சரயு…

 

பார்வதி இராமச்சந்திரன்

images (1)

சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி.

அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி அவள்.

தாழ்வாரத்துக் குறட்டில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தவள் திடீரென சிரித்ததும் ஆச்சரியமானது சுசிக்கு…

‘என்னாச்சுக்கா…

ம்ம்.. நிமிர்ந்தாள் சரயு. முன் வகிட்டில் குங்குமச் சிவப்பு, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையுடன் சங்கமித்து, பொட்டுப் பொட்டாய் வியர்த்திருந்தது. கூர் மூக்கும் சின்ன உதடுகளும் பௌர்ணமி நிலவாய்த் தகதகத்து மின்னும் முகமுமாய், ரேணுவைப் போன்ற‌ தேவதையல்ல சரயு.  ஆயினும் அந்த மாநிற முகத்தில் துலங்கும் ஒளி சாதாரணமானதல்ல…

‘என்ன?’..

‘இல்ல சிரிச்சுட்டிருந்திங்கல்ல.. அதான்…’

பதிலுக்குப் புன்னகைத்தாள். சில நேரங்களில் புன்னகையும் பல நேரங்களில் ஓராயிரம் அர்த்தமுள்ள மௌனமுமே அவள் வாசகம். அபூர்வமாகத்தான் வாக்கியங்கள் வெளிவரும்.

சுசி தன் பார்வையை, சரயு அமர்ந்திருந்த   தாழ்வாரத்தைத் தாண்டிய முற்றத்தின் மீது வீசினாள்.  ரேணுவின்   குழந்தைகள் சியாமாவும் ரூபாவும் செப்பு சாமான்களோடு திண்ணையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. யுக யுகாந்திரமாய் பழக்கப்பட்ட அப்பா, அம்மா விளையாட்டு. எப்போதும் போல் அப்பா காரெக்டர் வேலையிலிருந்து  வருவதும் அம்மா   சமைப்பதும் நடந்து கொண்டிருந்தது.. ரூபா தான் அம்மா போல. அவள் புடவையாய் கட்டியிருந்த சுசியின் தாவணியோ, கால் மடித்து காய் நறுக்குவது போல் நடித்த பாங்கோ, பேசிய வசனமோ… ஏதொவொன்று சரயுவின் மோனத்தில் கல்லெறிந்து சிரிப்பலையை சிதறச் செய்திருக்க வேண்டும்.

‘வெளையாட்டுப் பாத்தீங்களா..

அதற்கும் புன்னகை. கொஞ்சம் பொறுத்து, ‘நல்லா கவனிச்சுருக்குங்க ரேணுவையும் அவ வீட்டுக்காரரையும்’ என்றாள் சரயு.

தன் யூகம் மெய்ப்பட்டதில் மகிழ்வடைந்து சுசி, மேலும் பேச்சைத் தொடரும் முன், சரயு எழுந்து சென்று விட்டாள்.

சரயு அப்படித்தான்.. இப்போதல்ல.. எப்போதுமே.. தன்னிருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாததோடு, தனக்கு வேண்டியதைத் தான் தான் கேட்டுப் பெற வேண்டும் என்ற உணர்வே இல்லாதது போல் தோன்றும் சுசிக்கு.

சுசிக்குப் பத்து வயதாயிருக்கையில் வீரபாண்டி அத்தையின் மகன் ஆறுமுகத்துக்கும் சரயுவுக்கும் கல்யாணம் நடந்தது. சுதி மாறாமல், சரயு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அடுத்த முகூர்த்தத்தில் எந்தப் பேச்சு வார்த்தையும் முன் பின் அபிப்பிராயங்களும் இல்லாமல், பூவுக்கடுத்து காய் என்பது போல் இயல்பாக நடந்த விஷயம் அது. உறவுகளும் இது இயல்பே என்பது போல் எந்தச் சந்தடியும் இல்லாமல் கல்யாணத்திற்கு வந்து சென்றனர்.

ஊர்க்கோவிலில் கல்யாணம், வீட்டு முற்றத்தில் தட்டுப் பந்தல் போட்டு விருந்து, இரண்டாம் நாள் மறுவீடு என்ற எந்த மாறுதலும் இல்லாமல் நடந்தது நினைவிருக்கிறது.

மாறியது ஒன்று மட்டும் தான். கல்யாணம் நடந்து நாலு வருடம் கடந்த பின், ரேணு அக்காவுக்கு கல்யாணம் கூடி வந்த போது வீரபாண்டி அத்தை பின் கட்டு கலகலக்கக் கத்தியது தான் மாற்றம்.

“என்னா இது? என்னா இதுங்குறேன்… மூத்தவளுக்கு அஞ்சு பவுனுக்குச் செயினு மட்டும் போட்டு காது மூக்க மூடி கதவடச்சுட்டீக. ரெண்டாமவளுக்குப் பத்து பவுனுன்னா… என்னா போக்கத்தவுகளா நாங்க..”

“இந்தாத்தா.. என்னா இம்புட்டு சத்தமாப் பேசுறீக.. வேண்டாமத்தா.. ஒக்காரு செத்த… அவுக என்னா வேணுன்னுட்டா செய்றாக.. மாப்புள ஊடு கொஞ்சந் தண்டி தே.. அவுக கேட்டத செய்யுறாக…”

“அப்ப நாங்க இவுக தரந்தண்டிக்கு கொறச்சலுன்றீக… எம் புள்ள வெறும் பயலுன்றீக..”

அப்பாவின் நண்பரான மாயாண்டி மாமா, பஞ்சாயத்துப் பேச வந்தவர், வெற்றிலையை மென்று துப்பினார். அத்தையை இகழ்ச்சியாகப் பார்த்தார்.

‘ஆத்தா… ஆரு இது.. ஒன்ன வளத்த அண்ணெ, அண்ணி  அவுக மக. ஒம் மேல வச்சுருக்க பாசந்தான அதுக மேலயு. அதுல வேத்தும இல்லாத்தா.. வேணுன்னு செய்வாகளா.. புரிஞ்சுக்க… வேணுன்னா.. இந்தக் கல்யாண முடுஞ்சு கொஞ்ச நாளு செண்டு ஒம் மருமகளுக்கும் அஞ்சு பவுன செய்யச் சொல்லு. இன்னும் இருக்குல்ல வளகாப்பு….பிள்ளப் பேறு…’

அத்தை நொடித்தாள்.’ஆஆம்ம்ம்மா… பெரிய வளகாப்பு. ஊருல ஆளாளுக்குப் பேச்சு தாங்கல.. அண்ணெ மகளக் கெட்டி வந்து வருச நாலாச்சு. இன்னும் வகுறு தொறக்கலியே… சொந்தத்த பாத்து ஏமாந்தியான்னு. போன வாரம் சுங்குவார்பட்டிலந்து பொண்ணு கொடுக்கவே வந்திட்டாக  ரெண்டாந்தாரமா…’

அப்பா அதிர்ந்து நிமிர்ந்தார்……’என்னா சொன்ன…?’

‘ஆங்… சொன்னாங்க சுடுசோறுக்கு சொரணயில்லன்னு… எம் புள்ள அளகுக்கும் எங்க ஊட்டுக்கு இருக்குற மரியாதக்கும் ஒண்ணுல்ல பத்து பொண்ணுக வருவாக எம் புள்ளக்கு..’

‘ஆத்தா.. மரியாத தவறுது… ஆரு முன்ன இப்புடியெல்லாம் பேசுற…. நல்லால்ல சொல்லீட்டே…’

‘ஆரு மரியாத தவறுனது. மூத்த மாப்புள இருக்க சொல்ல, அவனுக்கு சொல்லிவுடாம ரெண்டாவது பிள்ளக்கு பேசி முடுச்சுருக்காக. எங்க நடக்கும் இது?. என்னாடான்னு வெசாரிச்சாவுல்ல வெளங்குது… அஞ்சு பவுனு கூட்டிப் பேசுனது.’

‘ஆத்தா… மொத, மாப்புளக்கி சொல்லிவுடல, சீரு கம்மிண்டீக, அப்புறமேட்டு, மருமக இன்னம் புள்ள உண்டாகலண்டீக, அம்பூட்டுப் பெரிய மகராசி.. என்னாத்துக்கு பகுமானப் பேச்சுப் பேசூறெ… மூடி மறச்சுப் பேசாத ஆத்தா.. இப்ப என்னா முடிவு சொல்லுற.?’.

‘போடுற அஞ்சு பவுன இப்பவே போடணும். எம் புள்ளகிட்ட வந்து சொல்லிவுடாததுக்கு மன்னிப்புக் கேக்கணும். அப்பத்தே கண்ணாலத்துக்கு வருவோ. இல்லன்னா பெரச்சின தே சொல்லீட்டே….’

‘இது வேறென்னத்தயோ மனசுல வெச்சுப் பேசுது மாப்புள… நானு என்ன சொல்றேண்டா..’  மாயாண்டி மாமா  பேச.. அம்மா கண்கலங்க சாமி பிறையில் காசு வைத்து வேண்டினாள்.

அதற்கப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது. ரேணுவின் கல்யாணத்துக்கு சரயு வரவில்லை. அதற்கடுத்த ரெண்டாம் நாள் பெட்டியோடு வந்து நின்றாள். அத்தான், பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போனதாய்ச் சொன்னாள்.

அப்பா எதுவும் பேசவில்லை. அம்மாவும். நாலு  மாதம் கழித்து,  அத்தானின் இரண்டாம் திருமணத் தகவல் வந்த அன்று, உள்ளூர் தொழிற்பயிற்சிப் பள்ளியில்  தையல் ஆசிரியை வேலைக்கான படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கி வந்து தந்த போது தான் அப்பாவின் மனம் புரிந்து அதிர்ந்து அழுதாள் அம்மா. அப்போதும் சரயு எதுவும் பேசாமல், சலனமின்றி, விண்ணப்பம் வாங்கிக் கையெழுத்திட்டாள்.

சியாமாவின் கத்தல் நனவுலகுக்கு இழுக்க, திரும்பிப் பார்த்த போது, ரேணு அம்மாவிடம் விசும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மாதமாக தினசரி நடப்பு.

‘என்னய என்னா பண்ணச் சொல்லுறீக?. அந்த மனுசெ என்னாடான்னா  ஊடு வாங்கக் கொஞ்சம் பணம் தவங்குது,  ஒங்கப்பாவத் தரச் சொல்லுன்றாரு. அப்பா என்னான்னா…’

‘ஒனக்குக் கொஞ்சம்மாச்சு அறிவுன்றது இருக்குதா?. இப்பத் திடீர்னு ரெண்டு லச்சத்த வெட்டுண்டா எங்குட்டு போவாரு?. இருக்குற  ஊடு கடனுல கெடக்கு. நாளக்கே அவருக்கு ஒண்ணுன்னா, ரெண்டு பொட்டப் புள்ளகள வச்சிட்டு எங்குட்டு போக முடியு?. ஆச்சி, இன்னு ஒண்ணு ரெண்டு வருசத்துக்குள்ளயு  சுசிக்கு கலியாணங்க் கெட்டணு. இப்பமே பொண்ணு கேட்டு வாராக. அதுக்கே காசக் காணுன்னுட்டு தள்ளித் தள்ளிப் போட்டுக் கெடக்கு. அவ வயசுல, ஒனக்கு பெருசு பொறந்தாச்சி. இம்புட்டுச் சடவுல, எவெ எக்கேடு கெட்டா எனக்கென்னா… எங்காரிய எனக்கு முக்கியமுண்டு பேசுறியே….’

ரேணுவுக்கு சுருக்கென்றது போல, ‘பின்ன, என்னயு பெரியவள மாதுரி, பொறந்த ஊட்டோட கெடந்து சாகச் சொல்லுறியா.. எனக்கும் ரெண்டு பொட்டப் புள்ளக இருக்குல்ல…’

அம்மா அசந்து போனாள். நானும் தான்.

புயலடித்தது போல சரயு வந்து நின்றாள். எங்கிருந்தாளோ, என்ன கேட்டாளோ!

‘இதப் பாரு, என்னயப் பத்தி பேசுற வேல வெச்சுக்கிட்டா நல்லாருக்காது சொல்லீட்டே..  நானும் ஒன்னய மாதுரி, நாயமில்லாம,  நாம புகுந்த ஊட்டோட இருந்தாத்தே மரியாதன்னு   நெனச்சிருந்தா.. நீ இன்னக்கி, ஒரு புருசெனக்  கெட்டி, ரெண்டு புள்ளப் பெத்துருந்திருக்க மாட்ட…… ஒன் அளகுக்கு மயங்கின‌ எம் புருசெனோட மொறயில்லாத ஆசக்கிப் பணிஞ்சு போயி ஒன்ன ரெண்டாந் தாரமாக் கெட்ட ஒப்பாமெ.. அநியாயத்துக்குப் பயப்படக் கூடாதுண்டு இருக்கச் சொல்லத்தே நீ இன்னக்கி நிமுந்து இத்தத்தண்டிப் பேச்சுப் பேசூறே.. நெனப்புல வெச்சிக்க.. என்னா?’

சொடுக்குப் போடுவது போலப் பேசியவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

நானும் அம்மாவும் விழி அகட்டி அமர்ந்திருக்க, ரேணு வியந்து போய்ப் பார்த்தாள். பின், மெல்ல,  எழுந்து,  அக்காவின் தையல் மெஷினைத் தடவிக் கொடுத்தாள்.

 

படத்துக்கு நன்றி:
ஓவியர் இளையராஜா,

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRAtiZzD79RBGr1-tGtxB2FyTUKmkpOdm-vObzwtyAafI-NCHil

 

பார்வதி இராமச்சந்திரன்

எழுத்தாளர்

Share

About the Author

has written 11 stories on this site.

எழுத்தாளர்

15 Comments on “சரயு…”

 • Jaya ramachandran wrote on 17 July, 2013, 16:54

  A very nice story.  suspense was maintained till the end of the story. nicely written.

 • சச்சிதானந்தம் wrote on 17 July, 2013, 18:31

  மிகவும் யதார்த்தமாக உண்மையைச் சொல்லும் கதை. வாழ்த்துகள் சகோதரி. சரயுவின் பாத்திரத்திற்கு உயிரை வழங்கி இருக்கிறது அழகான ஓவியம். ஓவியர் இளையராஜா அவர்களுக்கம் என் வாழ்த்துகள்.

 • தனுசு
  தனுசு wrote on 18 July, 2013, 12:47

  குடும்பத்துக்குள் நடக்கும் உரையாடல் குறிப்பிட்ட வட்டார மொழி உச்சரிப்பில் வெளுத்துகட்டும் நடையில் ஆசிரியர் பார்வதி அவர்கள் தந்திருப்பது பாராட்டுக்குரியது.

  பெண்களின் மனமும் குனமும் மட்டுமே கதையின் கருவாக்கி தொடர்ந்து படிக்க வைப்பது நல்ல சுவை. பாராட்டுகள்.

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன் wrote on 18 July, 2013, 19:59

  கதையை படித்து, தங்கள் கருத்துரைகளின் மூலம் ஊக்கமளித்த திருமதி.ஜெயா ராமச்சந்திரன், திரு.சச்சிதானந்தம், திரு.தனுசு ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

 • தேமொழி wrote on 21 July, 2013, 9:29

  சரயுவின் கதாபாத்திரம் அருமை பார்வதி. எனக்கு மிகவும் பிடித்தது. வழக்கம் போலவே வெகு இயல்பாக எடுத்துச் செல்லும் நடையும் சிறப்பு.

  அன்புடன்
  ….. தேமொழி

 • Uma S wrote on 21 July, 2013, 19:31

  Sacrifice. Very good story Lalitha.

 • M.DHAKSHINAMOORTHY wrote on 22 July, 2013, 19:29

  Really great,  what a talent you have!!!!.   Alagu tamilil oru aalamana kathai.   Unga Tamil enakku romba puduchirukku

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 23 July, 2013, 16:12

  @ தேமொழி..
  தங்கள் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

   

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 23 July, 2013, 16:17

  இனிமையான வார்த்தைகளால் பாராட்டி, என்னை ஊக்குவித்த திருமதி.உமா, திரு.தக்ஷிணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் என் பணிவான நன்றிகள்.

 • ஷைலஜா wrote on 2 August, 2013, 12:23

  கதையை திரு வெங்கட் சுவாமிநாதன் தேர்வு செய்து சிறப்பித்திருக்கிறார் பாராட்டுக்கள் பார்வதி

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 2 August, 2013, 15:52

  ////கதையை திரு வெங்கட் சுவாமிநாதன் தேர்வு செய்து சிறப்பித்திருக்கிறார் பாராட்டுக்கள் பார்வதி/////

  தங்கள் பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி.!!!!

 • Alasiam G wrote on 3 August, 2013, 14:36

  பெண்பிள்ளைகளைப் பெற்ற ஏழைக் குடும்பத்தில் நடக்கும் அல்லல்களை அப்படியே அவர்களின் வீட்டில் படக் கருவியைக் கொண்டு  படமாக்கப் பட்டதாகவே இருந்தது வாசிக்கும் போது!
  மதுரை மண்வாசனை படு ஜோராக வந்திருக்கிறது… வீரபாண்டி அத்தையின் அங்க அசைவுகள் ( மதுரை பெண்களுக்கே உரியதான, கோடாலிக் கொண்டையும் கழுத்துவரை நீண்ட காதோலைகளும் கொசுவச்சு கட்டண கண்டாங்கி சேலையும் என்ற வருனனையோடு…) இன்னும் கொஞ்சம் காட்டி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (கதையின் சுருக்கம் கருதி செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன்)
  அருமை! பாராட்டுக்கள் சகோதரி!

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன் wrote on 3 August, 2013, 17:53

  தங்கள் உளம் கனிந்த பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வருணனை எழுதாவிட்டாலும் தாங்கள் கூறியது போல் தான் கற்பனை செய்திருந்தேன். மிக்க நன்றி அண்ணா.

 • vijaya Haran wrote on 4 August, 2013, 8:10

  This is one more milestone for Parvathi ramachandran.
  Please write more stories like this.
  Ezhuthina ithumaathirithaan Kathai ezhuthanum.

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன் wrote on 6 August, 2013, 10:35

   @திருமதி.விஜயா ஹரன்,
  ஊக்கமளிக்கும் தங்கள் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி.

Write a Comment [மறுமொழி இடவும்]


5 + eight =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.