குறளின் கதிர்களாய்…(347)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(347)

ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

– திருக்குறள் -985 (சான்றாண்மை)

புதுக் கவிதையில்...

செயலொன்றைச்
செய்து முடிப்பவர் திறமை,
தம்முடன் பணியாற்றுபவர்களுடன்
பணிந்தே வேலைவாங்குவதாகும்..

சான்றோர்க்கு அதுவே
பகைவரையும் நண்பராக
ஆக்கிவிடும் ஆயுதமாகும்…!

குறும்பாவில்...

தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே
வேலைவாங்குதல்தான் செயலைச் செய்துமுடிப்போர் திறமை,
பகைவரை நண்பராக்கச் சான்றோர்க் காயுதமுமது…!

மரபுக் கவிதையில்...

செயல தொன்றைத் திறம்படவே
செய்து முடிப்போர் ஆற்றலது,
செயலி லுடன்பணி செய்வோருடன்
சேர்ந்தே பணிவுடன் வேலைவாங்கலே,
உயர்ந்த பண்புடை சான்றோர்க்கே
உதவிடு மிதுவே ஆயுதமாய்
வயவரை மாற்றி நண்பராக்கும்
வழிய தாகவும் ஆகிடுமே…!

லிமரைக்கூ..

செயலில் துணைபுரிவோருடன் பணிந்தே
வேலைவாங்குதலே ஆற்றல்மிகு சான்றோரின் திறமை, ;
அதனாலவர் பகையை நட்பாக்குவர் துணிந்தே…!

கிராமிய பாணியில்...

தெரியும் தெரியும்
தெறம தெரியும்,
செய்யும் செயலுல
சான்றோர்களின் தெறம தெரியும்..

செய்யிற செயல நல்லாச்
செய்து முடிப்பவன் தெறம,
அவன் கூட வேலபாக்கவங்களோடு
பணிஞ்சி வேலவாங்கிறதிலதான் இருக்குது..

அதுவேதான் சான்றோருக்கு
எதிராளியையும் நண்பனா
ஆக்கிற ஆயுதமாகும்..

அதால
தெரியும் தெரியும்
தெறம தெரியும்,
செய்யும் செயலுல
சான்றோர்களின் தெறம தெரியும்…!

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க