குறளின் கதிர்களாய்…(290)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(290)
அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்.
– திருக்குறள் –461 (தெரிந்து செயல் வகை)
புதுக் கவிதையில்…
செயலொன்றைச்
செய்யத் தெடங்குமுன்
அரசன்
அச்செயலால் எற்படும்
அழிவு ஆக்கம்
அதன்வழி வரும் ஊதியம்
ஆகியவற்றை ஆய்ந்தறிந்து,
சிறந்ததாயின்
செய்ய வேண்டும்…!
குறும்பாவில்…
செயலொன்றால் வரும் அழிவுடன்
ஆக்கம் அதனால்பெறும் ஊதியம் இவற்றை
ஆய்ந்தறிந்து செயலில் இறங்கிடு…!
மரபுக் கவிதையில்…
செயல தொன்றைத் தொடங்குமுன்னே
செய்ய வேண்டும் சிலவற்றை,
செயலதால் வந்திடும் அழிவினையும்
செயலது தன்னால் ஆவதையும்
செயலின் வழிவரும் ஊதியமும்
சேர்ந்த யிவற்றை ஆய்ந்தறிந்து
செயல்படச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தே
செயலி லிறங்கித் தொடர்வாயே…!
லிமரைக்கூ..
செயல்படத் தொடங்கிடும் முன்னே
ஆய்ந்தறி செயலால்வரும் அழிவாக்கம் ஊதியமெலாம்,
செயல்படு நன்கறிந்த பின்னே…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்..
ஒருசெயலச் செய்யத்
தொடங்குமுன்னாலயே அதால வருற
நல்லது கெட்டது ஆதாயம்
எல்லாத்தையும்
அலசி ஆராஞ்சி,
அதுல நல்லதாப் பாத்துத்
தெரிஞ்சிச்
செயல்பட ஆரம்பிக்கணும்..
அதால
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்…!