180913 – Vinayaka -Watercolour -10×14” Arches 300gsm lr

சித்திபுத்தி வேழத்தை சாஷ்டாங் கமாய்வணங்க
அத்தைக்கு மீசமுளைச்(சு) ஆவாள்பார் -சித்தப்பா(சித் அப்பா)
தோத்தாலும் பாஸாவோம்(பரிட்சையில்) தோப்புக் கரணமிட
கூத்தாடும் பிள்ளையார் காப்பு…கிரேசி மோகன்…!

பிள்ளையார் பதினாறு
—————————-
ஷோடஸ நாயகர்
———————-
பெரியா அருள் வாக்கில் ‘’ஷோடஸ நாயகரைப்’’ பற்றி எழுதியதை
வாசித்ததால் விளைந்த வெண்பாக்கள் தங்கள் மேலான பார்வைக்கு….!(முன்பு(2012ல்) எழுதியது…..!

ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….06-03-2012

ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….06-03-2012

கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….06-03-2012

கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)….07-03-2012

லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)….07-03-2012

விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….08-03-2012

விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)….08-03-2012

வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….08-03-2012

தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)….08-03-2012

கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)….09-03-2012

பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)….11-0302012

கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….11-03-2012

வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….12-03-2012

சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….12-03-2012

ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….12-03-2012

ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….

பலஸ்ருதி
————-

பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….()….05-03-2012…கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *