தேன்தமிழின் திருமக்காள்…

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Maravanpulavu_Sachithananthan

உப்பரிகை வாழ்வுக்கே உயர்ந்து விட்டோம்
செப்பரிய செழுமைகள் சேர்த்து விட்டோம்.
தப்பறியாத் தமிழ்மொழியைத் தாயின் பாலை
அப்படியே மறந்துவிட்டோம் ஏணி தன்னை!

நாட்டில் மொழிகாக்க நல்லுயிரை ஈகின்றார்
வீட்டில் தமிழில்லை விறகிட்டு எரித்தோமே
ஊட்டினார் உயர்தமிழை உயிர்க்குள்ளே- உதைத்து
ஓட்டினோம் நம்தாயை நம்நெஞ்சு கல்லாமோ?

இல்லத்துள் வருகவென இனிது அழைக்கத் தமிழ் இனிக்கும்
வெல்லத்தைத் தேனுடன் பிசைந்ததுவே தமிழன்றோ?
பள்ளத்துள் விழலாமோ? பாழ்மாயை மோகத்தில்
வெள்ளத்தில் நாவற்றி அலைவோராய் ஆனோமே!

வளர்விக்கும் உயர்விக்கும் வாழ்விக்கும் எழுச்சிதரும்
தளர்ச்சிக்கே இடமில்லாத் தமிழொன்றே தமிழர்க்கு
அழற்சிக்கு இடம்கொடீர் ஆங்கிலத்தின் பொய்மாயைச்
சுழற்சிக்குள் வீழாதீர் வீழ்ந்துவரும் கோழைகளே!

எணினியில் தமிழ்வந்து ஏற்றமிகு பணிகளையே
பிணியின்றிச் செய்துதந்து பெருவாழ்வு தருநாளில்
கணினியுள் தமிழ்புகுந்து களிநடனம் புரிந்தாலும்
பிணிபிடித்த தமிழருக்கு பிறமொழியில் காதலேனோ?

எழுத்துருக்கள் பலவாகி அலைக்கழித்த நாள்கடந்து
அழுத்தமாய் அமிழ்தமாய் ஒருங்குறி வந்தபின்னும்
பழுத்துவந்த கனியமுதாய் தமிழ்99 விசைப்பலகை
இழுத்தீர்த்து இனித்தாலும் இசையஏன் தயக்கமம்மா?

ஒலிக்கும் எழுத்துக்கும் ஒருங்கிணையா ஆங்கிலமாய்
வலித்து வாயிதழ்கள் வருத்துமொழி தமிழல்ல
ஒலிஒன்றுக் கொருவடிவம் ஒப்பற்ற தமிழுக்கு
வலிக்காது வாய்மணக்கும் வெல்லுதமிழ்ச் சொல்லன்றோ!

புட்டிப்பால் குழந்தைக்குப் போசாக்கு என்றவரின்று
வெட்டியெறி புட்டிப்பால் வேணுமே தாய்ப்பாலென்று
கொட்டுமுரசில் கூவுகிறார் அதுபோல அறிவாற்றல்
சொட்டுமொழி தமிழென்று அவர்கூவும் நாள்வருமே!

நெய்துஎழுதும் கவிதைகளும் நினைத்தெழுதும் உணர்வுகளும்
பெய்துஎழுதும் தமிழானால் பெறுவார்க்கும் பயனுண்டாம்.
தொய்துஅழுது துவள்கையிலே தோள்கொடுத்து நமைக்காக்கும்
தெய்வம்அதாய் வருமன்றோ தேன்தமிழின் திருமக்காள்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேன்தமிழின் திருமக்காள்…

 1. கவிதை மிக அழகு.

  கூடிய விரைவில் worldtamilnews.com இணைய தள “கவிதை
  கேளுங்கள்” நிகழ்ச்சியியில் இடம்பெற வைக்க முயல்கிறேன்.

  உங்களுக்கு ஒரு கவிதையின் ஒலிப்பதிவை அனுப்பி
  இருந்தேனே..! — கேட்டீர்களா…? கருத்தறிய ஆவல்.

  சாத்தான்குளம் அப்துல் ஜப்பர்

 2. முதல் 5 பாடல்கள் உணர்வாக எழுதி 6,7,8 தடம் புரண்டு 8இல் போசாக்கு என்று தமிழை மறந்தும்
  வேணுமே என்று கொச்சையாகவும் எழுதியது ஏனோ?அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Leave a Reply

Your email address will not be published.