மனமகிழ மனமுறையும் பெருவிழாவே நவராத்திரி!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன் பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ – என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று – புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என் பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !

நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங்குவது தாய்மைதானே! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே “அம்மையே” என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம். மணிவாசகப் பெருமானே “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக் கின்றார். ” தாயினும் நல்ல தலைவர் என்றடியார்” என்றும், “தாயும் நீயே தந்தையும் நீயே” என்றும். சம்பந்தப் பெருமானும் தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி ஒளவையார் எத்தனையோ அறிவு ரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை “அன்னையும்” என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம். வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின்றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடுகின்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத் துகிறோம் அல்லவா!

உலகிலே யாவராலும் மதிக்கப்படுவதும், புனிதமாய் கருதப்படுவதும் என்ன வென்று பார்க்குமிடத்து  அஃது தாய்மையாய்த்தான் மலர்ந்திருக்கிறது எனலாம். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான் தாய்மையை வழிபாட்டு நிலைக்கு எங்கள் முன்னோ ர்கள் உயர்த்தினார்கள் எனலாம். அந்தத் தாய்மையினை நவராத்திரியுடன் இணைத்து – ஒன்பது இரவுகளையுமே தாய்த் தெய்வ வழிபாடாக எங்களின் முன்னோர்கள் அமைத்து விட்டார்கள். பெண்மை என்றாலே பெருஞ்சக்தி என்றுதான் போற்றப்படுகிறது. அந்த வகையில் பெருஞ்சக்தியாக உருவெடுக்கும் தெய்வத்துக்கு ஒப்பிட்டுத்தான் சக்தி வழிபாடு என்பதே தொடங்கி இருக்கலாம் என்று கருதமுடிகிறதல்லவா! அகிலத்தின்  இயக்கத்துக்கு அந்தச்சக்தியே முதன்மையாய் இருக்கிறது அல்லவா! அப்படிப்பட்ட சக்தியானது இல்லாவிட்டால் இந்த அகிலத்தின் இயக்கமே அற்றுவிடும் அல்லவா? இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே பக்தி பூர்வ மான நவராத்திரி விழாவாகும்.

சிவ என்றால் ஏகன் என்பதே அர்த்தமாகும். ஏகம் என்றால் ஒன்று என்றுதானே பொருள்.அதனால்த்தான் சிவனுக்கு உரிய ராத்திரியான சிவராத்திரியை ஒன்றாக் கினார்களோ தெரியவில்லை. நவ என்றால் ஒன்பது. நவசக்திகளைக் குறிக்க நவ ராத்திரியை ஏற்படுத்தியும் இருக்கலாம் அல்லவா! சக்தி பெரிதா சிவன் பெரிதா என்று எடுத்து வீண் வாதம் மட்டும் செய்து விடவே கூடாது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியும் இல்லையே என்றாகிவிடும். இரண்டுமே பிரிக்க முடியா நிலையாகும். இதனால்த்தான் “மன்னுயிர்கள் சாரத் தருஞ் சக்தி – பின்னமிலான் எங்கள் பிரான்” என்று திருவருட்பயன் காட்டி நிற்கிறது.

வடக்கே காஷ்மீர் தொடக்கம் தெற்கே கன்யாகுமரிவரை, மேற்கே பாஞ்சால த்திலிருந்து கிழக்கே பர்மா வரை, ஈழத்தில் பல பகுதிகளிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சைவர், வைணவர், சாக்தர், காணாபத்தியர், என்று எல்லா மதத்தவர்களுமே நவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்க தேயாகும். நவராத்திரி எப்பொழு ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம், இராமாயண காலம் என்று நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் அறிய முடிகிறது.

நவராத்திரி என்பது சக்தியை மையப்படுத்திய பூஜையாக இருப்பதால் – இதனைப் பல பெயரில் அழைத்து அனு‌ஷ்டித்து வருவதும் நோக்கத்தக்கது. அம்பாள் எனக் காஷ்மீரிலும், பவானி என ராஜஸ்தானிலும், கல்யாணி என கூர்ஜரத்திலும், உமையென்று மிதிலைப்பகுதியிலும், அழைத்துப் போற்றிப் பரவுகின்றனர்.இதனை விடவும் – மீனாட்சி, காமாட்சி, சாமுண்டி, சரஸ்வதி, துர்க்கை, பகவதி என்றும் பெயரிட்டு சக்தியை போற்றி வருவதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

சக்தியினைப் பரவி நிற்கும் நவராத்திரி என்பது ஒன்றல்ல. நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருகிறது. மஹா நவராத்திரி என்னும் பெயருடன் தையில் வருகிறது. வஸந்த நவராத்திரி என்பது பங்குனியில் வருகிறது, ஆனியில் வருவது ஆஷாட நவராத்திரியாய் அமைகிறது. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியைத்தான் இந்தியா தொடக்கம் ஈழம்வரை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவின் வடபகுதியில்  ‘தசரா” என்னும் பெயருடன் கலைமகளின் விழா அமைகிறது. நாங்கள் நவராத்திரி விழாவாக எடுக்கின்றோம். நவராத்திரியின் நிறைவினை விஜயதசமி என்று அழைக்கிறோம். விஜயதசமியையும் உள்ளடக்கியே வடக்கில் “தசரா” என்றார்களோ என்றும் கருதக்கூடியதாக இருக்கிறதல்லவா!

நவம் என்றால் ஒன்பது  எண்ணிக்கை என்று பார்த்தோம்.. அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தையும் தாங்கியே நிற்கிறது. கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுஷ்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவா? இதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எங்களின் சமயம் எங்கள் வாழ்வுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்த்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.  தளர்வுண்டு போகாதிருப்பதற்குக் காரணம் அதன் தொடர் நிலை என்றுதான் என்ண முடிகிறது. அப்படித் தொடர்வதற்குக் காரணம் –  நாங்கள் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக் கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்கு பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம். கர்த்தர், கருணாநிதி, பிதா, பிள்ளை, அண்ணல், அரும்பொருள், நாயகன், நடுநிலையாளன், மாண்புடையான், மெய்ப்பொருளானவன், தலைவன், தோழன், என்றெல்லாம் அன்பு பாராட்டி அழைக்கின்றார் அந்தப் பரம்பொருளை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக “தாய்” என்று அழைப்பதே சிறப்புடையதாகும் என்று தவசிரேஷ்டர்கள் எண்ணுகிறார்கள்.

தாயிடத்துப் பிள்ளை உரிமையுடன் எதையுமே கேட்கும் நிலை இருக்கிறது. தாயான சக்தியிடம். வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் காட்டி நிற்பதுதற்கு நவராத்திரி எல்லோருக்கும் வரமாய் வாய் த்திருக்கிறது எனலாம்.

நல்ல நலம் வேண்டும். இவ்வுலகில் வாழுதற்கு நல்ல வளம் வேண்டும். நலமும் வளமும் வாய்த்துவிடுவது மட்டும் முக்கியமல்ல. அத்துடன் தெளிவும் வரவேண்டும். நலமென்னும் என்னும் பொழுது வீரமாகிறது.வளம் என்னும் பொழுது செல்வம்  ஆகிறது.தெளிவென்னும் பொழுது கல்வி வந்து அமைகிறது தெளிவைத் தரும் கல்வியையும், வளத்தைத் தரும்   செல்வத்தையும், நலத்தைத் தரும் வீரத்தையும் தந்தருளவாய் தாயே என்று மனமுருக  வேண்டிப் பிரார்த்தி த்து நிற்பதுதான் நவராத்திரியாய் வந்து அமைகிறது. வீரத்துடனும், செல்வத்துட னும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால் த்தால் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே உணர்த்தி நிற்பதைத்தான்  விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

சக்தியின் வடிவங்கள் பற்பல. எந்தத் தேவைக்கு என்ன சக்தி தேவையோ அந்தச் சக்தியாய் – தாயாய் விளங்கும் ஆதிசக்தி வந்து நிற்பாள். நாட்டின் ஆட்சி அதிகார த்தை நடத்தும் மந்திரிசபையில் பாதுகாப்பு, கல்வி, நிதி என்பதை நடத்துவதற் கென்று இருபது போல் – ஆதி சக்தியானவளும் உலக இயக்கத்துக்கு இன்றியமை யமையாதனவாகிய வீரம், செல்வம், கல்விக்கும் பொறுப்பான சக்தியாய் வருவதை நவராத்திரி விளக்கி நிற்கிறது எனலாம். துர்க்கை எனும் சக்தி வீரத்துக்கும்,   இலக்குமி எனும் சக்தி செல்வத்துக்கும், சரஸ்வதி எனும் சக்தி கல்விக் குமாய் அமைந்திருக்கிரது என்பது நோக்கத்தக்கதாகும்.

தாய்மை என்பதைப் பெண்மையில்த்தான் காணலாம். பெண்மை என்றால் மென்மை என்றும் பொருள் இருக்கிறது. அந்த மென்மைக்குள்ளே பொறுமையும் இருக்கிறது. மோலோங்கும் சினமும் இருக்கிறது. பெண்மை அடங்கி நிற்கும் பொழுது அங்கு  மென்மை மேலோங்கும். அதே  பெண்மை பொங்கிடும் வேளை யாவுமே பொசுங்கிவிடும் வெம்மையே வெளிப்பட்டு நிற்கும். பெண்மையினை மென்மையாய்த்தான் அணுகவேண்டும். சக்திகளாய் அமைகின்ற – மலை மகளையும், அலைமகளையும், கலைமகளையும், அன்புடன் அணுகினால் வாழ்வினிலே நலமும் வரும், வளமும் வரும், நல்ல தெளிவும் வரும்.

நல்நலமும், நல்வளமும், நல்லறிவும், ஒன்றாக இணையும் பொழுதுதான் வாழ்க்கையென்பது பூரணமாகிறுது. இதில் ஒன்று குறைந்தாலும் அஃது நிறைவுடைய வாழ்வாக அமையவே மாட்டாது.இவை மூன்றையும் பெற்றிட மனம் மொழி மெய்களால் உருக வேண்டும். நம்மை மறந்து சலனமற்ற அந்தச் சக்தியிடம் சரணடைதல் வேண்டும். கிடைத்த வளத்தை கீழாக்குவதோ பாழாக் குவதோ பொருத்தமில்லா நிலையாகும்.

இறைவனைக் குறித்து உண்ணாமல் , உறங்காமல், உயிருக்கு வருகின்ற ஊறுகளைப் பாராமல், தவமியற்றி அதன் பயனாக வரத்தால் பல பெற்றிட்ட பலர் – கிடைத்தற்கரிய அத்தனையையும் , தங்களது ஆணவம் என்னும் அகந்தையினால் பொல்லாவழியில் செலுத்து – முடிவில் வரமும் போய் வாழ்வும் அழிந்ததை இதிகாசங்கள், புராணங்கள் வாயிலாக அறிகின்றோம்.

சுத்தம் என்னும் பதத்தின் முன் அகரம் வந்தால் அது “அசுத்தம்” ஆகி விடுகிறது. சுரர் என்னும் பதத்தின் முன் அகரம் வரும்பொழுது “அசுரர்” வந்துவிடுகிறார். சுத்தமாய் இருப்பவர் “சுரர்”. அசுத்தமாய் இருப்பவர் “அசுரர்” என்றாகி விடுகிறதல்லவா! நவராத்திரி பற்றிய சிந்தனையில் இஃது அவசியாமா என்று எண்ணிடத் தோன்றுகிறதா? இறைவனிடம் வரம்பல பெறுவதற்கு நீண்ட நாட்கள்…. ஏன் வருடக்கணக்கில் தவமியற்றி பெறுதற்கு அரிய பேறுகளை எல்லாம் பெற்றதன் பின்னர் – அத்தனையையும் அறமில்லா வழியில் செல்லவிட்டு, ஆணவத்தின் உச்சிக்கே சென்று, முடிவில் வரமும் இழந்து, வாழ்வும் முடிந்துபோன நிலையினைப் புராணங்கள் இதிகாசங்கள் காட்டுகின்றன.

சிவ பக்தனானா இராவணன், சிவனிடம் வரம் பெற்ற பத்மாசூரன், சிவனிடம் வரம் பெற்ற சூரபதுமன், ஹம்சன், இரணியன், மகுடாசூரன் என்று இந்தவரிசை நீள்கிறது.வீரம், செல்வம், கல்வி மூன்றும் வந்தாலும் – அங்கு அகந்தை மட்டும் வந்துவிடக்கூடாது. அறிவுடன் அதாவது நல்லறிவுடன் சேரும் வீரமும் , செல்வமுமே நிலைக்கும். பயன் அளிக்கும். பல்கியும் பெருகும். மாறாக நடப்பின் அத்தனையும் பயனற்றே போய்விடும் என்பதை மனமிருத்த வேண்டும். அந்த அருமையான தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் பக்திபூர்வமான நிலைதான் “நவராத்திரி” என்பதையும் அனைவருமே அகமிருத்துவது அவசிய மாகும்.

நவராத்திரி என்பது விரதமா அல்லது கலைகளின் விழாவா என்று எண்ணும் பொழுது – விரதத்துடன் இணைந்த கலைவிழாவாகத்தான் நவராத்திரியைப் பார்க்கின்றோம். நவராத்திரி தொடங்கி விட்டாலே – ஆடலுக்கும், பாடலுக்கும் குறைவே இருக்காது. கலைஞர்கள் அனைவரும் சங்கமிக்கும் விழாவாக நவராத்திரி அமைவது அனைவருக்கும் பேரானந்தமாகும். வீட்டிலும் பாட்டு. வெளியிலும் பாட்டு. கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்பார்க்கும் இடங்கள், யாவற்றிலும் நவராத்திரி மிகவும் சிறப்பாகக் கலை விழாவாகவும், பக்தி பூர்வமான சமய நிகழ்வாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும்.அதே வேளை அனைத்து ஆலயங்களிலுமே நவராத்திரி பக்திபூர்வமாய் நடைபெறுவதையும் காணலாம்.

நவராத்திரி என்றதும் மனமெல்லாம் ஒருவித பூரிப்பே ஏற்படும். ஏனென்றால் கலைகளின் விழாவாக இருப்பதால். இந்த விழாவில் “கொலு” வைப்பது என்பது வீட்டிலும் இருக்கும்.ஆலயங்களிலும் இடம் பெறும். “கொலு” என்றால் அழகு என்பதுதான் அர்த்தமாகும். கொலு என்பது ஆடம்பரத்துக்காக வைக்கப்படுவது அல்ல. கொலு வைப்பதிலும் அர்த்தங்கள் பொதிந்தே இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

கொலுவைப்பதிலும் சில நடைமுறைகள் வழக்கில் இருந்தே வருகின்றன. அதாவது ஒற்றைப் படையில் அமையுமாறுதான் கொலுவின் படிகளை அமைத்து வருகிறார்கள்.ஆனால் அவரவர் வசதிக்கு ஏற்பவும் கொலுவினை வைத்து வரு வதையும் காணமுடிகிறது.ஒன்பது படிகளாக வைப்பதை விஷேடம் என்று கருதும் நிலையே பரவலாகக் காணப்படுகிறது.

“ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணாலாகிய பொம்மைகளால் என்னைப் பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், செளகரியங்களையும் அளிப்பேன்” என்று தேவி பாகவதத்தில் – அம்பாள் கூற்றாக வருவது கொலு வைப்பதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் அல்லவா !

கொலு மேடையில் கீழிருந்து முதற் படியிலே – ஓரறிவான, புல், செடி போன்ற வற்றையும், இரண்டாம் படியில், ஈரறிவுடைய நத்தை, சங்கு போன்றவற்றையும், மூன்றாவது படியில், மூன்றறிவுடைய கறையான், எறும்பு போன்றவற்றையும், நான்காம் படியில் நான்கறிவான நண்டு, வண்டு, போன்றவற்றின் பொம்மை களை யும், ஐந்தாம்படியில் ஐந்தறிவான மிருகங்கள், பறவைகளின் பொம்மைகளை வைத்தல் வேண்டும். ஆறாவது படிதான் எங்களுக்கு உரியதாகும். சிந்திக்கும் அறிவுடைய நிலை மனிதர்களுக்கே இருப்பதால் இந்தப் படியில் மனிதர்களின் பலவகைப் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும்.ஏழாவது படியானது – மனிதனாய் இருந்தும் உயர்நிலையினை எய்திய ரிஷிகளுக்கு உரியதாய் அமைகிறது.அங்கு ரிஷிகளின் பொம்மைகள் வைக்கப்படும். மனிதருக்கும் ரிஷிகளுக்கும் அப்பால் தேவர்கள் வருகிறார்கள்.எனவே எட்டாம் படியில் தேவர்கள் இடம் பெறுவார்கள். இதில் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள், தேவைதைகளின் பொம்மைகள் வைக்கப்படும்.ஒன்பதாம் படிதான் கடவுளருக்கு உரிய இடமாகும்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருந் தெய்வங்களும், ஸரஸ்வதி , லக்‌ஷ்மி, பார்வதி ஆகிய முப்பெருந் தேவியரும், இடம் பெறுவர். நடுநாயகமாய் ஆதிபராசக்தியின் பொம்மை வீற்றிருக்கும்.

வெறும் பொம்மைகளைக் கொண்டதாக கொலு அமைந்து விட்டது என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் என்பவன் தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டே வருகிறான்.அவனின் ஆன்மீகச் சிந்தனை பிரகாசிக்கும் நிலையில் முடிவில் இறைவனுடன் கலக்கவே வேண்டும். அப்படியான ஒரு தத்துவார்த்தத்தை உணர்த்துவதாகவே நவராத்திரியில் வைக்கப்படும் கொலு காட்டி நிற்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.       .

இறை சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைசக்தியே எமக்கு இயக்க சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை செல்வத்தை ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை – அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால்  “வாழ்க்கை வழமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும்.”  இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவது தான் நவராத்திரி விழாவின் கருப்பொருள் எனலாம்.

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.