எங்கிருந்து வருகிறது?

-சு.திரிவேணி
இந்த முறையும் நிகழ்ந்தே விட்டது
எப்படியோ ஒவ்வொரு தடவையும்
தவறிவிடுகிறது
என் மகனுக்கான முதல் பரிசு.
குழந்தை முகம் வாடிப்போகுமென்ற
கவலை முள்ளாய்க் கீறியது!
ஆதரவாய் அணைத்துக் கொள்ள வேண்டும்
பூவை வருடும் தென்றலாய்
மெல்லத் தலை கோத வேண்டும்!
நீ நன்றாகத்தான் செய்தாய் என
மனம் தேற்ற வேண்டும்!
இரண்டாம் பரிசுக் கோப்பைதான்
அழகாய் இருப்பதாக
சத்தியம் செய்ய வேண்டும்!
சூழ்ந்து வரும் மலர் முகங்களில்
என் மழலை முகம் தென்படுகிறதா?
சமாதான ஒத்திகைகளோடு
தேடிய நான் திகைத்துப் போனேன்
இயல்பாய் அவன் தேற்றிக் கொண்டிருந்தான்
மூன்றாம் பரிசுக் குழந்தையை!
குழந்தமையில் பெருந்தன்மையும்
பெரியவர்களிடையே குழந்தைத் தன்மையும்
எங்கிருந்துதான் வருகிறது?
படம் – Vector stock

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க