4 திரைப்படங்களின் குறு விமர்சனம்

அண்ணாகண்ணன்

manmadhan-ambu

‘மன் மதன் அம்பு’ படத்தினை 24.12.2010 அன்று பார்த்தேன். கமல், திரிஷா, மாதவன் என அனுபவம் வாய்ந்த பெரும் நட்சத்திரங்கள், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம், நல்ல ஒளிப்பதிவு…. எனப் பல பலங்கள்; பணத்திற்குப் பஞ்சமில்லாதபடி உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு; இவ்வளவு இருந்தும் கதையில் ஏன் இப்படி சொதப்பினார்கள் என்பது புரியாத புதிர். அதிலும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள், மகா சொதப்பல். துப்பறியும் மன்னார், தொழிலதிபர் மதன கோபால், நடிகை அம்புஜாஸ்ரீ ஆகிய மூவரின் பெயர்ச் சுருக்கமே ‘மன் மதன் அம்பு’.

தான் காதலிக்கும் திரிஷாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமா எனத் துப்பறிய,  மாதவன், கமலை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும் திரிஷாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. சந்தேகத்தினால் மாதவன், காதலியை இழக்கிறார். இந்தக் கதையை நிறைய குழப்பி, தேவையற்ற பாத்திரங்களை நுழைத்து, நாடகத்தனமாக்கி வீணடித்துள்ளார்கள். நகைச்சுவை உணர்வினை எதிர்பார்த்து, நகைப்பிற்கு இடமாகிவிட்டார்கள்! கமல் – உஷா உதுப் ஆகியோரின் இயல்பான நடிப்பு, ‘நீல வானம்’ என்ற இனிய பாடல் போன்ற சில நல்லவற்றையும் பின்தள்ளிவிட்டது, கதையின் பலவீனம். அது எப்படி அனுபவசாலிகளுக்கும் அடி சறுக்குகிறது?

==========================

ராம்கோபால் வர்மாவின் ‘ரத்த சரித்திரம்’ படத்தினை 2010 திசம்பர் 14 அன்று பார்த்தேன். காதல் பாடல், கவர்ச்சி நடனம், நகைச்சுவைச் சரடு போன்ற வழக்கமான பகுதிகளை அறவே தவிர்த்துள்ளனர். ஆனால், சண்டைக் காட்சி்கள் நீக்கமற நிறைந்துள்ளன. முழுக்க முழுக்கப் பழி வாங்குதலும் பதவி வேட்டையும் அரிவாளும் துப்பாக்கியுமாகப் படம் முழுக்க ரத்தச் சகதி.

தனிப்பட்ட பகை, வன்முறை வெறியாட்டமாக வளர்கிறது. அது விதைக்கும் அச்சத்தினால் மாயச் செல்வாக்கு உருவாகிறது. அதன் பயனாக அரசியல் அதிகாரமும் கிட்டுகிறது. அதைத் தக்கவைக்க, அரசியலில் எதிர்ப்பாளர்களை அடியோடு தீர்த்துக் கட்ட முயல்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் (சூர்யா), காரணகர்த்தாவைப் பழிவாங்கப் புறப்படுகிறான். அவன் வெல்கிறானா என்பதே கதை. இது, ஆந்திராவில் நிகழ்ந்த உண்மைக் கதையாம். மொழிமாற்றப் படம் எனத் தெளிவாகத் தெரிவது, ஒரு குறைபாடு. ஆயினும் எடுத்துக்கொண்ட கதையை இயல்பாக நகர்த்தியுள்ளமை, பாராட்டத்தக்கது.

==========================

10.12.2010 அன்று ‘சித்து +2’ படம் பார்த்தேன். கே.பாக்யராஜ், திரைக் கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார். அவர் மகன் சாந்தனுவும் புதுமுகம் சாந்தினியும் நாயக – நாயகியாக நடி்த்துள்ளனர். +2 தேர்வில் தோற்று, தற்கொலை செய்துகொள்ள எண்ணி வந்த நாயகன்; +2 தேர்வில் தோற்றதாக எண்ணி, ஊரை விட்டு ஓடி வந்த நாயகி. இவர்கள் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதை நகைச்சுவையாகவும் சினிமாத்தனமாகவும் காட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய கதை. முன்கணிக்கக் கூடிய திரைக்கதை, நயமில்லாத வசனங்கள், வலுவில்லாத பாத்திரங்கள் ஆகியவற்றால் படம் நீர்த்துவிட்டது. இது, கேளிக்கையே நோக்கமாகக் கொண்ட செயற்கைச் சேர்க்கை.

==========================

myna-movie‘மைனா’ படத்தினை 2010 நவம்பர் 25 அன்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடன் இணைந்து பார்த்தேன். நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஓரளவுக்கு இயல்பான காட்சி அமைப்புகள், பொருத்தமான நடிகர்கள், தகுந்த ஒளிப்பதிவு…. எனப் படம் என்னைக் கவர்ந்தது. சிறு தகராறில் நாயகன், சிறைக்கு வருகிறான். தன் காதலிக்கு அவசரத் திருமணம் நடப்பதை அறிகிறான். தீபாவளிக்கு முந்தைய நாள் சிறையிலிருந்து தப்பிக்கிறான். அந்தச் சிறையின் பொறுப்பில் இருக்கும் காவல் துறை அதிகாரியும் அவர் உதவியாளரும் அவனைப் பிடிக்கச் செல்கிறார்கள். இதனால் அவர்களால் தீபாவளியைக் குடும்பத்தாரோடு கொண்டாட முடியவில்லை. சிறை அதிகாரிக்கு அது, தலை தீபாவளி. அவரால் வர முடியாததால் அவரின் புது மனைவி, கடுப்பு அடைகிறார்.

கைதியைப் பிடித்தார்களா? கைதியின் காதல் கை கூடியதா? சிறை அதிகாரியின் மனைவி, அடுத்துச் செய்தது என்ன? ஆகியவற்றை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. எனினும் இத்தகைய கதையை எடுத்து, வெற்றிகரமாகப் படமாக்கியதன் மூலம், இயல்பான கதைகளின் மேல் தமிழ்த் திரையுலகின் கவனத்தை மீண்டும் திருப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

========================================

படங்களுக்கு நன்றி – lankafocus.com, behindwoods.com

அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

Share

About the Author

அண்ணாகண்ணன்

has written 86 stories on this site.

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர்; 'தமிழில் மின் ஆளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

Write a Comment [மறுமொழி இடவும்]


two × = 10


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.