வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (22)

3

பவள சங்கரி

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!

live-your-life

அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு?’ என்றார். மிக யதார்த்தமாக, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.

imagesஉண்மையிலேயே இது மிகவும் வேடிக்கையான விசயம்தான். நம்மில் பலர் நம் இளமைக் காலங்களில் வளர வேண்டி பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருந்துவிட்டு, முதுமைக் காலத்தில் இழந்த இளமையைத் தேடி வேதனைப்படுகிறோம். எந்த வயதாக இருந்தாலும் நாம் திருப்தியற்ற ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதன் வினைதான் இது. எத்தனை கோடி செலவு செய்தாலும் இழந்த நம்முடைய இளமையையோ அல்லது வயது ஏறிக்கொண்டே போவதையோ நம்மால் ஒருக்காலும் தடை செய்ய இயலாது. சிலர் இதையறிந்தும் அதற்காகத் தேவையில்லாமல் பல வழிகளை முயற்சி செய்துவிட்டு இறுதியில் ஏமாற்றத்தில் மேலும் வேதனையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். நம்முடைய ஆன்மாவின் தற்காலிக இருப்பிடமான நம் உடலை, அக்கறையுடன், கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை காரணம் அது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு அல்லவா! ஆம், நாம் ஒரு உடலுக்குள் நுழைந்து நம்முடைய மனித வாழ்க்கையை வாழ்கிறோம். அது முடியும் தருணம் வந்தவுடன் அந்த உடலை விட்டு வெளியே வந்துவிடுகிறோம். இந்த இடத்தில் ‘நான்’ என்பது அந்த உடல் அல்ல. எதை நம்மால் எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாதோ அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதே நிம்மதிக்கான சிறந்த வழி அல்லவா? அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் நம் உடலுக்கேற்ற, வயதுக்கேற்ற உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு என அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வளைய வர முடியும். நம் எண்ணங்களின் சக்தியே நம் வயதை வெளிப்படுத்துகிறது. எந்த நொடியில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட ஆரம்பிக்கிறோமோ அந்த நொடியிலிருந்துதான் முதுமை நம்மை நெருங்க ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாத அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதே அதனிலிருந்து விடுபட சிறந்த வழி. சோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவராக இருப்பார் என்பதே சத்தியம்!  அந்த வகையில் அவரவர் எண்ணங்களே தங்களின் வயதை நிர்ணயிக்கிறது என்பதே நிதர்சனம்.

கழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்!

http://www.slideshare.net/ardraja/rebirth-of-the-eagle-presentation

பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 70 ஆண்டுகள்வரை வாழக்கூடியது கழுகு. ஆனால் தன்னுடைய 40வது வயதில் அதற்கு முதுமைக் கோலம் வந்துவிடுகிறது. அதாவது தன் உணவைக் கொத்தித் தின்னும் அலகின் கூர்மையையும், கால் நகங்களின் மூலம் தன் உணவைக் கவ்வி எடுக்கும் சக்தியையும் மற்றும் கனத்துப்போய் தன் மார்போடு ஒட்டிக்கொள்ளும் சிறகுகளால் பறக்கும் வல்லமையையும் இழக்கிறது. இந்த நேரத்தில் அந்தக் கழுகு வாழ்வா அல்லது சாவா என்ற ஒரு கட்டாய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே விட்டுவிட்டால் உணவின்றி இறந்து போக வேண்டியதுதான். ஆனால் கழுகுகள் தாம் எடுக்கும் துணிச்சலான முடிவினால் மறு பிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழுகின்றன. 40 வயதைக் கடந்தவுடன் அது மலை உச்சியில் உள்ள தன் கூட்டிற்குச் செல்கிறது. அன்றிலிருந்து 5 மாதங்கள் போராட்டமான வாழ்க்கைதான் அதற்கு. ஆம், முதலில் ஒரு பாறையின்மீது அமர்ந்து தன்னால் ஆனமட்டும் அந்த அலகு தேய்ந்து அறுந்து உதிரும்வரை அந்தப் பாறையில் உராயும். பிறகு அந்த அலகு புதிதாய் முளைக்கக் காத்திருக்கும். புதிய கூரிய அலகு முளைத்தவுடன், வலுவிழந்த தன் கால் நகங்களை பிய்த்து எரிந்துவிடும். புதிய நகங்கள் முளைக்கும் வரை காத்திருந்து, முளைத்தவுடன், பின் கனத்துப்போன தன் சிறகுகளை உதிர்த்துவிடும். அடுத்து புத்தம் புதிய சிறகுகளும் முளைக்க அன்றிலிருந்து புது பிறவி எடுக்கும் அந்த கழுகு மேலும் 30 ஆண்டுகள் சுகமாக இளமையுடன் வாழும்!

முதுமையை விரட்ட நமக்கும் இப்படி சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு மாற்றுத்திட்டம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் கழுகின் நைந்துபோன சிறகுகளைப் போன்ற நம்முடைய பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள் என அனைத்தையும் உதிர்த்துவிடத்தான் வேண்டும். பழஞ்சுமைகளிலிருந்து விடுபட்டால்தான் , நிகழ்காலத்தின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்!

தொடருவோம்

படங்களுக்கு நன்றி :

http://www.google.co.in/imgres?imgurl=http://rishikajain.com/wp-content/uploads/2012/09/live-your-life.jpg&imgrefurl=http://rishikajain.com/2012/09/10/live-your-life-and-forget-your-age/&h=338&w=510&sz=22&tbnid=Uvb-MclZ5m6C8M:&tbnh=83&tbnw=125&zoom=1&usg=__-KzbLUfXpOoogPFogBVgnP6bp-k=&docid=E9U2febtOrX48M&sa=X&ei=rN0DUtucIMn4rQfGl4C4BQ&ved=0CDUQ9QEwAQ&dur=114

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.