அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 46

0

கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி

சுபாஷிணி

ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்சியத்திற்கு உண்டு. அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் மாற்றுக் கருத்தை விதைத்த சித்தாந்தங்களில் மார்க்சியம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மார்க்சியம் என இன்று அழைக்கப்படுகின்ற இந்த அரசியல் சித்தாந்தத்தை வழங்கியவர் கார்ல் மார்க்சு. 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சரித்திரத்தை மார்க்சின் சித்தாந்தங்களிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பது இயலாத ஒன்று. அத்தகைய ஆளுமையான கார்ல் மார்க்சு பற்றிய வரலாற்றுச் செய்திகளை வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும் கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் பற்றிய தகவல்களே இன்றைய பதிவாக அமைகின்றது.

asuba

கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் ஜெர்மனியின் ட்ரியா நகரில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மிகப் பழமை வாய்ந்த உரோமானிய பேரரசு கோட்டை கட்டி வாழ்ந்த ஒரு அரச நகர்ப்பகுதி என்ற தனிச்சிறப்பும் கொண்டது. ட்ரியா நகர் அமைந்திருக்கும் இடம் ஏனைய பிற அண்டை நாடுகளான பிரான்சு, லுக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது அக்காலத்தில் கார்ல் மார்க்சு மட்டுமன்றி ஜெர்மானிய தொழிற்சங்கவாதிகளும், அரசுக்கு எதிர்மறையான அரசியல் சிந்தனைப் போக்கு கொண்டோருக்கும் ஓர் பெரும் நகரத்திலிருந்து மற்றொரு நகரம் சென்று கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்த மிக ஏதுவாக அமைந்திருந்தது என்பது ஒரு முக்கிய விசயம்.

asub5

கார்ல் மார்க்சு ஜெர்மனியில் பிறந்து தன் இளம் பிராயத்தை ட்ரியா நகரில் கழித்து பின்னர் பெர்லினில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை மீண்டும் ட்ரியாவில் தொடங்கினாலும் அவர் தன் வாழ்நாளில் ஜெர்மனியை விட்டு ஏனைய நாடுகளில் செலவழித்த ஆண்டுகள் தான் அதிகம். ஜெர்மனியில் தனது அரசியல் சித்தாந்தத்திற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். பிரான்சில் பணியாற்றிய காலத்தில் புறச் சூழலும் தன் நட்பு வட்டாரமும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு புரட்சியாளராக வடிவெடுத்தார். பின்னர் பெல்ஜியத்தில் சில நாட்கள் அகதி நிலை போன்ற வாழ்க்கை அவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கினாலும் தனது கொள்கையில் அவர் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இறுதியில் அவரது இங்கிலாந்து வாழ்க்கை அவரை உலகம் போற்றும் ஒரு பெரும் அறிஞராக வடிவமைத்தது.

asub4

கார்ல் மார்க்சின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து பிரிக்க முடியாத இருவர் என்றால் அது அவரது மனைவி ஜெனியும் அவரது நண்பர் ஃப்ரெடெரிக் எங்கெல்சும் என்று தயங்காது கூறலாம். இவர்கள் இருவரும் அவரோடு இணைந்து இருந்தவர்கள் மட்டும் அல்ல. கார்ல் மார்க்சிற்கு எல்லா சிரம காலங்களிலும் உடன் துணையாக இருந்து அவரை உள்ளமும் உடலும் சோர்வடையாது இருக்க உதவியவர்கள். வரலாறு இவர்களை மறக்காது!

asub3

கார்ல் மார்க்சு அடிப்படையில் ஒரு யூத இனத்தவர். அவரது தந்தையார் ஹைன்ரிக் மார்க்சு பின்னர் கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டு ட்ரியா நகரிலே வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். மத நம்பிக்கைகள் மிக ஆழமாக வேறூன்றிய காலகட்டத்தில் ஜெர்மனி அப்போது இருந்தது. இன்றைய ஜெர்மனியிலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட மக்கள் இருந்த காலகட்டம் அது. வக்கீல் தொழில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் ஹைன்ரிக்மார்க்சு. ஹென்ரிட்டே என்னும் பெண்மணியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடந்தி வந்தார். இவர்களுக்கு 1818 மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் கார்ல் மார்க்சு. பிறந்து வளர்ந்து தன் இளமை காலத்தை கார்ல் என்னும் இளைஞன் கழித்த அந்த இல்லமே இப்போது கார்ல் மார்க்சு அருங்காட்சியகமாக இருக்கின்றது.

asub2

ஒரு நாட்டின் எல்லா வளங்களுக்கும் அடிப்படையில் மனித சக்தியே இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பாளிகளை விட அவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளே பெரும் அளவில் லாபத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். உழைத்து வளத்தைப் பெருக்கும் உழைப்பாளி வர்க்கமோ அந்த வளத்தை அனுபவிக்க இயலாத ஒரு சமூகமாகவே இருக்கின்றது. இது மனித இனத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் அமைகின்றது.

கார்ல் மார்க்ஸ் கையெழுத்து

asub1

மக்கள் வாழ்க்கையில் பொருளாதார சமன்பாடு என்பது நடந்தால்தானே ஒட்டு மொத்த சுபிட்சத்தை ஒரு நாடு அனுபவிக்க முடியும்?

மக்களில் பெருவாரியானோர் சுபிட்சமாக இருந்தால் தானே நாடு வளமுடன் இருக்கும்?

ஒரு சிலர் மட்டுமே பொருளாதார அனுகூலங்களை அனுபவிப்பதும் ஏனையோர் வருமையில் வாடி துன்பத்திலும் நோயிலும் கிடந்து அல்லல் படுவதும் மட்டும் நிகழ்ந்தால் அந்த நாட்டில் அமைதி எவ்வாறு நிலவும்?

மக்களின் தொடர்ச்சியான அதிருப்தியானது சமூகப் பிரச்சனைகளான கொள்ளை, போராட்டம் பொருள் சேதம் ஆகியவற்றில் தான் ஒரு நாட்டை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அல்லவா அமையும்?

தொடரும்..

​​

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *