இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(267)

-செண்பக ஜெகதீசன்

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்ல
ராகுதன் மாணார்க் கரிது.
-திருக்குறள் -823 (கூடா நட்பு)

புதுக் கவிதையில்…

நல்ல பல
நூற்களைக் கற்றுத் தேர்ந்தும்,
அதனால் மனம் திருந்தி
நல்லவராகி நட்பாகும்
நல்ல குணம்
பகைவரிடம் இருப்பதில்லை…!

குறும்பாவில்...

பகைவர் பலநூல் கற்பினும்,
அதனால் மனந்திருந்தி நட்பாகும் நற்குணம்
அவரிடம் வருவதில்லை…!

மரபுக் கவிதையில்…

நல்ல நூற்கள் பலகற்றும்
நன்றாய் அவற்றின் பொருளுணர்ந்தும்,
பொல்லாப் பகைவர் மனந்திருந்திப்
போது மெனவே பகைமறந்து
நல்லோ ராகி நட்புகொளும்
நல்ல குணமது வாராதே,
கல்லா ராகவே யிருந்தாங்கே
காட்டும் பகையினைத் தொடர்வாரே…!

லிமரைக்கூ..

நந்நூற்கள் பல வகையே,
கற்றும் பகைவர் மனம் திருந்தாதே
தொடர்வர் என்றும் பகையே…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம்
நட்பு வேண்டாம்,
திருந்தாத தீயவரோட
நட்பு வேண்டாம்..

பொல்லாப் பகயாளி
கொணம் இதுதான்,
பெரிய படிப்பா நல்ல
பொத்தகம்
பலவும் படிச்சாலும்,
அதுபடியே மனந்திருந்தி
நல்லவனா பகமறந்து
நட்போட எப்பவுமே
வரமாட்டான்..

அதால
வேண்டாம் வேண்டாம்
நட்பு வேண்டாம்,
திருந்தாத தீயவரோட
நட்பு வேண்டாம்…!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க