தேவரடியார் பெற்ற சிறப்புச் சலுகைகள் உரிமைகள் பற்றிய கல்வெட்டு

1

– சேஷாத்ரி ஸ்ரீதரன்

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில்

திருக்கழுக்குன்றம் புடைப்புச்  சிற்பம்

   திருவொற்றியூர் புடைப்புச்  சிற்பம்.

பொதுவாகக் கல்வெட்டுகள் தேவரடியார்கள் கோவிலுக்கு அளித்த தானங்களைத் தான் எடுத்து இயம்புகின்றன, ஆனால் மிகச்சில கல்வெட்டுகளே கோவில்களில் தேவரடியார் பெற்றிருந்த உரிமைகள் சிறப்புச் சலுகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உரிமைகள் தேவரடியார்க்கு சில கோவில்களில் மட்டுமே வழங்கப்பட்டதாக இருந்ததால் அதுவும் இதற்கு காரணமாகலாம். இதற்கு சில கோவில்களில் மட்டுமே  சிற்பங்கள் சான்றாக உள்ளன. ஒன்றரை ஆண்டுகள் முன் நான் திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயிலுக்கு சென்ற போது ஈசுவரன் சன்னதி முன் மண்டபத்தில் ஒரு தூணில் தலையில் கொண்டை போட்டு ஆடை அணியுடன் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் தம் கையில் திறவுகோல் வைத்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பம் அவர்கள் கோவிலைத் திறந்து வழிபாடு நடத்துவதைக் குறிப்பதாக இருந்தது. கோபுர வாயில் கதவை இவர்கள் திறக்கப்போவதில்லை. பின் எதைத் திறக்கத் திறவுகோல்?  கருவறைக் கதவுகளை திறப்பதாக இருந்தால் மட்டுமே அதை சிறப்பாகக் குறிக்க கையில் திறவுகோலை செதுக்கி இருக்க வேண்டும் என்று உணர முடிந்தது. இதே கருத்தை உணர்த்துவது போல சென்னை திருவொற்றியூர் கோயிலில் ஆதிபுரீசுவரர் சன்னதியை நுழைவதற்கு முன் அமைந்த புறமண்டபத்தின் ஒரு தூணில் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் கையில் திறவுகோலுடன் நல்ல அலங்காரத்துடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தூண் சிற்பங்களும் தேவரடியார் கோயிலைத் திறந்து ஏதோ ஒரு பூசனை ஆற்றும் உரிமை பெற்றிருந்ததைக் குறிக்கின்றது. இதற்கான மேலும் சில சிற்ப, எழுத்துச் சான்றை நான் பல கோயில்களில் தேடி அலைந்து, கல்வெட்டு நூல்களைத் தேடி ஆராய்ந்நு 1- ½ ஆண்டுகள் ஓடி, பின் இறுதியில் இப்போது அச்சான்று திருப்பூர் திருமுருகன் பூண்டி கல்வெட்டாக வந்து நின்றது. இனி கல்வெட்டுச் சான்றை பார்க்கலாம்.

திருமுருகன்பூண்டி தேவி கோயில் கருவறை வடக்கு ஜகதியில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்ரீ கோனேரின்மை கொண்டான் ஆளுடையார் திருமுருகன் பூண்டி கோயில் தேவகன்மிகளுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது இத்தானத்தில் குல
 2. சோழமண்டல கச்சா தேவரடியார்களுடை _ _ _ பெறும் முதன்மை தாநம் ஆளுடையார் திருமுருகன் பூண்டி யாண்டார்க்கு நாலாவது முதல் திருமேற்பூச்சும் குடுத்தோம். இப்படிக்கு
 3. செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இவை இலாடத்தரையன் எழுத்து. நந்தமாற் படுத்துக் கொள்க. இது பந்மாயேசுரரட்சை.

தேவகன்மிகள் – கோயில் இறைப்பணியார்கள்; இத்தானத்தில் – இக்கோயில் தளத்தில், இந்த ஸ்தானத்தில்; தாநம் – ஸ்தானம், நிலை, status;  திருமேற்பூச்சு – சந்தனப்பூச்சு;  நந்தமார் –  பன்மாஹேஸ்வர ரக்ஷை – பல சிவனடியார்கள் காக்கவேண்டும்.

கோனேரின்மை கொண்டானான கொங்கு சோழன் வீரராஜேந்திரச் சோழன் ஆட்சி (ஆண்டு குறிக்கவில்லை). திருமுருகன் பூண்டி கோயில் இறைப்பணியாளர்களுக்கு நாம் தந்த ஓலைஆணையாவது இந்த கோவிலில் சோழமண்டலத்  தேவரடியார்கள் பெறும் முதன்மைநிலை (ஸ்தானம்) யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு நாலாம் நாள் முதல் திருமேற் பூச்சு செய்யும் உரிமை கொடுத்தோம். இதை செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ளலாம். இவை இலாடத்தரையன் ஆணைஎழுத்து. நந்தமார் படுத்துக் கொள்க. இந்த நடைமுறை சிவனடியார் காப்பில் விடப்படுகின்றது.

இதன்படி கோவிலில் இறைவர்க்கு சந்தனமேற் பூச்சு செய்ய சோழமண்டல தேவரடியார்கள் முதல்நிலை உரிமை பெறுகிறார்கள், இதாவது திருமுழுக்காட்டும் உரிமை பெறுகிறார்கள். பொதுவாக பிராமணர் தவிர்த்து பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது என்பது ஒரு கட்டுப்பாடு அது இங்கே தளர்த்தப்பட்டிருக்கின்றது. இப்படி உரிமை கொடுக்கக் காரணம் கோவில்கள் வேந்தர், மன்னவர்ஆகியோருக்கு  சொந்தமானது, அவர்களே இதன் தலைவர்கள் பிராமணர் அவர் சொல் கேட்டு நடக்க வேண்டியவர் என்ற கருத்திற்கு இக்கல்வெட்டு சான்றாகின்றது. நந்தமார் படுத்துக் கொள்க என்பது இதில் அவர்கள் தலையிட வேண்டாம் என்பதே.

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 84 & 85 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் வடக்கு சுவரில் பொறித்த 9 வரிக்  கல்வெட்டு.

 1. தண்டீஸ்வரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கருமமாரய்க _ _ _  பண்டே அறஞ்செய்தான் அறங்காத்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து அவர்களால் சண்டேஸவரன் ஆதேசம் நம்
 2. உடையார் திருமுருகன்பூண்டி ஆளுடைய நாயனார் கோயில் தேவரடியாற் ஆடக்கொண்ட நாச்சிமகள் _ _ _ பெருமாளான சவுண்டய நங்கை(க்கு)ம் இவள் தங்கை மக்கள் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவள்
 3. தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும் நம் ஒலை குடுத்தபடியாவது ஈஸ்வர சம்வத்சர _ _ ராக _ _ _ முதல் இவர்களுக்கு நாம் குடுத்த திருவந்தி காப்புக் குடுக்கையில் இவர்கள் திருவந்திக் காப்பும் எடுத்துப் பணியுமுறை
 4. யுஞ் செய்து  உடையார்க்கு பணியாக _ _ _ _ காலந்தோறும் திருநீற்றுக் கா_ _ _ _ திருக் கண்ணா மடை வண்காட _ _ _ லியற் இக்காள _ _ _ _ உள்ளிட்டாரையும் _ _ _  பார்க்கவும் திருநாளுக்கு நடே
 5. ஸ்வர நாயனார் எழுந்தருளும் பொழுது முன்னரங்கு ஏறக்கடவார்களாகவும் இவர் திருமுன்பு பிச்சவேஷம் _ _ _ _ கவும் இந்த ஹொதுசவத்துக்கு ஏறியருளும் திருத்தேர் திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கா
 6. வண முள்ளிட்ட ஆசநங்களேறக் கடவார்களாகவும் திருமார்கழித் திருவாதிரை மூற்றா(வதா)யுள்ள  திருவெம்பாவைக்கு கைநாட்டி  மூன்றாம் அறை முதலாயுள்ள அறையுங் கடக்கக் கடவ
 7. ர்களாகவும் மேற்சாத்தும் பரிவட்டமும் பெறக்கடவார்களாகவும் இந்தத் திருவந்திக் காப்பால் வந்த பிராப்தியங்களான வரிசைகளும் பெறக்கடவார்களாகவும். இப்படிக்கு இவர்கள் மக்கள் மக்கள் சந்திரா
 8. தித்தவரை அனுபவித்து வருவார்களாகவும் .இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாகவும் (நாம் நம்ஓலை) குடுத்தோம். இப்படிக்கு அருளிச்செயல்படிக்கு தேவர்கள் சீர்காழிப் பிள்ளை எழுத்து. பால் வண்ணத் தாண்டான் பெருமாள் எழுத்து. அண்ணாமலையான் எழுத்து. அடிக்கிளத்தை எழுத்து. சத்தி
 9. ன் எழுத்து மாடாபத்தியம் காஞ்சிபுரத்து சோமனா தேவன் எழுத்து. கானக் கா _ _ _ எழுத்து. கண்டியதேவன் எழுத்து. ஆனந்தக் கூத்தன் எழுத்து. முத்திக்கு நாயகன் எழுத்து. திருவம்பலப்பட்டி காட்டிய கைய்யன் எழுத்து. ஆனந்தக் கூத்தனார் எழுத்து. இவை அருளால் ஆதிசண்டேஸவரஸ்ரீ கரணத்தன் எழுத்து.  

திருவந்திக் காப்பு – திருவிழாமுடிவில் கண்ணூறு போகச் செய்யும் சடங்கு; மேற்சாத்து – சால்வை; பரிவட்டம் – தலைப்பாகை போன்ற கட்டு; அருளிச்செயல்  – அனுமதி.

தண்டீசுவரன் ஓலைஆணை யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஊழியம் செய்யும் கோயில் தேவரடியார் ஆடக்கொண்ட நாச்சி மகள் _ _ பொருமாளான சவுண்டய நங்கைக்கும் இவளுடைய தங்கைப் பிள்ளைகளின் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவளுடைய தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும்  நான்கொடுத்த ஓலைஉரிமை யாதெனில் இவர்களுக்கு நான் தந்த திருவந்திக் காப்பு சடங்கின்  போது அந்த திருவந்திக் காப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல காலந்தோறும் திருநீற்றுக் காப்பும் செய்ய வேண்டும். உற்சவ காலங்களின் போது நடராஜர் எழுந்தருளும் போது முன்னரங்கில் வீற்றிருக்க வேண்டும்.  நடராஜர் திருமுன்பு பிச்சவேஷம் இட வேண்டும். திருத்தேர், திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கு ஆகவேண்டியன ஆகிய நேர்வுகளின்  போது வீற்றிருக்க வேண்டும்.  மார்கழித் திருவாதிரையின் போது மூன்றாவதாக உள்ள திருவெம்பாவைக்கு திருநடம் புரியும் போது வீற்றிருக்க வேண்டும்.  மூன்றாம் அறையான கருவறை முன் அறையையும் கடக்க வேண்டும். அதன்போது சால்வையும், தலைப் பரிவட்டமும் ஏற்க வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பால் அடையப்படுவதான வரிசைகளும் (மதிப்பு) பெறவேண்டும். இப்படியான நிகழ்வுகளின் இந்த உரிமை இவர்களுக்கும் இவர் பிள்ளைகளுக்கும், இவர் பேரர்களுக்கும் என தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியர் உள்ள நாள் வரையும் அனுபவித்து வருக. இதை செப்புத் தகட்டிலும் பாறையிலும் பொறித்துக் கொள்வாராக என்று உரிமைஓலை கொடுத்தேன். இந்த மேலிட ஆணையை உடன் உள்ள அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்று ஒப்பமிட்டு கொடுத்துள்ளனர்.

இக்கல்வெட்டில் ஆட்சியாளன் பெயரும் ஆட்சிஆண்டும் குறிக்கப்படவில்லை. தேவரடியார் கண்ணூறு நீக்கும் சடங்கு நடத்தவும், திருநீற்று காப்பு நடத்திடவும் உரிமை தரப்பட்டது அல்லாமல் இறைவர் எழுந்தருளும் போது வீற்றிருக்க வேண்டும். திருத்தேர், திருநடை திறப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு உள்ள இருக்கையைப் பெறவும் திருவாதிரையின் போது கைநாட்டி கோவில் கட்டட அமைப்பில் முன் மண்டபம், கூடம், உள்கூடம் என்ற மூன்றாம் அறையை கடந்து அதற்கும் அப்பால் உள்ள கருவறை வரையும் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்போது அவர்களுக்கு சால்வையும், பரிவட்ட மரியாதையும் தரப்பட வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பிற்கு உள்ள மரியாதை பெற உரிமை தரப்பட்டுள்ளது.  இந்தச் சலுகை இவர்களுடன் நில்லாமல் இவர் பெண் பிள்ளைகளுக்கும் பேத்திகளுக்கும் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தீட்டாகும் பெண்களுக்கு இந்த சலுகை, உரிமை ஆகியன ஆகமங்களை மீறித் தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது அல்லது அரசாணை ஆகமத்திற்கும் மேலானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு பிராமணர்களை மற்ற சாதாரண பணியாளர் போலத் தான் வைக்கின்றது. வேந்தன், மன்னன் முன் இவர்கள் கீழ்நிலையர் என்பது தெளிவாகின்றது.

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 74 & 75 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்

மன்னியூர் மன்னீசுவரர் கோயில் வடக்கு சுவரில் பொறித்த 5 வரிக் கல்வெட்டு.

 1. கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டு ஆளுடையார் மன்னியூராண்டார் தேவகன்மிகளுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இத்தேவர்க்கு நாங்குடுத்தவூர் இராசடியான இயாழவல சோழநரல்லூரென்று தேவதானமாக ஊரேற்றிக்
 2. கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு நான்கெல்லை குழிமங்கலத்(தி) _ _ _ _ (க்கு) வடக்கும் இலுப்பையெல்லைக்கு மேற்கும் வாதிக்கரைக்கு தெற்கும் பாண்டிகுல மாணிக்க (வதிய்) எல்லைக்குக் கிழக்கும் இந்நாந்கெல்லை(க்)கு உள்(ப்)பட்ட நந்செய் புந்செ(ய்)யிலு
 3. ள்ள இறை புரவு சிற்றாயமும் எலவை யுகவை _ _ _ _  தெண்டகுற்றம் (எப்)பேர்ப்பட்டனவும் இத்தேவர்க்குத் திருப்பணிக்கும் தேவரடியார், நட்டுவர், காந்தப்பர், திருப்பதியம் பாடுவார், நிமந்தக்காறர்க்கும் இட்டு வருவதாக நமக்கு இருபத்தொன்
 4. றாவது முதல் நம்மோலை குடுத்தோம். இவை சோழகுல மாணிக்க மூவேந்த வேளாநெழுத்து. இயாண்டிருபத்தொற்றாவது நாளிரு நூற்றெழுபது இலாடத்தரையறெழுத்து காடுவெட்டி யெழுத்து. குருகுலத்தரைய நெழுத்து. கோசலத்தரைய ரெழுத்து. இது
 5. பன்மாஹேசுவரரக்ஷை.                                           

ஊரேற்று – குடியேற்று; புரவு – விளைநில வரி; சிற்றாயம் – சிறு வரி; தெண்டக் குற்றம் – குற்றத்திற்கான தண்டம், fine; நட்டுவர் – நட்டுவனார், நாட்டியம் ஆடுவிப்போன்; காந்தப்பர் – கந்தர்வர் போல் பாடுபவர்; நிமிந்தக்காரர் – வாகனங்களை தண்டில் கட்டுவோர்

கோனேரின்மை கொண்டானன வீரராஜேந்திரனின் 21 ஆம் ஆட்சிஆண்டில் 270 ஆம் நாளில் மன்னியூர் ஆண்டவர் கோயிலுக்கு இராசடி என்ற இயாழவல சோழநல்லூரை என்ற ஊரை உருவாக்கி தேவதானமாகக் கொடுத்து குடியேற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இந்த ஊருக்கு நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது. இந்த ஊரில் நன்செய் புன்செய்யில் திறட்டப்படும் வரி, வயல்வரி, சிறுவரி, எல்லை வரி, உகவை, குற்றதண்ட வரி என எப்பேர்பட்ட வரியும் இறையிலியாக்கப்பட்டு அந்த வருவாய் இக்கோயிலில் பணியாற்றும் தேவரடியார், நட்டுவனார், காந்தப்பர், திருப்பதியம்பாடுவோர், வாகன தண்டு கட்டும் நிமிந்தர் போன்றோருக்கு சம்பளமாகக் கொடுக்க வேந்தன் இசைவளிக்க அதை மூவேந்த வேளான், இலாடத்தரையன், காடுவெட்டி, குருகுலத்தரையன், கோசலத்தரையன் போன்றோர் கையொப்பமிட்டுக் கொடுக்கின்றனர்.

வேந்தரும் மன்னவரும் கோயிற் பூசனை பணியாளருக்கு மட்டுமல்லாமல் பிற தொண்டு ஊழியருக்கும் நிவந்தங்கள் தானங்கள் வழங்கி கோயில் இயக்கம் தடையின்றி நடந்துவர பல்வேறு வகையில் ஏற்பாடு செய்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. அவ் வகையில் தேவரடியார் என்போர் ஏதோ ஆடல்புரிபவர் என்றல்லாமல் கோயில் பணியாளரில் ஒருவராகவே ஆக்கப்பட்டனர் என்று தெரிகின்றது.

பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 114 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

திருமுருகன் பூண்டி  http://www.nammacoimbatore.in/article_view.php?newsId=2316

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தேவரடியார் பெற்ற சிறப்புச் சலுகைகள் உரிமைகள் பற்றிய கல்வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *