குறளின் கதிர்களாய்…(371)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(371)

சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

– திருக்குறள் – 445 (பெரியாரைத் துணைக்கோடல்)

புதுக் கவிதையில்

நல்லாட்சி மக்களுக்கு
நல்க,
நல்ல அறிவுரைகள் வழங்கும்
அறிஞர் தமையே
கண்ணாய்க் கொண்டே
அகிலம் இயங்குவதால்,
அரசனும்
அத்தகைய பெரியோரை
ஆராய்ந்தறிந்து
நட்புக்கொள்ள வேண்டும்…!

குறும்பாவில்

நல்லறிவுரை வழங்கும் அறிஞரை
உலகம் கண்ணாய்க் கொண்டியங்குதலால் அரசனும்
அத்தைகையோரை அறிந்து நட்புக்கொள்க…!

மரபுக் கவிதையில்

நல்லதா யாட்சி நல்கிடவே
நல்ல அறிவுரை வழங்குகின்ற
வல்லவர் தமையே கண்ணெனவே
வகுத்து வையமே இயங்குதலால்,
நல்லது செய்ய நாட்டரசன்
நம்பி யத்தகு பெரியோரின்
நல்லதாம் துணையைப் பெற்றிடவே
நட்புக் கொள்ளுதல் நலந்தருமே…!

லிமரைக்கூ

அறிவுரை தந்திடும் பெரியோர்,
அகிலத்தின் கண்களாம் இவரே அரசனின்
நட்பைக் கொண்டிட உரியோர்…!

கிராமிய பாணியில்

தொணகொள்ளு தொணகொள்ளு
நல்லது சொல்லுற தொணகொள்ளு,
பெரியவங்க தொணகொள்ளு..

நல்ல வழிகள எடுத்துச்சொல்லுற
நாலுமறிஞ்ச பெரியவங்களக்
கண்ணா வச்சித்தான்
ஒலகமே நடக்குது,
அதுனால
நாடாளுற ராசாவும்
இதுமாதிரி பெரியவுங்கள
ஆராஞ்சறிஞ்சி
நட்பாக்கிக் கொள்ளணும்..

அதால
தொணகொள்ளு தொணகொள்ளு
நல்லது சொல்லுற தொணகொள்ளு,
பெரியவங்க தொணகொள்ளு…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க