மிஸ்ட் கால்
எஸ் வி வேணுகோபாலன்
தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது எண்ணைத் தட்டி ஒரு மிஸ்ட் கால் கொடுத்து ரீங்காரம் எந்தத் திசையில் இருந்து கேட்கிறதோ அங்கே காதையும் கண்ணையும் வைத்துத் தேடி எடுப்பது அடுத்த கட்டம். சில வேளைகளில் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும், சம்பந்தப் பட்ட கைப்பேசி கண்ணில் சிக்காது…சோஃபாவில், டீப்பாயில், மேசையில் செய்தித் தாள்களின் அடியிலோ, சிறு தலையணைகளுக்குக் கீழோ, மடித்து வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையிலோ மாட்டிக் கொண்டு என்னைக் கையில் எடேன், கையில் எடேன் என்று கதறிக் கொண்டிருக்கும். சட்டென்று சிக்காது.
வாழ்க்கையில் நாம் எத்தனையோ முக்கியமான பொருள்களைத் தவற விடுகிறோம். இந்தக் கைப்பேசிகள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் எவ்வளவோ நெருக்கமான விஷயங்களை இப்படி தடயம் தெரியாமல் இழந்து தவிக்கவே செய்திருக்கின்றனர். சாவி கையில் இருக்கும், கண்ணருகே இருந்தாலும் பூட்டு டக்கென்று கண்ணில் படாது. வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுமுன் வீட்டு மனிதர்களைக் கூறு போட்டு ஊறுகாய் போட்டு முடிந்திருக்கும். ரேஷன் கார்டு, படிப்புச் சான்றிதழ், ஐ டி அட்டை, ஊருக்கான பயணச் சீட்டு, வங்கி பாஸ்புக், நேற்று வரை வீடு முழுக்க எங்கே நடந்தாலும் தட்டுப் பட்டிருந்த செய்தித் தாள், முக்கியமாக, கைக்குட்டை………எத்தனை எத்தனை பொருள்கள் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கின்றன, அன்றாட வாழ்வில்.
சமையல் அறையில் எந்த டப்பாவைத் திறந்தாலும் சிக்காத மிளகு சீரகப் பொடி, எங்கோ ஒளிந்து கொண்டு தோசை தீயும் வரை கையில் வந்து சேராத – தோசைக்கென்று வைத்திருக்கும் இரண்டு கரண்டிகளில் வாகான ஒன்று, குழந்தையின் டிபன் பாக்ஸ் மூடி, தண்ணீர் பாட்டில்….எத்தனை எத்தனை தேடல்கள் நகர வாழ்வின் சோதனையான காலை நேரங்களில்..
இதற்கெல்லாம் மிஸ்ட் கால் மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கக் கூடாதா என்று கேட்டார் ஒரு நண்பர். ஆனந்த விகடனில் ஓவியர் மதன் ஒரு முறை, இயற்கையில் இப்படி ஏற்பாடுகள் இருந்தால் வசதியாக இருக்குமே என்ற பொது தலைப்பில், உரிக்க வாகாக ஜிப் வைத்த வாழைப்பழம், தூக்கிச் செல்ல பிடி வைத்தே விளைந்திருக்கும் பெரிய பூசணிக் காய் என்று கலக்கி இருந்தார். அப்படி காணாமல் போகும் பொருள்களுக்கு தலையில் மினுக் மினுக் என்று மின்னும் சிறு விளக்கு ஏற்பாடு இருக்கலாம் தான்.
ஆனால், அப்புறம் தேடலின் சுவாரசியமும், சண்டையும், தவிப்பும், பரிதவிப்பும் அற்ற வாழ்க்கை எவ்வளவு போரடித்துவிடும்?
இருந்த இடத்தில் இருந்தபடி வீட்டில் காணாமல் போன பொருள்களின் இருப்பிடம் குறித்த வரைபடத்தை ஏதோ கையில் வைத்திருப்பது போல அம்மாக்கள் சொல்வது வழக்கம். எங்கே எனது ஸ்கூல் பேக் என்று கத்திக் கொண்டிருக்கும் யூ கே ஜி வாண்டின் காதைத் திருகி கட்டிலுக்குக் கீழே உதைத்துத் தள்ளிய இடத்தில் தான் இருக்கும், போய்ப் பாரு, அதற்கென்ன காலா முளைத்திருக்கு, வேறெங்கேயும் ஓட என்று கேட்பார்கள் அம்மா. அதற்குக் காரணம் பொருள்களின் அருமை அவர்களுக்குத் தெரிந்திருப்பதன் சூட்சுமம் தான். உன்னிப்பான கவனிப்பு தான் உள் மனத்தில் பதிந்திருக்கும். இதம் பதமாக வருடிக் கேட்டால் எடுத்துக் கொடுக்கும். பதறிக் கொண்டே தேடினால் தாவு வாங்கி விடும்.
பள்ளி நாட்களில் ஆண்டு தவறாமல் இசைப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கிய பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி மணம் முடித்தபின் சுவடே தெரியாமல் தொலைத்திருக்கும் தங்கள் இசையை எந்த மிஸ்ட் கால் போட்டுக் கண்டெடுக்க? கவிஞர் நா முத்துக்குமாரின் தூர் என்ற அற்புதமான கவிதையில் (கணையாழி, 1995) கிணற்றில் தூர் எடுத்துக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் பொருள்களின் பட்டியலில் வேலைக்காரி திருடியதாக சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்று ஒரு அதிர்ச்சி வரி வைத்திருப்பார். அவளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவள் மீது கட்டப்பட்ட திருட்டுப்பட்டத்தை எந்த சூத்திரத்தாலும் திரும்பப் பெறவே முடியாது. அந்தக் கவிதையின் கடைசி வரி, இதையும் விட பேரதிர்ச்சி கொடுத்து
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க
என்று முடியும்.
மவுனத்திற்கு என்ன மிஸ்ட் கால்? பேசப்படாத செய்திகளுக்கு எந்த மிஸ்ட் காலும் இல்லையே. அப்படியானால் எத்தனை எத்தனையோ ஒருதலை காதல்கள் வாழ்வில் தொலைத்தவற்றை இலக்கியங்களில் போய் ஒளிந்து கொண்டு வாழ வைத்துக் கொண்டிருக்குமா? அவசரப்பட்டு இழக்கும் நட்புறவுகள், கணவன்-மனைவி உறவில் விரிசல்கள், தந்தைக்கும் மகனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் இடையில் விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் இடைவெளிகள் இவை எவற்றின் இடையேயும் மிஸ்ட் கால் ஏற்பாடு இருந்தால் எத்தனை கோடி புன்னகைகளைப் பூக்க வைத்து சமாதானக் கொடியைக் காற்றில் பறக்க விட முடியும்?
ஆனால் யோசித்துப் பார்க்கையில் மனிதகுலத்தின் அரிய தவமாகக் கிடைத்திருக்கும் நேயம் தான் மிஸ்ட் கால் என்று தோன்றுகிறது. அன்பின் வழியே உருகி உருகிப் பாயும் தன்னலமற்ற பேராற்றுப் பூம்புனலில் எல்லா அழுக்குகளையும் கழுவி மனத்தைச் சீராக்கித் துடைத்து பளபளப்பாக்கி அறவே அறாத சங்கிலித் தொடராக மக்களை இணைத்துவிட முடியும் என்றுதான் படுகிறது.
அன்பு என்பது நீர் மட்டுமல்ல, நெருப்பும் தான் என்றும் இன்னொரு பார்வையில் படுகிறது. மார்கழி மாதத்தில் இசைக்கப் படும் ஆண்டாளின் அற்புத திருப்பாவைப் பாசுரங்களில் ஐந்தாவதாக வரும் “மாயனை மன்னு” என்று தொடங்கும் அழகுக் கவிதையில், நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு என்று நிறைவாக வரும் இடத்தில் மாசுகளைச் சுடும் நெருப்பு தேவைப்படுவதும் உணர்த்தப்படுகிறது. கரைக்கவோ, சுட்டெரிக்கவோ அன்பு தான் நம்மைச் சூழ வேண்டியிருப்பது.
மூப்பின் களைப்பில் மூளையின் இயக்கங்களின் தளர்வில் தவறவிடும் நினைவோட்டங்களோடு போராடிக் கொண்டே அடுத்தடுத்த தலைமுறைகளின் அவமதிப்பையும், வசைமொழிகளையும், நிராகரிப்பையும் வேளை தவறாது புசித்துக் கொண்டிருக்கும் வயதான மூதாட்டிகளோ, பெரியவர்களோ ஏதோ தாங்களாக முணுமுணுத்துக் கொண்டிருப்பது ஒரு வேளை ஏக்கத்தின் பெருமூச்சில் எழும் மிஸ்ட் கால்களாக இருக்கக் கூடும். வண்ணதாசனின் ஓர் அற்புதமான சிறுகதையில் வரும் தாத்தா ஒருவரின் பேச்சு மொழி வீட்டில் இருக்கும் யாருக்கும் அர்த்தமாவதில்லை. அவரை யாரும் லட்சியம் செய்வதுமில்லை. ஆனால் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நுழையும் நாவிதர், ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து முகத்தில் சோப்பு நுரையைக் குழைத்துப் பூசிக் கொண்டே கத்தியைத் தீட்டிக் கொண்டு தமது வேலைக்குத் தயாராகும் ஒரு கணத்தில் தாத்தா அந்த சவரத் தொழிலாளியோடு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார் என்று கதை முடியும், தாத்தாவின் மிஸ்ட் கால் அந்த எளிய மனிதரின் காதில் இலகுவாகப் போய் விழுகிறது.
பிரச்சனை மிஸ்ட் கால் ஏற்பாடு இல்லாதது அல்ல, எத்தனையோ உன்னத விஷயங்கள் என்னைப் பார், பார் என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மனிதர்களுக்கு சித்திக்காமல் போவதற்கு ஒரு காரணம் உண்டு. தாராளமய உலகில், தன்னலத்தின் கொடூர வேடத்தில் தங்களைப் பொருத்திக் கொண்டு எல்லாவற்றையும் வென்றெடுப்பதான வெறியில் தம்மையும் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு காதுகள் அற்றுப் போய்க் கொண்டிருப்பதுதான் அது.
*********
நன்றி : வண்ணக்கதிர்