இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(252)

செண்பக ஜெகதீசன்

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

-திருக்குறள் -596(ஊக்கமுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

அரசாள்வோர்

எண்ணுவதெல்லாம்

உயர்வு கருதிய எண்ணமதாய்

இருத்தல் வேண்டும்..

ஊழ்வினையால்

உயர்வது நிறைவேறாதுபோனாலும்,

உயர்வு கருதிய எண்ணமதை

விட்டுவிடக் கூடாது…!

 

குறும்பாவில்…

 

உயர்வுகருதியதாயிருக்கட்டும் எண்ணம்,

நிறைவேறாதுபோனாலும் எண்ணிய உயர்வு

நிறுத்திவிடாதே உயர்வுகருதும் எண்ணமதை…!

 

மரபுக் கவிதையில்…

 

மக்களை யாளும் மன்னனவன்

மனதில் எண்ணும் எண்ணமெல்லாம்

மிக்க உயர்வது கருதியதாய்

மிளிர வேண்டும் எப்போதுமே,

சிக்கலாய் அந்த உயர்வதுதான்

செயலில் நிறைவே றாதுபோனால்,

துக்க மேதும் கொள்ளாமல்

தொடர்ந்திட வேண்டும் உயரெண்ணமே…!

 

லிமரைக்கூ..

 

உயர்வைக் கருதியதாயிருக்கட்டும் எண்ணம்,

உயர்வது நிறைவேறாதபோதும் நடந்துகொள்

எண்ணமதைக் கைவிட்டுவிடாத வண்ணம்…!

 

கிராமிய பாணியில்…

 

விட்டிடாதே விட்டிடாதே

ஒயர்வான எண்ணமத

விட்டிடாதே கைவிட்டிடாதே..

 

நாட்டயாளுற ராசாவுக்கு

எண்ணமெல்லாம் எப்பவுமே

ஒயர்வாத்தான் இருக்கவேணும்..

 

நெனச்சபடி நடக்காமப்போனாலும்

நெனப்பு அதத்தான் மாத்தவேண்டாம்,

எப்பவுமே ஒயர்வாவே இருக்கட்டும்..

 

அதால

விட்டிடாதே விட்டிடாதே

ஒயர்வான எண்ணமத

விட்டிடாதே கைவிட்டிடாதே…!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க