சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-1)

1

பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

சைவசமயிகளிடம் பரவலாக இருந்துவரும் ஐயம் ஒன்று உண்டு; அது, மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா? இல்லையா? என்பதே. திருத்தொண்டர்தொகைபதிகத்தில் சைவசமய நாயன்மார்களான ஞானியர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு  அவர்தம் அடியவர்க்கு தாம் அடியேன் என்று பாமாலை சாசனமிட்டுப் பரவிப் பாடியுள்ளார் எம்பெருமான் தம்பிரான்தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருத்தொண்டர்தொகையை அடியொற்றி திருத்தொண்டர் திருவந்தாதியை அருளினார் சைவத் திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள். தெய்வச் சேக்கிழார் பெருமான், தம்பிரான்தோழர் அருளிய திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார்.  திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் பெயர் வெளிப்படையாக இடம்பெறவில்லை; ஆகவே, மணிவாசகரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறிக்கவில்லைஎன்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பான்மையான தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் மாணிக்கவாசகரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்திற்குப் பிற்பட்டதெனவும், அறுபத்து மூவரில் மாணிக்கவாசகர் ஒருவரல்லர் என்று கொள்கின்றனர். இந்தக் கருதுகோள் குறித்து சைவசமயநெறிக்கு உட்பட்ட ஆய்வு முறையில் வரலாற்றுப் பார்வையுடன் ஆராயலாம்.

 

சைவ மெய்யியல் இலக்கிய வரலாறுகளின் சிக்கல்கள்

மொழி இலக்கிய மற்றும் மெய்யியல் இலக்கிய வரலாறு எழுத முயல்வோர், தொல் இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் என்ற முப்பரிமாணங்களையும் சீர்தூக்கிக் கணக்கில் கொண்டால் மட்டுமே சரியான முடிவுகளை அடைய இயலும். நம் கெட்டகாலமோ என்னவோ, தமிழ் இலக்கிய மற்றும் தமிழ் மெய்யியல் இலக்கிய வரலாறுகள் படைத்தவர்கள் முடிவெடுத்து எழுதியுள்ளமையைக் காணும் எவருக்கும், அம்முடிவுகள் இம்மூன்று பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலே முடிவெடுத்து எழுதியுள்ளமை புலப்படும். அத்தகைய முரண் ஆய்வுகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 

சைவ மெய்யியல் இலக்கிய வரலாறு ஆய்வுநெறிகள்

மெய்யியல் ஞானியர்தம் இலக்கிய வரலாற்றையோ அல்லது  காலவரலாற்றையோ கணிப்பதைப் பொருத்தமட்டில், இலக்கியச் சான்றுகளில் முதலாவதாக அதிக முக்கியத்துவத்துடன் கணக்கில் கொள்ளப்படவேண்டியது அவர்தம் அகச்சான்றுகள், (அதாவது, ஒரு ஞானியே அவரைக் குறித்து அவர் படைத்த இலக்கியத்தில் கூறும் நிகழ்வுகளின் பதிவுகள்); இரண்டாவதாக, அவ்ஞானியர்தம் பிற்கால மற்றும் சமகால இலக்கியச் சான்றுகள் அடுத்தநிலை முக்கியத்துவமும் பெறுகின்றன. அடுத்ததாகவே, வரலாற்றுச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி மட்டுமே இருந்த காலத்தில். வரலாற்றுப்பதிவு ஆவணங்களாக இலக்கியங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படவேண்டும்; ஏனெனில். அக்காலத்தில், போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அவர்தம் மெய்கீர்த்திஎன்னும் புகழ்குறித்து கல்வெட்டுகளில் பொறிக்கும் நடுகல்அல்லது பள்ளிப்படைஎடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை அரசாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் புலவர்களின் பாடல்களையே தத்தம் காலச்சுவடுகளாக, ஆட்சியின் மாண்புரைக்கும் அளவுகோலாகக் கொண்டிருந்தனர். காட்டாக, “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (புறநானூறு 72)” என்று நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் புறநானூற்றுப் பாடலில்,  பாண்டியன் அவையில் புலவர் ஒருவர் தலைமையில் பல புலவர்கள் கூடிக் கவிபாடினர் என்னும் செய்தியை அறியலாம்.

 

தமிழகத்தைத் தமிழ் மன்னர்கள் மட்டுமே ஆண்ட காலம் அறத்தின் காலம்

தமிழ் மன்னர்கள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட காலங்களில், யார் ஆண்டாலும், தமிழ்புலவர்களைப் புரத்தல் (தமிழைக் காத்தல்) என்பதில் ஒரே நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தமையால், புலவர்கள் நடுவுநிலையோடு காலச்சுவடுகளைக் கவிதைகளில் பதித்தனர். சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும்குறுநில மன்னர்களையும்,வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தோரே ஆயினும்ஆட்சியாளர்களின் குறைகளை இடித்துரைத்தும்அறிவுரை கூறித்  திருத்தும் வல்லமையையும் கொண்டிருந்தனர். அக்கால அரசர்கள் புலவர்களை நண்பர்களாகவும்மதிகூறும் அமைச்சர்களாகவும் போற்றி வாழ்ந்ததால்பகையரசர் தம்மில் நட்பும் அறமும் செழிக்கப் புலவர்கள் உறுதுணையாக இருந்தமை புறநானூற்றுப் பாடல்களில் காணக் கிடக்கின்றன. காட்டாக,  கிள்ளிவளவனிடமிருந்து சேரனின் கருவூரைப் போரினின்று காத்த ஆலந்தூர் கிழார்அதியனுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத் தவிர்த்த ஔவையார்,  உறையூர் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளிக்கும்கருவூர் சேரன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் நிகழவிருந்த போரைத்தவிர்த்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  கோப்பெருஞ்சோழன் தம் புதல்வர்களுடன் நிகழ்த்தவிருந்த போரைத் தடுத்த புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்பலர். இக்கால கட்டங்களில் வரலாற்றுக் காலச்சுவடுகளை இலக்கியங்களே பெரிதும் கொண்டிருந்தன.

தமிழர்கள் அல்லாத ஆட்சியாளர்கள் (களப்பிரர் மற்றும் பல்லவர்) தோன்றிய பின், புலவர்களைப் புரக்காத நிலை தமிழ் மண்ணில் நிலவியது காரணமாக தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெரும் பின்னடைவு நேர்ந்தது; அவர்தம் காலங்களிலும், அவர்க்குப் பின்னரும் தோன்றிய ஆட்சியாளர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகள் பெருமளவு தோன்றின என்பதை அறிதல் நலம். எனவே,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள சான்றாவணங்கள் வேண்டி கல்வெட்டுச் சான்று தேடியலைந்தோ, வரலாற்றுச் சான்று நோக்குவதோ தராத பலனை, அக்கால இலக்கியத் தரவுகளிலிருந்து எளிதில் பெற முடியும். இந்நுணுக்கங்களையெல்லாம் நோக்காமல், தமிழ்இலக்கிய வரலாறுகள் சில புகழ்பெற்ற அறிஞர்களால் படைக்கப்பட்டமையாலேயே, சைவசமய இலக்கிய வரலாறு, குறிப்பாக, ‘சமயாசிரியர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்துமூவரில் ஒருவராக இடம் பெறுகின்றாராஎன்பது குறித்த பெருங்குழப்பம் இன்றுவரை நிலவிவருகின்றது. அதை நேர்செய்யுமுகத்தானே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.

 

திருத்தொண்டர்தொகை பதிக அமைப்பு முறை

திருத்தொண்டர்தொகை பதிகம் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்என ஆரூர்த் தியாகேசப் பெருமானே அன்பு கூர்ந்து எடுத்துக் கொடுத்த அமுத வாக்கைத் தொடக்கமாக வைத்து, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களில் ஐம்பத்தியாறு தனியடியார்களையும், பத்தாவது திருப்பாட்டில் ஏழுதொகையடியார்களையும், பதினொன்றாவது கடைக்காப்புத் திருப்பாட்டில், ஐந்து தனியடியார்களைப் பாடிய பின்,  அரனடியே அடைந்திட்ட சடையனார் இசைஞானியம்மையார்பால்  பேரன்பு பூண்ட திருநாவலூர்க்கோன் அன்ன ஆரூரன் பாடிய அடியவர் அடிமை திருப்பாட்டைக் கேட்டுவுவப்பார் திருவாரூர் அம்மானுக்கு அன்பராவார்”, என்று இப் பதிகத்தைப் பாடுவோர் பெரும் பலனைப் பாடி நிறைவு செய்கின்றார் சுந்தரமூர்த்தி பெருமான். பதிகம் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு என்ற இலக்கணத்தின் அடியொற்றி, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களைத் தனியடியாருக்கும், பத்தாவது திருப்பாட்டைத் தொகையடியாருக்கும் பாமாலையிட்டு, பதிகபலன் கூறும் பதினொன்றாம் திருப்பாட்டைப் பாடி பதிகத்தை நிறைவு செய்கின்றார்.

 

சடையனார், இசைஞானியாரை  நாயன்மாராக சுந்தரர் கொள்ளவில்லை

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.

 

பதினோராவது திருப்பாட்டில் ஐந்து தனியடியார்களுக்கு மட்டுமே அடியார்க்கும் அடியேன்என்று அடைகொடுத்துப் பாடிய பெருமான், சடையனார் இசைஞானியம்மையார் ஆகியோரைப் பெருமானின் பெற்றோர் என்ற முறையிலேயே பாடியதல்லாது, அவர் தம்மைத் தனியடியாரெனக் கொள்வது சுந்தரமூர்த்தி பெருமானின் கருத்தன்று என்பது இங்கு வெளிப்படை. (சடையனார் இசைஞானியம்மையார் ஆகியோருக்கு அடியேன்என்ற அடைகொடுத்துப் பாடவில்லை என்பது மிக முக்கியமான செய்தி). பெருமான் முதல் ஒன்பது மற்றும் பதினொன்றாம் திருப்பாட்டு ஆக பத்துத் திருப்பாட்டுக்களில் அறுபத்தொன்று தனியடியார்களையும், பத்தாம் திருப்பாட்டில் கூறிய ஏழு தொகையடியார்களுடன், இறைவன் அடிஎடுத்துக் கொடுத்த தில்லைவாழ் அந்தணராம் தொகையடியார்களுடன் சேர்த்த எட்டுத் தொகையடியார்களுடன் கூட்ட, அறுபத்தொன்பது அடியார்களே சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டர்தொகையில் பேசப்பெறுகின்றனர். (பின்பு, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில்,  திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர், அவரை ஈன்ற சடையனார், இசைஞானியார் ஆக மூவரையும் சேர்த்து எழுபத்திரண்டு என்று அமைத்து வைத்தார்). எனவே, தனியடியார்களாக சுந்தரர் பாடியருளியது அறுபத்தொன்று நாயன்மார்களே என்று தெளிவோம்.

 

‘பொய்யடிமையில்லாப் புலவர்’ தனியடியாரே.

மேற்கூறிய காரணங்களால், தனியடியாரைப் பாடும் ஏழாவது திருப்பாட்டில் வரும் பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்ற வரி தனியடியாரைக் குறிப்பதே ஆகும். அதைத் தொகையடியாராகக் கொண்டு விளக்கப் பாட்டு எழுதியவர் திருத்தொண்டர்தொகைக்கு சார்பு நூலாம் திருத்தொண்டர் திருவந்தாதியை அருளிய  நம்பியாண்டார் நம்பிகள். அவ்விளக்கப் பாட்டும் அதற்கு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய பொழிப்புரையும் பின்வருமாறு:

 

பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்

புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்

செய்யுளிடை வளராக மதுர நல்ல

சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை

மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்

மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்

கையுடையஞ் சலியினரா யருளான் மேலைக்

கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.

–     ‘திருத்தொண்டர் திருவந்தாதி’:நம்பியாண்டார் நம்பிகள்.

 

பாண்டிநாட்டிலே சிறந்து விளங்குகின்ற துவாதசாந்தபுரமாகிய மதுராபுரியிலேசோமசுந்தரக்கடவுளிடத்திலேசதுரமாய் இரண்டு சாணளவினதாகி மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுக்கின்ற சங்கப்பலகையைப் பெற்றுஅதனில் இருந்துகொண்டு தமிழ் மொழியை வளர்த்த கடைச்சங்கப்புலவர்கள் கபிலர்பரணர்நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பதின்மர்.  அவர்கள் விபூதி ருத்திராக்ஷதரர்களாய்ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபபரர்களாகிஅகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்களின்படிஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னு நாற்கவிகளினாலும் மெய்யன்போடு பரமசிவனையே பாடிபொய்யடிமையில்லாத புலவர்கள் எனப் பெயர்பெற்றுச் சிவபதம் அடைந்தார்கள்.

– யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் விளக்கம்

 

திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான், சார்புநூலாசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் கூறும்    பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர் என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டு, ‘‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்என்ற வரிக்குப் பின்வருமாறு கருத்துரைக்கின்றார்:

 

பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்

  1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 

         மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்

         மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்      

         பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்        

 

  1. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்

         சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற   

        பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 

        மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்

                                                                                         –     சேக்கிழார் பெருமான்

 

முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.

 

இரண்டாம் செய்யுளின் பொருள்: அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல் சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறிவாழ்வோரில் முதன்மையானவராம் பேறுபெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

சுந்தரமூர்த்தி நாயனாரின் பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.

 

இயற்பெயரைக் குறிக்காது,  பொய்யடிமை இல்லாத புலவர்என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகையில்  சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர்போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகையிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.

 

திருத்தொண்டர் தொகையை உற்றுநோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.

 

இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் போன்ற தனியடியார்களைப் போலவே, ‘பொய்யடிமையில்லாத புலவர்என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுபவரும்  ஒரு தனியடியாரேஎன்பது தெளிவு. மேலும், அத்தனியடியார் ‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டோரில் ‘தலைநின்ற’ காரணம் பற்றியே, அவரல்லாத ஏனைய‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டு வாழும் தொகையடியார்களைப் பெருமைப்படுத்தவே  ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தர் மீண்டும் குறிப்பிட்டபாங்கை தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

 

அவ்வாறு தெளிந்துரைத்தாரே ஆயினும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பேதும் கூறாது அமைந்தமை, அவர்பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பின் காரணம் பற்றியே என்பதை நாம் அறியவேண்டும். நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தில் உடன்படாமையைப் பதிவு செய்யாமல், சேக்கிழார் பெருமான் சரியான விளக்கத்தைப் பாடிச்சென்றமை அவர்தம் பண்புக்கும் சான்றாக விளங்குகின்றது.

 

மேலும், ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் கருத்து ஏன் ஏற்புடையது அன்று எனச் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம். நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடும் சங்கப் புலவர்களில் ஒருவரான நக்கீரர், இறைவன் சங்கம் போந்து நெற்றிக்கண் காட்டித் தன்னை வெளிப்படுத்திய போதும் இறைவனை எதிர்த்தார் என திருக்காளத்திப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது:

 

‘ஏற்றினான் நெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட

மாற்றரும் மருட்சியான்கண்  வடிவெலாம் காட்டி னாலும்

சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டு வெருட்டல் வேண்டா

தோற்றிலன் இதனுக்கு என்றான் தொலைவிலான் வெகுண்டு சொல்வான்

 

இவ்வாறு, ‘நான்என்னும் ஆணவமலத்தின் முழுஆதிக்கத்தின் வசப்பட்டு தான் கூறியதே சரியானது என்று இறைவனையே  எதிர்த்துப் பேசும் நக்கீரர் உள்ளிட்டோர் பொய்யடிமையில்லாப் புலவர்ஆக மாட்டார்.

பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்றுநக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்

 

சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே – அதனால்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது

அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்

ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து

வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே

 என்பதாகும்.

 

கபிலதேவ நாயனார் பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலைசிவபெருமான் திரு இரட்டை மணிமாலைசிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளி யலில்கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

 

சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்என்ற பெயரைப் பெற்றவர்.

 

பரணர் பதினொன்றாம் திருமுறையில் இருபத்துமூன்றாவது பிரபந்தமாக இலங்கும் சிவபெருமான் திருஅந்தாதியை அருளியவர்.

 

ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல

ஒன்றைப் பகரில் ஒருகோடி – ஒன்றைத்

தவிரா துரைப்பார் தளரார் உலகில்

தவிரார் சிவலோகம் தான்

 

என்று இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள வெண்பாவால் இந்நூலை அருளியவர் பரணர் என்பதையும்இந்நூல் மிக்க அருள் நலம் உடையது என்பதையும் அறியலாம்.

 

கபிலபரணர்

சங்ககாலப் பரணர்கபிலரோடு கொண்டிருந்த நட்பின் சிறப்பால் கபில பரணர் என இருவர் பெயரையும் இணைத்து வழங்குவதால் அறியலாம். சங்க காலத்தில் வாழ்ந்த இப்பரணர் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடியவர் ஆவார். இவர் மற்றும் பல அரசர்கள் மீது பாடல்கள் பாடியுள்ளார். சங்காலப் புலவர்களில் பரணரும் வன்பரணரும் வேறு வேறானவர்கள். இச் சங்கப்புலவர் பெயர் தாங்கிய பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய பரணதேவர் பிற்காலத்து அருட்கவிஞர் ஆவார்.

மேலும், சங்கப்புலவரில் சமண, பௌத்த சமயத்தவரும், வைணவரும் இருந்தனர்; ஆகவே, பொத்தாம் பொதுவாக, நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களே பொய்யடிமையில்லாப் புலவர்என்ற கூற்று முற்றிலும் பொருந்தாக் கூற்று ஆகும். எனவே, ‘பொய்யடிமையில்லாப் புலவர்ஒரு தனியடியாரே என்பது திண்ணம்.

நம்பியாண்டார் நம்பிகளின் கருத்துடன் சேக்கிழார் பெருமான் கருத்து மாறுபடும் இன்னொன்றையும் இங்கு குறிப்பிடுவது நம் பார்வையைத் தெளிவாக்கும்.

 

‘பொய்யடிமையில்லாப் புலவர்’ – மணிவாசகர்

உலகோர் வழக்கில் பொய்’ (False) என்ற சொல்லுக்கு மெய்அல்லது உண்மை (True) என்ற சொல் இனவகை எதிர்ச்சொல். ஆனால், இறையியலாகிய  மெய்ப்பொருளியலில் இவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன:

மெய் (சத்து): எக்காலத்தும் நிலை பெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும்.

பொய் (அசத்து): இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் எனப்படும்.

கருவி, கரணங்களுடன் கூடிய மனித உடல் உள்ளிட்ட இவ்வுலத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமே இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பு கொண்டவையே. உடல் உட்பட இவ்வுலகப் பொருட்கள் எதிலும் பற்று வைக்காது, அடிமைப்படாது தேடும் பொருளும் சிவன் கழலேஎனச் சிந்தித்துப் பொற்பமைந்த புரிசடை வள்ளல் சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறிபூண்டு, இமைப்பொழுதும் அரன்தாள் நெஞ்சில் நீங்காது வாழ்வோரே பொய்யடிமையில்லாப் புலவர்கள் ஆவார். அன்னோரன்ன புலவர்களில் தலையாயவராம் மனிவாசகப்பெருமானே  சுந்தரமூர்த்தி நாயனாரால் தனியடியாரில் குறிக்கப்படும் பேறுபெற்றுச் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டார் என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.

 

பரமனையே பாடுவோரும் பொய்யடிமையில்லாப் புலவர்களும்

‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டோர் அனைவரும் ‘பரமனையே பாடுவோர்’ ஆவார். பரமனையே பாடும் ஞானியரில் சிலர், இறைவனின் அழகிய திருவுருவத்தின் அழகில் ஆழங்கால்பட்டு, இறைவனைக் காண்பதற்காகவே இம்மனிதப் பிறவியும்  வேண்டுவர்; தில்லை நடராஜப் பெருமானிடம்

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்,

பனித்தசடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பட்டால்,

மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

 

என்று கூத்தப்பெருமானின்  இவ்வழகிய நிருத்தத் திருக்காட்சியைக் காணும்பேறு பெற்றால், இம் மனிதப் பிறவியையே வேண்டுகின்றேன் என விண்ணப்பிக்கும் அப்பர் பெருமானும்,

 

பச்சைமாமலைபோல் மேனி, பவளவாய் கமலச்செங்கண்,

அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவைத்தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே

 

என்று இந்திரலோகம் ஆளும் சுவை வேண்டாது, அரங்கனின் அழகிய திருவுருவைக் காணும் சுவையையே தந்தருள்க என்று திருவரங்கப் பெருமாளிடம் விண்ணப்பிக்கும் திருமங்கையாழ்வாரும் இத்தகையோர்.

 

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய ஞானியர் அனைவருமே கணந்தோறும் மாறிக்கொண்டேவரும் பொய்யாலான (மாயையால் ஆன) இவ்வுலக இன்பங்களை விரும்புபவர் அல்லர்; இவர்களும் பொய்யடிமையில்லாத தன்மையினரே ஆவர். ஆயினும் அம்மூவருமே திருத்தொண்டிற்காக இறைவனிடமிருந்து பொன் வேண்டிப் பெற்ற வரலாறு அவர்தம் பதிகங்களில் அகச்சான்றாகக் காணப்படுகின்றன. ‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை’ என்று சுந்தரர் சிவபெருமானைப் பாடிய பாடல் உலகியலோடு மெய்ப்பொருளை வேண்டிப்பெரும் திரோதானம்என்னும் உலகியல்வழி மெய்யியல் அடையும் வழியை விளக்கும்.

 

மாணிக்கவாசகப் பெருமானோ சிவத்திடம் சிவத்தை (திருவடிப்பேறு) அல்லாது வேறு எதையும் வேண்டி விண்ணப்பம் செய்தவர் அல்லர். இத்தனிப்பண்பு சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டிருக்கவேண்டும். எனவேதான், தனியடியார்களைப் பாடிய ஏழாவது பாடலின் முதலடியில் பொய்யடிமை இல்லாப் புலவர்க்கும் அடியேன்என்று குறித்துவிட்டு, தொகையடியார்களைமட்டும் பாடிய பத்தாவது பாடலில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்என்று தனியாகக் குறித்தார்.   எனவேதான், இவரை, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் என்று பொய்யடிமையில்லாதோரில் தலைநின்ற பேறுபெற்றவர் அம்மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று மாணிக்கவாசகரைச் சிறப்பிக்கின்றார் சேக்கிழார் பெருமான்.

 

மேலும், ‘பொய்என்ற பதத்திற்குத் திருவாசகமொழியினால் தெளிவான மெய்யியல் இலக்கணம் வகுத்தவர் மணிவாசகப் பெருமான். அம்மெய்யியல் இலக்கண வரையறை சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தை மட்டுமல்ல, அவர் காலச் சைவசமயிகளின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருக்க வேண்டும்; அதன் வெளிப்பாடாகவே அவர் மணிவாசகருக்கு பொய்யடிமையில்லாப் புலவர்என்ற அடை தருவதற்கு தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும்; மற்றவர் இந்த வேறுபாட்டினை உணரவேண்டும் என்பதற்கே ‘பரமனையே பாடுவோர் அடியார்க்கும் அடியேன்’ என்பதைத் தொகையடியாரில் கவனமாகச் சேர்த்து இருக்கவேண்டும் என்று கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கருதுகோளை உறுதி செய்யும் பொய்’-என்பதற்கான திருவாசக மெய்யியல் வரையறைகளைக் இப்போது காணலாம்:

 

‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–1

‘மெய்யர்’ என்போர் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டோரே ஆவார்; ‘பொய்யர்’ என்போர்  சிவபெருமானின் திருவடிகளைக் காணாதோரே ஆவார்; மெய்யராவதே மனித வாழ்வின் குறிக்கோள்.

திருப்பெருந்துறையில் தன் பழ அடியார் கூட்டத்தோடு மறைபயில் அந்தணனாக வந்து மணிவாசகரை ஆட்கொண்ட சிவபெருமான், அடியார்களோடு தானும் உருக்கரந்து மறையக் கண்ட மணிவாசகப் பெருமான் மனமுருகி அருளிச் செய்தது நூறு பாடல்கள் கொண்ட திருச்சதகம்பதிகத்தின் ஐம்பத்தியிரண்டாம் திருவாசகப் பாடல் பொய்யர் என்பவர் யார்?’ என்று வரையறை தருகின்றது.

 

செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொன் பாதமலர் காணாப்

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா

மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்

பொய்யனேன் நான் உண்டு உடுத்தி இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே.    – திருவாசகம்:திருச்சதகம்:52

 

மனிதப்பிறவியின் நோக்கம் மூலமலமாம் அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்க, வினைப்பயனால் கிடைத்த, கணந்தோறும் மாறும் மாயா உலகின் ஐம்பூதக் கலவையினால் ஆன பொறி, புலன்களுடன் கூடிய பொய்யுடல் வாழ்வின் வழியே, என்றும் மாறாத  மாக்கருணைவெள்ளச் சிவபெருமானின் திருவடிகளே அடையத்தக்க செம்பொருளாம் மெய் என்று உணர்ந்து, அவனருளாலே அவன் தாள் அடைவதே ஆகும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *