இன்னம்பூரான்

(‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…

‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’

என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.

மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.

ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.

ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.

‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘

~ஆஷ்பி பிரபு

அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg

 

உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *