-மேகலா இராமமூர்த்தி

புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள்.

மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக நவம்பர் 11 1821இல் இரஷியாவிலுள்ள மாஸ்கோவில் பிறந்தார் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தாஸ்தயெவ்ஸ்கிக்கு கிடைத்தது. மூன்று வயதுக் குழந்தையாக அவர் இருந்தபோதே வீரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் அவருக்கு வாசித்துக் காட்டிய பாட்டி அலேனா புரோலோவ்னா (Alena Frolovna), வீர சாகசக் கதைகளில் தாஸ்தெயெவ்ஸ்கிக்கு ஆர்வமேற்படக் காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு நான்கு வயதானபோது அவரின் தாயார் விவிலியத்தை (Bible) வாசித்துக் காட்டி அவருக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்திருக்கின்றார்.

இரஷியாவின் புகழ்வாய்ந்த படைப்பாளர்களான புஷ்கின் (Pushkin), கரம்சின் (Karamzin), டெர்சாவின் (Derzhavin) ஆகியோரின் படைப்புகள், கெதே (Goethe), ஷில்லர் (Schiller) போன்ற ஜெர்மானியப் படைப்பாளர்களின் படைப்புகள், ஹோமரின் படைப்புகள் முதலியவற்றை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தித் தாஸ்தயெவ்ஸ்கியின் வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்தி அவருடைய சிந்தனைத் திறனையும் கற்பனை வளத்தினையும் மேம்படுத்தியிருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

கல்வியில் கண்டிப்பு மிகுந்தவராகத் தாஸ்தயெவ்ஸ்கியின் தந்தை இருந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள இராணுவப் பொறியியல் கல்லூரியில் தாஸ்தயெவெஸ்கியும் அவருடைய சகோதரர் மிகையிலும் (Mikhail) கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் அவர்களின் அருமை அன்னை காசநோயால் பாதிப்புற்று இறந்தார்.

அறிவியல், கணிதம், இராணுவப் பொறியியல் போன்றவற்றில் ஈடுபாடின்மையால் அந்தக் கல்லூரிப் படிப்பு தாஸ்தயெவ்ஸ்கிக்கு விருப்பமானதாயில்லை. எனினும், அதற்காகக் கல்வியைக் கைவிட்டுவிடாது கற்றுத்தேறி பொறியாளர் எனும் தகுதியோடு அந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் வந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. தாயார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் வருந்தத்தக்க வகையில் அவருடைய தந்தையும் மறைந்தார்.

ஆகஸ்டு 12, 1843இல் லெப்டினண்ட் பொறியாளராகப் பணியில் சேர்ந்து தம் சகோதரர் மிகையிலின் நண்பரான ரிசன்காம்ஃப் (Rizenkampf) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினார் தாஸ்தயெவ்ஸ்கி.

பிரெஞ்சு எழுத்தாளரான பால்சாக்கின் (Balzac) யூஜின் கிராண்டட் (Eugénie Grandet) எனும் புதினத்தை மொழிபெயர்த்து எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார் தாஸ்தயெவ்ஸ்கி. அதைத்தொடர்ந்து மேலும் சில புதினங்களை அவர் மொழிபெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்புப் பணி அவருக்கு வெற்றியைத் தரவில்லை. போதாக்குறைக்கு அவருடைய சூதாட்டப் பழக்கங்களும், ஊதாரித்தனமான வாழ்க்கைமுறைகளும் அவரைப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கின. இவற்றையெல்லாம் சமாளிக்க விரும்பித் தாமே புதினம் ஒன்றை எழுதும் பணியில் இறங்கினார்.

அவ்வாறு தாஸ்தயெவ்ஸ்கி எழுதியதுதான் ஏழைமக்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஏழையினம் (Poor Folk) எனும் அவருடைய முதல் புதினம். ஒன்பது மாதங்களில் அப் புதினத்தை எழுதி, 1845ஆம் ஆண்டு மே மாதம் அவர் வெளியிட்டார். ஏழை மக்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான உறவையும் உணர்வுபூர்வமாய்ப் பேசுகின்ற அந்தப் புதினத்திற்குச் சிறந்த சமூகப் புதினம் எனும் பாராட்டை வழங்கினார் இரஷியாவின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசகரான பெலின்ஸ்கி (Vissarion Belinsky). இப் புதினத்திற்கு இரஷிய மக்களிடமும் நல்ல வரவேற்பு கிட்டியது.

தம்முடைய இலக்கியப் பணிக்குத் தம் பொறியாளர் பணி இடையூறாக இருக்குமெனக் கருதிய தாஸ்தயெவ்ஸ்கி அப்பணியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய இரண்டாவது புதினம் ‘இரட்டையர்’ (The Double) என்பது. அதற்குக் கிடைத்த எதிர்மறையான விமரிசனங்கள் அவர் உடல்நிலையைப் பாதித்தன; எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

1846க்கும் 1848க்கும் இடைப்பட்ட காலத்தில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார் தாஸ்தயெவ்ஸ்கி. திரு. புரோகார்ச்சின் (Mr. Prohartchin), குடியிருப்புமனைக் கிழத்தி (The Landlady), பலவீனமான இதயம் (A Faint Heart), வெண்ணிற இரவுகள் (White Nights) ஆகியவை அவற்றுள் சில.

இதில் வெண்ணிற இரவுகள் என்ற சிறுகதை, ஓர் இளைஞன் தன் சொந்தக் கதையைச் சொல்லுகின்ற வகையில் அமைந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தனிமையில் வாழ்கின்ற அந்த இளைஞன் ஓரிளம்பெண்ணைச் சந்தித்துக் காதல் கொள்கின்றான்; ஆனால் அவள் அவனைக் காதலிக்கவில்லை. காரணம் அவள் தொலைந்துபோன தன்னுடைய காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள்; அவனும் ஒருநாள் வந்து சேர்கின்றான்; அவர்கள் இருவரும் இறுதியில் இணைகிறார்கள்.

தாஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதே 2003ஆம் ஆண்டு திரு. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ’இயற்கை’ என்ற தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய இந்தச் சிறுகதைகள் எவையும் எதிர்பார்த்த வரவேற்பை இரஷிய மக்களிடம் பெறவில்லை. அச்சமயத்தில் அவரைப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காத்தது, அவர் இணைந்திருந்த யுடோபியன் சோசியலிச பெடகாவ் வட்டமே (Utopian Socialist Betekov circle).

அந்த வட்டம் கலைந்தபின்னர் 1846இல் கவிஞர் அலெக்சி ப்லஷேயேவ் (Aleksey Pleshcheyev) என்பவரின் தூண்டுதலினால் ’பெட்ராஷேவ்ஸ்கி’ என்ற இலக்கிய வட்டத்தில் (Petrashevsky Circle) இணைந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. இவ்வட்டம் இரஷியாவில் சமூகப் புரட்சிகள் நிகழவேண்டும் எனும் சிந்தனையைக் கொண்டிருந்தது.

ஆதலால் இவ்வட்டம் குறித்து இரஷியாவின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான லிப்ராண்டி (Liprandi) என்பவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

டிசம்பர் புரட்சி போலவோ, 1848இன் புரட்சிகள் போலவோ ஏதேனும் கிளம்பக்கூடும் என்று அஞ்சிய இரஷிய அரசாங்கம், தாஸ்தயெவ்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் சதிகாரர்கள் என்று முத்திரை குத்தி ஏப்ரல் 23, 1849 அன்று கைது செய்தது. மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த அதிகப் பாதுகாப்பு கொண்ட பீட்டர்-பால் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான விசாரணை நான்கு மாதங்கள் நடைபெற்றது; அதன்முடிவில் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அந்த தண்டனையானது நல்வாய்ப்பாகக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டுக் கைதிகள் சைபீரியாவிலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான வேலைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார் தாஸ்தயெவ்ஸ்கி; அக்காலக்கட்டத்தில் வலிப்பு நோயால் அவர் பெரிதும் துன்புற்றிருக்கின்றார். அவர் வாழ்நாள் முழுவதுமே அந்நோய் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி நலிவடையச் செய்தமை வருந்தத்தக்கதே.

பிப்ரவரி 14, 1854இல் சிறையிலிருந்து விடுதலையானார் தாஸ்தயெவ்ஸ்கி. சிறைமீண்ட அவர் தமது சகோதரர்  மிகையிலிடம் பொருளாதார உதவி கோரியதோடு விகோ (Vico),ஹெகல் (Hegel), காண்ட் (Kant) போன்ற சிந்தனையாளர்களின் புத்தகங்களை அனுப்பி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தன் வரலாற்றையும் கலந்து அவர் எழுதிய பிணங்களின் வீடு (the house of the dead) என்ற புதினம், வ்ரெம்யா (Vremya) என்ற இதழில் 1861இல் வெளியானது. இரஷியச் சிறைகளைப் பற்றி முதலில் எழுதப்பட்ட புதினம் அதுவேயாகும். இரஷியாவின் மற்றொரு பெரிய இலக்கிய ஆளுமையான லியோ டால்ஸ்டாய் இப்புதினத்தைத் தாஸ்தயெவ்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

கட்டாய இராணுவப்பணியும் இரஷிய அரசாங்கத்தால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் மேட்டுக்குடியைச் சேர்ந்த பிள்ளைகள் பலருக்குப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராகவும் தாஸ்தயெவ்ஸ்கி பணியாற்றியிருக்கின்றார். அப்போது இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியான மரியா என்ற பெண்மீது தாஸ்தயெவ்ஸ்கிக்குக் காதல் பிறந்தது. சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிடவே, மரியாவை மணந்துகொண்டார் தாஸ்தயெவ்ஸ்கி. எனினும் வலிப்புநோய் கொண்ட கணவரோடு மரியாவால் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை.

ஏழு ஆண்டுகளில் மரியா இறந்துவிடவே மகிழ்ச்சியற்ற அம் மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

தம் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்காகத் துவண்டு தம் எழுத்துப்பணிகளைக் கைவிடாத தாஸ்தயெவ்ஸ்கி, 1861இல் எழுதிய புதினம், ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும்’ (The Insulted and Humiliated). அதில் இரு முக்கியக் கதாபாத்திரங்களை எதிரெதிர் தன்மையும் மனநிலையும் கொண்டவர்களாக படைத்திருக்கின்றார் அவர்.

இளவரசன் அலெக்சி ((Prince Alexey), அசட்டுத்தனங்கள் நிறைந்தவனாகவும் அதேசமயம் தெய்வீகத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; அதற்கு மாறாக அவனுடைய தந்தை இளவரசர் வால்கோவ்ஸ்கி (Prince Valkovsky) அதிபுத்திசாலியாகவும் அதன் விளைவாகத் தீமையே வடிவானவராகவும் படைக்கப்பட்டிருக்கின்றார்.

உலகப் பேரிலக்கியங்களில் சிறந்த ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகின்ற  குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) என்ற புதினத்தை 1866இல் எழுதினார் தாஸ்தயெவ்ஸ்கி. வறுமையில் வாடுகின்ற இளைஞன் ரஸ்கோல்நிகோவ் (Raskolnikov), எவ்வித நேர்மையான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமான முறையில் அடகுக்கடை நடத்திவருகின்ற பெண்மணி ஒருத்தியை அவளுடைய பணத்தை அடையும் நோக்கில் கொன்றுவிடுகின்றான். அந்தப் பணத்தால் தன் வறுமை ஓடும்; வாழ்வில் இன்பம் கூடும் என்ற எண்ணத்துடனேயே அவன் கொலை செய்தான்; எனினும், அதன்பின்னர் அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு நேர்எதிராக அக்கொலையானது அவன் மனநிலையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. அவன் நிம்மதியிழந்து குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். இறுதியில் அவனது நிலையென்ன என்பதை இந்நாவல் உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களோடும் சுழன்றடிக்கும் சொற்றொடர்களோடும் விவரித்துச் செல்கின்றது.

குற்றம் என்பது சார்புத்தன்மை உடையது; ஆனால் தண்டனை என்பது முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமில்லாததாக ஆகலாம்; அளிக்கப்பட்ட தண்டனையை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எனவே தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற புதிய தரிசனத்தை இந்தப் புதினம் உருவாக்கியது.

நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே பொதுவாக விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் தரப்பிலிருந்து நீதியை இப்புதினம் அணுகியிருப்பது புதுமையே!

தாஸ்தயெவ்ஸ்கியின் மற்றொரு சிறந்த படைப்பு அசடன் (The idiot). 1868இல் இந்தப் புதினத்தை அவர் எழுதினார். அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின் (Prince Myshkin), ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் புதினத்தில் வருகின்ற பிரின்ஸ் அலெக்ஸியின் மற்றொரு வடிவமே.

சுவிட்சர்லாந்தின் மருத்துவ விடுதியில் தங்கி வலிப்புநோய்க்குச் சிகிச்சை பெற்றுப் பின் இரஷியாவிற்குத் திரும்பிவந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் என்ற 17 வயது இளைஞனின் கதையிது. அவன், தான் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான பிணைப்பைக் கண்டுகொள்கின்றான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்பு கெடாத ஒரு புனிதனாக அவன் கடந்துசெல்கின்றான்.

இப்புதினத்தில் தாஸ்தயெவ்ஸ்கி தாம் மரணதண்டனைக்காகக் காத்திருந்த கடைசி நிமிடங்களை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்; சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிடங்களை எப்படித் துளித்துளியாகப் பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

அசடனின் நாயகன் மிஷ்கினுக்கு இருக்கும் ஏசு கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேனாட்டு இலக்கிய விமரிசகர்கள் நிறையவே எழுதியிருக்கின்றார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும், தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் மிஷ்கின். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்குகின்றது.

இடியட் என்ற தலைப்பு இந்தப் புதினத்துக்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் இன்றும் நீள்கின்றன. ’அப்பாவி’ என்பதே இப்புதின நாயகனை அடையாளப்படுத்தும் சரியான சொல் என்று ஒருசாராரும், இல்லை… வெளிப் பார்வைக்கு முட்டாள்போலத் தோன்றும் ஒருவன் உள்மனத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவனாயிருக்கின்றான் என்பதே இந்தத் தலைப்பின் உண்மையான பொருள் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றார்கள். தலைப்புக்கான காரணம் எதுவாயினும் தாஸ்தயெவ்ஸ்கியின் புதினங்களில் மிகவும் கலைநேர்த்தி கொண்டது என்ற பாராட்டைப் பலரிடம் பெற்றது அசடன் எனும் இந்தப் புதினமே.

தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு மகத்தான படைப்பு, கரமசொவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). மனித மனத்தின் இருண்மையைப் பொருண்மையாகக் கொண்டு விரிகின்ற நெடிய புதினமிது. ’பகுப்பாய்வு உளவியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மருத்துவர் சிக்மண்டு பிராய்டால் (Sigmund Freud) ‘மிகச் சிறந்த கலைப் படைப்புக்களுள் ஒன்று’ என்று போற்றப்பட்ட புதினமிது.

தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை, புதினம் என்பதை நீண்ட கதையாடல் என்ற வகையில் மட்டும் கொள்ளாமல், அதனூடாகச் சமகாலச் சூழல், அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கை, மனித மனத்தின் கசடுகள், ஆன்ம விடுதலை, கடவுளின் இருப்பு என்று நிறைய வாதங்களைத் தம் புதினங்களில் அவர் முன்வைக்கின்றார். எனவே அவருடைய படைப்புக்கள், தர்க்கங்களும் தத்துவங்களும் அரசியல் விமரிசனங்களும் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாகத் துணைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பது அவரின் தனிச்சிறப்பு.

இரஷியா உலகிற்களித்த இந்த மாபெரும் படைப்பாளியைப் பல பிரபலங்களும் அறிஞர்களும் போற்றியிருக்கின்றார்கள்.

ஜெர்மனியின் சிறந்த தத்துவவாதியான பிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), ”நான் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரே உளவியலாளர் தாஸ்தயெவ்ஸ்கியே” என்று புகழ்ந்துரைத்திருப்பதும், நோபல் பரிசுவென்ற நார்வே நாட்டு இலக்கியவாதியான கென்யூட் ஹாம்சன் (Knut Hamsun), ”மனித வடிவமைப்பின் சிக்கல்களை தாஸ்தயெவ்ஸ்கி அளவுக்கு ஆராய்ந்தவர் எவருமில்லை” என்று போற்றியிருப்பதும் இங்கே எண்ணத்தக்கன.

புனைவிலக்கியத்தில் தமக்கெனத் தனிமுத்திரை பதித்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி 1881ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் தம்முடைய 59ஆவது அகவையில் காலமானார்.

அவருடைய புகழ்பெற்ற புதினங்களான குற்றமும் தண்டனையும், அசடன், இரட்டையர் போன்றவற்றை மதுரை பாத்திமா கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள், சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார். புனைவிலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் படிக்கவேண்டிய புதினங்கள் இவை. தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பாற்றலை நாமும் உணர்ந்துகொள்ள இவ்வாசிப்புத் துணைசெய்யும்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. https://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoevsky
  2. https://www.notablebiographies.com/De-Du/Dostoevsky-Fyodor.html
  3. https://www.hindutamil.in/news/literature/150622–4.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *