முனைவர். நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

“கேம்பஸ் இன்டர்வியூல கிடைச்ச வேலைக்கு ஏண்டா போக மாட்டேங்கற?” என விருப்பமில்லாத வேலைக்கு பெங்களூர் அனுப்பி இன்னயோட  நாலு வருஷம் ஓடிப்போச்சு என பெருமூச்சு விட்டாள் நகுலின் அம்மா கோகிலா.

“எப்ப பாத்தாலும் மகன் நெனப்புதா, நா இங்க ஒருத்தி இருக்கேனே என்னப் பத்தி கொஞ்சாமாவது ஏதாவது யோசிக்கிறயாமா? பசிக்குதுனு சொல்லி அரமணிநேரமாச்சு” என்று ஸ்னேக்ஸ் பொட்டலத்தோடு சமையற்கட்டுக்குள்ளிருந்து வந்தாள் நகுலின் தங்கை வைஷ்ணவி.

“ஏம்மா! இந்த தடவ லீவுக்கு உன்னோட சீமந்த புத்ரன் வரலயாமா? அண்ணன் வரலேன்னாலும் போர் தாம்மா!”

“ஆமா வந்தா அவன் முன்ன மாதிரி வீட்டிலயா தங்கறான் அப்ப நீ சின்ன புள்ள, அவன் கூட விளையாண்ட இப்ப நீயே காலேஜ் போயி ரெண்டு வருஷம் ஆச்சு. இனி என்ன உன் கூட விளையாட்டுனு நினைச்சுட்டான் போல. அதுதா வீட்டிலேயே தங்கறதில்லை”

“இல்லம்மா அண்ணன்கிட்ட நிறையவே சேஞ்ச் தெரியுதுமா”

“இவ  பெரிய இவ. கண்டுபிடிச்சிட்டா. போடி போ போய் வேலையை பாரு”

“பையன சொன்னா மட்டும் கோபம் பொத்துகிட்டு வந்துரும். எப்போ ஒத்துகிட்டிருக்கீங்க. அப்பா இங்கே இருக்கிற வரைக்கும் நான் சொல்றது கொஞ்சமாவது கேட்பார். இப்ப அவரு வேற ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வர்றாரு. எங்கே நான் சொல்றத கேக்குறாரு. பேசாம டிகிரி முடிச்சுட்டு நானும் அவர் கூடவே கனடாக்கேப் போறேன்”.

கோகிலா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. போன் எடுத்து நகுலை ஃப்போன்ல அழைத்தாள். நாலு தடவை முழு ரிங்கு போயும் கால் எடுக்கவில்லை. அஞ்சாவது முறை போன் எடுத்தான். எடுத்ததும் கத்தினான். “ஏம்மா இப்படி டார்ச்சர் பண்றே? நானே ஃப்ரீ ஆயிட்டு கூப்பிடுறேன். ஃபோன வைம்மா”

“என்ன இவன் இப்படி மாறிட்டா?”

“இல்லப்பா பொங்கல் லீவுக்கு வருவியான்னு கேட்கத்தான்.”

“வர்றம்மா போன வை.”

பொங்கல் விடுமுறை வந்தது. நகுலை ஆவலாய்  எதிர்பார்த்திருந்தனர். அவன் வீட்டிற்கு வந்ததும் அவர்களைப் பார்க்க விரும்பாதவனாய் வண்டி எடுத்துக்கொண்டு வெளியில் போனான். இரவு வெகு நேரமாகித் தான் வீட்டுக்கு வருகிறான். ஏதோ வித்தியாசமான மாற்றத்தை உணர்ந்தாள். அவன் வெளியில் சென்றதும் அவன் அறையை சுத்தம் செய்யப் போனாள். சந்தேகத்திற்கு ஏதாவது கிடைக்குமா என்று அவனது பேகை தேடத்தொடங்கினாள். பேகில் கன்னடத்தில் வெளிவந்த செய்தித்தாள் ஒன்றில் நண்பர்களுடன் நகுலின் போட்டோவும் இருந்தது. இவளுக்கு ஒன்றும் புரியவில்லை சுருட்டி மடித்து வைத்திருந்த பேப்பரை வேகவேகமாக நிமிர்த்தி வைத்தாள். அறைக்கு வெளியில் சென்று தனது மொபைலை எடுத்து வந்து அந்த பேப்பரை போட்டோ எடுத்தாள். அதே போல் சுருட்டி மடக்கி வைத்து விட்டாள்.

வாரம் தவறாமல் கோயிலுக்கு செல்பவள் கோகிலா. வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும்போது அந்த பேப்பரை கோயில் பூசாரிகிட்ட காமிச்சு இத என்னானு கேட்கலாம்னு நினைச்சு ஃபோனை கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போனாள். பூசாரியோட தாய்மொழி கன்னடம். அதேபோல பல ஊர்களில் வேலை செய்திருப்பதால் அவருக்கு நிறைய மொழி தெரியும்.  கோவில் நடை சாத்தும் வரை காத்திருந்தாள்.

பூசாரி  கோகிலாவை நோக்கி வந்தார்.

“ஏன்மா எதோ கேக்கனும்னு சொன்னிங்க?”

“இல்ல சாமி. எனக்கு கன்னடம் வாசிக்கத் தெரியாது. எனக்கு என்னோட ஃப்ரண்டு ஒருத்திகிட்ட இருந்து இந்த மெசேஜ் வந்துச்சு.  இதை கொஞ்சம் என்னன்னு படித்து சொன்னீங்கன்னா”

அவர் வாங்கி கடகடன்னு வாசித்தார்.

“ஒண்ணுமில்லம்மா எப்பவும் வர்ற நியூஸ் தான். ஒரு பொம்பள புள்ளைய நாலு பேரு சேர்த்துக் கெடுத்துட்டாங்களா……….. அந்த பொண்ணு உயிருக்கு போராடிட்டு இருக்காம். அந்த நாலு பேர்ல ஒருத்தனோட அப்பா பெரிய பணக்காரர். அதனால நாலு பேர் மேலயும் கேஸ் ஃப்பைல்  பண்ணாம விட்டுட்டாளாம்.”

“இதுல ஒன் தோழிக்கு தெரிஞ்ச யாராவது இருக்கிறாளோ என்னமோ. என்னத்த சொல்லறது பொம்பள பிள்ளைய கண்டிக்கிற அளவுக்கு ஆம்பள பசங்கள கண்டிச்சு வளக்க மாட்டேங்கறோம். சேல முள்ளில பட்டாலும் முள்ளு சேலல  பட்டாலும் சேலக்குதா சேதம்னு பொம்பளப்புள்ளக்கு சொல்லி வளத்தறோமே தவிர பையனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து வளத்தறோம். நாளைக்கு அவந்தா கஞ்சி ஊத்துவானு நாமும் நம்பறோம். எல்லாம் மாறிப்போச்சு சிவ சிவ. சரி பாத்து போம்மா. எனக்கும் நாழியாகுது. நா கிளம்பறேன்” என்று கிளம்பினார். அவர் வாசித்த பெயர்களில் ஒரு பெயர் நகுல். கோகிலாவிற்கு வீட்டிற்கு செல்லும் பாதை முழுக்க கரடுமுரடாக இருந்தது.

திரை விலகியது.

நரைத்த தலையுடன் வைஷ்ணவி உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்த நகுல் “எவ்வளவு நேரமா சமப்ப? நீயே தின்னு” என்று தட்டை தூக்கி எறிந்து விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.

கொஞ்ச நாளாவே இவன் போக்கு சரியில்லையே என்று கவலைப்பட்டாள். வெளியில் சென்றவன் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. அவளும் தேடினாள். போலீசில் கம்ப்ளைண்ட் செய்தாள். மாலை வேலை எல்லாம் முடித்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, டிவி செய்தியில் லலிதா என்ற பெண் பலாத்கார கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனாக நகுலின் படம் காண்பிக்கப்பட்டது.

இடிந்துபோன அம்மா நகுலின் பேக்குகள், அவனது புத்தகம் என அனைத்தையும் செக் பண்ணினாள்.

