நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள்
75.அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண்ட போடப்பயந்து உள்ள பதுங்கி இருக்க நெனைக்கவங்களுக்கும் கோட்டை உதவியா இருக்கும்.
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்
தெளிவான தண்ணி, வெட்ட வெளி, ஒசரமான மலை, அழகான நிழல் தருத காடு இந்த நாலும் இருக்கது தான் அரண்.
குறள் 743:
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
ஒசரம், அகலம், பலம், பகையாளியால அழிக்க ஏலாத அமைப்பு இந்த நாலும் அமஞ்சிருக்கதுதான் கோட்டை னு படிச்சவுக சொல்லுவாக.
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
காவல் செய்ய வேண்டிய இடம் சிறுசாவும் கோட்டையோட சுற்று பெரிசாவும் , சண்ட போட வருத பகையாளிக்கு மலைப்பத் தருததாவும் இருக்கது அரண்.
குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்
பல நாள் முற்றுகைக்குப் பொறவும் எதிரியால கைப்பத்த முடியாம, உள்ள இருக்க மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தேவைப்படுத சாப்பாட்டு வசதியோட, பகையாளி கூட சண்ட போட ஏதுவாவும் அமச்சிருக்கதே அரண் ஆவும்.
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்
உள்ள இருக்கவங்களுக்கு தேவைப்படுத எல்லாம் இருக்கதாவும், வெளியில இருக்க பகையாளி கூட சண்ட போட பலசாலி வீரர்களைக் கொண்டதாவும் இருக்கது அரண்.
குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்
சுத்திவளச்சோ, வளைக்காமலோ, சூதுவாது செஞ்சோ என்னமும் செஞ்சும் பகையாளியால கைப்பத்த முடியாமப் போவுத பலம் கொண்டது அரண்.
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
சுத்தி வளச்சி முற்றுகையிட்டவங்களையும் உள்ள இருந்துக்கிட்டே சண்டபோட்டு வெரட்டதுக்கு ஏதுவா அமஞ்சது அரண்.
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
சண்ட தொடங்கின பொறவு உள்ள இருந்துக்கிட்டே தாக்குத அளவு தனிச் சிறப்பு கொண்டது அரண்.
குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்
எல்லா சிறப்பும் இருக்க கோட்டையில உள்ள இருக்கவங்க சண்ட போடுத தெறம இல்லாம இருந்தாங்கன்னா பிரயோசனம் இல்ல.
(அடுத்தாப்லையும் வரும்)