(Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா?

நடராஜன் ஸ்ரீதர்
ஆற்றல் அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
natarajanarticles@gmail.com

சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகமாக இருந்த புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டு கிரகம் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் ஒன்பதாவது கிரகத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறான தேடலில் பூமியில் இருக்கும் பல்வேறு நிலை தொலைநோக்கிகள் மற்றும் பூமிக்கு வெளியே சுற்றிவரும் வானியல் தொலைநோக்கிகள் ஆகியவை தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளன. எனினும் ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமா என்று சில ஆராய்ச்சிக் குறிப்புகள் கேள்வியெழுப்புகின்றன. அதுபற்றிய தொகுப்பினை இக்கட்டுரை அலசுகிறது.

மனிதர்கள் தமது விண்வெளி அறிவைப் புதுப்பிக்கையில் தொலைநோக்கிகளும், தொலையுணர்வுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறான தொலைநோக்கிகளின் வாயிலாக சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் கிடைத்தன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள விண்கற்களின் வளையம், சனி கிரகத்தின் அழகிய வளையங்கள், சனி கிரகத்திற்கு அப்பாலும் உள்ள கோள்கள் ஆகியவை தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டன.  ஒன்பதாவது கிரகமாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த புளூட்டோ கிரகம் தொலைநோக்கிகள் வாயிலாகப் பார்க்கப்படும் போது கிரகம் போன்ற அமைப்பை வெளிப்படுத்தியது. எனினும் பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டபோது புளூட்டோ ஒரு கிரகம் போன்ற அமைப்பாக இல்லாமல் குறுங்கோள் போன்ற இயக்கப் பாதையை கொண்டிருக்கும் என கண்டறியப்பட்டது. ஏனெனில் இதன் சுற்றுவட்டப் பாதை வழக்கமான கிரகங்களைப் போலல்லாமல், இன்னொரு கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்கு ஊடாகவும் சென்று வருகிறது. இது நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதைக்கு ஊடாகப் பறக்கிறது. இது கிரகம் என்ற அமைப்புக்கு ஏற்றதாக இல்லை. எனவே ப்ளூட்டோ என்பது ஒன்பதாவது கிரகமாக இல்லாமல் ஒரு குறுங்கோளாக அல்லது பறக்கக்கூடிய மிகப்பெரிய விண்கல் போன்றதாக இருக்குமென முடிவு செய்யப்பட்டது.

ஆயினும் ப்ளூட்டோ குறுங்கோள் என   நிராகரிக்கப்படுவதற்கு முன்னரே அதை ஆய்வு செய்ய அனுப்பிய நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் புளூட்டோவை அடைந்து அதிலிருந்து தொடர்ச்சியாக படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. புளூட்டோவின் மேற்பரப்பு, அதன் காலநிலை மற்றும் அதன் இயக்கங்கள் ஆகியவற்றை நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ப்ளூட்டோவைத் தாண்டி ஒன்பதாவது கிரகம் ஒன்றிற்கான தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது. என்னும் கிரகம் 10 வது கிரகம் ஒன்று இருக்கலாம் என கருதப்பட்டாலும் அதற்கான தெளிவான தகவல்கள் நம்மிடம் இல்லை.  ஒன்பதாவது கிரகத்தின் தேடல் தொடர்ந்து கொண்டே  இருக்கின்ற அதே வேளையில், அதற்கான சில மாறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அந்த ஒன்பதாவது கிரகம் ஒரு கருந்துளையாக இருக்கக்கூடும் என்று சில கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன [1][2][3]. அந்த ஒன்பதாவது கிரகம் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 300 லிருந்து 500 வானியல் அலகு தொலைவில்  சுற்றி வரலாம் என்று சில ஆய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன. எனினும் அந்த கருந்துளையின் அளவானது வெகு சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணமாக இவ்வளவு நிறை கொண்ட கருந்துளையானது ஒரு ஆப்பிளில் கொள்ளளவைப் போலவே இருக்கக்கூடும். மேலும் அது ஒரு சாதாரண ஒரு வெள்ளைத்தாளில் ஆப்பிள் படம் வரைந்தது  போலவே பரப்பளவில் இருக்கக்கூடும். ஸ்ட்ரிங் தியரி வித்தகரான எட்வர்டு விட்டன் இந்த கருந்துளையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒருவேளை ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமாயின், அதை நாம் பூமியிலிருந்தோ அல்லது பூமிக்கு மேலே நிலை நிறுத்தப்பட்டுள்ள வானியல் தொலைநோக்கிகள் வாயிலாகவோ கண்டறிவது என்பது மிக மிகக் கடினமான விஷயம். மேலும் கருந்துளைகள் எந்த ஒளியையும் வெளியிடாத சூழலில் அவற்றைக் கண்டறிவது சிரமம். மேலும் இந்த கருந்துளைக்கு அருகில் ஏற்படும் ஒளி விளைவுகளை கண்டறிய சற்றேறக்குறைய அதற்கு அருகில் சென்றால் மட்டுமே முடியும் என்று தெரிவிக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையில் அந்த கருந்துளையினை ஆய்வு செய்வது பற்றி எழுதப்பட்டுள்ளது [4]. அந்த கட்டுரையானது ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் ஒன்பதாவது கருந்துளையை ஆராய முடியும் என்ற விசித்திரமான ஒரு ஆய்வினை முன்வைக்கிறது. பூமியிலிருந்து சிறு சிறு செயற்கைக்கோள்கள் மூலம் ஒன்பதாவது கிரகம் இருக்கக்கூடிய தொலைவினை அடைந்து, அங்கு உள்ள சூழலை நுணுக்கமாக ஆய்வு செய்ய முடியும் என்று அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. தற்போது நானோ செயற்கைக்கோள்கள் பெருமளவு பயன்பாட்டிற்கு வருகிறது. இத்தகைய செயற்கைக்கோள்கள் மூலம் கருந்துளை இருக்கும் இடத்தை அணுகி அக்கருந்துளையில் இருந்து வெளிப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சை ஆய்வு செய்வதே இந்த சோதனையின் அடிப்படை. இவ்வாறு பெறப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் கருந்துளையின் இயக்கம் மற்றும் அதன் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இந்த ஆய்வு செயலுக்கு வரும்போது மட்டுமே தெரிய வரும். ஒன்பதாவது கிரகம் எவ்வாறு இருக்கும் என்ற தேடலில்,  ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்கக்கூடும் என்ற ஒரு முடிவு பெறப்பட்டு அதற்கான ஆய்வுகள் துவங்கியுள்ளது. இந்த தேடல் எவ்வாறு முடிவு பெறும் என்பதைத் தொழில்நுட்பமும் காலமும் தான் முடிவு செய்யும்.

உசாத்துணைகள்

[1] https://astronomy.com/news/2019/10/planet-nine-may-be-a-black-hole-the-size-of-a-baseball
[2] https://phys.org/news/2019-09-planet-primodial-black-hole.html
[3] https://www.sciencemag.org/news/2019/09/planet-nine-may-actually-be-black-hole
[4] Arbey, A., & Auffinger, J. (2020). Detecting Planet 9 via Hawking radiation. arXiv preprint arXiv:2006.02944.

Image credit : NASA


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):

ஒன்பதாவது கோளாய் ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோ 2006 ஆகஸ்டில் குள்ளக் கோள் வகுப்பில் தள்ளப்பட்டு, ஒன்பதாம் கோள் தகுதி இழந்து ஒதுக்கப்பட்டது.  அதன் பிறகு கால்டெக் விஞ்ஞானிகள் இருவர், கான்ஸ்டன்டின்  படிஜின் & மைக்கேல் பிரௌன்  பூமிபோல் பத்து மடங்கு பெரிய கோள்-9 புளுடோவுக்கு அப்பால் ஒளிந்து திரிவதை 2016 ஜனவரியில் மெய்ப்படுத்தினர்.  பரபரப்பான இந்தச் சூரிய மண்டலப் புதிய கோள் எண்ணிக்கை, பலரை வியப்புக்குள்ளாக்கி வரும்போது, 2017 ஜூனில் பூமி வடிவில் பத்தாவது கோளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று அரிசோனா பல்கலைக்கழக வானியல் நிபுணர் இருவர், காத்ரின் வோக் & ரேணு மல்கோத்ரா [Kathryn Volk & Renu Malhotra] அறிவிப்பது மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.  இத்தோடு சூரிய குடும்பக் கோள்களின் எண்ணிக்கை முடிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்யக் கூடாது என்றும் அரிசோனா நிபுணர் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

இந்த விஞ்ஞான யூகங்கள் பரவிவரும் சமயத்தில் ஆய்வாளர் நடராஜன் ஶ்ரீதர் ஒன்பதாவது கோள் ஓர் ஆப்பிள் அளவுக் கருந்துளையாக இருக்குமா என்று புதியதோர் கோட்பாட்டை நம்முன் வைக்கிறார். அந்தச் சிற்றளவு ஆப்பிள் கருந்துளை, நமது சூரியனைப் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ், நெப்டியூன் போல், வெகு தூரத்தில் சுற்றி வருவதாகவும் கூறுகிறார். இப்புதிய கோட்பாட்டை நம்பாமல் நம்பி, சொல்லியும் உறுதியாக ஏற்காமல் தயக்கத்துடன் எழுதி இருப்பவர், அனுபவ வானியல் விஞ்ஞானி கான்ஸ்டன்டின்  படிஜின். ஒரு கருந்துளை நமது சூரியனைச் சுற்றி வருகிறது என்பது உடனே நம்ப இயலாத ஒரு புதிய கோட்பாடு.

அந்தக் கருந்துளை இருப்பைத் தற்போதுள்ள கருவிகள், தொடுவான், கெப்ளர், ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிப்பது எளிதில்லை. அதன் இடத்தை முன்னறிந்து, யுரேனஸ், நெப்டியூன் போன்ற புறச்சூரியக் கோள்களுக்கு அப்பால் விண்வெளிக் கப்பலை ஏவி உறுதிப்படுத்துவதும் எளிதில்லை. சூரியனின் ஒன்பதாம் கோள் ஓர் ஆப்பிள் வடிவுக் கருந்துளையாய் இருக்கலாம் என்பதை உறுதி செய்ய நெடுங்காலம் எடுக்கலாம்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.