(Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

2

முனைவர் இரா. மதன்குமார்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை
கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
கோயம்புத்தூர் – 21.

சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

 முன்னுரை

திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் அமைந்த, ‘சூனிய சம்பாடணை’ என்னும் பாடல் தொகுதியானது, அறுபத்தேழு பாடல்களால் அமைந்தது. இத்தொகுப்பில், உள்ளுறை உவம உத்தியில் இறைவனுக்கும் உயிர்க்கும் அமைந்த பிரிவறியாத திருவருளுறவும் திருவருளுறவுக்குக் கருவியாகின்ற வகையில், இறைவனே ஞான குருவாக வந்தருளுதலும் ஞான குருவின் அறிவுறுத்தலால் உயிரானது யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, யோக சித்தியாகிய முடிவிலாத சிவானந்தப் பேறு பெறுவதுமாகிய அரும் பொருள்கள் பாடப்பட்டுள்ளன.

திருவருளுறவில் இறையும் உயிரும்

இறைவனைச் சார்ந்திருத்தலே, உயிர்க்கு உண்மைச் சார்பாகும். அவ்வண்ணம் நிகழாத வகையில், மூல மலமாகிய ஆணவம் உயிரறிவை மறைத்திருக்கும் வலிமை உடையது. அதை மெலிவிக்கவே, உயிர்க்குக் கன்மமும் மாயையும் கூட்டுவிக்கப்படுகின்றன. இதனால், உடம்பும் உலகியல் நுகர்ச்சியால் அமைகின்ற வாழ்க்கையும், அதன் வழியான வினையாக்கமும் உயிர்க்கு வாய்க்கின்றன. அதற்கேற்ப நல்வினை, தீவினைப் பயன்கள் விளைந்து, பிறவிச் சுழலும் உயிரைத் தொடர்கிறது. பல்பிறப்பிலும் உயிர் பிறந்திளைத்து, ‘திருவருளால், இனி பிறவாமையைப் பெற்றுய்ய வேண்டும்’ என்னும் மெய்யுணர்வுக்குத் தலைப்படுகிறது. திருவருளைக் கருவியாகக் கொண்டு, இத்தகைய மெய்யுணர்வு நிலை, உயிர்க்கு வாய்க்கும்படி இறைவன் அருள்விளையாடல் நிகழ்த்துகிறான். இதனைச் சிவஞான போதத்தின் இரண்டாம் சூத்திரம், ‘இருவினையின் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும்’ எனக் குறித்தருள்கிறது.

பிறவிக்கு மருந்தாகின்ற கனி

வாய்த்த மனிதப் பிறப்பினைக் கருவியாகக் கொண்டு, ‘மலநீக்கம் பெற்று உய்ய வேண்டும்’ என்கின்ற மெய்யுணர்வானது உயிரிடத்தில் ஏற்படுவதைத் திருமூலர், வாழை மரத்தின் பூ, காய் மற்றும் கனி ஆகியவற்றைப் பயன்கொள்வோரின் செயலுக்கு ஒப்பாகப் பாடியுள்ளார்.

ஒன்றையொன்று தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் இருக்கின்றன. அவற்றின் நடுவிலமைந்த மூன்று வாழைகளும் முறையே, பூவையும் காயையும் கனியையும் தந்து, நோய் தீர்க்கின்ற பயன் கொண்டுள்ளன. அவற்றுள், கனியின் பெரும் பயனை உணர்ந்த ஒரு சிலரே அதை உண்டு பயனடைந்தனர்’ என்ற உள்ளுறைப் பொருளானது, மலவாதையில் கட்டுண்டு பிறவிச் சுழியில் தொடர்ந்து சிக்குண்டு துன்புறுகின்ற உயிரின் அறியாமையைச் சுட்டுவதாகும்.

          ‘முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்

           செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

           பக்கனர் மிக்கார் படங்கினார் கன்னியர்

           நக்குமல ருண்டு நடுவுநின் றாரே’                        (சூனிய சம்பாடணை: 1)

இப்பாடலில், ‘தொடர்ந்து ஓடுகின்ற மூன்று ஆறுகள் என்பவை, வினைவயத்தால் உயிரைத் தொடர்ந்துவரும் பிறவிச் சுழலைக் குறிக்கின்றன. பூவால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மாயையாகிய மலத்தின் வலிமை நீக்கம். காயினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, கன்ம மலத்தின் வலிமை நீக்கம். கனியினால் பெறப்படுகின்ற நோய்நீக்கம் என்பது, மூல மலமாகிய ஆணவ மலத்தின் வலிமை நீக்கம். ‘பிறந்த பிறப்பினால், பெரும் பயன் கொள்ளவேண்டும்’ என்கின்ற பக்குவமுடையவர்கள், மாயை மற்றும் கன்ம மல நீக்கத்தை மட்டுமே வேண்டாமல், ஆணவ மல நீக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு, மும்மல வாதைகளிலிருந்தும் முற்றிலுமாக நீங்கி உய்கின்றனர்’ என்று திருமூலர் இரங்கிக் கூறுகின்றார்.

இறைவனின் மாயச் சூதாட்டம்

இறைவன், உயிருடன் பிரிப்பறியாது நிற்கின்ற நிலை, ‘அத்வைதம்’ எனப்படும். உப்புநீரில், உப்பும் நீரும் பிரிப்பின்றி ஒன்றாக விளங்குதல் இதற்குக் காட்டாகும். அவ்வகையில், இறைவன் ஒன்றாதல்-வேறாதல்-உடனாதல் என்ற நிலைகளில் விளங்குகின்றான். இதனை அறியாத உயிரின் அறியாமையையும், இறைவனின் அளப்பருங் கருணைச் செயலையும் சூதாட்டத்துடன் ஒப்பிட்டு மறைபொருளாகத் திருமூலர் விளக்குகிறார்.

உயிருக்கு இறைவன் கூட்டுவிக்கின்ற உடம்பே, சூதாடு பலகை. மெய், வாய், கண், மூக்கு, செவி முதலான ஐம்பொறிகளே, ‘பகடைக் காய்கள்’. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி முதலான அவத்தைக்குரிய புருவநடு, கண்டம், இருதயம் ஆகியவையே இருந்தாடுகின்ற இடங்கள். இத்தகைய அமைப்புடன், இறைவன் உயிர்களுடன் சூதாடுகிறான். சூதாடுவோர், தனது எதிரிலிருந்து ஆடுபவரின் இயக்கத்தையும், அதற்குரிய தனது எதிர் இயக்கத்தையும் குறித்துத் தெளிவுற அறிகின்ற வாய்ப்புண்டு. அத்துடன், எதிராளி, தன்னிடமிருந்து கவர்கின்ற பொருளைக் குறித்தும் அறிகின்ற வாய்ப்புண்டு. ஆனால், அறியாமை மயக்கிற்கு ஆட்பட்ட உயிரோ, ‘தன் எதிரிலிருந்து ஆடுகின்ற இறைவன், பிறப்புக்கு வாயிலாகின்ற அறியாமை முழுவதையும் கவர்ந்துகொள்கின்ற பெருங்கருணையை உணர்வதில்லை’.

          ‘காயம் பலகை கவறைந்து கண்மூன்று

           ஆயம் பொருவதுஓர் ஐம்பத்தோ ரக்கரம்

           ஏய பெருமான் இருந்து பொருகின்ற

           மாயக் கவற்றின் மறைப்பறி யேனே’ (சூனிய சம்பாடணை: 1)     

இருவினையொப்பின் வழியே இறைசார்பு

பிறப்பிற்கு வாயிலாகின்ற உயிரின் வினைத்தொகுதியானது, சஞ்சிதம், பிராரத்தம் மற்றும் ஆகாமியம் ஆகிய மூவகைத் தொகுதிகளில் அமையும். சஞ்சிதம் என்பது, பழவினை. பழவினையே, நிகழ்பிறப்பைக் கூட்டுவிக்கிறது. ‘உழவர்களுக்கு, எதிர்வரவுள்ள விதைப்புக் காலத்துக்கு முன்பாகவே, அதற்கான விதை தயாராக இருப்பில் வைக்கப்படுவதைப் போல, உயிர்க்குப் பழவினையாகிய வித்திலிருந்து, அடுத்த பிறப்பு விளைகிறது’.

                     ‘விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து

                      விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்

                      விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு

                      விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே’                     (சூனிய சம்பாடணை: 14)

உயிர், நிகழ்பிறப்பில் இன்ப, துன்பங்களை நுகர்கின்றபொழுது செய்கின்ற நல்வினைகளும் தீவினைகளும் புண்ணிய, பாவங்களாகி அதற்கேற்ப அடுத்தடுத்த பிறப்புகள் தோன்றக் காரணமாகின்றன. ‘நிகழ்பிறப்பில், இன்பத்தில் நாட்டமும், துன்பத்தில் வெறுப்பும் கொண்டு மேன்மேலும் புரிகின்ற புண்ணிய பாவங்கள், மேலும் பல துன்பப் பிறப்புகளில் தன்னை ஆழ்த்தித் துன்புறச் செய்யும்’ என்கின்ற மெய்யுணர்வு நிலை உயிர்க்கு வாய்க்கப்பட வேண்டும். தான், சிவப்பெரு நிறைவில் அடங்கியிருத்தலையும், தனது இயக்கமும் சிவனருளால் நிகழ்வதையும், இன்ப துன்ப நிலைகள் முந்தைய வினைப்பயனால் தனக்குக் கூட்டுவிக்கப்படுவதையும், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் மெய்யுணர்வையும் உயிர் பெறவேண்டும்.

‘நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’ (குழைத்த பத்து: 7)

என்றவழி, இறைவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தலாகிய இருவினையொப்பு உயிர்க்கு வாய்க்கவேண்டும். இருவினையொப்பு நிலையே, திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதத்தை வாய்க்கச் செய்து, இறைவனையே ஞான குருவாகத் தந்தருளும்.

ஞான குருவாக வந்தருளுதல்

ஆன்மா, அறிவுப் பொருளாயினும், தானே எதையும் உணர்வதில்லை. இறைவன் அறிவிக்க அறிவதே அதன் இயல்பு. உயிருக்கு அருள வேண்டி, இறைவனே ஞான குருவாக எழுந்தருள்வான். சிவப்பிரகாசத்தில் அத்தகைய அருளுறு நிலையானது, ‘அதிஷ்டான பட்சம்’ என்றும், ‘சம்புபட்சம்’ என்றும், இரு நிலைகளில் சுட்டப் பெறுகிறது. அநந்தேஸ்வரர், ஸ்ரீகண்டருத்திரர் முதலானோர் ஞான குருவாக வந்தருளுவது, ‘அதிஷ்டான பட்சம்’ எனப்படும். திருஞானசம்பந்தர் முதலான சமயக் குரவரும், திருநந்திதேவர் முதலான சந்தானக் குரவரும் ஞான குருவாக வந்தருள்வது, ‘அணு பட்சம்’ எனப்படும்.

ஞான குரு அருள்கின்ற வகை

இறைவன், ஆணவ மல வாதை மட்டுமே உடைய விஞ்ஞானகலரின் அறிவுக்குள் அறிவாகி, ஞானப் பேரொளியாக விளங்கியருள்வான். ஆணவம் மற்றும் கன்ம மல வாதை உடைய பிரளயாகலருக்கு மானும் மளுவும், நான்கு தோளும், கறைமிடறும், முக்கண்ணும் விளங்குகின்ற திருமேனியுடன் எழுந்தருளுவான். மும்மல வாதையுடைய சகலர்களில், இருவினை ஒப்பினால் இறைச்சார்புக்கு ஆட்படுகின்ற பக்குவம் உடையவர்களுக்கு அருளவேண்டி, மானுடச் சட்டை தாங்கிய குருவாக எழுந்தருளுவான்; உடம்பின் நிலையாமையையும், தத்துவக் கூட்டங்களின் வழியே இயங்குகின்ற உடம்பினை உயிருக்குக் கூட்டுவித்த நிலையினையும், உடம்பின் வழியான அறிவு, இச்சை, செயல்கள் ஆகியவை, பதி புண்ணியங்களாக மேம்படுகின்ற வகையில், திருவருள் துணைநிற்கின்ற நிலையையும் உயிர்க்கு உணர்த்தியருள்வான்.

குளத்தில் இரை தேடுகின்ற குருகினால், பாசிப் படலம் தனக்கான இரையை மறைத்திருப்பதை அறிய இயலாது. குளத்தின் வழியில் செல்கின்ற வீரன், நீர்வேட்கையைத் தவிர்த்துக் கொள்வதற்காக குளத்தின் பாசிப்படலத்தை அகற்றுகின்ற பொழுது, தனக்கான இரையைக் கண்டு அக்குருகு பயன்கொள்ளும். அதுபோல, சிற்றறிவால் இறைவனை உணர இயலாதவர்கள், இருவினைஒப்பின் வழியே ஞான குருவைப் பெற்று, உபதேசத்தின் வழியே, யோகப் பேற்றுக்குத் தலைப்பட்டு, ஐம்புல வாதை தவிர்த்து, சிவானுபவத்தில் நிலைப்பர்.

           ‘பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்

            கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்

            தூசி மறவன் துணைவழி எய்திடப்

            பாசி கிடந்து பதைக்கின்ற வாறே’                           (சூனிய சம்பாடணை: 59)

ஞான குருவால், உயிரறிவு விளக்கம் பெற்று, சிவானுபவப்பேற்றுக்குத் தலைப்படுகின்ற மெய்யுணர்வு நிலையினைத் திருமூலர்,

                   ‘வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

                     புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

                     தொழுது கொண் டோடினார் தோட்டக்குடிகள்

                     முழுதும் பழுத்தது வாழைக் கனியே’                (சூனிய சம்பாடணை: 4)

எனத் தன்னனுபவ நிலையாகக் குறித்தருளியுள்ளார். ’எனது உள்ளமாகிய தோட்டத்தை, ஐம்புலக் கள்வர்கள் தமதாக்கிக் கொண்டனர். ஆயினும், அவர்களுடன் இருந்த நான், ஆழக் குழி ஒன்று தோண்டி, அதில் கத்தரி விதையினை நட்டுவைத்தேன். கத்தரி விதையிலிருந்து, பாகற்கொடி முளைத்தது. அக்கொடியானது, வாழைக் கனியைத் தந்தது’ என்கின்றார்.

இப்பாடலில் சுட்டப்படுகின்ற, ஆழக் குழி தோண்டிய முயற்சியானது, ஞான குருவுக்கு ஆட்பட்டதையும், கத்தரி விதைத்தது, குருவருளால் இறைவனைச் சார்ந்த மெய்ஞ்ஞான வேட்கையினையும் குறிக்கும். உலகியல் இன்பமாகிய நிலையில்லாத பயனையே எதிர்ப்பார்த்த நிலையில், அருளியலுக்கு ஆட்படுகின்ற வகையில், ஞான  குருவின் அருளுபதேசத்தால் உலகியலின்பால் வெறுப்பு ஏற்படும். அதுவே, கசப்புத் தன்மைகொண்ட பாகற்கொடி விளைந்தது’ என்பதன் உள்ளுறையாகும். விதைத்தது ஒன்றும், விளைந்தது ஒன்றுமாக இருக்கையில், அதிலிருந்து அற்புதமாகிய வாழைக் கனி விளைந்தது.

இறைவன், உயிர்க்கு மெய்யறிவை வழங்கி, அறியாமையை ஓட்டுகின்ற போதிலும், மலவாசனையால் உலகியலையே உயர்வென்று கருதி, மீண்டும் மீண்டும் உலகியலையே நாடுகின்ற அவலம் விளையும். ஆயினும், உயிரின் பக்குவ நிலைக்கேற்ப உபதேசத்தால், மெய்யுணர்வில் நிலைக்கச் செய்து, உயிரைத் தனக்குரிய மீளாஅடிமையாக ஆட்கொள்வான். இப்பேரருளனுபவமே, ‘வாழைக்கனி வாய்த்தல்’ என்பதாகும்.

உபதேசத்தின் வழியே சுத்தநிலை காட்டல்

குருவருளால், மெய்யறிவுக்குத் தலைப்பட்டு, இறைவனுடன் ஒன்றியிருத்தலாகிய யோகத்தில் நிற்றலைத் திருமூலர், நிலத்தை உழுது பயன்கொள்வதாகிய உழவுத் தொழிலாக உருவகிக்கின்றார். ‘இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று ஏர்களிலும், பிராணனைப் பிணைத்து உழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், சுழுமுனை நாடி வழியே உழுவதே உயர்ந்த பயன் தருவதாகும். முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தினை இடமாகக் கொண்டு இயங்குகின்ற மூச்சுக் காற்றை, சுழுமுனை நாடியின் வழியாக மேலேற்றுவதே யோகப் பயிற்சியாகும். அதனைக் குருமுகமாக உணர்ந்து உயர்ந்த பயன்கொள்ளாமல், பிராணனை வீணாக்குகின்றனர்’ என இடித்துரைக்கின்றார்.

                    ‘மூவணை ஏரும் உழுவது முக்காணி

                     தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்

                     நாவணை கோலி நடுவிற் செறுஉழார்

                    காலணை கோலிக் களர்உழு வார்களே’                  (சூனிய சம்பாடணை: 7)

என்றமைந்த பாடலில், ‘முக்காணி’ என்பது, முக்கோண வடிவிலான, மூலாதாரச் சக்கரத்தைக் குறிக்கும். நடுவில் உழுதல் என்பது, நடுநாடியாகிய சுழுமுனை நாடியில், பிராணனைச் செலுத்தி, ஆக்ஞையாகிய புருவநடுவை நோக்கிச் செலுத்துதலாகும்.

யோகசித்தியாகிய திருவருள் அனுபவம்

ஆறாதாரங்களிலும் நிற்கின்ற பிராணன், உச்சித்தானமாகிய சகஸ்ரஹார நிலையத்தை அடையுங்கால், அமுத தாரை பொழியும். யோக சித்தியாகிய திருவருளனுபவத்தினைத் திருமூலர், நயம்மிக்கதொரு விடுகதை வாயிலாக உணர்த்தியுள்ளார். ‘ஒருவன், தனது நண்பனாகிய தட்டானிடத்தில் மொட்டுஅளவு பொன்னைக் கொடுத்துக் காத்துவைத்திருக்கச் சொன்னான்; அவனும் அதனை வீட்டின் உயர்ந்த இடமாகிய மச்சின் மீது வைத்துக் காத்துவந்தான். மொட்டளவில் சிறிதாக இருந்த பொன்னும் செம்பளவில் பெருகியது. தட்டானாகிய நண்பன் அதைக்குறித்து, உரிமையுடையவனுக்கு அறிவிக்காமலேயே,  தனக்கு உரிமையுடையதாக ஆக்கிக்கொண்டான்’ எனக் குறித்தருளியுள்ளார்.

                 ‘தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்

                  மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது

                  வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்

                  தட்டான் அதனைத் தகைந்து கொண் டானே’      (சூனிய சம்பாடணை: 11)

ஒருவன்–பிரமன்; தட்டான்-உயிர்; மச்சுவீடு-உடம்பு. பிரமன், உயிருக்கு உடம்பினைக் கூட்டுவித்து, தனு, கரண, புவன, போகங்களை நுகர்வித்து மேலும் மேலும் அவை பிறப்பிறப்புகளில் பட்டுத் துன்புறுகின்ற விதியை எதிர்நோக்கியிருக்கின்றான். ஆனால், உயிரோ, பிரமனின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொன்னை உச்சித் துவாரமாகிய சகஸ்ரஹார தளத்துக்கு உயர்த்தி, அமுததாரை பொழிகின்ற பெரும்பேறு கிடைக்கும்படியாக, பிராணனை உரிய வகையில் பயன்கொண்டது. உயிரானது, துன்பப் பிறப்பைக் கூட்டுவித்த பிரமனும் அறியாதவாறு, தனக்கமைந்த பிறப்பையே கருவியாகக் கொண்டு, யோகப் பேற்றின் வழியே, திருவருளில் அழுந்தி,  முடிவாக சிவத்துள் அழுந்துதலாகிய பேரின்ப அனுபவத்தைத் திருமூலர், ‘மேலைக் கடற்கரை வணிகம்’ என்று உருவகிக்கின்றார்.

மேலாலவத்தை நிலை

உயிரானது நிலைகொண்டுள்ள உடலில், விழிப்பு (சாக்கிரம்), சொப்பனம் (கனவு), உறக்கம் (சுழுத்தி), பேருறக்கம் (துரியம்), மற்றும் உயிர்ப்படங்கல் (துரியாதீதம்) ஆகிய நிலைகளை அடையும். இது, கீழாலவத்தை, மத்தியாலவத்தை மற்றும் மேலாலவத்தை எனப்படும். ‘கீழாலவத்தை’ என்பது, உயிர், அறியாமையில் அழுந்துவதாகும். அந்நிலைகள், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம் மற்றும் கேவல துரியாதீதம் எனப்படும்.

உயிரானது, கேவல சாக்கிரத்தில், புருவநடுவில் நின்று தொழிற்பட, ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், புலனுணர்வுகள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், பிராணன் முதலிய பத்தும் ஆகிய கருவிகள் இயங்கும். புருவநடுவை விட்டு, கழுத்தை அடைகின்றபொழுதில், ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் ஒடுங்கி, ஏனைய இருபத்தைந்து கருவிகளும் தொழிற்பட்டு நிற்றல், கேவல சொப்பனமாகும். கழுத்திலிருந்து இறங்கி இதயத்தில், சித்தமும், பிராணனும் புருடனும் மட்டும் செயல்படுகின்ற உறக்கநிலை, கேவலசுழுத்தியாகும். உயிரானது, இதயத்திலிருந்து கீழிறங்கி, சித்தமும் ஒடுங்கி, பிராணனும், புருடனும் செயல்பட, உறக்கத்தில் அமைதல், கேவலதுரியமாகும்.

மூலாதாரத்தை நோக்கிக் கீழிறங்கி வந்து, பிராணனும் ஒடுங்கி, புருடனுடன் நின்று முழுமையாக அறியாமையில் மூழ்கியிருத்தல், கேவலதுரியாதீதமாகும். மூலாதாரத்தில் ஒடுங்கிய உயிரானது, மீண்டும் மேலேறிச் சென்று, அந்தந்த இடங்களில், அவற்றுக்குரிய கருவிகளுடன் கூடி அறிவுபெறுதல்,  ‘மேலாலவத்தை’ எனப்படும். சகல நிலையில் வாழ்கின்ற பக்குவ உயிருக்கு, திருவருளுடன் ஒன்றுகின்ற சுத்தநிலை வாய்க்கும். அப்பொழுது, உயிர் அடைகின்ற சுத்தநிலையின் துரியம் என்பது, திருவருளில் அழுந்துதலும், துரியாதீதம் என்பது, யோகத்தின் முடிநிலைப்பயனாகிய சிவத்தில் அழுந்துதலுமாகும். திருவருளில் அழுந்துகின்ற உயிர், தன்னை உணர்கின்ற உணர்வைப்பெற்றுள்ள துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தை அடைகின்றபொழுதில், தன்னையும், தான் உணர்கின்ற அனுபவத்தையும் மறந்து, சிவமாகவே இருந்து உணர்தல், சகலத்தில் சுத்தநிலையாகும். உடலில், மேலாலவத்தையாகிய இவ்வருளனுபவம் நடைபெறுகின்ற இடத்தைத் திருமூலர், மேலைக் கடற்கரையைக் கொண்ட, கொங்கு நாடென்கின்றார். ‘சுத்த துரியாதீதநிலையில், உயிர் பெறுகின்ற பேரின்ப அனுபவத்தை, யவனருடனான வாணிபம் என்று குறித்தருள்கின்றார்.

                    ‘கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃது

                     அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை

                     திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்

                     தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே’                      (சூனிய சம்பாடணை: 62)

மேலாலவத்தையால், சிவத்தில் அழுந்திப் பெற்ற அருள் அனுபவத்தை மணிவாசகரும்,

                     ‘வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்

                     தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

                     குரம்பை தோறும் நாயுட லகத்தே

                     குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய

                    அற்புத மான அமுத தாரைகள்

                     ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்’                   

                                                                                    (திருவண்டப்பகுதி: 170-175) 

எனச் சுட்டியுள்ளார்.

யோகப் பெருவாழ்வில் நிலைத்தல்

பேரின்பப் பேற்றுக்குத் தலைப்படுகின்ற சீவன்முத்தர்களாயினும், முந்தைய வினைவசத்தால் ஐம்புல வாதைகள் அவர்களைத் தாக்கவருதல் இயல்பாகும். அவர்கள், திருவருள் துணையுடன் அவற்றை வென்று, சிவானுபவத்தில் நிலைக்கின்ற செயல்பாட்டினைத் திருமூலர், காட்டில் வாழ்ந்த ஒருவன், புலியை எதிர்த்து விரட்டிய வீரச்செயலாக உருவகித்துப் பாடியுள்ளார்.

                   ‘பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்

                     ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

                     அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்

                     பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே’ (சூனிய சம்பாடணை: 46)

காட்டில் வாழ்கின்ற ஒருவன், பன்னிரண்டு காத தூரம் பாய்கின்ற புலிக்கு அஞ்சினான். புலியின் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சி, கடற்கரையை நாடினான். அங்கு அச்சம் நீங்கி, அலைகளின் குளிர்ச்சியை அனுபவித்து, அன்றாடம் அமுதத்தையும் பெற்று மகிழ்ந்தான்; ஐவர் அதற்குத் தடையாக வந்து, அவனைத் துன்புறுத்த முயன்றனர். ஆனால், அவன் அவர்களை விரட்டியடித்தான்.

உடம்பே காடாகும். அதில் இயங்குகின்ற பிராணனே புலியாகும். அன்றாடம் அதற்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவனே, உயிராகும். ஆதாரமாகிய உடம்பில் அமைந்த உயிரானது, அங்கிருந்த புலியின் ஓயாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது.  அவன், குருவின் ஞானோபதேசத்தால் யோகத்தைச் சார்ந்தமை, கடற்கரையை நாடியமையாகும். அலைகளின் குளிர்ச்சியே திருவருள் அனுபவம். சஹஸ்ரஹார தளத்திலிருந்து பொலிகின்ற அமுதப்பேறே, கடல் அமுதம். சீவன்முத்தநிலையில், திருவருள் துணையுடன் ஐம்புலன்களைப் பசுகரணங்களாகவும் தனது சிந்தை, சொல், செயல் ஆகியவற்றைப் பதி புண்ணியமாகவும் மேம்படுத்திக் கொண்டமை, பகைவராக வந்த ஐவரையும் விரட்டியடித்த செயலுக்கு உருவகமாகும்.

‘ஐந்தெழுத்து’ என்னும் அருள்கருவி

உடம்பில் நிகழ்கின்ற ஒவ்வொரு சுவாசத்தின்போதும், பன்னிரண்டு அங்குலக் காற்று வெளியாகி, எட்டங்குலக் காற்று உள்ளிழுக்கப்படுவது இயல்பாகும். யோகப்பயிற்சியால், அதிகளவு காற்று உள்ளிழுக்கப்பட்டு, நீண்டநேரம் உள்நிறுத்தப்பட்டு, குறைந்தளவே வெளியேற்றப்படுகின்ற பொழுது, ஆயுள் நீளும். திருவருளால், யோகப்பயிற்சியின் வழியே இந்நிலை கைவரப்பெறுவதற்கு ஐம்புலவாதை தடையாகும். அத்தகைய அவலத்தை நீக்கிக்கொள்வதற்கு, ஐந்தெழுத்தே கருவியாகும் எனத் திருமூலர் விளக்கியுள்ளார்.

மணிவாசகர், சீவன்முத்தநிலை எய்தி, பேரமுதப் பெருங்கடலாகிய இறையின்பத்தில் திளைத்தவர். ஆயினும், மலவாசனையால் ஐம்புலன் வழிப்படுகின்ற அவலம் நேர்ந்த வேளைகளில், அதனை நீக்கிக்கொள்ள, திருவைந்தெழுத்தைக் கருவியாக்கிக் காத்தருள வேண்டும் என்ற மெய்யுணர்வில் நிலைத்திருந்தார் என்பதனை,

 ‘ஐந்தெழுத்தின் புனை பிடித்துக் கிடக்கின்றேனை’ (நீத்தல் விண்ணப்பம்: 12)

என்ற அருளனுபவப் பெருவாக்கினால் உணரலாம்.

ஐந்தெழுத்தை விதிப்படி ஓதினால், உயிருக்குப் பேரின்பப் பயன் விளையும். அந்தந்த உயிரின் பக்குவத்திற்கு ஏற்ப ஓதப்பெறுகின்ற திருவைந்தெழுத்தானது, தூலம்-நமசிவாய, சூக்குமம்-சிவாயநம, அதிசூக்குமம்-சிவயசிவ, காரணம்-சிவசிவ, மகாகாரணம்-சி என்றமைவதாகும்.  ‘பக்குவநிலைக்கேற்ப, ஞானாசிரியரின் உபதேசவழியில் முறைப்பட ஓதுதல், தோணி ஓடத் துணையாக அதன் அடித்தட்டினை முறையாக மிதித்து இயக்குகின்ற அறிவுடைய செயலாகும்’ என்பது, திருமூலரின் சூனிய சம்பாடணை விளங்குகின்ற நன்னெறியாகும்.

முடிவுரை

திருநாவுக்கரசர், ’பெரும்பொருள் கிளவியானை’ என இறைவனைப் போற்றியுள்ளார். அவ்வகையில், திருமூலரின் அருள்மொழிகள், பெருமானைக் காட்டியருள்கின்ற மறைபொருள் மந்திரங்களாகின்றன. அவற்றை நமது சிற்றறிவால் உணர்ந்து சொல்லுங்கால், உயர்வுறு மந்திரமாகப் பரிணமித்துப் பெரும்பயன் சேர்க்கவல்லன. அப்பேருண்மையின் வழியே, திருமந்திரத்தின்பால் சுவை கூட்டுகின்ற இலக்கிய நோக்கில், சூனிய சம்பாடணையாகிய பகுதி அமைந்துள்ளது.  விடுகதைப் புதிர்போல அமைந்துள்ள இதன் பாடல்கள், எளியவர்களுக்கும், இறைபொருளை உணர்த்த விழைந்த திருமூலரின் அருளுள்ளத்துக்குச் சான்றாகின்றன.

துணைநூல்கள்:

  1. திருமூலர் அருளிய திருமந்திரம், (7,8,9-ஆம் தந்திரங்கள்): பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21, பதிப்பு ஆண்டு: அக்டோபர்- 2016.
  2. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
  3. தேவாரத் திருப்பதிகங்கள்., ஞானசம்பந்தன்.அ.ச., கங்கை புத்தக நிலையம், சென்னை:17, ஐந்தாம் பதிப்பு: ஜனவரி 2005.
  4. சித்தாந்த அட்டகம், வைத்தியநாதன்.கு., (உரையாசிரியர்), திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிமையம், திருவிடைமருதூர். (ப.ஆ.இ).

========================================================== 

ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

கட்டுரையாளர், திருமந்திரத்தில் விளக்கப்பட்டுள்ள சைவ சித்தாந்தக் கூறுகளை எளிய நடையில் கற்போர் உய்த்துணருமாறு விளக்கியுள்ள செயல், பாராட்டிற்கு உரியது. உயிர் இறைவனை அடைதல் என்றால் என்ன?, மனிதராகப் பிறப்பெடுத்த உயிர்கள் புரியும் வினைகளின் அடிப்படையில் மட்டும்தான் மறுமைப் பலன்கள் விளைகின்றனவா?, மனிதரல்லாத உயிர்களுக்கு வினைச் செயல்பாடுகளும் வினைப் பலன்களும் உள்ளனவா? சைவ சித்தாந்திகள் பிறவிகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்? வீடுபேறு என்றால் என்ன?  என்பது போன்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து விடை காண்பதற்கு எதிர்கால ஆய்வுகளில் அவர் முயலுதல் வேண்டும்.

 ========================================================== 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “(Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை

  1. வணக்கம். ஆய்வறிஞர்தம் கருத்துரைக்கு நன்றி. கட்டுரைச் சிந்தனைகளைப் பொருத்தமான படங்களைக் கொண்டு உயிரோட்டமுள்ளதாக வெளியிட்டமைக்கு நன்றி. கருத்துரைக்கு ஏற்ப, மேலும் புதிய கட்டுரைகளைத் தர முயல்கிறோம். நன்றி.

  2. “இறைவன், உயிருடன் பிரிப்பறியாது நிற்கின்ற நிலை, ‘அத்வைதம்’ எனப்படும். உப்புநீரில், உப்பும் நீரும் பிரிப்பின்றி ஒன்றாக விளங்குதல் இதற்குக் காட்டாகும். அவ்வகையில், இறைவன் ஒன்றாதல்-வேறாதல்-உடனாதல் என்ற நிலைகளில் விளங்குகின்றான்” – உண்மையான வரிகள். இதை உணர்ந்தால் வாழ்வு இனிக்கும். வாழ்வு மாயையில் ஏமாறாது. பிறவியும் வீணாகாது. எந்தக் காரணத்திற்கு வந்தோம் என்று அறிபவன் யோகி. பலனைச் சமர்ப்பித்தால் துறவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.