இயேசு நாதரும் கிறிஸ்துமஸ் மரமும்

0

விசாலம்

Christmas_Treeஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான். அவனுக்குத் தந்தை இல்லை. அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். தினப்படி சாப்பாடுக்கே வழி இல்லாமல் இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஜானுக்கு மிகவும் பசி எடுத்தது. தன் தாயிடம் காலைச் சிற்றுண்டி கேட்டான். அவன் அம்மாவுக்கோ, வீட்டில் ஒன்றுமில்லாததால் கொடுக்க முடியவில்லை.

“அம்மா, எனக்கு கேக்கும் ஸ்வீட் பன்னும் தாருங்கள்”

“ஜான், நீ முதலில் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய். அப்போது வேண்டியதைக் கேள்”

“அம்மா, அப்படி நான் கேட்டால் ஜீஸஸ் கொடுப்பாரா?”

“நிச்சயம் கொடுப்பார். மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்தால்… சரியா?”

“இதோ இப்பொழுதே போகிறேன். நான் போய் கேக் கேட்கிறேன்”

ஜானும் நேராக சர்ச்சுக்குப் போனான். முட்டி இட்டு உட்கார்ந்தான். பின் கண்மூடி பிரரர்த்தனை செய்தான். பின் ஜீஸஸிடம் பேசினான். “ஏசு பிதாவே எனக்குப் பசிக்கிறது. கேக்கும் ஸ்வீட் பன்னும் வேண்டும். தருவீர்களா? என் அம்மா உங்களிடம் கேட்கச்  சொன்னாள்” என்று மிகவும் சத்தமாகக் கேட்டான்.

அவன் அருகில் ஒரு பணக்காரப் பெண்மணி அமர்ந்திருந்தாள். அவளும் இந்தப் பையனின் வேண்டுகோளைக் கேட்டாள். மனம் மிகவும் வருத்தமானது. அன்று அவள் மகனுக்குப் பிறந்த நாள். அதற்கென்று ஸ்பெஷல் கேக்கும் வாங்கி வைத்திருந்தாள். இந்தப் பையன் ஜான் கேட்டதைக் கேட்டு உடனே கடைக்கு ஓடிச் சென்றாள். ஜான் கேட்டதை விட இன்னும் கூடுதலாகவே
வாங்கிக்கொண்டாள். பின் ஜான் வீடு தேடி வந்து, அதை அவன் தாயிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

ஜான் வருத்தமாக வீடு திரும்பினான்.

“என்ன இத்தனை பிரார்த்தனை செய்தும் ஏசுநாதர் நமக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே” என்று ஏங்கினான்.

வீடு வந்த அவனுக்கு ஒரே ஆச்சரியம். அவன் கேட்டதுடன் இன்னும் பல பொருட்கள் கூடுதலாகவே இருந்தன. “அம்மா, ஏசுநாதர் கேட்டதைக் கொடுத்துவிட்டார்” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டான். முழு நம்பிக்கையுடனும் சுய முயற்சியுடனும்  இறைவனை அணுகினால், நம் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும்.

கிறிஸ்துமஸ் என்றாலே கிருஸ்துமஸ் மரம், நம் கண் முன் வரும். அதில் பச்சை பசேலென்று செழிப்பாகச் செர்ரி பழங்கள் தொங்க, பல சாக்கலேட்டுகளும் பல பரிசுப் பொருட்களும் தொங்க, சின்னச் சின்ன வண்ண விளக்குகள் மின்ன, அந்த மரமே   ஓர் அழகைக் கொடுக்கும்.

வட அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் அடையாளம், இந்த மரம்தான்.   வாழ்க்கை முழுதும் பசமையாக இருக்க வேண்டும் என்கிறது இந்த மரம். தவிர அதில் இருக்கும் இனிப்புகளைப் போல் தித்திக்க வேண்டும் என்றும் பொருள் தருகிறது. ஊசி இலை மரம் {fir tree}, பைன்  மரத்திலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு வந்து அவர்கள் கலை நுட்பத்திற்கேற்ப அழகுபடுத்துவார்கள்.

இந்தக் கிறிஸ்துமஸ் மரம் வந்தக் கதை என்ன?

ஒரு சமயம் புனிதர் போனிஃபேஸ் {saint Boniface} பிராயணம் செய்து வரும்போது, ஒரு பாகன் என்று குழுவினர் கூட்டமாகச் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தனர். நடுவில் நெருப்பு வளர்த்திருந்தனர். ஒக் {oak} என்ற  மரத்தைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
ஒரு சிறுவனை அவர்கள் கடவுளுக்குப் பலி கொடுக்க அழைத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பெரியவருக்குக் கோபம் வந்து, அந்த பெரிய மரத்தைத் தன் கையால் வேகமாக ஒரு அடி கொடுக்க, அது அப்படியே சாய்ந்தது. அவர்கள் இதை நிறுத்திவிட்டு, அந்த ஓக் மரம் அவர்களது தெய்வம் என்றனர். அப்போது அந்த இடத்திலிருந்து ஒரு ஊசி இலை மரம்   கிளம்பியதாம். அந்தப் பையனும் காப்பாற்றப்பட்டான். இதன் ஞாபகமாக ஜெர்மனியில் எல்லோரும் புதிதாகச் சின்னக் கன்றை நடுகிறார்கள்.

இன்னுமொரு கதை… ஒரு மரம் வெட்டி ஒரு நாள் தன் பணியைச் செய்யப் போய்க்கொண்டிருந்தான். அன்று கிறிஸ்துமஸ் திருநாளின் முதல் நாள். அங்கு பசியால் தவிக்கும் ஒரு ஏழைப் பையனைப் பார்த்தான். அவனுக்குத் தன்னால் முடிந்த உணவும் உடையும் தங்க இடமும் கொடுத்தான். மறு நாள் அவன் வீட்டு வாசலில் அழகான மரம் பசுமையாக, ஒளியுடன் பிரகாசித்தது  அவன் புரிந்துகொண்டான். ஏழைப் பையனாக வந்தது ஏசுவே… அவரே இந்த மரவெட்டியின் அன்பு மனத்திற்குப் பரிசாக இந்த
ஜொலிக்கும் மரத்தைத் தந்திருக்கிறார். இதனால் கிறிஸ்துமஸ் திருநாளின் போது, கிறிஸ்துமஸ் மரம் செய்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

=========================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.