

அகமணம்

அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. இவ்வகை மணம் லெவிஸ்ட்ராஸின் எளிய அமைப்புகள் என்னும் வகையில் அடங்கும். சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஓர் அகமணக் குழுவாகச் செயல்படுகின்றது. தமிழர்களும்கூடப் பெரும்பான்மை சாதிப்பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில் வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணமுடிகின்றது.

அகமணமுறை அச்சமூகத்தைச் சார்ந்த குழுவுக்குள் நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்துகின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து அக்குழுவுக்குள் உரிய வளங்கள் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது. இருவேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்ட காலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகின்றது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை நிலப்பரப்பு சார்ந்த அகமணம் (Territorial Endogamy) எனப்படும். ஒரு சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை. இது ஊர் அகமணம் (Village Endogamy) எனப்படுகின்றது.

சங்ககால மக்கள் திணைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். தங்கள் நிலப்பரப்பிலேயே, தம் ஊரிலேயே தம் மக்களைத் திருமணம் செய்யும் அகமண முறைகளைக் கடைபிடித்துள்ளனர். இதனை,

தலைவியும் தலைவனும் ஓர் ஊரினர்     (தொல்.கள.23)

என்னும் நச்சினார்க்கினியர் விளக்கம் குறிப்பிடுகின்றது. மேலும், தலைமக்கள் தங்கள் ஊரில் இளமைக் காலத்தில் விளையாடும்போது சிறு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்; பின்னாளில் அவர்கள் இருவரும் உள்ளத்தால் நீங்காதவாறு நட்பாகி காம்புகளைச் சேர்த்து இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையை போல் சிறு பூசலும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டு மணம் முடித்துக் கொள்கின்றனர் என்பதனை,

இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்ன விவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே          (குறுந்.229)

என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன.

அம்பல், அலர் என்பவற்றின் மூலம் குறிஞ்சி நிலத் தலைமகனிடம் காதல் வயப்பட்ட தலைமகளின் மாற்றத்தைக் காணும் பெற்றோர் அவளது மாற்றத்தை வினவியபொழுது தோழி அறத்தொடு நிற்றலால், இற்செறிப்பு செய்தமையும் தலைமக்கள் வேற்றுவரைவு கண்டு உடன்போக்கு மேற்கொண்டமையும்  வேற்று ஊர் மக்களைத் தம் பெண்கள் மணப்பதைப் பெற்றோர் விரும்பவில்லை என்பதும் தம் ஊருக்குள்ளேயே மணம் முடிக்கும் தன்மை உடையோர் சங்ககால மக்கள் என்பதையும் குறுந்தொகை காட்டுகின்றது.

புறமணம்

புறமணம் (Exogamy) என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழுவுக்குள்ளேயே மணம்செய்து கொள்ளாமல், வேறு குழுவைச் சேர்ந்தவர்களை மணம்செய்து கொள்ளும் முறை ஆகும். இம்முறையில் இரத்த உறவு கொண்டவர்களையும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களையும் மணம்செய்து கொள்வது தடை செய்யப்படலாம். ஒரே கால்வழி, குடிவழி என்பவற்றைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள் என்பதால் பல சமுதாயங்களில் இக்குழுக்களுக்கு உள்ளே திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழ்நாட்டில் குலம், கோத்திரம், வம்சம் போன்ற பிரிவுகளும் இத்தகைய உறவுக் குழுக்களே ஆகும்.

புறமண முறைகள் லெவிஸ்ட்ராஸ் குறித்த சிக்கலான அமைப்புகள் என்னும் பிரிவில் சேரும். சங்க கால மக்கள் தமர் என்னும் உடன் பிறந்தோர் திருமண முறையை மட்டும் குறிப்பிடவில்லை. முல்லை நிலத் தலைவி காதலிக்கும் தலைவனாக மலைநாடனொடு நட்பு கொண்டமையை,

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே      (குறுந்;.3)

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்      (குறுந்.87)

என்னும் பாடல்களிலும் மருதநில ஊரனை மணந்து இல்லறம் நடத்தியதை,

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே      (குறுந்.8)

என்னும் பாடலிலும் நெய்தல் நிலத் துறைவனிடம்; நட்பு கொண்டதை,

சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாட் டுறைவன் றுறப்பின்                      (குறுந்.326)

என்னும் பாடலிலும் அறியமுடிகின்றது. இவர்கள் அனைவரும் அயலூரைச் சேர்ந்தோர். அதேபோன்று குறுந்தொகைப் பாடலில் (குறுந்.229) ஒரே ஊரைச் சேர்ந்தோர் உடன்போக்கு மேற்கொண்டு செம்மையாக இல்லறம் நடத்தியமையையும் அறியமுடிகின்றது. ஆகவே சங்ககால மக்களிடம் உடன்போக்கில் எந்த முறைமையும் பின்பற்றப்படவில்லை. ஆகவே இன்னாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முறையான விதிகள் சங்க இலக்கியங்களில் காணவில்லை. உடன்பிறந்தோரை மணத்தல் குறுந்தொகையில் இல்லையாதலால் அவ்வுடன்பிறந்தோர் உறவு தகாத உறவாகக் கருதப்பட்டதனை உணரமுடிகின்றது.

தாய், தந்தை வழி முறைமணம்

லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் முறை, உரிமை ஆகியவை முறைமணத்தையே குறிப்பிடுகின்றன. இன்னார் இன்ன முறைமையில் திருமணம் செய்ய உரிமை பெற்றுள்ளனர் என்பதே முறைமணமாகும். இம்முறைமணம் சங்ககாலத்தில் தாய்வழி, தந்தைவழி ஆகிய இருவழிகளிலும் கடைப்
பிடிக்கப்பட்டிருக்கின்றன.

சிறுசிறு குழுக்களாக வாழ்ந்த மக்கள் கூட்டத்தில் நடந்த திருமணங்கள் அவ்வக் கூட்டத்தாரிடையே நடந்தனவையாகக் கருதத்தகும். அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவராகவும், தம்முள் உறவு உடையவராகவும் விளங்கியிருப்பர். அவ்வுறவு இரு வகையில் அமையும். அது தாய்வழி உறவும், தந்தைவழி உறவும் ஆகும். தாய்மாமன் மகளையும் அத்தை மகளையும் மணக்கும் வழக்கமே நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. சங்க காலத்தில் தாய்வழி மற்றும் தந்தைவழி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் திருமணம் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்குக் குறுந்தொகையிலுள்ள செம்புலப் பெயல்நீரார் பாடல் சான்றாக உள்ளது.

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே        (குறுந்.40)

என்னும் இப்பாடலில் தாய்வழியிலும் முறை இல்லை, தந்தை வழியிலும் முறை இல்லை. நாம் இருவரும் காதலால் மணந்தோம் என்று தலைவன் கூறுகிறான். இக்கூற்றிலிருந்து கணவன் மனைவியாக வாழ்வதற்கு அக்கால வழக்கப்படித் தாய், தந்தை உறவு அடிப்படையானது என்பது உணரப்படுகின்றது.

திருமணம் பற்றிய லெவிஸ்ட்ராஸ் கருத்துப்படி எளிய அமைப்புகள், சிக்கலான அமைப்புகள் என்று திருமணக் குழுக்கள் இருவகைப்படுகின்றன. சங்ககால மக்கள் ஒரே குழுவுக்குள், நிலப்பரப்பு அல்லது ஊருக்குள் அகமண முறையிலும், விதிமுறைக்கு உட்படாத முறையில புறமணக் முறையிலும் திருமணம் செய்தனர். சங்ககாலச் சமுதாயத்தில் திருமணம் தாய், தந்தை ஆகிய இரு வழியிலும் செய்யப்பட்டமையும், அம்முறையை மீறிச் சுதந்திரமாய் உலாவும் காதல் வாழ்வைக் கொண்டமையும் அறியமுடிகின்றது.

*****

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).
அலைபேசி: 9994740908, மின்னஞ்சல்: [email protected]

 

1 thought on “குறுந்தொகையில் அகப்புற மணங்கள்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க