“பல நாட்களாக தவறான வழியில் சென்று கொண்டிருந்த மகன, நான் தான் கவனிக்கல. எத்தனை பொண்ணுகளோட போட்டோ. பாரு வீட்ல இவனுக்கு கீழே ஒரு பொம்பள பிள்ளைய வெச்சிருக்கிற. நாம இவ்வளவு அசால்ட்டா இருந்திருக்கிறோம். நாம வளக்கற போலத்தானே மத்தவங்களும் வளர்த்திருப்பாங்க. ஆரம்பத்திலேயே தெரிஞ்சு இருந்தா இவ்வளவு தப்பு நடக்காம தடுத்திருக்கலாமே. என்ன எல்லாம் கனவு கண்டீர்கள், உங்க பையன பத்தி. இப்போ உங்க பையன பாத்தீங்களா? நீங்க உசுரோட இருந்திருந்தா ஒருவேள இப்படியெல்லா நடந்திருக்காதோ. இதெல்லாம் பார்க்கத்தான் நான் இன்னும் உசுரோட இருக்கேனா. என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாமே” என ஒரு போட்டோவை நெஞ்சோடு சேர்த்து கதறி அழுதாள். அழுது அழுது மயங்கிய அவள் அலைபேசி சத்தம் கேட்டு விழித்தாள்.

“ஹலோ! ஹலோ!”

“நான் சவுத் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.”

“சொல்லுங்க சார்.”

“உங்க பையனை காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தீங்க.”

“ஆமா சார்.”

“உங்க அருமை புத்திரன் என்ன காரியம் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கான்னு வந்து பார்த்துட்டு போங்க.”

அடுத்தக் காட்சி காவல் நிலையம் .

அம்மா வக்கீலுடன் வந்தாள். அடிக்கடி வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போற குமாரோடு உட்கார்ந்து இருந்தான் நகுல். அம்மாவை பார்க்கவே இல்லை.

மகனைக் கண்டதும் அடி அடின்னு அடிக்க கோபம் வந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு இன்ஸ்பெக்டரிடம் வக்கீல் வைத்து பேசி குற்றம் நிரூபிக்கப்படற வரை ஜாமீன் வாங்கப்பட்டது.

“நீங்க என்னதான் உங்க மகனை பாதுகாத்தாலும் ஒரு வாரத்தில் கோர்ட்டில் தீர்ப்பு வந்துரும். அதுக்கப்புறம் உங்க பையனுக்கு ஆயுள் தண்டனைதான். தண்டனை கொடுத்து என்னத்த பண்றது நீங்க மேல் கோர்ட்டுக்கு போவீங்க. அங்கே கேஸ் முடித்து தீர்ப்பு வர்றதுக்குள்ள அவனுக்கு வயசு ஆயிடும். தாராளமா இவன் வெளியில் நடமாடுவா. கல்யாணம் பண்ணிக்குவா. குடும்பம் குட்டியோட இருப்பான். பாவம் அந்த பொண்ணு குடும்பந்தா சிக்கி சீரழியும். எல்லாம் உங்கள மாதிரி அம்மாக்கள் இருக்கிறதுனாலம்மா. பசங்க எல்லாம் மேல மேல தப்பு பண்ணிட்டு இருக்காங்க. போங்க கூட்டிட்டு போயி நல்ல சாப்பாடு போடுங்க.”

காட்சி-3

“சோபாவில் உட்கார்ந்திருந்த நகுல் “ஆமா நானும் இதற்கு உடந்தை தான் அதுக்கு, என்ன இப்போ?. ஊர்ல யாரும் செய்யாத தப்பா நான் செஞ்சுட்டேன். அவன் எல்லா சிக்கலை, நான் சிக்கிட்ட அவ்வளவுதான் இதைப்பற்றி ஏதாவது என்கிட்ட கேட்டே…….. உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணுங்கிற அவசியம் எனக்கில்லை. சும்மா தொண தொணனு பேசாத.  பசிக்குது ஏதாவது இருந்தா கொடு” என்றான் அலட்சியமாக.

ஃப்ரிட்ஜ் திறந்து ஒரு பாட்டிலை வெளியில் எடுத்தாள். சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலக்கினாள். அடிவயிற்றிலிருந்து அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு அடக்கினாள். மண்டு அமர்க்கு உடைததனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென்”  என்ற புறநானூற்றுப் பாடல் பின்னிசையாகக் கேட்டது. சாப்பாட்டை வாரிவாரி வாயில் போட்டான் நகுல். சாப்பிட்ட கை காயும் முன் வாயில் இருந்து நுரை கக்கி கீழே விழுந்து துடித்தான். காணமுடியாத தாய்மை மனதை கல்லாக்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தியது.

திரைவிழத் தொடங்கியது.

‘ஒரு பெண் நினைத்தால் இந்த தேசத்தின் தலைவிதியை மாற்றலாம். தாயாக இருக்கின்ற பெண்மை குற்றம் காணின் சக்தியாகவும் மாறுகிறது. சக்தி அவதாரம் எடுக்கும்போது தவறு செய்யும் ஆண்மைக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுகிறது. பெண்மை சக்தியாக மாறும்பொழுது தவறுகள் திருத்தப்படுவதில்லை. அழிக்கப்படுகிறது.’ பின்னணியில் ஒலித்தது.

திரை முழுவதுமாக விழுந்தது.

கையில் டிராஃபியும் முகத்தில் சிரிப்புடன் நரைத்த தலை வேசத்தில் வைஷ்ணவி அம்மாவிடம் கூறிக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு பையன் ஓடி வந்து வைஷ்ணவியை “ஏன் பாட்டி மாதிரி வேஷம் போட்டு இருக்க?” என்று கேட்டான்.

“டேய் இன்னைக்கு எங்க காலேஜ்ல டிராமா இருந்துச்சுடா. அக்கா தான் கிங்கு தெரியுமா?” என்றாள். :அம்மா இன்னைக்கு நடந்த காம்பிடேஷன்ல பெஸ்ட் டிராமா அவார்டு எங்களுக்குத்தான். பெஸ்ட் ஆக்டிரஸ் அவார்டு எனக்கும் எங்கூட நடிச்ச கீதாவுக்கும் தான் கொடுத்தாங்க.”

அம்மா திரும்பி பார்த்தாள்.

”ஆமாம்மா காலேஜில் போட்ட டிராமால வந்த கதாபாத்திர பேரும் நகுல்தா. அவந்தா எம்பையன். அவன் தப்பு செஞ்சுட்டுதால கோர்ட்ல கேஸ் போட்டா லேட்டா தண்டனை கிடைக்கும்னு நானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்றதுதா கதை. என்ன அண்ணன் பெயர் வெச்சிட்டு விஷம் வைக்கறோமேனு கவலையா இருந்துச்சு. சரி டிராமாதானேனு  நடிச்சிட்டேன்.”

“சாப்பிட்டு கீழே விழுந்து துடிக்கிற மாதிரி கீதா நடிச்சா பார்க்கணும் டேபிள்ல இருக்கிறதெல்லாம் விழுந்துருச்சு கடைசியில் பார்த்தால் எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டறாங்க.”

”பிரைஸ் கொடுக்க வந்த ஜட்ஜ்  இன்றைய சமுதாய பிரச்சினையை அழகாய் சொல்லிட்டு சரியான முடிவையும் கொடுத்திருக்கீங்கனு ஒட்டுமொத்த நாடகக் குழுவையும் பாராட்டினாரு.”

“எப்படி என் பர்ஃபோமென்ஸ்?” என்று கூறிக்கொண்டு, அப்பாவிடம் பரிசு வாங்கனத சொல்ல போனை காதில் வெச்சிட்டே  வெளயில் போனாள் வைஷ்ணவி.

கையில் செல்போனில் உள்ள பேப்பர் கட்டிங்கையும் சாப்பாட்டையும் மாறி மாறி பார்த்தாள் கோகிலா.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.