கே.பாலமுருகனின் புதினத்திற்குக் கரிகாற்சோழன் விருது

2

K.Balamuruganமலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” என்ற புதினம், 2009ஆம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது. இதே புதினம், 2007ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது, குறிப்பிடத்தக்கது.

இதற்கான பரிசளிப்பு விழா, 01.01.2011 அன்று மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் டெசன் சோன் சாலையிலுள்ள சிவீல் சர்விஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி இருக்கை உருவாக்கப்பெற்றது. அந்த இருக்கையின் வழியாக, மலேசிய – சிங்கப்பூர் இலக்கியங்கள் மீது ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு உருவானது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மலேசிய – சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்காக ஒரு பகுதி உருவாக்கப்பெற்று அதற்குத் தமிழவேள் ஆதி.குமணன் பெயரினைச் சூட்டினார்கள். இரண்டாம் கட்டமாக,  மலேசிய – சிங்கப்பூர் தமிழ் இலக்கியவாதிகளை அங்கீகரித்து, கவுரவிக்கும் நோக்கோடு இலக்கிய விருதளிக்கும் திட்டம் தொடங்கினர். அதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டுக்கான விருதினைப் பாலமுருகன் பெறுகிறார்.

நாவலாசிரியர் கே.பாலமுருகன் (28), மலேசியாவின் கடாரத்தைச் சேர்ந்தவர். ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப் பள்ளியில் 4 ஆண்டுக் காலமாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாநில அளவிலான தமிழ் மொழி முதன்மைப் பயிற்றுனராகவும் புதிய கலைத் திட்டப் பிரிவின் சார்பாகக் கல்வி அமைச்சின் மாநில முதன்மைப் பயிற்றுனராகவும் சேவையாற்றி வருகிறார்.

2006 முதல் மக்கள் ஓசை பத்திரிகையில் “ஒரு வீடும் சில மனிதர்களும்” எனும் கட்டுரைத் தொடர் மூலம் அறிமுகமானவர். 2004 தொடக்கம் கல்லூரியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளின் வழி வெற்றி பெற்று அடையாளம் பெற்றார்.

K.Balamurugan novelகே.பாலமுருகனின் எழுத்துப் பணிகள்:

1. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு – “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்”

2. 2008 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சங்கமும் நில நிதி கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் மூன்றாவது பரிசு: ‘உறவுகள் நகரும் காலம்’

3. மலாயாப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டிகளில்:

2007: முதல் பரிசு: போத்தக்கார அண்ணன்
2008: இரண்டாவது பரிசு: கருப்பாயி மகனின் பெட்டி
2009: ஆறுதல் பரிசு: சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கில கனவுகள்

4. மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டிகளில்:

2007: சிறுகதை முதல் பரிசு: ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’

2008: சிறுகதை: இரண்டாவது பரிசு: ‘பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள்
நான்காவது பரிசு: ‘உறங்கிக் கொண்டிருப்பவர்கள்’
கவிதை முதல் பரிசும் சி.கமலநாதன் விருதும் கிடைத்தது.
2009: சிறுகதை: இரண்டாவது பரிசு: இருளில் தொலைந்தவர்கள்
கவிதை முதல் பரிசும் எம்.ஏ.இளஞ்செல்வன் விருதும் கிடைத்தது.

5. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு சிறுகதைகள் 2008ஆம் ஆண்டின் மாதந்திர கதைத் தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்வு செய்யப்பட்டன.
அலமாரி , அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது.

6. இந்திய தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில்: நான்காவது பரிசு: “11மணி பேருந்து”

7. சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய அறிவியல் புனை கதை போட்டியில் ஆசிய பசிபிக் பிரிவுக்கான சிறந்த கதை: “மனித நகர்வும் இரண்டாவது பிளவும்” தேர்வு பெற்றது.

8. மலேசியாவின் கோலா மூடா / யான் மாவட்டக் கல்வி இலாகா – “சிறந்த ஆக்கச் சிந்தனைமிக்க எழுத்துக்கான” அங்கீகாரத்தை, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் 2009இல் அளித்தது.

9. கவிதைத் தொகுப்பு: சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. தலைப்பு: கடவுள் அலையும் நகரம்.

10. தொடர்ந்து தனது சொந்த வலைப்பக்கத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். (http://bala-balamurugan.blogspot.com)

11. அநங்கம் என்கிற சிற்றிதழை மலேசியாவில் நடத்தி வருகிறார்.

கரிகாற்சோழன் விருது பெற்ற இந்த நாவலைப் பாலமுருகன், 2007ஆம் ஆண்டு எழுதினார். இது, ஒரு தோட்டப் புறத்தின் உண்மை கதையை மையமாகக் கொண்டு அதன் வரலாற்றையும் புனைவையும் இணைத்து அந்தக் காலக்கட்ட மனிதர்களின் வாழ்வைப் பற்றிய கதையாக அமைந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் கதை சொல்லலில் கதை நகர்ந்து ஒரு பெரும் வெளிக்குள் வந்து நிற்கிறது. இவ்வளவுதான் வாழ்க்கை என நினைக்கும்போது அது மீண்டும் ஒரு திருப்பத்தைக் கொடுக்கிறது.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள இந்த நாவல், 150 பக்கங்கள் கொண்டது.

புத்தகம் கிடைக்குமிடம்:
Malaysian Tamil Writers Association.
No 17, Jalan murai dua,
off Jalan ipoh,
52100 Kuala lumpur,
Malaysia

விருது பெறும் கே.பாலமுருகனுக்கு வாழ்த்துகள். தமிழின் புலம் பெயர் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைக்கும் அதற்கு ஒத்துழைக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கும் எமது பாராட்டுகள்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கே.பாலமுருகனின் புதினத்திற்குக் கரிகாற்சோழன் விருது

  1. வணக்கம் பாலமுருகன்
    நல்லாயிருக்கிறீர்களா? பேசிக்கொண்டிருந்தோம். இப்பொழுது மௌனம் காத்துவருகிறீர்கள். பரவாயில்லை மனுசன் எழுத்துக்கு அப்பாற்பட்டவன்தானே! உங்கள் படைப்புக்கள் குறுத்தும் அதற்கு கிடைத்திருக்கும் வெகுமதிகள் குறித்தும் படித்தபோது நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!
    மிக்க அன்புடன்
    மு.ஹரிகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *