தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 36

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உண்மை பாதி! உவமை பாதி!

முன்னுரை

‘ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்’ என்பார் ஔவை. இது விதியின் வினை. ஒன்றைக் கற்கின் மற்றொன்று நினைவுக்கு வரவேண்டும். இது நூலின் தரமதிப்பீடு. ஒன்றின் தொடர்ச்சியே மரபாயினும் ஒன்றின் அழிவின் தொடக்கமும் அதுவாக இருந்தால்தான் அது மரபு. புளியங்கொட்டை முளைத்தால் புளியமரமாகத்தான் வருமேயன்றிப் புங்கமரமாகாது. இதுதான் மரபு. எனவே ஒன்றின் வழிவழித் தொடர்ச்சியே மரபாகும். ஔவையின் மூதுரையைக் கற்குங்கால் நம்மையுமறியாமல் தோன்றுகிற சிந்தனைகள் கற்பாரை முன்னோக்கி நகர்த்துகின்றன. அங்கிருந்து வந்தவர் அல்லர் ஔவை. ஆனால் அவர் சிந்தனைகளுக்கான மூலம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.  கருத்தியல் சிந்தனைகளை அழகியல் உவமங்களோடு பொருத்திக் காட்டும் அன்னாரின் சதுரப்பாடு மூதுரை முழுவதிலும் வானத்து நிலவொளியைப்போல் பரந்து கிடக்கிறது. ஔவையின் உவமங்களைச் சான்றோர் சிலரின் உவமச் சிந்தனைகளோடு பொருத்திக் காட்டுவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்

‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்ற ஒரு தொடர் திருக்குறளில் வரும். தான் செய்த உதவிக்கு மாற்றாகக் கைம்மாறு செய்யப்படும் காலத்தை எதிர்பார்த்துச் செய்யும் உதவியை அப்படி அழைக்கிறார் திருவள்ளுவர். மிக உயர்ந்த பண்பாளருக்கு மட்டுமே உரிய இயல்பு அது. அது புகழை நோக்கியது. நடப்பியலுக்கு அவ்வளவாகப் பொருந்தாது. ‘பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்’ என்ற தொடரும் திருக்குறளில் உண்டு. செய்யப்படுகின்ற நன்மை அளவால் சிறிதாயினும் உதவி செய்வாரின் கருத்தின் பயன் அறிந்தவர்க்கு அது பனையளவாகத் தோன்றுமாம். இந்த செய்ந்நன்றி அறிதலை உவம அளவையால் விளக்கிக் ‘காலம் வரும் வரை காத்திரு’ என்னும் நடப்பியல் உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் ஔவையார்.

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை தலையாலே
தான் தருத லால்” ( மூதுரை -1)

சொல்ல நினைக்கும் பொருண்மையை முழுமையாகச் சொல்ல முடியாது பகுதி மட்டுமே வெளிப்பட்டு நிற்கும் நேர்வுகளும் நீதி இலக்கியங்களில் உண்டு. திருக்குறள் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களைப் பொருண்மைக்கேற்பப் பரிமேலழகர் பாகுபாடு செய்ததற்கு இதுதான் காரணம். செய்ந்நன்றி அறிதல் என்பதும் இத்தகையதே. உதவி ஒன்றுதான். அது செய்யாமற் செய்த உதவியாக, காலத்தினால் செய்த உதவியாக, பயன் நோக்காது செய்த உதவியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒன்றன் பகுதியாகவே கொள்ளுதலே ஏற்புடைத்து. அதாவது உதவி இத்தனை வகைப்படும் என்றென்னாது இந்தப் பண்புகளின் தொகுப்பே உதவி என்று கோடலே பொருந்தும் என்க.

காலம் கனிந்தால்தான் காயும் கனியும்

விதி என்பது மூட நம்பிக்கை அன்று. அது இயற்கைச் சட்டம். ஒவ்வொரு வினைக்குமோர் எதிர் வினை உண்டென்பது அறிவியல் என்றால் ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்பது அறிவியல் ஆகாதா? ‘ஊழ்’ என்ற சொல்லுக்கு  “இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி” என்று வரைவிலக்கணம் தந்த பரிமேலழகர் ‘ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி’ என்று விளக்கமளிக்கிறார். அழகரின் இந்த விளக்கம் ஊழ் பற்றிய எந்த அறிவியல் கருத்தினையும் களத்தில் சந்திக்கப் போதுமானது. ஊழ் காலத்தோடு தொடர்புடையது. முயற்சி நம்முடையது முடிவு காலத்தினுடையது. இதனைத்தான் வள்ளுவர் வேறுவாய்பாட்டில் சொல்லுகிறார்.

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (கு.377)

இவன் வகுத்ததை இவனாலேயே துய்க்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணமாக இன்னொரு சக்தி இருக்க வேண்டுமல்லவா? எதற்கும் காலம் வரவேண்டும் என்பது உலகியல். அதனைத்தான் ஔவை,

“அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா  தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.” (மூதுரை – 5)

என்ற பாட்டில் விளக்கிக்காட்டுகிறார். தொடர் முயற்சி நம்முடையதாகலாம். ஆகின்ற நாள் நம் கையில் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் பலன் கொடுக்கும் என்று விதிக்கப்பட்ட மரங்கள் உருவத்தால் வளர்ந்து விடுவதனாலேயே பலன் கொடுக்கும் பருவத்துக்கு முன்பாகவே பயன் தந்துவிடாது. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!’ என்னும் கீதையின் சாரமும் இதுவே. பலனை எதிர்பாராதே என்றால் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பது கருத்து.

“எழுதிய ஆறேகாண்! இரங்கு மடநெஞ்சே!
கருதியவாறோ கருமம் – கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை” (மூதுரை – 22)

என்னும் மற்றொரு பாட்டில் இதே கருத்தினைப் பிறவிக் காலத்தையே அளவு கோலாக வைத்துப் பாடுகிறார். கற்பக மரத்தில் ஏறிப் பறித்தவன் கையில் காஞ்சிரங்காய் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் முன்வினை. அந்த வினை தன் விளைவைக் காட்டுதற்கு இந்தப் பிறவி வரை காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது கருத்து. வினை நம்முடையது. வினைப்பயன் நாம் கருதிய ஆறு அன்று. இறைவன் எழுதிய ஆறு! அது காலத்தின் கையில்!

உரை முன்னால்! உவமம் பின்னால்!

பொதுவாக முன்னாலே எழுதப்படும் கவிதை அல்லது செய்யுளுக்குத்தான் பின்னாலே உரையெழுதுவார்கள். ஆனால் சில நேர்வுகளில் இது மாறி அமைந்துவிடுவதும் உண்டு. அதுபோன்றதொரு நிகழ்வு தமிழில் நிகழ்ந்திருப்பதாகக் கருதலாம். ‘இந்த உலகம் ஏன் இன்னும் நிலைபெற்றிருக்கிறது? என்னும் வினாவை எழுப்பிக் கொண்ட சங்கச் சான்றோர் ஒருவர் அதற்கான காரணத்தை நிரல்படக் கூறுகிறார்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்!
துஞ்சலும் இலர்! பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்! பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்! அயர்விலர்!
அன்ன மாட்சி அனை யராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!” (புறம். 182)

இந்தப் பாட்டில் தலையாய தகுதியைப் பாட்டின் இறுதியிலே பதிவு செய்தவர் ஏனைய தகுதிக் கூறுகளைப் பாட்டின் உள்ளடக்கமாகப் பதிவு செய்திருப்பதைக் காணலாம். ‘தனித்து உண்ணமாட்டார், சினங்கொள்ளமாட்டார், புகழுக்காக உயிரும் கொடுப்பார், பழியொடு வருவது உலகமே எனினும் அதனை விரும்பார், தளர்ச்சியறியாதவர்’ என்னும் இவையெல்லாம் தகுதிக்கூறுகள். இந்தத் தகுதிக் கூறுகள் இருக்க வேண்டுமாயின் அவர் எத்தகைய இயல்பினராக இருக்க வேண்டும் என்று எண்ணிய புலவர் ‘அவர் தன்னலமற்றவராக’ இருக்க வேண்டும் என்னும் தரமுத்திரையைப் பாட்டின் இறுதியிலே வைத்துவிடுகிறார். தன்னலமற்றவர் இருப்பதால்தான் இவ்வுலகமும் இருக்கிறது என்பது வழுதியின் கருத்து. இதே தன்னல மறுப்புணர்வைத் திருவள்ளுவர் ‘பண்பு’ என்னும் ஒற்றைச் சொல்லால் அடக்கிப்,

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் ;
மண்புக்கு மாய்வது மன்” (கு.996)

என்னும் குறட்பாவில் பண்புடையவர் இருப்பதால் உலகம் இருக்கிறது என்று புறநானூற்றை வழிமொழிந்து, கூடுதல் தகவலாக அப்படி யாராவது இல்லாது போயிருந்தால் இவ்வுலகம் என்றைக்கோ மண்ணுக்குள் மறைந்து போயிருக்கும் என்பதையும் கூறுகிறார். இவ்விரண்டு பாடல்களில் உவமங்கள் இல்லை. கருத்தியல் பதிவாக மட்டும் இருக்கின்ற இதற்கு உவமத்தால் அடர்த்தி கூட்டுகிறார் ஔவையார்.

நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை” (மூதுரை – 10)

ஔவையாரின் இந்தப் பாட்டில் ‘தன்னலமறுப்பாளர்’ என்று புறநானூற்றிலும் ‘பண்புடையார்’ என்று திருக்குறளிலும் சொல்லப்பட்டவர்க்கு மூதுரையில் ‘நல்லார்’ என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. அந்த நல்லவரால் அல்லாதவர்ககும் வாழ்வாம் என்பது ஔவையின் கருத்து. கருத்துப் பரிணாமம் இப்படி விரிகிறது!. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது என்பது புறநானூறு. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது. அத்துடன் இவர்கள் இல்லாவிட்டால் என்றைக்கோ அழிந்து போயிருக்கும் என்பது திருக்குறள். இவர்கள் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது இவர்களால் மற்றவர்களுக்கும் நன்மை என்பது மூதுரை. மற்றவர்களுக்கும் நன்மை என்பதற்குத்தான் ‘நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்ற உவமப்பயன்பாடு.

“சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்!” (மூதுரை – 30)

கோடரி கொண்டு தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் தரும் மரத்தினை உவமமாக்கி மேலே சொல்லப்பட்ட பண்புடையார், தன்னல மறுப்பாளர், நல்லவர் என்பாருக்குப் புதிய பரிமாணத்தை உவமவழிக் காட்டுகிறார் ஔவை. கருத்தியல் பரிணாமத்திற்கு ஏற்ப எந்தக் கருத்துக்கு எந்த இடத்தில் எத்தகைய உவமத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்!,

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிய தோற்றம் நாடாளுமன்ற வளாகத்திலேயே அவருக்குப் பல சங்கடங்களைக் கொடுத்திருக்கிறது. பேரறிஞர் பெர்னார்ட்ஷாவிற்கும் இந்த அனுபவம் உண்டு. உருவத்தின் எளிமையாலும் சிறுமையாலும் மானக்கேட்டிற்கு உள்ளானவர்களின் வரலாறு உலக அரங்கில் உண்டு.  பராசக்தி படத்திற்கு அவரது உருவத் தோற்றத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டவர்தான் நடிகர் திலகம். ‘உருவத்தைக் கொண்டு மனிதர்களை எடைபோடக்கூடாது’ என்பது அறிவுரையானால் ‘அப்படி எடைபோடுவது இந்த மண்ணின் எதிர்மறைப் பண்பாகத்தான்’ கொள்ள வேண்டியதிருக்கிறது. திருவள்ளுவர் சொல்கிறார்,

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” (கு. 667)

‘உருள் சுழலாது அதன் கடைக்கண் செருகுமது வடிவால் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து” என்று விளக்கம் தருவார் பரிமேலழகர். ஒருவன் திட்பம் நோக்கிக் கொள்ளவேண்டுமேயன்றி உருவம் கண்டு கொள்ளக் கூடாது என்பது கருத்து. வள்ளுவன் சொல்லிய இந்தக் கருத்தினை,

“மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம் – கடல் பெரிது
மண்ணீரும் ஆகா அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்” (மூதுரை 12)

என்னும் பாடலில் நெய்தற் பொருளை உவமமாக்கிப் பாடுகிறார் ஔவை. தாழையின் மடல் பெரிதென்றாலும் மயக்கும் மணத்தைத் தரும் இதழ் வடிவால் சிறியது. தாழையின் மடல் வேறு இதழ் வேறு. அது மட்டுமன்று நெய்தற்கடல் பெரிது. ஆனால் அந்நீர் நன்னீராகாது. கடற்கரையில் இருக்கும் ஊற்றுநீர் அளவால் சிறிதே யானாலும் அருந்துவதற்குப் பயன்படும். இரண்டு உவமங்களைச் சொல்லிய ஔவை, ‘உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்’ என்று ஒரு வரியில் உண்மையைச் சொல்லுகிறார்.

அற்ற குளத்து அறு நீர்ப்பறவை

நட்பைப் பற்றித் திருவள்ளுவர் பலபட ஆராய்ந்திருக்கிறார். அவ்வாறு ஆராய்ந்து அன்னார் எழுதிய குறட்பாக்களில் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

“கெடுங்காலை கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்” (கு. 799)

ஒருவனுக்குக் கேடுவரும் போது அவனைவிட்டு நீங்குவாருடைய நட்பை உயிர்போகின்ற அந்த நேரத்தில் எண்ணினால் அந்த நட்பை நினைத்த உள்ளத்தை அது (அந்த நட்பு) சுடும் என்பது கருத்து. எந்த நிலையிலும் பண்பாடு தவறாதவர் திருவள்ளுவராதலின் தன்னைக் கைவிட்டவரைச் சுட்டாது தன்னைக் கழித்து மறந்த கேண்மையை எழுவாயாக்கி உரைத்த மாண்பு காண்க. கேண்மைதான் சுடும். ‘அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க’ (798) என்பதும் அது. திருவள்ளுவரின் இந்தக் கருத்தியல் நூற்பாவிற்கு அழகியல் மேம்பட கவிதை உரையெழுதியிருக்கிறார் ஔவையார்.

“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் –  அக்குளத்தில்
கொட்டியும ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறவார் உறவு” (மூதுரை – 17)

நீர் இருக்கும் வரை இருந்து, குடித்து, குளித்து, வாழ்ந்து, உறவாடிய பறவை நீர் குறைந்தவுடன் குளத்தோடு இருந்துவந்த உறவை அறுத்துப் பறந்துவிட, நீர் இல்லாது வறட்சி வந்த காலத்தும் கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய மலர்கள் காய்ந்து மடியும். முன்னதைக் கூடா நட்பிற்கும் பின்னதைக் கொள்ள வேண்டிய கேண்மைக்கும் உவமமாக்குகிறார் ஔவையார். பறவை குளத்தில் பிறக்காதது. வந்து போவது. குளம் அதற்கு வேடந்தாங்கல். வேர்த்தாங்கல் அல்ல. துன்பம் வந்த போது குழுமுவது நட்பு. விலகுவது நட்பன்று. நட்பு உறவாவது அதன் பரிணாமம். ‘உயிரோடு உடம்பிடை நட்பு’ என்பார் திருள்ளுவர். அறிமுகம் நட்பாகாது. நீர்ப்பிடிப்பெல்லாம் நட்பாகாது. வேர்ப்பிடிப்பே நட்பு. ஔவையாரின் பாடலில் அழகியல் புனைவு பாதி. ஆழமான அறிவுரை பாதி!.

பொற்கொல்லன் இல்லமும் தாமரைத் தடாகமும்

புறநானூற்றில் புலவர்கள் பலர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். புலவர்கள் சிலர் ஒரே பாட்டை மட்டும் பாடியிருக்கிறார்கள். அப்படிப் பாடியவர்களில் கண்ணகனார்  என்னும் சான்றோரும் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீத்த போது அவர் உயிர் நண்பர் பிசிராந்தையர் அங்குவந்து அவரும் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வு கண்டு நெகிழ்ந்து பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அந்த ஒருபாடல்தான் புறநானூற்றில் அவர் பாடியதாக இருக்கிறது.

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைப்படச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்குங்காலை
ஒருவழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப!
சாலார் சாலார் பாலர் ஆகுபவே” (புறம். 218)

இப்படி அமைந்த இந்தப் பாடலில் வேறுபட்ட இடத்தில் விளையும் வேறுபட்ட பொருள்கள் நல்வினை நிகழும் சூழலில் ஒன்றுபடும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. பொழுதுநோக்கிப் பாடப்பட்டிருப்பினும் இணையும் பொருள்கள் தம்முள் இணையாகி இயைந்தவை என்பது நோக்கத்தக்கது. இந்தச் சிந்தனையை ஔவையார்,

“நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பில்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்!” (மூதுரை – 24)

என்னும் வெண்பாவில் ‘நல்லவரே நல்லவரை நாடிச் செல்வர்’ என்னும் கருத்தமையப் பாடியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் நேர்முகப் பதிவு மட்டும் அமைந்திருக்க  ஔவை எதிர்மறைப் பதிவினையும் உடன் சொல்லுகிறார். நல்ல தாமரைக் குளத்தை அன்னம் நாடும். கற்றாரைக் கற்றார் நாடுவர். கல்வியில்லாத மூடரை மூர்க்கர் விரும்புவர் என்பதாம். காமுறுவர் மற்றும் முகப்பர் என்பன உயர்திணை முரண்கள் எனின் உகக்கும் என்பது அஃறிணை உடன்பாடு என்பது அறிக. இனிப் பாட்டின் நுண்ணியத்தை நற்றாமரைக் குளத்தைத் தேடி நல்லன்னம் செல்வதற்கும், முதுகாட்டில் கொண்டு வந்து போட்ட பிணத்தைக் காக்கை உகப்பதற்குமான இடைவெளியில் காணலாம்.

சந்தனக்கோல் குறுகினாலும் சந்தனமே

‘குடகு’ என்ற சொல்லில் வரும் இரண்டு உகரங்களில் முதலில் நிற்பது முற்றியலுகரம். இறுதியில் நிற்பது குற்றியலுகரம். முன்னது ஒரு மாத்திரையாய் ஒலிக்க இறுதியது அதனின் குறைந்து ஒலிக்கும். குறைந்தொலிக்கும் அதனை உகரம் எனல் பொருந்துமோ என்னும் ஆய்வில் உரையாசிரியர் இளம்பூரணர் ஈடுபடுகிறார்.

“அவைதாம்,
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”  (தொல். எழு.2)

என்னும் தொல்காப்பிய நூற்பா, சார்பெழுத்துக்களைப் பற்றியதாகும். இந்த நூற்பாவின் அடிப்படையில் குற்றியலுகரம், குற்றியலுகரங்களின் இயல்பு பற்றி ஆராயும் இளம்பூரணர் அவற்றைத் தனியெழுத்துக்களாகக் கொள்ளாது உயிரது குறுக்கமாகவே கொள்கிறார். கொண்டு,

“சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகின இடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

என்று எழுதுகிறார். நூற்றுக்கணக்கான உவமைகளைப் படைத்துக் காட்டும் ஆற்றல் மிக்க நச்சினார்க்கினியரும் இதே நூற்பாவிற்கான தம் விளக்கத்தில் இளம்பூரணர் பயன்படுத்திய உவமத்தையே வழிமொழிந்திருக்கிறார். உகரம் உயிரெழுத்தாதலின் ‘உகரக்குறுக்கமும்’ உயிரெழுத்தே என்பது அவர்தம் கருத்து. இக்கருத்தைச், “சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது” என்னும் உவமத்தால் உயிரின் குறுக்கம் உயிராகுமேயன்றிப் பிறிதாகாது என்னும் இவ்விருவர்தம் அளவையியல் முடிவுக்கு இந்த உவமம் பயன்பட்டுள்ளது. உரையாசிரியர்களின் உவமக் கோட்பாடுகளில், ஒருவர் கண்டு மொழிந்த உவமத்தை மற்றொரு உரையாசிரியர் வழிமொழிந்திருப்பது புலமையோடு பண்புசார்ந்த வெளிப்பாடாகக் கருதப்படலாம். ஏனைய கோட்பாடுகள் அறிவும் புலமையும் சார்ந்திருக்க உண்மையோடு உறழ்ச்சி கொள்ளாது ஒத்துப்போகும் உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணமாக வழிமொழிதலாகிய இக்கோட்பாடு விளங்குவது காண்க. உரையாசிரியர்கள் இலக்கண விளக்கத்திற்காக பயன்படுத்திய இந்த உவமத்தை ஔவை இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

“சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் – நந்தம்
தனம் சிறிய தாயினும் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறியர் ஆவாரோ மற்று?” (மூதுரை – 28)

கொடுத்தே பழகிய குமணனும் அதியனும் ஊழ்வினை காரணமாகச் செல்வத்தில் குறைந்த காலத்தும் கொடுக்கும் இயல்பினின்றும் மாறுபடார் என்னும் கருத்தை ஔவை சந்தனக் கட்டை, சந்தனக் குச்சியாக மாறினாலும் கந்தம் மாறாது, கடமை தவறாது என்று உண்மையுரைக்கிறார். இளம்பூரணர் கையாண்ட உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர்கள் இருவரும் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதை ஔவை இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரே உவமத்தில் மனம் பறிகொடுத்த புலவர்களின் மனநிலையைப் புகழ்வதா? மூவரையும் ஈர்த்த அந்த உவமத்தின் சிறப்பைக் கருத்தில் கொள்வதா?

தோகை மயிலும் சிறகுக் கோழியும்

பலத்தை முன்னிறுத்தி இறுமாப்புக் கொள்வதைவிடப் பலவீனத்தை உணர்ந்து அடக்கமாக இருப்பதே சிறந்தது. ஆனால் உலகியல் இதற்கு மாறுபட அமைந்திருக்கிறது. அண்டங் காக்கைகள் எல்லாம் தங்களைக் குயில்களாக எண்ணிக்கொள்வதும் கரிக்கட்டைகள் தங்களை ஊதுவத்திகளாக எண்ணிக் கொள்வதும் இங்கே நியதியாக இருக்கிறது. ’பாரதி’ என்னும் பெயரை அபிமானத்தால் வைத்துக் கொள்வது வேறு. ‘பாரதி’ என்று பெயர் வைத்திருப்பதாலேயே தங்களையும் ‘மகாகவி’ என எண்ணிப் பிறரை நடுங்க வைப்பது என்பது வேறு. பின்னவர் இங்கு அதிகம்.  திருவள்ளுவர் காலத்திலிருந்தே இந்தப் போலிகள் பற்றிய சிந்தனை இங்கே இருந்து வந்திருக்கிறது.

“கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடை யார் “ (கு. 404)

அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கல்வி. இரண்டு கேள்வி. கேள்வி மட்டும் உடையவனின் கேள்வியும் நிறைவு பெறாது. அவன் அறிவும்  முழுமைபெறாது. அந்தப் போலி அறிவுடைமையைத்தான் திருவள்ளுவர் ‘ஒண்மை’ என்னும் சொல்லால் குறிக்கிறார். மணற்பரப்பில் நத்தையால் கிழிக்கப்படும் கோடு கோடானாலும் அடுத்த அலையில் அது அழிந்துவிடுமாதலின் அது நிலைபெறாது. இந்தக் குறட்பாவிற்குக் காட்சியளவையால் விளக்கவுரை எழுதுகிறார். ஔவை,

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி” (மூதுரை – 14)

மயில் ஆடுகிறபோது தோகை தானாக விரியும். சிறகைத் தோகையாக எண்ணித் தன்னை மயிலாகக் கருதிக் கொள்ளும் வான்கோழி ஆடுகிறபோது அது தன் முயற்சியால் விரித்துக் கொள்கிறதாம். ‘விரித்து ஆடினால்’ என்னும் இருசொல் தொடர் தரும் நுண்ணியம் இது. அறிவுடையவன் கவிபாடினால் தானாக இனிக்கும். கல்லாதவன் முயன்று பாடினாலும் இனிக்காது. மாறாகக் கேட்பவனுக்குக் காது மடல் கசக்கும். பாவனையினால் வரும் கேட்டினைப் பறவைகளை வைத்து விளக்கியிருக்கும் ஔவையின் பாடல் இது.

நிறைவுரை

கருத்தியல் அளவைக்கு உவம அளவையைக் கூட்டுதல். உவமத்தோடு இருந்த கருத்தியல் பதிவுகளுக்குக் கூடுதல் உவமங்களைக் காட்டி விளக்குதல். ஒரு கருத்தியலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பயன்படுத்துதல் என்பனவெல்லாம் ஔவையின் உவமக் கோட்பாடுகளாக அறியக் கிடக்கின்றன. கருத்தோடு இயைந்த நீதிகளைக் கண்ணோடு இணைந்த காட்சிகளைக் கொண்டு விளக்கும் ஔவையின் உவமக் கோட்பாடு தனித்தன்மை மிக்கது. தமிழ் வரலாற்றில் ஔவைகளுக்குப் பஞ்சமில்லை. சிவபெருமான் குடும்பச் சிக்கலைத் தீர்த்த நீதிபதி ஔவை,, அதியமானுக்காகத் தூது சென்ற அமைச்சர் ஔவை, கம்பனையும் ஒட்டக்கூத்தனையும் வம்புக்கிழுத்த வழக்கறிஞர் ஔவை, சோழனையே எதிர்த்த போட்டியாளர் ஔவை, நீதிநூல்கள் பாடிய பாவலர் ஔவை என்று பலராகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. அது ஆய்வாளர் பணி. மரங்கள் பலவாகட்டும் நிழல் ஒன்றுதானே! உண்ணுதற்கே விருந்து! விரித்த இலை யாருடைய தோட்டத்தில் விளைந்தது என்ற ஆராய்ச்சி தேவையற்றது!  எந்த ஔவையாக இருந்தால் என்ன? எண்ண வேண்டிய நீதிகளை இனிக்கும் உவமங்களால் பந்தி வைத்த எல்லா ஔவைகளையும் போற்றுவோம்! அவர் பாடல்கள் நமக்குப் பாடமாகட்டும்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *