விசாலம்

“வா முரளி வா …… என்ன … கரெக்ட் டயத்துக்கு பிளேன் வந்துடுத்தா ?”  எனக் கேட்டபடியே தன் அன்பு மகனை அணைத்து வரவேற்றாள் கமலா .  முரளி அவளுக்கு ஒரே மகன்.  அன்பும் பாசத்துக்கும் கேட்கவா வேண்டும்.

“ஆமாம் அம்மா” எனக் கூறியபடியே தன் அப்பாவைத் தேடினான் முரளி. அப்பா என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.  அவனுக்கு டென்னிஸ் , கிரிக்கெட் எல்லாம் சொல்லிக் கொடுத்து ஆதரித்தவர் அவர்தானே!

அவன் இங்கும் அங்கும் கண்களை அலைய விட்டதைப் பார்த்த கமலா, “அப்பாவைத்தேடறயா?அப்பா உனக்குப் பிடித்த ரசகுல்லா வாங்கப் போயிருக்கா” எனச் சொல்லியபடியே தன் மகனைத் தொடர்ந்தாள். முரளி சோபாவில் அமர்ந்தவுடன் மிகுந்த தயக்கத்துடன் தன் மகன் அருகில் வந்து   நின்றாள்.

“முரளி வந்து …வந்து..”

“என்னம்மா …ஏன் தயங்கறேள் ? எது இருந்தாலும் கேளுங்கோ .நான் உங்க பிள்ளைதானே”

“அதாம்பா ….. ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி  நீ என் பேங்கில் ஒரு லட்சம் போடறேன்னு சொன்னாயே! ஞாபகம் இருக்கா?”

“நன்னா ஞாபகம் இருக்கும்மா. என் வீடு பெங்கலூர்ல இன்னும் வித்துப் போகல. வித்துப் போனப்பறம் உன் அகௌண்ட்ல டக்குன்னு ஒரு லட்சம் வந்து நிக்கும் பாரு ?”

“என்னமோ போ.. இதோட நாலு தடவை இப்படி அப்படின்னு  எதாவது சொல்றே! எப்பத்தான் கொடுக்கப் போறயோ? சரி, அது போகட்டம். இப்ப  எதாவது ஜூஸாவது குடி. அப்பா வந்தப்பறம் சேர்ந்து சாப்படலாம்”என்று சொல்லியபடியே சமையலறையை நோக்கிச் சென்றாள். முருங்கைக்காய் சாம்பாரைச் சுட வைத்தாள்.

அவள் நினைவுகள் அசைப் போட்டன ஒவ்வொரு காட்சியாய் அவள் முன்  வந்து போயிற்று. கல்யாணமான புதுசு.. சென்னையில்  குடுத்தனம்.

“என்னா உங்களைதானே….. கைச்செலவுக்கு கொஞ்சம் ரூபாய் தரேளா?”

“உனக்கென்ன செலவு இப்போ?. அதான் நான் எல்லா சாமானும்  வீட்டுக்கு வாங்கிண்டு வந்துடறேனே”

“இல்ல.. வந்து,    சந்த்ரமௌலீஸ்வரர் கோயில்ல பிரதோஷத்துக்கு சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்னு தோணித்து… அதான் ..கே ..ட்டே..ன்”

“ஏண்டி இப்படிப் பயந்து நடுங்கறே?.. தைரியமா பேசேன்னு”அவள் உள் மனம் அவளைக் கண்டித்தது .ஆனால் பாழாய்ப் போன பயம் அவளை விட்டால்தானே !   ஹிட்லர் போல் ஒரு கணவன் வந்தால் கேட்கவா வேண்டும் ?’

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அந்தக் கும்பல்ல போய் முட்டிக் கொண்டாத்தான் ஸ்வாமியா? எல்லாம் வீட்லே ஸ்வாமி இருக்கார் ‘ஓம் நமச்சிவாய’ன்னு சொல்லிண்டு உட்காரு. அதுவே புண்ணியம் தான்”

இன்னொரு காட்சி. “என் பஜனை குரூப் வேலூர் தங்கக் கோயில் பாக்கப் போகப் போறா. எனக்கும் பாக்கணும்னு ஆசை. போகட்டமா?”

ஒரு முறைப்புடன் பார்த்தார் கமலாவின் கணவர், “அத்தனை தூரம் பஸ்ஸில போகப் போறாயா? எப்படியிருக்கு உடம்பு? ஏற்கனேவே சைர்வகல் ஸ்பாண்டிலோஸிஸ்,  முதுகு வலி, கழுத்து வலி…  போய்ட்டு வந்து படுத்துக்கணுமா? அப்பறம் இந்த டாக்டர்ட்ட ஓடு. அந்த ஆயுர்வேத டாக்டரைப் பாருன்னு என் கழுத்த அறுக்கவா?”

அவள் பதிலுக்கு நிற்காமலே அந்த இடத்தை விட்டு நகர்ந்த காட்சி அவள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

கமலா தன் திருமணத்திற்கு  முன்னால் ஆசிரியையாக இருந்து ஒரு ஆறு வருடம் சம்பாதித்தாள். அந்தக் காலத்தில் மாதம் 200 ரூபாய் சம்பளம். ஐநூறு ரூபாய்க்கு தங்கச் சங்கிலி வாங்கி விடலாம். தான் சம்பாதித்த  தொகையெல்லாம் பெற்றோருக்குத் தன் திருமணச் செலவுக்காகக் கொடுத்து விட்டாள். பின் திருமணம் ஆகிச் சென்னையில் வந்தும் ஒரு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் தன் ஆசிரியை வேலையைத் தொடர்ந்தாள். அங்கும் ரூபாய் 200 தான் மாதச் சம்பளம். பல கனவுகள் நனவாகாமல் அப்படியே நசித்துப் போயின.

தன் கணவர் கை நிறைய செலவுக்குத் தருவார் என்று எண்ணிய கமலத்திற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. உப்பு, புளி,  பருப்பு என்று எல்லாமே அவர் வாங்கிப் போட்டு விட கமலத்திற்கு அந்த வேலையில்லை.   தவிர எந்தப் பொருள் தேவையானாலும் ‘லிஸ்ட்’ கொடுக்க வேண்டும். ‘கன்னாபின்னா’ என்று வாங்க ‘சான்ஸே’ இல்லை. நல்ல வேளையாக ஆசிரியை வேலைக்குப் போனதால் எதோ கொஞ்சம் வரும்படி வந்தது.  அது அவளுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் மனதுக்குள் ஒரு தைரியமும்    அளித்தன.

ஒரு தடவை பள்ளித் தோழி தன் வீட்டில் இருந்த ஸ்டீல் அலமாரியை விற்க, கமலா அதை வாங்கிக் கொள்வதாகக் கூறினாள். தன் கணவரிடம் போய் “இத பாருங்கோளேன். எனக்குப் புடவைகள் வைக்க ஒரு அலமாரி தேவைப்படறது. 200 ரூபாய்க்கு தரேன்னு என் பிரண்டு சொல்றா. ஒரு இருநூறு ரூபாய் தரேளா?”

“நீதான் இப்போ சம்பாதிக்கறயே. அதிலேர்ந்து பணம் போட்டு வங்கிக்கோ” என்று சொல்லி மறு பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நழுவி விட்டார். அன்றைய தினத்திலிருந்து அவளது செலவென்றால் அவளே பார்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டு அது பழகியும் போய் விட்டது.

ஒரே மகன் முரளி தன் தாய்க்கு மிக அனுசரணையாக நின்றான். நன்கு படித்தான். பல பட்டங்கள் பெற்றான். கை நிறையச் சம்பளம் வாங்கத் தொடங்கினான். தன் அம்மாவுக்குப் பிடித்ததெல்லாம் வாங்கி வருவான். ஆனாலும் எத்தனை நாள் தான் அவன் தனியாக இருக்க முடியும்? திருமணம் செய்ய வேண்டாமா? ஆனால் அந்தக் கடமைக்கு வேலையே வைக்கவில்லை முரளி. தான் காதலித்தப் பெண்ணை மணக்கச் சம்மதம் கேட்டான். மகனின் மகிழ்ச்சியே தனக்கும் மகிழ்ச்சி என்றதால் தன் கணவரையும் மகனின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்ட  வைத்தாள் கமலா.

தான் குருவிப் போல் சேர்த்து வைத்திருந்த பணத்தில் ஐந்து சுமங்கலிகளுக்கு கருகமணிமாலை தங்கத்தில் செய்யக் கொடுத்தாள்.   தன் ஒரே மகன் திருமணம் ஆயிற்றே. தன் தம்பியின் மனவி, ஓரகத்தி, இரு சகோதரிகள், நாத்தனார் என்று ஐந்து பேருக்குத் தங்கக் கருகமணி மாலை செய்யத் தன் அகௌண்டிலிருந்து நிறையப் பணம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

தன் கணவரிடமிருந்து கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்ற சபலம் இருக்க அவரிடம் கேட்டாள். மனுசர் கொஞ்சமாவது அசைந்துக் கொடுக்கணுமே!

உடல் நிலை குறையினால் கமலம் வாலண்டரி ரிடைர்மெண்ட் வாங்கிக் கொண்ட போது அவளது சேமிப்பு மிகவும் குறைந்திருந்தது.

“அம்மா.. அப்பா வந்தாச்சு” என்று முரளி கூப்பிட கமலா தன் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டுத் தன்   ஈரக்கையைத் தன் தலைப்பில் துடைத்தபடி நகர்ந்தாள்.

“எப்போ வந்தே முரளி?” என்று சபேசனும் முரளியின் தோளைத் தட்டிக் கொடுக்க  அவர்கள் பேச்சு கிரிக்கெட் மாட்ச்சில் தாவியது. கமலா திரும்பவும் சமையலறையில் தனித்து விடப்பட்டாள். அவள் சங்கீதத்தை, ஜோசியத்தை ஒரு அலசல் அலசுவாள். ஆனால் அதற்கு   வீட்டில் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை.

ஆனால் இந்த கிரிக்கெட்……. அப்பப்பா ..  காததூரம் தான்.    தன் மகன் இருந்தால் கடைசி இரண்டு ஓவர் தான் ரசித்துப் பார்ப்பாள்.  சமையலறையில்      திரும்பவும் பழைய நினைவுகள் அவளை ஆட் கொண்டன.

போன வருடம் போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்ள பசுவும் கன்றுக்குட்டியும், அதாவது கோதானம் செய்ய விரும்பினாள். தன் கணவரிடம் இதைத் தெரிவிக்க அவரும் சம்மதித்தார். ஆனால் அவர் சொன்னது என்ன?

“இத பார் கமலா புண்ணியம் உனக்கு வேணும்னா நீதான் செலவு செய்யணும் அப்பத்தான் பலன் கிடைக்கும் . எங்கிட்ட ஒன்னும் கேட்காதே தெரிஞ்சுதா?”

என்னவோ மனுசர் கேட்டவுடனே அள்ளிக் கொடுக்கறா மாதிரி ……

இது என்ன கமலாவுக்கு புதுசா என்ன?  இது அவள் எதிர்பார்த்தது தானே! காஞ்சீபுரத்தில் சங்கர மடத்தில் கோதானம் ஜாம் ஜாம்னு நடந்தது. கமலத்தின் பேங்க் பேலன்ஸும் குறைந்தது, ஆனால் அவள்  மனம் நிறைந்தது.

வருடத்தில் இரண்டு மூன்று முறை முரளி சென்னை வருவான். மாலை வந்து இரவு தூங்கிய பின் மறுநாள் ஆபீஸ் வேலையாகப் போய் விட்டு அங்கிருந்து ஹைதராபாத், தில்லி என்று திரும்பி விடுவான்.

தன் அப்பா படுக்கச் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்துத் தன் அம்மாவுக்குத் தான் வாங்கிக் கொண்டு வந்த ‘ஸோனி எரிக்ஸன்’ செல்லை பிரசன்ட் செய்தான் முரளி.

“அம்மா இப்போவாவது அப்பா உனக்கு எதாவது பைசா கொடுக்கறாரா இல்லையா?”

“இல்லைடா அவா அவா நேச்சர் எங்கே மாறப்போறது”

“அம்மா கவலைப்படாதே .நான் தில்லி போன பிறகு உனக்கு ஒரு லட்சம் அனுப்பறேன். அதை பிக்ஸ்டு டிபாசிட்டில் போட்டு வைத்தால் அதன் வட்டி உங்கள் செலவுக்கு ஆகும் இல்லையா?”

“ஆமாம் முரளி. ரொம்ப கரெக்ட். ஊருக்குப் போனப்பறம் அனுப்பி வை”

முரளி இதைச் சொல்லி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் வந்து சேரவில்லை. எல்லா ஞாயிறும் அவனிடமிருந்து போன் வந்து விடும்.ஆனால் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டான். கமலாவும்  தான் கேட்பதை நிறுத்திக் கொண்டாள். ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை போன் வந்தது.

“ஹலோ அம்மா. ஒரு ஸேட் ந்யூஸ் [sad news ] ஐ யாம் வெரி சாரி. என் ஷேர் பணமெல்லாம் திடீரென்று நஷ்டமாயிடுத்து.”

“ஐயோ எத்தனை போச்சு கண்ணா?”

“இருபத்தேழு லட்சம் அம்மா. முதல்ல வருத்தமாத்தான் இருந்தது அப்பறம் எல்லாம் கடவுள் செயல்னு மனசை தேத்திண்டுட்டேன். அதான் உங்களுக்கும் நான் சொன்ன பிரகாரம் பணம்  அனுப்ப முடிலையம்மா . தப்பா நினச்சுக்காதீர்கள் அம்மா”

“பரவாயில்லை முரளி நான் வாழ்ந்து முடிச்சாச்சு. இனிமே எனக்கு என்ன செலவு சொல்லு! எதோ கோயில் குளம் போகணும்னா கொஞ்சம் செலவாகுமே அதனால்தான் கேட்டேன். நீ இனி என்னைப் பத்தி கவலையே படாதே. உன்னையும் உன் குடும்பத்தையும்  கவனிச்சுக்கோ. ஸ்கூல் படிக்கற குழந்தைகள்.    உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்”

“சரிம்மா. என்ன இருந்தாலும் ஒரு நாள் அந்த ஒரு லட்சம் உன் பேங்கில் போட்டால் தான் எனக்கு மனசு நிறையும். அதைத் தடுக்காதீர்கள். நீங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கூட செஞ்சுக்கலை அப்பானாலே “

“பழைய கதயெல்லாம் கெளறாதே இப்ப. மனசு  காம்மா [calm]    வச்சுக்க. சரியா…. ஓகே. ஓகே முரளி .. நீங்க எல்லோரும் நன்னா இருக்கணும் அதான் இந்த அம்மாவோட ஆசை.  சரி வச்சுடறேன்”

“உடம்பைப் பாத்துக்கோங்கோ அம்மா”

காலம் யாருக்கு நிற்கிறது? மேலும் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

முரளி ஆபீஸிலிருந்து அன்று ஐந்து மணிக்கே வந்து விட்டான். அவன் மனைவி லதா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன இன்னிக்கு அதிசயம் மழைதான் கொட்டப் போறது”

“நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,  நம்ம பெங்கலூர் வீடு நல்ல விலைக்கு வித்துப் போச்சு”

“அப்படியா. உடனே அம்மாக்கு ஒரு லட்சம் அனுப்பி வையுங்கோ”

“நான் பண்ணாம இருப்பேனா. முதல்ல அதத்தான் செஞ்சுட்டு வரேன்” என்றபடி லதாவை அணைத்துக் கொண்டு தன் அறைக்கு நடந்தான்.

அன்று தை வெள்ளிக்கிழமை. ”ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் சுவர்ணரஸதஸ்ரஜாம்” என்று ‘ஶ்ரீசூக்தம்’     கேசட்டில் அருமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமலா இலட்சுமி பூஜை செய்து கொண்டிருந்தாள்.

“குறையொன்றுமில்லை மலைமூர்த்தி கண்ணா”என்று மொபைல் அழைத்தது.

“ஹலோ யாரு முரளியா?”

“ஆமாமம்மா சந்தோஷ சமாசாரம். என் பெங்கலூர் வீடு வித்துப் போச்சு. நான் சொன்னபடி ஒரு லட்சம் ரூபாய் உங்கள் அக்கௌண்டில் அனுப்பிவிட்டேன். ஐ அம் வெரி  ஹேப்பி நௌ அம்மா”

“வீடு வித்துப் போய் நல்ல சமயத்துக்கு உனக்கு பணம் கிடைச்சுது ரொம்ப ரொம்ப சந்தோஷம் முரளி. இப்பத்தான் இலட்சுமி பூஜையும் செஞ்சு முடிச்சேன். நீ பணம் அனுப்பிச்சதும் ரொம்ப சந்தோஷம்.  தேங்க் யூ முரளி”

அன்று இரவில் கமலம் படுத்தவள் படுத்தவள் தான். காலையில் எழுந்திருக்கவேயில்லை. ஒரு லட்சம் பேங்கில் தொடப்படாமல் அப்படியே இருந்தது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.