குறளின் கதிர்களாய்…(375)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(375)
ஒன்றாமை யொன்றியார் கண்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது.
– திருக்குறள் – 886 (உட்பகை)
புதுக் கவிதையில்…
நெருங்கி நன்றாய்ப்
பழகுவோரிடத்துப்
பகை தோன்றுமாயின்,
அந்த உட்பகையால்
அரசனுக்கு
அழிவு வருவதைத் தடுக்க
எப்போதும் இயலாது…!
குறும்பாவில்…
அடுத்து வந்து பழகுவோரிடத்து
உட்பகை தோன்றிடில் அதனால் அரசனுக்கு
வருமழிவைத் தடுக்க முடியாது…!
மரபுக் கவிதையில்…
அருகில் நெருங்கியே நன்றாக
அன்புடன் பழகுவோர் தம்மிடத்தும்
வருந்த வைத்திடும் பிணியாக
வதைத்திடும் உட்பகை தோன்றிவிடில்,
மருந்தா யதனையே போக்கிடவே
மன்னவன் தனக்குமெவ் வழியுமிலை,
வருமே அழிவது நிச்சயமாய்
வழியிலை யதனையும் தடுத்திடவே…!
லிமரைக்கூ…
அரசனும் அழிவான் ஆங்கு,
நெருங்கிப் பழகுவோர் தம்மிடத்தும் தோன்றிடில்
உட்பகை யென்னும் தீங்கு…!
கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
உட்பக கொடியது,
கொலத்தயே அழிக்கும்
உட்பக கொடியது..
நெருங்கி நல்லாப்
பழகுறவங்கக் கிட்டயும்
கேடுகெட்ட உடபக
வந்திட்டுண்ணா,
நாட்ட ஆளுற ராசாவுக்கும்
அழிவு வாறத
ஆராலும் தடுக்கமுடியாதே..
தெரிஞ்சிக்கோ
கொடியது கொடியது
உட்பக கொடியது,
கொலத்தயே அழிக்கும்
உட்பக கொடியது…!