குறளின் கதிர்களாய்…(358)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(358)

அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.

– திருக்குறள் – 483 (காலமறிதல்)

புதுக் கவிதையில்...

செய்யும் செயலைச்
செய்து முடிப்பதற்கேற்ற
கருவிகளாம்
திறமை தந்திரம் போன்றவற்றுடன்
தகுந்த காலத்தையறிந்து
தொடங்கினால் செயலாற்ற,
செய்வதற்கு அரிய
செயலென்று எதுவுமுண்டோ…!

குறும்பாவில்...

செயலுக்கான கருவிகளுடன் தக்க
காலமறிந்து செயலைச் செய்யத் தொடங்கினால்,
செய்யமுடியாத செயலெதுவுமே யில்லை…!

மரபுக் கவிதையில்...

செயலைச் செய்து முடித்திடவே
செய்யத் தகுந்த தந்திரங்கள்
உயர்ந்த திறமை போலுள்ள
உற்ற கருவி வகைகளுடன்,
முயலக் கால மறிந்தேதான்
முடிவோ டிறங்கிச் செயல்புரிந்தால்
இயலா தென்றே சொலச்செயல்தான்
எதுவு மில்லை எனலாமே…!

லிமரைக்கூ...

செயல தாற்றும் போது
செயலுக்கான கருவிகளுடன் காலமறிந்தே செய்தால்,
இயலாத செயல்தான் ஏது…!

கிராமிய பாணியில்...

செய்யணும் செய்யணும்
செயலச் செய்யணும்,
காலமறிஞ்சி
செயலச் செய்யணும்..

செய்யிற செயலச்
செய்து முடிக்கதுக்கேத்த
கருவிகளோட,
தெறமயா தந்திரமா
சரியான நேரம்பாத்து
செய்யத் தொடங்கினா
செய்ய முடியாத
செயலுண்ணு எதுவுமில்ல..

அதால
செய்யணும் செய்யணும்
செயலச் செய்யணும்,
காலமறிஞ்சி
செயலச் செய்யணும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க